Thursday, November 06, 2008

அமெரிக்காவின் புதிய கதாநாயகி - மிஷல் ஒபாமா


நேற்று முன் தினம் சிகாகோவில் ஒபாமா தனது வெற்றி உரையை நிகழ்த்த மேடை ஏறிய போது, உடன் அவருடைய மனைவி மிஷல் ஒபாமாவும், அவர்களது மகள்களும் வந்தார்கள். நான் சாதாரணமாக என் கணவரிடம், "மிஷல் ஒபாமா வேறு உடை அணிந்திருக்கலாம்" என்றேன். என்ன ஆச்சர்யம்! மறுநாள் பல இணையதளங்களிலும், செய்தித்தாள்களிலும் மிஷல் ஒபாமாவின் உடைத் தேர்வைப் பற்றிய கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சிலர் அவருடைய உடை ஒரு "first lady" அணிவது போல் இல்லையென்றும், சிலர் மிஷல் ஒரு மாறுபட்ட நவீன பார்வை உடையவர் என்றும், அவர் பிற first ladyக்களிடமிருந்து வேறுபட்டவர் என்றும் விவாதித்திருந்தனர்.
மிஷல் நேற்றிலிருந்து அடுத்த நான்கு ஆண்டு வரை அமெரிக்காவின் பிரதான கதாநாயகி!! இனி அவர் என்ன உடை அணிகிறார், என்ன சாப்பிடுகிறார், எங்கு போகிறார், என்ன பேசுகிறார் என்பதை உலகமே ஆர்வத்துடன் கண்காணிக்கத் தொடங்கிவிடும்.

நான் கடந்த ஆறு மாதங்களாக இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹில்லரி க்ளிண்டன், சாரா பாலின், சிண்டி மெக்கெய்ன், மிஷல் ஒபாமா போன்ற பெண்களை கூர்ந்து கவனித்து வருகிறேன். இவர்களில் மிஷல் ஒபாமாவை தனித்து ஒரு கட்டம் கட்டி ஒதுக்கிவிடலாம்.

அமெரிக்காவின் first lady க்களை இரண்டு ரகங்களாகப் பிரிக்கலாம்.

முதல் ரகம்: செயற்கையான ஒட்டப்பட்ட புன்னகையுடன், கணவரின் பக்கத்தில் நின்று கையசைப்பவர்கள். கணவருடன் எல்லா இடங்களுக்கும் செல்லுவார்கள், ஆனால் அவரின் மேல் எந்தவிதமான ஆதிக்கமும் செலுத்தாதவர்கள்(லாரா புஷ், பார்பரா புஷ்).

இரண்டாவது ரகம்: கணவரின் பின் இருந்தாலும், தமக்கென்று ஒரு தனித்திறமையும், ஆழ்ந்த பொது அறிவும், தமக்கென்ற ஒர் மனமும் கொண்டவர்கள் (எலினார் ரூசவல்ட், ஹில்லரி க்ளிண்டன்)

ஆனால், ஜாக்குலின் கென்னடி இந்த இரண்டு ரகங்களிலும் சேராத ஒரு அபூர்வ ரகம். ஒரு அழகிய நவ நாகரீக யவதியாக அவரை உலகம் பார்த்தது. கென்னடி அதிபராக இருந்தபோதும் சரி, அதற்குப் பின்னரும் சரி, பல வருடங்களுக்கு ஜாக்கி கென்னடி fashion பத்திரிக்கைகளை அலங்கரித்தார்.
இந்த மூன்று ரகங்களின் கலவையாக மிஷல் ஒபாமா இருப்பார் என்று தோன்றுகிறது. கணவருக்கு ஆதரவாக எப்போதும் உடன் இருப்பதுடன், தனது தனித்துவத்தையும் நிலைநாட்டக்கூடியவர். அதே சமையம் வழக்கமாக இறுக்கமான 'formal suit' உடைகளில் தோன்றும் 'first lady' பிம்பத்தை உடைத்து ஒரு சராசரிப் பெண்னைப் போல உடைகள் அணிபவர். மிஷல் ப்ரத்யேகமான உடை டிசைனர்களை வைத்திருந்தாலும், பொது மக்கள் உடை வாங்கும் கடைகளான 'Gap', 'J Crew' போன்ற கடைகளிலும் நிறைய உடைகள் வாங்குவார் என்று படித்தேன். இவருடன் தம்மை தொடர்பு படுத்திக்கொள்வது பெண்களுக்கு மிக எளிதாக இருக்கும்.

