Wednesday, November 25, 2009

மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை 2

Image Hosted by ImageShack.us


ஒன்பதாவது மாதத்தில் தான் எல்லாச் சிரமங்களும் வந்து சேர்கிறது! படுக்கையில் சரியாகப் படுக்க முடியவில்லை. பக்கவாட்டில் புரண்டு படுப்பது சிரமமாக இருக்கிறது. பாதங்கள் சற்றே வீங்கிக்கொண்டன. நடை தளர்ந்தது. மூச்சு வாங்கியது. எப்படா இந்தப் பாரத்தை இறக்கி வைப்போம் என்று ஒரு சலிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், இன்னும் சில நாட்களில் இந்தப் பூசிய வயிறு இருக்காதே என்று ஒரு வருத்தமும் ஏற்பட்டது. இந்த வயிற்றை வைத்து எத்தனை காரியம் சாதித்துக்கொள்ள முடிந்தது?

நன்றாகக் காலை நீட்டி உட்கார்ந்த இடத்திலிருந்தே கணவரை தேநீர் போடவும், சாப்பாடு எடுத்து வைக்கவும் ஏவ முடிந்தது. அலுவலகத்தில் கைத் தவறி பேனாவைக் கீழே போட்டுவிட்டால் ஓடி வந்து மற்றவர்கள் எடுத்துக்கொடுப்பார்கள். முன் பின் தெரியாதவர்கள் கூட 'ஓ! எத்தனாவது மாதம்?' என்றும் 'எப்போது பிரசவம்?' என்றும் அன்போடு விசாரிப்பார்கள். நகர ரயிலில் அல்லது பேருந்தில் சென்றால் எழுந்து உட்கார இடம் கொடுப்பார்கள்! தோழிகளெல்லாம் உணவு தயாரித்து எடுத்து வந்து கொடுத்தார்கள்...இந்தச் சலுகைகளெல்லாம் இன்னும் சில நாட்கள் தான்!

நாட்கள் நகர நகர கணவரின் கண்களில் ஒரு கலவரம் தெரிந்தது. நண்பர்களெல்லாம் அவரைப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். "அவ்வளவுதான். இனிமே உங்க ஆட்டம் க்ளோஸ். ஜாலியா உங்க விருப்பப்படி எதுவும் செய்யமுடியாது. நினைத்தபோது எங்கும் கிளம்பமுடியாது. உங்கள் நண்பர்களோடு நேரம் செலவிட முடியாது. சினிமா பார்க்கமுடியாது..." என்றெல்லாம் சொல்லியதில் அவருக்கு கவலை தொற்றிக்கொண்டது. என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 10 வருடங்களாக இருவராக மட்டுமே இருந்துவிட்டு, இப்பொழுது இன்னொரு ஜீவனை வாழ்க்கையில் இணைப்பதென்றால் அது ஒரு பெரிய சவால் தான். ஆனால் அது ஒரு மிக அவசியமான சுவையான சவாலாக இருக்கப்போகிறது. போகப் போக என் கணவரும் அதனை உணர்வார் என்று நான் நம்புகிறேன்.

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீகள் என்று சிலர் கேட்டதும் 'பக்' கென்று இருந்தது. ஆர்வத்துடன் நல்ல தூய தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என்று சில நாட்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். ஒன்றும் கிட்டாமல் போகவே நடுவில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது இன்னும் 10 நாட்களே பிரசவத்திற்கு இருக்கும் தருவாயில் மீண்டும் பெயர் வேட்டை தொடங்கியிருக்கிறது.

தூய தமிழ்ப் பெயர்களை நவீனப்படுத்துவது பற்றி நண்பர்களுடன் சுவையான விவாதங்களும் கருத்துப் பறிமாற்றங்களும் நடந்தன. அதனைத் தொகுத்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

Monday, November 09, 2009

மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை - 1

தமிழகப் பயணத்தில் இருக்கும் போதே, மற்றொரு பயணமும் பக்கவாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அது முற்றிலும் வேறுவிதமான திருப்புமுனையை நோக்கி...

அப்பாவின் உடல்நிலை, தமிழகப் பயணம் எல்லாம் முடிந்து அமெரிக்கா திரும்பியவுடனும், விட்ட அலுவல்களை எட்டிப் பிடிப்பதிலேயே பல வாரங்கள் சென்றன.

திடீரென்று ஒரு நாள் அடி வயிற்றில் மெத் மெத்தென்று ஒத்தி எடுப்பது போல் சிறிய அசைவுகள்!! அப்போது தான் சுரீரென்று உரைத்தது எனக்கு 6 மாதங்கள் ஆகிவிட்டதென்று. நாட்கள் தான் எத்தனை வேகமாக நகர்கின்றன! பெண் குழந்தை என்று மருத்துவர் சொன்னார். அழகான சொக்காய் அணிவித்து, ரெட்டை சடை போட்டு, மல்லிகைப் பூவைத்து...என்று என் கற்பனை விரிந்தது.

இணையம் எனக்கொரு போதி மரம் என்று என் முதல் பதிவில் எழுதியிருக்கிறேன். 'போதி மரம்' என்பதற்கு மேல் ஒரு வார்த்தை எதுவும் இருக்கிறதா? எவ்வளவு விசயங்களைப் படித்து கற்றுக்கொள்ள முடிகிறது?! குழந்தை வாரா வாரம் எப்படி வளர்கிறது, தாயின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், மகப்பேறு பற்றியெல்லாம் மணிக்கணக்காக படித்துத் தள்ளியாகிவிட்டது. இனி படிப்பதற்கு ஒன்றும் இல்லை. http://www.babycenter.com/, http://www.i-am-pregnant.com/ போன்ற இணையதளங்களை நான் பரிந்துரைக்கிறேன்.

Prenatal classes என்று சொல்லுகிறார்களே அந்த வகுப்புகளுக்கு நானும் கணவரும் சென்றோம். குழந்தைப் பெற்றுக்கொள்வது, பால் கொடுப்பது, குழந்தையைப் பேனுவது போன்றவை எல்லார் வீட்டிலும் நடக்கும் சாதாரண விசயம் தான் என்றாலும், அவற்றைச் சுற்றியிருக்கும் சில நுணுக்கமாக விசயங்களை இந்த வகுப்புகளில் கற்றுத் தருகிறார்கள். ஒரு சிறிய பொம்மையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து அதற்கு diaper போட்டுவிட கற்றுக்கொண்டது வேடிக்கையாக இருந்தது.

பிரசவ வலியை சமாளிக்க lamaze என்று ஒரு வகை மூச்சுப் பயிற்சியையும் கற்றுக்கொடுத்தார்கள். இதைப் பற்றி அனுபவம் உள்ள தோழிகளிடம் கேட்டபோது, மூச்சுப் பயிற்சியாவது ஒன்றாவது...பிரசவ வலி வரும் போது எல்லாம் மறந்து போய்விடும். நம்ம ஊர் பாணியில் "அய்யோ அம்மா...வலிக்குதே" என்று தான் கூச்சலிடத் தோன்றும் என்றார்கள்!!!

