Monday, May 14, 2012

முகப்புத்தகத்தில் பெண்களின் "டாப் டென்" நடவடிக்கைகள்!



முகத்தைப் பார்த்துக்கொள்ளாமலேயே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊடகத்திற்கு "முகப்புத்தகம்"(facebook) என்று பெயரிட்டது சற்று விந்தையாக இருக்கிறது.  ஆனால் இந்த ஊடகம் எந்த அளவு நம்மிடையே பிரபலாமாகிவிட்டது!   முகப்புத்தகத்திற்கு எவ்வளவோ ஆக்கபூர்வமான பயன் கள் இருக்கின்றன.  வியாபாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கும் பலர் இந்த ஊடகத்தை பயன்படுத்துகிறார்கள்.  ஆனால் நான் உட்பட, நம்ம ஊர் பெண்கள் முகப்புத்தகத்தை ஒரு பொழுது போக்குத் தளமாகவே பயன்படுத்துகிறோம். எனது முகப்புத்தகத்தில் இருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயதினர்.  குடும்பத் தலைவிகள், அல்லது வேலைக்குச் செல்லும் தாய்மார்கள்.  இவர்களுடன் தினமும் முகப்புத்தகத்தில் தொடர்பில் இருப்பது ஒரு சுவையான அனுபவமாக இருக்கிறது.

வீட்டு வேலையெல்லாம் முடித்த பிறகு, குழந்தைகள் தூங்கிய பிறகு ஒரு ஐந்து நிமிடம் முகப்புத்தகத்தினுள் நுழைந்து,  யார் என்ன புதிதாக செய்தி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு "likes" போட்டுவிட்டு பின் தூங்கப் போவது பல பெண்களின் வழக்கமாக இருக்கிறது.  சிலர் காலை எழுந்தவுடன் சட்டென்று ஒரு எட்டு பார்த்துவிடுகிறார்கள்.  கொஞ்சம் "tech savvy" ஆன பெண்கள், வெளியில் இருக்கும்போதே, தன் செல்பேசி மூலமாகவே முகப்புத்தகத்தைப் பார்த்து செய்திகளையும் போட்டுவிடுகிறார்கள்.  நீண்ட நாட்கள் சந்திக்காதவர்கள் சந்தித்துக்கொண்டால் கூட முகப்புத்தகத்தில் அவர்கள் இட்ட செய்தியைக் குறிப்பிட்டு "நீங்க வீடு வாங்கிட்டதா முகப்புத்தகத்தில் போட்டிருந்தீங்க, வாழ்த்துக்கள்" என்கிற ரீதியில் அவர்களின் உரையாடலுக்கு உந்துகோலாக முகப்புத்தகம் இருக்கிறது.