பிற first ladyக்களைப் போல, கணவரின் பெயரிலும் புகழிலும் தொலைந்து போய்விடாமல், ஒரு சுய சிந்தனை உள்ள ஒரு பெண்ணாக மிஷல் தெரிகிறார். தனது பிரச்சார உரைகளைக் கூட அவரே தயாரித்துக்கொண்டார் என்றும், பலர் தவிர்க்க விரும்பும் பிரச்சினைக்குரிய விசயங்களை மேடைகளில் பேச எப்போதும் அவர் தயங்குவதில்லை என்றும் அறிந்தேன். மேலும் உலகின் மிகச் சக்தி வாய்ந்த பதவிக்கானப் போட்டிப் பாதையில் மக்களின் பேராதரவுடன் வெகுவேகமாக முன்னேறி வந்த தன் கணவரைப் பற்றி மிஷல் பெருமிதம் கொண்டிருந்தாலும், அவரின் சிறு சிறு தவறுகளையும் அன்பாகச் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. மிஷலின் பல உரைகளில், "ஒபாமா எல்லா சிக்கல்களையும் களைய வந்த ஆபத்பாந்தவர் அல்ல. அவர் தடுமாறலாம், தவறுகள் செய்யலாம்" என்று சொன்னது பலருக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அதுவே யதார்த்தம். ஒபாமாவின் மேல் மக்களுக்கு உள்ள அபரிமிதமான எதிர்பார்ப்புகளை சற்று குறைக்கவே மிஷல் அப்படி பேசியிருக்க வேண்டும். மேலும் மிஷல் தன் கணவரை குறை கூறுபவர்களின் மீது கண்மூடித்தனமாக கோபப்படாமல் அவர்களை தனது கவனத்திலிருந்து ஒதுக்கிவந்தார். மெக்கெய்ன் ஒரு முறை ஒபாமாவை "That one" என்று நாகரீகமில்லாமல் குறிப்பிட்டதைப் பற்றி மிஷலிடம் ஊடகங்கள் கேட்டபோது, "இதெல்லாம் அரசியலில் சர்வ சாதாரணம். நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று சொன்னார். இது அவரது மனமுதிர்ச்சியைக் காட்டுகின்றது.

கணவருக்கு வெறும் ஜால்ராவாக மட்டும் இல்லாமல் அவரை வழிநடத்தும் ஒரு நல்ல ஆசிரியராகவும் மிஷல் இருப்பார் என்று கருதுகிறேன். சிகாகோவில் திருமணத்திற்கு முன் இருவரும் ஒரே சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, தனக்குப் பின் அங்கே வேலைக்குச் சேர்ந்த ஒபாமாவிற்கு மிஷல் தான் 'mentor' ஆக நியமிக்கப்பட்டாராம்.

ஒரு நண்பர் முன்பு சொன்னார். "திருமண வாழ்க்கையில் கணவன் மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஆசிரியனாக இருப்பது என்பது அலுப்பைத் தரும். அறிவுப் போக்குவரத்து இருவழியிலும் இருக்கவேண்டும். அப்போதுதான் இருவரின் அறிவும் விசாலமடையும், மண வாழ்க்கையும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்று". நண்பர் சொன்னது உண்மையே என்று நானும் நினைக்கிறேன்.

மிஷல் ஒபாமாவும் பாரக் ஒபாமாவும் ஒரு 'intellectual' தம்பதிகளாகத் தெரிகிறார்கள். குறிப்பாக மிஷல் பெரும்பாலான அதிபரின் மனைவிகளை போல, ஒரு புன்னகையிலும் கை அசைப்பிலும் தனது பங்களிப்பை நிறுத்திக்கொள்ளாமல் தனது படிப்பறிவையும், சுய சிந்தனைகளையும் உலக நலனுக்காக உபயோகிப்பார் என்று நம்புகிறேன். "உங்கள் சாதனைகளின் உயரங்கள், கனவுகளின் விஸ்தரிப்பினால் நிர்னயிக்கப்படுகின்றன" என்று உரைத்த மிஷல், தான் 'first lady' ஆனால், பெண்கள் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து அவற்றிற்காக உழைப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இவர் கதாநாயகியா, அல்லது பழைய கதையை மாற்றும் நாயகியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.