எனக்கு அமெரிக்காவில் பிடிக்காத ஒன்று பெண் குழந்தை என்றால் ரோஜா நிறம்(pink) என்றும் ஆண் குழந்தை என்றால் ஊதா நிறம்(blue) என்றும் அடையாளப்படுத்துவது. எங்கே போனாலும், பெண் குழந்தைகளுக்கு ரோஜா நிறத்தில் உடைகள், பொருட்கள் ஆகியவை இருக்கும். நான் குறிப்பாக ரோஜா நிறத்தில் எதுவும் வாங்கக் கூடாது என்று மிகக் கவனமாக பச்சை, மஞ்சள், வெள்ளை நிறங்களில் தேடித் தேடி குழந்தைக்கான பொருட்கள் வாங்கும் வேட்டையில் இறங்கியிருக்கிறேன். சில நாட்களிலேயே இந்த ஷாப்பிங் எனக்குப் போர் அடித்துவிட்டது. எந்த கடைக்குப் போனாலும் அங்கே Carters, Gymboree, Circo போன்ற ஒரு சில வகைகளே இருந்தன. அவையெல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. புதுப் புது வகைகள் இல்லவே இல்லை. இதுவே சென்னையாக இருந்தால்? நாய்டு ஹால், போத்தீஸ் போன்ற ஒவ்வொரு கடையும் வித விதமான உடைகளை குவித்து வைத்திருக்குமே?! அள்ளலாமே என்று கைகள் பரபரத்தன!!

குழந்தைக்குத் தேவையான, நாம் வாங்கி வைக்க வேண்டிய பொருட்களின் பட்டியலை ஒரு தோழி அனுப்பியிருந்தார். அதில் கிட்டத்தட்ட 65 பொருட்கள் இருந்தன. ஒவ்வொரு பொருளிலும் ஏகப்பட்ட பிராண்ட் வகைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு diaper என்று எடுத்துக்கொண்டால் அதில் huggies, pampers, luvs போன்ற பல வகைகள் உள்ளன. எதை நல்லது என்று வாங்குவது? மீண்டும் இணையமும், அதில் அனுபவமுள்ள தாய்மார்கள் சொல்லியிருக்கும் அறிவுரைகளுமே எனக்குக் கைகொடுத்தன.

இந்தப் பதிவை எழுதி முடிக்கும் போது நான் 9 ஆவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறேன். எந்த நேரமும் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடும். அங்கே தங்குவதற்குத் தேவையான பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு தயாராக இருங்கள் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறேன்!! அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கிறதென்று பார்ப்போம்...

Friday, October 30, 2009

தமிழகப் பயணம் 2009 - 5


சென்னை வந்தாகிவிட்டது. வயதான உடல் நிலை சரியில்லாத அப்பா, அம்மா, இரண்டு விவரம் தெரியாத பெண்கள். இவர்கள் சென்னையில் இருந்தால் எப்படி இருக்கும் :-) தெரிந்தவர்கள் சென்னையில் நிறைய பேர் இருந்தாலும், நம்மால் முடிந்தவரை நம் தேவைகளை நாமே கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது எங்கள் குடும்பத்தில் அப்பா விதைத்த கொள்கை.

மறுநாள் மலர் மருத்துவமனையில் அப்பாவுக்கு இரண்டாவது chemo சிகிச்சை. நேரத்திற்கு மலர் மருத்துவமனை சென்றுவிட்டொம். சில நிமிடங்களில் அப்பாவுக்கான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே சென்ற சில நிமிடங்களில் தொலைபேசி அடித்தது. எடுத்தால் மருத்துவமனையின் டயட்டிஷியன் பேசினார். அப்பாவுக்கு என்ன வகையான உணவு தேவை என்பதைக் கேட்டுக்கொண்டார். அடுத்த 30 நிமிடங்களில் சூடான ஹாட் பாக்கில் உணவு வந்தது. அப்பா சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர் வந்து IV ஏற்றிவிட்டுப் போனார். அப்பா அப்படியே கண் மூடித்தூங்க, நான், அக்கா, அம்மா மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். மூன்று மணி நேரங்கள் சென்றபின் அப்பாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டோம். அயர்ச்சி தவிர வேறு எந்தப் பிரச்சினையும் அன்று இருக்கவில்லை அவருக்கு. மறுநாள் காலை அவர்களைக் காரில் ஏற்றி திருச்சிக்கு அனுப்பி வைத்தோம். அப்பாவின் முகத்தில் எங்களை மறுபடியும் பார்ப்போமா என்கிற ஏக்கமும் சோகமும் தெரிந்தது.

அன்றிரவு எனக்கும் அக்காவுக்கும் அமெரிக்கா செல்ல விமானம். அக்கா ஏர் இந்தியா, நான் துபாய் வரை இந்தியன் ஏர்லைன்ஸ். விமான நிலையத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் கெளண்டரில் கூட்டமே இல்லை. சந்தேகத்துடன் அங்கே உட்கார்ந்திருந்த அதிகாரிகளை அனுகினேன்.
"எங்கே போகிறீர்கள்?"
"துபாய் சென்று அங்கிருந்து வாசிங்டன் டி.சி"
"துபாயில் உங்கள் இணைப்பு விமானம்?"
"யுனைட்டட் ஏர்லைன்ஸ்"
"இந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நீங்கள் சென்றால் அந்த யுனைட்டட் விமானத்தை பிடிக்க முடியாது. நீங்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் சென்று பேசுங்கள். உங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வார்கள்" என்றார்.
நான் குழம்பிப் போய் அங்கிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கே ஒரு அதிகாரியைச் சுற்றி பல பயணிகள் நின்று படபடப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் தொலைபேசியில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்கள். நான் சற்று காத்திருந்து கூட்டம் கலைந்தபின் அந்த அதிகாரியிடம் போய் நின்றேன். அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து "இந்தியன் ஏர்லைன்ஸ் - யுனைட்டட் ஏர்லைன்ஸ் இணைப்பா? Makemytrip.com மூலம் டிக்கட் வாங்கினீங்களா? அவர்கள் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார்கள். உங்களுக்கு தவறான இணைப்பு விமானத்தை கொடுத்திருக்கிறார்கள். நீங்க உங்க ஏஜண்ட்டைக் கூப்பிட்டு எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கட் போடச்சொல்லுங்க. நாளை காலை விமானம் இருக்கு" என்றார்.

நான் இடிந்து போனேன். "இன்று நான் துபாய் செல்ல வழி இல்லையா" என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.
"மேடம், இந்த இந்தியன் ஏர்லைன்ஸில் நீங்க துபாய் போனால், யுனைட்டட் ஏர்லைன்ஸைப் பிடிக்க முடியாது. மறுநாள் இரவு செல்லும் அடுத்த யுனைட்டட் ஏர்லைன்ஸில் தான் நீங்கள் செல்ல முடியும். நீங்க ஒரு பெண், மாசமா இருக்கீங்க போல தெரியுது. இரவு நேரத்தில் துபாயில் தனியா போய் எப்படி இருப்பீங்க? அதனால் இன்று இரவு சென்னையில் தங்கிவிட்டு, நாளை காலையில் புறப்படும் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கட் வாங்கித்தரச் சொல்லி உங்க ஏஜண்ட்டிடம் பெசுங்கள்" என்றார்.