இவர்கள்(நான் உட்பட) முகப் புத்தகத்தில் என்னதான் செய்கிறார்கள்?  இதோ ஒரு "டாப் டென்" பட்டியல்!
  1. நிறைய பெண்கள் தம் குழந்தைகளின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் இடுவதை விரும்புகிறார்கள்.  அடிக்கடி பார்த்துக்கொள்ளாவிட்டாலும், ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் வளர்ச்சியை நாம் தெரிந்துகொள்வதற்கு இது வசதியாக இருக்கிறது.  
  2. 80 களிலும் 90 களிலும் வந்த திரைப்படப் பாடல்களின் யூ ட்யூப் வீடியோக்களைப் போட்டு பழைய கல்லூரி நினைவுகளைக் கிளப்பிவிடுகிறார்கள்.
  3. எங்காவது ஒரு அழகான ஆடம்பர விடுமுறைக்குச் சென்றுவிட்டு அந்த புகைப்படங்களைப் போட்டு, பல குடும்பங்களில் அடுத்த விடுமுறைக்கான கேள்வியையும், சச்சரவையும் உண்டாக்கிவிடுகிறார்கள்.
  4. பிறந்தநாட்கள், வருடப்பிறப்பு போன்ற விசேசங்களுக்கு முகப்புத்தகத்திலேயே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு தொலைபேசாமல் தப்பித்துக்கொள்கிறார்கள்.
  5. அன்று வீட்டில் செய்த ஒரு உணவு வகையை புகைப்படம் எடுத்துப் போட்டு,  வீட்டில் கணவர் பாராட்டாவிட்டாலும், முகப்புத்தக நண்பர்களெல்லாம் "ஆகா பார்க்கவே அருமையாக இருக்கிறதே" என்றும் "எச்சில் ஊறுகிறதே" என்றும் பின்னூட்டம் இடுகையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.  
  6. வீட்டில் ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால், அதனை முகப்புத்தகத்தில் பகிர்ந்து,  நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளிலும், பிரார்த்தனைகளிலும் சற்று மனம் சமாதானமடைகிறார்கள். 
  7. மின் அஞ்சல்களை விட முகப்புத்தகத்தில் பிரைவெட் மெசேஜ் அனுப்புவதையே அதிகம் விரும்புகிறார்கள்.
  8. பழைய கல்லூரி நண்பர்களின் முதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து "ஐயோ இப்படி வயசாகி போய்விட்டதே" என்று மனதிற்குள் வருத்தப்படுகிறார்கள்.  நமது புகைப்படத்தைப் பார்த்து அந்த பக்கத்திலும் அப்படியே நினைப்பார்கள் என்பது மறந்து போயிருக்கும்.  
  9. ஒரு பாட்டுப் போட்டி, நாடகம் போன்றவற்றில் கலந்துகொண்ட சிறு சாதனைகளை பெருமிதத்துடன் அறிவித்து, நண்பர்களின் பாராட்டுக்களை சேகரித்து மகிழ்கிறார்கள்.
  10.  பள்ளியின் முதல் நாள்,  சைக்கிள் ஓட்டிய முதல் நாள், காது குத்திய நாள் என்று குழந்தைகள் கடந்த மைல்கற்களை பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள். 
இதில் எதையுமே செய்யாமல், முகப்புத்தக கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு கமுக்கமாக இருக்கும் பெண்களும் உண்டு.  நான் இந்தப் பட்டியலில் இருப்பவற்றை ஒன்று விடாமல் செய்துகொண்டு தான் இருக்கிறேன்.  இந்த வாரம் எனது நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் கூட என் முகப்புத்தகத்திலும் இடுவதாகத் திட்டம்!  200 மில்லியன் நபர்கள் கொண்ட இந்த ஊடகத்தில் பிரபலமாக இருப்பது முக்கியம், இல்லையா?




16 comments:

முத்தரசு said...

ஹா ஹா.. அப்படியா சங்கதி டாப் டென்.

பகிர்வுக்கு நன்றி
//எனது நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் கூட என் முகப்புத்தகத்திலும் இடுவதாகத் திட்டம்! //

வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

//கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு கமுக்கமாக இருக்கும் பெண்களும் உண்டு//

இதில் நானும் அடக்கம்!! ஏனோ ஃபேஸ்புக் என்னை ஈர்க்கவில்லை. நேரம்விழுங்கும் என்பதாலும்கூட!!

senthil said...

வணக்கம் தாரா!

அட! என்ன இது, தாரா எழுத ஆரம்பிச்சிட்டாங்களா!...

இதுக்குதான் போன வருடம் பூமியே நடுங்க ஆரம்பிச்சதா!...

சரி! வாழ்த்து சொல்லியுறுவோம்...

தமிழ் மண நட்சத்திரப் பதிவாளர்க்கு வாழ்த்துக்கள்!

எழுதா விரதம் மேற்கொண்டோரை எப்படி எழுத வைக்க வேண்டும் என்று தமிழ் மணத்திற்குத் தெரியாதா என்ன? :)-
சரி கலக்குங்க!

"முகப்புத்தகத்தில் பெண்களின் "டாப் டென்" நடவடிக்கைகள்!" இது ஓர வஞ்சனை இல்லையா? ஆண்களிடம் டாப் டென் நடவடிக்கைக்களே இல்லையா? சண்டைக்காட்சிகள் நிறைந்த திகில் படமும் நகைச்சுவை படமும் கலந்த கலவை போல் இருப்பது தான் ஆண்களில் முகப் புத்தகம் என்று எழுதியிருக்கலாமே...