வெளியில் வந்து Makemytrip.com ஏஜண்ட்டை தொலைபேசியில் அழைத்து அழாத குறையாக என் நிலமையை விளக்கினேன். அவர்களும் உடனே எனக்கு எமிரேட்ஸில் டிக்கட் போட்டார்கள். மறுநாள் காலை 9 மணிக்கு விமானம். வேறு வழியில்லாமல் அன்றிரவு உறவினர் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் விமானம் ஏறி ஒரு நாள் தாமதமாக வாசிங்டன் டிசி வந்து சேர்ந்தேன்!

அன்று எனக்கு Makemytrip.com முடன் சண்டை போட சக்தியில்லை. ஆனால் ஒரு நாள் இருக்கிறது அவர்களுக்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சில நாட்களூக்கு முன் தான் காட்டமாக ஒரு கடிதம் அவர்களூக்கு எழுதி அனுப்பினேன். இப்படியா கவனக் குறைவாக இருப்பார்கள்?!
எப்படியோ, அப்பாவைப் பார்த்துவிட்டு வந்தது மனதிற்கு திருப்தியாக இருந்தது. இந்தப் பதிவை நான் எழுதி முடிக்கும்போது, அப்பா தனது ஆறாவது கீமோவையும் முடித்துவிட்டார். வயிற்றுப் போக்கு, உடம்பில் வலி போன்ற பக்க விளைவுகள் இருப்பதாகச் சொன்னார். கீமோவினால் ஓரளவு முன்னேற்றம் தெரிவதாகவும், புற்று நோய் செல்கள் சற்று கரைந்திருப்பதாகவும் மருத்துவர் சொன்னார். அப்பாவின் ஆயுளில் சில நாட்களேனும் கூடியிருந்தால் அது எங்களுகெல்லாம் மகிழ்ச்சியே.

முற்றும்.

Thursday, August 13, 2009

தமிழகப் பயணம் 2009 - 4

திருச்சி நகர் புறத்திலிருந்து ஸ்ரீரங்கம் போகும் வழியில் உள்ள காவிரி பாலம் தாண்டியவுடன் வலது புறத்தில் நிறைய அடுக்கு மாடி குடியிறுப்புக் கட்டிடங்கள் உருவாகி வருவதைப் பார்க்கலாம். அதில் ஒரு கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் உருவாகிக்கொண்டிருக்கிறது எங்கள் அப்பார்ட்மெண்ட். அக்கா அந்த இன்ஜினியரிடம் அப்பாவின் நிலமையை விளக்கி, நாங்கள் இன்னும் 10 நாட்கள் தான் திருச்சியில் இருப்போம் என்றும், அதற்குள் ஒரு இரண்டு நாட்களாவது அந்த வீட்டில் தங்குவதற்கு தேவையானவற்றை மட்டும் முடித்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாள். அவரும், "சில பொருட்களை நீங்கள் உடனடியாக வாங்கிக் கொடுத்துட்டிங்கன்னா ஒரு வாரத்தில் எல்லா வேலையும் முடித்துவிடுகிறோம் மெடம்" என்றார். ஆகா! இவ்வளவு சுலபமாக ஒத்துக்கொண்டாரே என்று மகிழ்ச்சியுடன் பொருட்கள் பட்டியலை அவரிடம் வாங்கிக்கொண்டோம்.


முக்கியமாக வாங்கவேண்டியவை பெயிண்ட், லைட் வகைகள் மற்றும் வாஷ் பேசின் போன்றவை. எனக்கும் அக்காவுக்கும் திருச்சியில் அவ்வளவாக இடங்கள் தெரியாது என்பதால் எங்கள் சித்தி மகளை உடன் அழைத்துக்கொண்டோம். அவளுக்கு திருச்சியில் எல்லாமே அத்துபடி. அந்த சாலையின் பெயர் நினைவில்லை, ஆனால் அங்கே சென்றால் அங்கேயே வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கலாம் என்று அங்கே அழைத்துச் சென்றாள். உண்மைதான், அந்தத் தெரு முழுக்க பெயிண்ட் கடைகள், லைட் கடைகள், பர்னிச்சர் கடைகள் என்று வரிசையாக இருந்தன. அடுத்தடுத்து ஒவ்வொரு கடையாகச் செல்ல வசதியாக இருந்தது. கல்யாணி கவரிங் கடை அந்தத் தெருவில் தான் இருக்கிறது.


முதலில் பெயிண்ட் கடைக்குச் சென்று 'Asian Paints' வகையில் பிடித்த நிறத்தை தேர்ந்தெடுத்து, அதனை எங்கே டெலிவர் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டு வந்தோம். மறுநாளே டெலிவர் செய்துவிடுகிறோம் என்றார்கள். பின்னர் வாஷ் பேசின் பார்க்கச் சென்றோம். அக்கா என்னென்னவோ நவீன பேசின்களைப் பார்த்தாள். பேசினுக்கு அடியில் pedestal வேண்டுமென்றாள். ஆனால் அந்த இன்ஜினியரோ pedestal போட்டால் அதில் கரப்பான் பூச்சி வந்துவிடும் என்று சொல்லியிருந்தார். அரை மணி நேர அலசலுக்குப் பின் சாதாரண வாஷ் பேசின்களை ஆர்டர் செய்தோம். பிறகு லைட் கடை. மதுரை ரோடில் உள்ள 'Noble Traders' என்கிற இந்தக் கடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்ற கடைகள் போலில்லாமல் இங்கு வேலை செய்பவர்கள் சற்று விசயம் தெரிந்தவர்களாக இருந்தார்கள். கிட்டத்தட்ட 100 வகை விளக்குகளை அங்கே பார்வைக்கு வைத்திருந்தார்கள். அத்தனை விளக்குகளுக்கும் மின்சார இணைப்பு இருந்தது. எந்த விளக்கை நாம் போடச் சொன்னாலும் போட்டுக்காட்டுகிறார்கள். நானும் அக்காவும் பார்த்துப் பார்த்து வரவேற்பறை, படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை எல்லாவற்றிற்கும் விளக்குககளை தேர்வு செய்தோம். அந்த விளக்குகளுக்கு பொருத்தமான 'பல்ப்' வகைகளையும் அங்கேயே தேர்வு செய்தோம். பில் போடுவதற்கு முன் அத்தனை விளக்குகளையும் அட்டைப்பெட்டிகளிலிருந்து பிரித்துக் காட்டி சரி பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள் கடைக்காரர்கள். ஒரு படி மேலே போய், வாங்கிய அத்தனை பல்புகளையும் ஒரு switch board ல் சொருகி, நன்றாக எரிகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்! ஆகா! திருச்சியில் இப்படியொரு நேர்மையான கடையா என்று பெருமையாக இருந்தது. திருச்சியில் விளக்குகள் வாங்கவேண்டுமென்றால் இந்த Noble Traders கடையில் கட்டாயம் வாங்குமாறு சிபாரிசு செய்கிறேன். சோபா, கட்டில், சாப்பாட்டு மேஜை, நாற்காலிகள் போன்ற பர்னிச்சர் வாங்குவதற்கு 'நாகப்பா ட்ரேடர்ஸ்' என்கிற கடை நன்றாக இருக்கிறது.


குளியல் அறைக்கு 'டைல்ஸ்' போட்டது ஒரு சுவாரசியமான கதை. அந்தக் கட்டிடத்தில் உள்ள அனைத்து வீட்டு குளியல் அறைகளுக்குமே ஊதா நிறத்தில் பூக்கள் போட்ட 'டைல்ஸ்' போடுவதாக கட்டிடத் திட்டத்தில் இருந்தது. அப்படி போடப்பட்ட வீட்டைப் பார்த்த அக்கா முகம் சுளித்தாள். கண்ணைப் பறிக்கும் ஒரு ஊதா நிறம் அது. மேலும் வீட்டுச் சுவர் நிறத்திற்கும் இந்த ஊதா நிறத்திற்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லை. வேறு மாதிரி டைல்ஸ் வாங்கிக்கொடுத்தால் போடுவீர்களா என்று இன்ஜினியரிடம் கேட்டபோது, அவர் போட்டுத்தருகிறோம் என்றார். ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி அக்கா அன்று முழுவது டைல்ஸ் வேட்டையில் இறங்கி ஒரு அழகிய நிறத்தில் டைல்ஸ் தேர்வும் செய்து அடுத்த நாள் புது வீட்டுக்கு ஒடினாள். அங்கே சென்ற அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஊதா நிற டைல்ஸ் எங்கள் வீட்டு குளியல் அறையில் நேர்த்தியாகப் போடப்பட்டு அக்காவைப் பார்த்துச் சிரித்தது!! என்ன இப்படி செய்துவிட்டீர்கள் என்று கேட்டபோது இன்ஜினியர் பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினார். தவறு நடந்துவிட்டது, மன்னியுங்கள் என்றார். 'எனக்கு இந்த டைல்ஸ் வேண்டாம். நான் தேர்வு செய்த டைல்ஸ் தான் வேண்டும், என்ன செய்வீர்களோ தெரியாது' என்று அக்கா திட்டவட்டமாகச் சொல்ல, அடுத்த நாள் அந்த ஊதா நிற டைல்ஸ் உடைத்து எடுக்கப்பட்டு அக்காவுக்குப் பிடித்த டைல்ஸ் போடப்பட்டது.


பெயிண்ட் வாங்கிக்கொடுத்துவிட்டால் இரண்டு நாட்களில் அடித்து முடித்துவிடுவோம் என்று இன்ஜினியர் சொல்லியிருந்ததால், இரண்டு நாட்கள் பொறுமையாகக் காத்திருந்து நானும் அக்காவும் ஆர்வத்துடன் புது விட்டிற்குச் சென்றோம். மீண்டும் அதிர்ச்சி! சுவர்கள் வெறுமையாக இருந்தன! மீண்டும் இன்ஜினிரின் சிண்டு எங்கள் கையில்! பெயிண்ட் எங்களுக்கு வந்து சேரவில்லையே மேடம் என்றார் அவர். பெயிண்ட் கடைக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, ஆர்டர் செய்த மறுநாளே அங்கே டெலிவர் செய்துவிட்டொம் என்றார்கள். குழம்பிப் போய் நின்றபோது, தலையைச் சொறிந்து கொண்டே வந்த கட்டிட வாட்ச் மேன், சாரி மேடம் பெய்ண்ட் நேத்து காலைல டெலிவரி செஞ்சிட்டாங்க. நான் தான் வாங்கி வெச்சேன். சார் கிட்ட சொல்ல மறந்திட்டேன், என்றார். சரியா போச்சு! என்ன செய்ய முடியும் இவர்களை நம்மால்??!! சரி சீக்கிரம் அடித்து முடித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றோம்.


இப்படி ஒவ்வொன்றும் போராட்டமாக இருந்தது. நாங்கள் அமெரிக்கா திரும்புமுன் அந்த வீட்டில் இரண்டு நாட்கள் தங்க முடியும் என்கிற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தோம். நாங்கள் அமெரிக்கா திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடைசியாக புது வீட்டைப் பார்க்க அப்பா அம்மாவையும் அழைத்துச் சென்றோம். ஒரே ஒரு அறைக்கு மட்டும் வண்ணம் பூசியிருந்தார்கள். மற்றபடி வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. சே! இனி எப்போது இந்த வீட்டில் அப்பா அம்மாவுடன் இருப்பது? என்று வருத்தமாக இருந்த அக்காவையும் என்னையும், 'கவலைப்படாதீங்க, இன்னும் ஒரு மாசத்தில் எல்லா வேலையும் முடிந்துவிடும். அப்பறம் ஜாம் ஜாமென்று நாங்க இங்க குடி புகுந்துவிடுகிறோம்' என்று சொல்லி சமாதானப்படுத்தினார் அப்பா. வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு வெளியில் வருகையில், எதிர் அப்பார்ட்மெண்ட்டின் அமைப்பு சற்று வித்தியாசமாகப் பட்டது. படுக்கை அறையிலிருந்து வீட்டுக்கு வெளியில் வர ஒரு வாயில் கதவு வைக்கப்பட்டிருந்தது. ஏன் அப்படி என்று அங்கே ஒரு ஆசாரியிடம் விசாரித்தோம். அவர் சொன்னதைக் கேட்டு வியந்து போனோம்! அந்த வீட்டு மருமகளுக்கு குடும்பத்தோடு ஒத்து போகாதாம். அதனால் தன் அறைக்குத் தனியே வாசல் கதவு வைத்துக் கட்டுகிறாராம்!!! என் கணவரிடம் இதைப் பற்றிச் சொன்னபோது, அந்தப் புரட்சிப் பெண்ணுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றார் :-)


நாளை சென்னை பயணம். 'சென்னை' என்றாலே வயிற்றில் சற்று புலியைக் கரைக்கத்தான் செய்கிறது.
தொடரும்...

Thursday, August 06, 2009

தமிழகப் பயணம் 2009 - 3

வாசலில் எனக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது! புற்று நோய் பரவிய தேகம் சுருங்கி...எலும்பும் தோலுமாக, பலவீனமாக, இடுப்பில் சதை இல்லாததால், மார்பு வரை தூக்கிக் கட்டிய லுங்கியுடன்...என் நெஞ்சில் ரத்தம் வழிந்தது. ஜம்மென்று டிப் டாப்பாக உடை அணிந்து தனது ஸ்கூட்டரில் தான் நேசித்த பல்கலைக்கழகத்திற்கு ஆர்வத்துடன் தினம் சென்ற அப்பாவா இது?? அதை விட பரிதாபமாக இருந்தது அப்பாவிற்கு நர்ஸ் வேலை பார்த்துப் பார்த்து சோர்ந்து போயிருந்த அம்மாவைப் பார்த்தால்! ஒரு கணம் யோசித்தேன், இங்கிருந்தபடியே எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இவர்களுடனேயே இருந்துவிடலாமா என்று. முடியவில்லையே?! இப்படி திண்டாடும் பல சூழ்நிலைக் கைதிகளில் நானும் ஒருத்தி :-(

நிலமையின் இறுக்கத்தை மாற்ற, "அப்படியே கல்லாப்பெட்டி சிங்காரம் மாதிரியே இருக்கிறீர்கள்" என்றேன் அப்பாவிடம். அடுத்து வந்த நாட்களிலும், முடிந்த வரை இயல்பாக, கலகலப்பாக இருக்க எல்லாருமே முயற்சி செய்தோம்.