புதிய படைப்புகள் நிறைய எழுதுங்கள். எப்போதோ செய்து பிரிஜ்ஜில் இருக்கும் சாம்பாரைப் போல் பழையதை எடுத்து ஓவனில் சூடு செய்து தர மாட்டீர்கள் என எண்ணுகிறேன்... :)-

Arasu said...

தற்செயலாக தமிழ்மணம் பக்கம் வந்த எனக்கு நீங்கள் நட்சத்திரப்பதிவாளரானது அறிய மகிழ்ச்சி. உங்கள் பதிவுகள் எப்போதுமே எளிய நடையில் சுவையாகவும், கருத்துச் செறிவுடன் சிந்தனையைத் தூண்டும் வகையில் இருக்கும்.

இவ்வாரம் உங்கள் பதிவுகளை பலரும் படிக்க இருக்கிறார்கள். அமெரிக்காவில் தமிழ்ச் சங்கம் பேரவை விழாக்கள், ஆண்டு விழா மலர்கள், இதழ்கள் பற்றி எழுதுங்கள். குறிப்பாக வெள்ளிவிழா பற்றியும் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

- அரசு

Anonymous said...

star vaalthukal.....
vetha.Elangathilakam.

துளசி கோபால் said...

நானும் அந்த கடைசி பெஞ்சுலே உக்கார்ந்து கவனிப்பது மட்டுமே.

புது சமாச்சாரங்கள் வரும்போது அதைக் கடந்துபோய் பின்தங்கிட வேணாமேன்னு கூகுள் ப்ளஸ், பேஸ் புக், ட்விட்டர் இப்படி எல்லாத்திலும் போய் துண்டுபோட்டு இடம் பிடிப்பதோடு சரி.

நாளைமக்காநாள் (அதிலே) இருக்கிங்களான்னு கேட்டால் இருக்கேன்னு சொல்லிக்கணுமுல்லெ:-)))))

பதிவுகளா எழுதி தமிழ்மணத்தில் பகிர்வதோடு என் 'ஆசை ' அடங்கிருச்சே தாரா.

எல்லாத்துலேயும் இருப்பதைவிட எதாவது ஒன்னு எடுத்து அதுலே முடியுமானவரை முழுமனசோடு செய்யணும் என்று நினைப்பு.

அதுக்காக மற்ற எல்லாத்தையும் விட்டுடமாட்டேன் கேட்டோ:-)))))

தாரா said...

செந்தில் - ஏழு நாளும் புதுசா சமைக்கனும்னா முடியுமா? அப்பப்ப ப்ரிட்ஜில் இருந்து எடுத்து சூடு செய்து சாப்பிடுவது எவ்வளவு வசதி தெரியுமா?!

தாரா.

தாரா said...

துளசி அக்கா - நானும் அப்படித்தான் அமைதியா ரொம்ப நாள் இருந்தேன். இப்பதான் கொஞ்சம் நடவடிக்கைகள்!

தாரா

Abarna said...

Very true!! I do the same thing everyday :)

prakash said...

nallarukku mugappu puthagathill pengalin tara varisai pathu

ப.பிரகாஷ் said...

kalakunga

ராமலக்ஷ்மி said...

நட்சத்திர வாழ்த்துகள். உள்ளதை உள்ளபடி சொன்ன விதம் சுவாரஸ்யம்:)!

அன்புடன் அருணா said...

நேரம்விழுங்கும் என்பதாலும்கூட!!
ரொம்ப சரி!!!!

ஆத்மா said...

///////எங்காவது ஒரு அழகான ஆடம்பர விடுமுறைக்குச் சென்றுவிட்டு அந்த புகைப்படங்களைப் போட்டு, பல குடும்பங்களில் அடுத்த விடுமுறைக்கான கேள்வியையும், சச்சரவையும் உண்டாக்கிவிடுகிறார்கள்.////


செம செம.... குடும்ப பிரச்சனைகளுக்கு யார் காரனம் என்னு இப்பதான் புரியுது..ஹி..ஹி..ஹீ

ஆத்மா said...

வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவருக்கு

அமுதா கிருஷ்ணா said...

NANUM FB LE IRRUKENE!!!!