திருச்சியில் வெயில் அனலாகத் தகித்தது. காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்சார நிறுத்தம் வேறு! ஆனால் அந்த 2 மணி நேரம் நான், அப்பா, அம்மா, அக்கா நால்வரும் வாசலில் அமர்ந்து விசிறிக்கொண்டே எதாவது குடும்பக் கதை பேசிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து எங்கள் அத்தை இறங்கினார். கையில் நிறைய பைகள். "வாங்க எல்லாரும் காலை சிற்றுண்டி சாப்பிடலாம்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார். பையில் இருந்த உணவு பாக்கெட்டுகளை பிரித்து அடுக்கினார். இட்லி, பொங்கல், வடை, சட்னி, சாம்பார், கேசரி என்று வகையாக வகையாக வாங்கிவந்து அசத்திவிட்டார். திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் உணவகத்தில் வாங்கினாராம். ஆகா, என்ன அருமையான சுவை! நன்றாக வளைத்துக் கட்டினோம்.

நம்ம ஊரில் சமையல், சாப்பாடு என்பது இப்போது மிகவும் சுலபமாகிவிட்டது. வேண்டும் என்கிற போதெல்லாம் பார்சல் வாங்கிக்கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் 'ரெடிமேட் மிக்ஸ்' இருக்கிறது - பஜ்ஜி மிக்ஸ், பக்கோடா மிக்ஸ், வடை மிக்ஸ் இதெல்லாம் 'சக்தி', 'ஜானகிராம்' போன்ற நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அதேபோல் இனிப்பு, கார பதார்த்தங்கள் எதுவாக இருந்தாலும் சுவை குன்றாமல் கடைகளிலேயே கிடைக்கின்றன. சென்னையில் அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸில், "abroad package" செய்து தாருங்கள் என்று சொன்னால் அருமையாக, நேர்த்தியாக சிந்தாமல் சிதறாமல் பாக் செய்து தருகிறார்கள்!! ஆனால் எது எப்படி இருந்தாலும், இங்கே அமெரிக்காவில் வந்திறங்கும் போது, "Do you have any food items?" என்று அதிகாரிகள் கேட்கும் போது 'பக்' கென்று தான் இருக்கிறது.

அத்தை கொண்டு வந்த அருமையான காலை உணவைப் பற்றி சிலாகித்து முடிக்கு முன்பே, மற்றுமொரு பம்பர் பரிசு அடித்தது! எனக்கு நான்கு மாதங்கள் முடிந்திருந்ததால், ஐந்தாவது மாதம் செய்யும் 'கட்டு சாதம்' நிகழ்வை முறைப்படி செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கு நாளும் குறித்தார் அத்தை. அன்றைக்கும் வீட்டிற்கு வந்திறங்கியது வரிசையாக சாத வகைகள். கல்கண்டு சாதம்(அக்கார வடிசல்), மாங்காய் சாதம், சாம்பார் சாதம், கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் சிப்ஸ் - இவற்றை உறவினர்கள் செய்து எடுத்து வந்திருந்தார்கள். அம்மாவின் பங்கிற்கு தயிர் சாதம், வடை, பாயசம் செய்திருந்தார். நான் எத்தனையோ 'pot luck' களை அமெரிக்காவில் பார்த்திருந்தாலும், எனக்கே எனக்கென்று அன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த pot luck என் மனதை நெகிழ வைத்தது. இந்த கவனிப்பு கொடுத்த மிதப்பில் இருந்த நான், சற்று அப்பாவை மறந்திருந்தேன். அப்பாவும், இந்த கலகலப்பான சூழ்நிலையால் தன் வலிகளையும் கவலைகளையும் மறந்திருந்தார். ஒரு நாள் தனக்கு இரண்டே ஆசைகள் தான் எஞ்சி இருக்கின்றன என்றார். ஒன்று, எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பார்த்துவிட வேண்டும். இரண்டாவது, அக்கா திருச்சியில் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் சில நாட்களாவது குடியிருக்கவேண்டும் என்பதே அவருடையா இரண்டு ஆசைகள். திசம்பர் மாதம் பிறக்கப்போகும் என் குழந்தையை அப்பா பார்த்துவிவிட வேண்டுமென்று என்னல் பிரார்த்தனை தான் செய்ய முடியும். குழந்தைப் பிறப்பதை துரிதப்படுத்த முடியாது. ஆனால் அந்த புது வீடு கட்டும் வேலையை துரிதப்படுத்தாலாம் என்று முடிவு செய்து அக்கா களத்தில் இறங்கினாள். நானும் அக்காவுடன் இணைந்தேன்.

திருச்சியில் யாராவது வீடு கட்டவேண்டுமா? எங்களிடம் ஆலோசனைக் கேளுங்கள் என்று சொல்லுமளவு நானும் அக்காவும் அதில் அவ்வளவு அனுபவங்களைப் பெற்றோம்.

அடுத்தப் பதிவில் அந்த அனுபவங்கள்...

Tuesday, August 04, 2009

தமிழகப் பயணம் 2009 - 2

சென்ற பதிவில் என் அப்பாவின் உடல்நிலைக்காக வருந்தி பிரார்த்தனை செய்வதாக எழுதியிருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

இனி எமிரேட்ஸ் விமானத்தில்...பழைய நினைவுகளில் நான்...
அப்பாவுக்கு புற்று நோய் என்று தெரிந்துவுடனேயே, அவருக்கு என்ன மாதிரி சிகிச்சை செய்யலாம் என்று நான், அக்கா மற்றும் அண்ணன்மார் கலந்து ஆலோசித்தோம். chemotherapy கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று நான் தெளிவாகச் சொன்னேன். ஏனென்றால், அதன் பக்க விளைவுகள் கொடுமையானவை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் என் கணவரின் சித்தப்பா chemo வினால் மிகவும் அவதிப்பட்டார். அவருக்கு 60 வயது தான். அவராலேயே தாங்கமுடியவில்லையென்றால் 79 வயதான என் அப்பா அதனை எப்படித் தாங்குவார்? வாசிங்டனில் எனக்குத் தெரிந்த புற்று நோய் மருத்துவர்கள் இருவருடன் பேசினேன். அவர்கள் சொன்னது, chemo ஒரு நல்ல சிகிச்சைதான். 40 அல்லது 50 வயதான ஒரு நோயாளிக்கு அந்த சிகிச்சையினால் 5 வருடங்கள் வரை ஆயுள் நீடிக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் அப்பாவுக்கு ஏற்கனவே 80 வயதாகிவிட்டதால் இன்னும் 6 மாதங்களோ ஒரு வருடமோதான் அவரால் இருக்க முடியும், அதுவும் chemo வின் பக்க விளைவுகளினால் அவரது 'quality of life' மிகவும் மலிவாகத் தான் இருக்கும் என்றார்கள். மற்றொரு மருத்துவர் மிக அழக்காகச் சொன்னார் "We try to treat the cancer, but not the patients" என்று. அதானல் chemo வேண்டவே வேண்டாம் என்பது என் தரப்பு வாதமாக இருந்தது.

ஆனால் அக்கா தனக்குத் தெரிந்த மருத்துவர்களிடம் பேசிப்பார்த்தாள். அதில் ஒருவர் இப்போது ஒரு புது விதமான மருந்தை chemo வில் உபயோகிக்கிறார்கள் என்றும், அதற்கு பக்க விளைவுகள் மிகவும் குறைவு, அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். அந்த மருந்தை கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் வெற்றிகரமாக உபயோகித்து வருகிறார்கள் என்றும், சென்னையில் மலர் மருத்துவமனையில் இதனை உபயோகிக்கிறார்கள் என்றும் சொல்லி, அந்த சென்னை மருத்துவரை சிபாரிசும் செய்தார். இந்த சிகிச்சை முறைக்கு folfox regimen combination chemo therapy என்று பெயராம். இதில் 'Avastin' என்கிற மருந்தை உபயோகிக்கிறார்கள். நான் ஏதோ பரீட்ச்சைக்குப் படிப்பது போல் இந்த சிகிச்சையைப் பற்றி இணையத்தில் மாங்கு மாங்கென்று படித்தேன்.

அக்கா முதலில் திருச்சி சென்றதும் சென்னையில் மலர் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்று அந்த மருத்துவரிடம் அலோசித்தாள். அவர் அப்பாவை பரிசோதனை செய்துவிட்டு, அவரது உடல்நிலை ஓரளவு தெம்பாகத்தான் இருக்கிறது. அதனால் இந்த சிகிச்சையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார். மறுநாள் மதியம் chemotherapy என்று முடிவும் ஆகிவிட்டது. அன்று இரவு கூட அக்காவிடம் மன்றாடினேன் chemo வேண்டாமென்று. ஆனால் அப்போது அப்பாவே ஒரு முடிவுடன் முயன்று பார்த்துவிடுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.

இந்த chemo சிகிச்சையை 2 வாரங்களுக்கு ஒரு முறை 6 மாதங்களுக்கு கொடுக்கவேண்டுமாம். ஒரு முறைக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். 'Avastin' என்கிற அந்த மருந்து மட்டும் 60,000 ரூபாயாம். கேட்டு முதலில் வாய் பிளந்து போனேன்! ஆனால் இதுபோல் அப்பாவுக்குச் சேவை சேய்யும் பாக்கியம்/சந்தர்ப்பம் எங்கள் நால்வருக்கும் இப்போதாவது கிடைத்ததே?!

முதல் chemo நடந்து முடிந்தது. நான் என்னென்னவோ பயங்கரமாக கற்பனை செய்திருந்தேன். ஆனால் ஒன்னுமே இல்லையாம். மூன்று மணி நேரம் ஒரு மருந்தை IV முலம் அப்பாவின் நரம்பில் ஏற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். இள வயது புற்று நோயாளிகள், காலையில் வந்து இந்த மருந்தை ஏற்றிக்கொண்டு மதியம் வேலைக்குச் சென்றுவிடுவார்களாம்!! சே இவ்வளவுதானா? என்று தோன்றியது.
இந்த முதல் chemo வின் போது நான் அமெரிக்காவில் தான் இருந்தேன். அக்காவும் அம்மாவும் அப்பாவுடன் இருந்தார்கள். நல்லவேளையாக அப்பாவுக்கு பக்கவிளைவுகள் எதுவுமே வரவில்லை. ஆனால் அது இரண்டாவது மூன்றாவது சிகிச்சைகளுக்கப்புறம் தான் தொடங்குமாம். இரண்டாவது சிகிச்சையின் போது நான் அப்பாவுடன் இருப்பேன். அடுத்து வரும் சிகிச்சைகளும் நல்லபடியாக முடிந்து அப்பா எங்களுடன் இன்னும் சில மாதங்கள் இருந்தால் மகிழ்ச்சியே...

எமிரேட்ஸ் சென்னை வந்திறங்கியது.

'Swine flu' சோதனை நடந்துகொண்டிருந்தது சென்னை விமான நிலையத்தில். விமானத்திலேயே ஒரு படிவத்தை பூர்த்தி செய்யச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதில் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்குச் சமீபத்தில் சென்றிருக்கிறீர்களா என்கிற கேள்விக்கு "ஆமாம்" என்று எழுதியிருந்தேன். சரி மாட்டினோம். தனியாக அழைத்துச் சோதனை செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் சோதனை என்கிற பெயரில் முகமூடியுடன் உட்கார்ந்திருந்த நபர் (அவர் மருத்துவரா என்று தெரியவில்லை), என் முகத்தைக் கூட பார்க்காமல் அந்தப் படிவத்தில் சீல் குத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார். இது என்ன சொதனை என்று புரியவில்லை எனக்கு. அனால் சீக்கிரம் வெளியே விட்டதில் மகிழ்ச்சி :-)

அடுத்த ஆறு மணி நேர கார் பயணத்திற்குப் பிறகு ஒடிச்சென்று எங்கள் திருச்சி வீட்டின் கேட்டைத் திறந்த நான், வாசலில் எனக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்து அதிர்ந்தேன்....

தொடரும்...

Wednesday, July 22, 2009

ஐஸ்வர்யா ராயும் அனில் அம்பானியும்

தமிழகப் பயணத்தைப் பற்றி எழுதி முடிக்குமுன் இந்தப் பதிவு ஒரு சிறிய இடைச் செருகல்.

எனக்கு ஐஸ்வர்யா ராய் மீது பெரிதாக ஒன்றும் அபிப்ராயம் இல்லையென்றாலும், அவர் மேல் ஒரு மதிப்பு உள்ளது. எத்தனையோ உலக அழகிகள் வந்தார்கள். ஆனால் சில மாதங்களிலேயே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா கடந்த 15 வருடங்களாக இந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார். ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்திய திரைப்படைத் துறையில், ஆண் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். அவருடைய அழகினால் மட்டும் இதனை சாதிக்கவில்லை. அவரிடம் பிற திறமைகளும் இருந்தன. பல கவர்ச்சிப் படங்களில் அவர் நடித்திருந்தாலும், பல குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். உதாரணத்திற்கு, "தேவதாஸ்", "Provoked" "The Rain Coat" போன்ற படங்களைச் சொல்லலாம். சென்ற ஆண்டு கூட கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யாதான் முக்கிய புள்ளி!

அவருடைய சொந்த வாழ்க்கையில் சில சறுக்கல்களும் இருந்ததாகப் படித்திருக்கிறேன். இப்போது அபிஷேக் பச்சனை திருமனம் செய்துகொண்டு அமைதியாக அவருடைய வாழ்க்கை செல்லுவதில் எனக்கு மகிழ்ச்சியே. பிறகு ஏன் இந்தப் பதிவு???

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் வீட்டு விருந்தின் போது ஐஸ்வர்யாவைப் பற்றி பேச்சு வந்தது. ஐஸ்வர்யாவின் திருமணம் முடிந்தபின் அவர், அமிதாப், அபிஷேக், அனில் அம்பானி, அமர் சிங் எல்லோரும் பலத்த பாதுகாப்புடன் திருப்பதிக்கு சென்றிருந்ததைக் குறிப்பிட்ட நண்பர், "அவ்வளவு அழகான பெண்ணை தான் திருமணம் செய்திருக்க வேண்டும் என்று ஏன் அனில் அம்பானிக்கு தோன்றவில்லை" என்று கேட்டார். "தோன்றியிருக்கலாம், அதில் ஒன்றும் தவறில்லை" என்றேன் நான்.

நண்பர்: "அனில் அம்பானிக்கு மட்டும் வயது சற்று குறைவாக இருந்திருந்தால் கட்டாயம் அவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருப்பார்" என்றார்.
நான்: அதற்கு ஐஸ்வர்யா ஒத்துக்கொள்ள வேண்டுமே?
நண்பர்: கோடீஸ்வரரான அனில் அம்பானி கேட்டிருந்தால் ஐஸ்வர்யா கட்டாயம் ஒத்துக்கொண்டிருப்பார்.
நான்: ஐஸ்வர்யாவிடம் இல்லாத பணமா? அல்லது புகழா? அவர் நடித்த படங்களிலும், சர்வதேச விளம்பரங்களிலும் அவர் பார்க்காத பணமா?
நண்பர்: பணத்தை விட அனில் அம்பானியிடம் 'பவர்' இருக்கிறது. பெண்கள் அதில் மயங்கிவிடுவார்கள்
நான்: பணம், பதவி இவற்றையெல்லாம் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. ஐஸ்வர்யா உண்மையிலேயே அபிஷேக் பச்சனை விரும்பி திருமணம் செய்திருக்கலாம் இல்லையா?
மற்றொரு நண்பர்: ஐஸ்வர்யா அபிஷேக்கைத் திருமணம் செய்துகொண்டதற்கு காரணம் அவருக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. சல்மான்கானை விட்டு அவர் பிரிந்தபோது, சல்மான் தான் இல்லாமல் ஐஸ்வர்யா எப்படி வாழ்கிறார் என்று பார்த்துவிடுவதாகச் சவால் விட்டாராம். சல்மானிடம் ஒரு பெரிய தாதா கும்பலே இருக்கிறதாம். அதற்குப் பயந்துதான் பச்சன் குடும்பத்தில் தஞ்சம் புகுந்தார் ஐஸ்வர்யா.

இதற்கு மேல் நான் பேசியதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பேச்சு திசை மாறிவிட்டது. ஆனால் எனக்கு வருத்தமாக இருந்தது. பணம், பதவி என்றால் எல்லா நடிகைகளும் பின்னால் சென்றுவிடுவார்கள் என்கிற இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. சிலர் அப்படி இருக்கலாம். ஆனால் பலர் அப்படி இல்லை. ஒரு நடிகையின் பிரச்சினை அவருக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் அவர்களைப் பற்றி விமர்சனங்கள் இப்படி எழத்தான் செய்யும். ஆனால், அவர்கள் பொதுவாக அப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வருவது தவறில்லையா?

Friday, July 10, 2009

தமிழகப் பயணம் 2009 பகுதி 1


ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகப் பயணம். வாசிங்டன் டிசியிலிருந்து துபாய் சென்று, பின் அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானம். பின் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் செல்வதாகத் திட்டம். ஆனால் இது வழக்கமான மகிழ்ச்சிகரமானதொரு பயணம் அல்ல.

அப்பாவுக்கு கல்லீரலில்(liver) புற்று நோய். ஆறு மாதங்களே மருத்துவர் கொடுத்த கெடு! செய்தி இடியாய் வந்திறங்கிய அடுத்த வாரமே அடித்துப் பறந்துகொண்டு திருச்சி சென்றுவிட்டாள் அக்கா. ஆனால் நான் சற்று யோசிக்க வேண்டியிருந்தது.

திருமணமாகி பத்து ஆண்டுகள் கழித்து எனக்கு தாய்மைப் பருவம் அடையும் பாக்கியம் கிடைத்திருந்தது. இந்த நேரத்தில் நெடுந்தூர விமானப் பயணம் மேற்கொள்ளலாமா என்று மருத்துவரிடம் கேட்டபோது, 12 வாரங்களுக்கு மேல் செல்லலாம் என்றார். 14 வாரங்கள் வரை காத்திருந்து, நானும் விமானமேறி தமிழகத்திற்கு பயணமானேன்.

விமானத்தில் பொழுது போக புத்தகமோ மடிக்கணிணியோ தேவைப்படவில்லை. அப்பாவின் நினைவுகளே என்னை ஆட்கொண்டன.
நாமக்கல் அருகில் உள்ள காடிசெட்டிப்பட்டி என்கிற கிராமத்தில் ஒரு பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த அப்பா, நினைத்திருந்தால் அப்படியே சொத்து பத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் படிக்கவேண்டும், வேலைக்குப் போகவேண்டும் என்கிற முடிவுடன் தாத்தாவின் விருப்பத்திற்கு எதிராக கிராமத்தை விட்டு வெளியே வந்து கல்லூரியில் சேர்ந்தார். அன்று மட்டும் அப்பா வெளியேறியிருக்கவில்லையென்றால், இன்று நான் ஏதாவது ஒரு கிராமத்தில் வாக்கப்பட்டு அரிசி இடித்துக்கொண்டிருந்திருப்பேன்! (அப்படி வாழும் பெண்கள் மற்றவர்களைவிட எந்த விதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.).

என் வாழ்க்கையில் பொற்காலம் எது என்றால் அது என் பள்ளிப்பருவம் தான். அப்பாவின் அன்பிலும் கண்டிப்பிலும் நான் வளர்ந்த அந்த நாட்கள் இப்போது ஒரு சில புகைப்படங்களிலும் என் மனதின் ஒரு ஓரத்திலும் மட்டுமே சேகரிக்கப்பட்டிருக்கிறது. படிப்பில் என்றுமே அப்பா கண்டிப்பு காட்டியதில்லை, ஆனால் உயர்ந்த எண்ணங்களை என்னுள் விதைக்க முயற்சி செய்தார். நேரத்தின் முக்கியத்தை எனக்கு உணர்த்த படாத பாடு பட்டார். நான் 12ஆம் வகுப்பு முடித்தபின் கல்லூரி சேர்வதற்கு முன் சில மாதங்கள் வீட்டில் சும்மாதான் இருந்தேன். காலை வேகுநேரம் நான் தூங்குவதைப் பார்த்து அப்பா பதறுவார். நாள் முழுதும் வெட்டியாகவே பொழுதைக் கழிக்கும் என்னை என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பார். ஏதாவது தையல், கூடை பின்னுதல் போன்றவற்றைக் கற்றுகொள்ளேன் என்று கெஞ்சுவார். இதிலெல்லாம் எனக்கு சிறிதளவு கூட ஆர்வம் கிடையாது.

தட்டச்சு கற்றுக்கொள் என்று சொல்லி என்னை காலை 7 மணிக்கெல்லாம் எழுப்பி அவர் அறையில் உள்ள மேஜையின் மேல் இருந்த ஒரு பழைய Remington தட்டச்சு யந்திரத்தின் முன் உட்கார வைப்பார். நான் வேண்டா வெறுப்பாக தூக்கக் கலக்கத்துடன் "asdfgf ;lkjhj" என்று அடித்துக்கொண்டிருப்பேன். அப்பாமீது கோபமாக வரும். ஒரு மாதம் இப்படிச் சென்ற பிறகு, என்னை ஒரு டைப்பிங் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்துவிட்டார். அது கல்லூரி வளாகம். சுற்றி டீ கடைகள். காலையில் மாணவர்களெல்லாம் அங்கே டீ குடித்துவிட்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். எனக்கு அங்கே செல்ல மிகவும் கூச்சமாக இருக்கும். விசில், கிண்டல் பேச்சுகள் இவற்றைத் தாண்டி நான் அங்கே சென்று ஒரு மாதம் தட்டச்சு பயின்று கொண்டிருந்தேன், அப்பாவைத் திட்டியபடியே. இன்று கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு 60 வார்த்தைகள் வரை என்னால் தட்டச்சு செய்ய முடியும். கணிணித் துறையில் இருக்கும் எனக்கு, இந்தத் திறமை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. அதற்குக் காரணம் அன்று அப்பா அளித்த பயிற்சி தான்.

அப்பா ரொம்ப மிதமான மனிதர் என்றாலும், அவருக்குக் கோபம் வந்தால் கட்டுக்கடங்காமல் வரும். ஒரு முறை புது VCR ஒன்றை வாங்கி வந்தார். என்னை அழைத்து அதனை எப்படி தொலைக்காட்சியுடன் பொருத்தவேண்டும் என்று படித்து அதன்படி செய்யச் சொன்னார். நான் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டேன். இரண்டு நாட்கள் பார்த்தார். மூன்றாம் நாள் எனக்கு ஒரு 'டோஸ்' விட்டார் பாருங்கள், உடலெல்லாம் நடுங்கி தேம்பித் தேம்பி அழுது, அம்மா வந்து என்னை சமாதானம் செய்து... அன்று அப்பா அலுவலகத்திலிருந்து வருவதற்குள் அந்த VCRஐ சரியாகப் பொருத்திவிட்டு தான் மறுவேலை பார்த்தேன்.
மற்றொரு முறை, அப்பா அம்மா ஊரில் சில நாட்கள் இல்லாத சமையத்தில் அப்பாவின் அலுவலக ஊழியர் ஒருவர் எனக்கு முக்கியமான உதவிகள் சிலவற்றைச் செய்தார். அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்த போது, அப்பா என்னை அவரிடன் வந்து நன்றி சொல்லுமாறு சொன்னார். நான் 'நைட்டி' அனிந்திருந்ததால் வெளியே வரக் கூச்சப்பட்டுக்கொண்டு அப்புறமா அவரிடம் பேசிக்கொல்லலாம் என்று இருந்துவிட்டேன். அன்று இரவு உணவு சாப்பிட நான் மேசையில் அமர்ந்தபோது, அப்பா என் தட்டைத் தூக்கி வீசியெறிந்தார். "ஒருத்தருக்கு நன்றி சொல்லக்கூட உனக்கு மனம் வரவில்லை, இல்லையா?" என்று கேட்டார். நான் என் தவறை உணர்ந்து கூனிக்குறுகிப்போனேன்.
இவையெல்லாம் சிறிய உதாரணங்கள் தான். இதுபோல், எனக்குப் பிடிக்காமலேயே, எனக்குத் தெரியாமலேயே அப்பா என்னுள் விதைத்த வாழ்க்கைக்கு அவசியமான திறமைகளும், நல்லெண்ணங்களும் பல. அவை எல்லாவற்றின் பலனையும் நான் பின்னால் தான் புரிந்துகொண்டு அனுபவிக்கின்றேன்.

இப்படி அப்பாவைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் போதே, துபாய் நகரம் நெருங்கிவிட்டதாக விமானத்தில் அறிவிப்பு வந்தது. ஆர்வத்துடன் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் மேடுகள். பாலைவனங்களை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். இதுவே நேரில் பார்ப்பது முதன் முறை. மணல் பரப்பின் நடுவே திடீரென்று ஒரு கட்டிடக் குவியலாகத் தென்பட்டது துபாய் நகரம்.விமான நிலையமே ஒரு நகரம் பொல் தான் இருந்தது. வாசிங்டன் டல்லஸ் விமான நிலையத்தை விட பத்து மடங்காவது பெரியதாக இருக்கும்! நான் வந்திறங்கிய இடத்தில் இருந்து சென்னை செல்லும் எமிரேட்ஸ்(Emirates) விமானம் நிற்கும் இடத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு மைல் நடக்கவேண்டியிருந்தது. நடை பாதையின் நடுவே வரிசையாக பனை மரங்கள். அவை இயற்கையானவையா செயற்கையானவையா என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். இரு புறங்களிலும் 'duty free' கடைகள். மேலும், Dunkin Donuts, Cosi, Burger King, Starbucks, McDonalds போன்ற உணவகங்களெல்லாம் இருந்தன. துபாய் விமான நிலையத்தில் வேலைப்பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் மலையாளிகள் மற்றும் தமிழர்கள்.

ஒரு மணி நேர காத்திருத்தலுக்குப் பின் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை நோக்கிப் பயணம். மீண்டும் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...


தொடரும்...

Thursday, January 08, 2009

பெரியண்ணன்

துளசியக்கா தன் அக்காவைப் பற்றி கிட்டத்தட்ட 15 பகுதிகள் எழுதியிருந்ததை படித்ததிலிருந்து என் அக்காவைப் பற்றியும் அண்ணன்களைப் பற்றியும் சுவையான நினைவுகளை எழுதவேண்டுமென்கிற ஆவல் எழுந்தது. முதலில் என் பெரியண்ணன் பற்றி.

பெரியண்ணன் என்னைவிட 15 வருடங்கள் மூத்தவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவர் வீட்டிலேயே இல்லை. அதனால் அவரது இளமைக் காலத்தைப் பற்றி பின்னால் மற்றவர்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும். எங்க குடும்பத்தோட பெருமை அவர் என்று சொல்லலாம். படிப்பில் புலியாம். பரீட்சை சமையங்களில் மொட்டை மாடியில் தன் வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுப்பாராம். பள்ளிக்கூடத்தில் நாடகம், நடனம் என்று எல்லாவற்றிலும் வெளுத்து வாங்குவாராம். 'Come September' ('அன்பே வா' என்ற தமிழ்ப் படம் இதனை தழுவி எடுக்கப்பட்டது) என்று அருபதுகளில் வெளிவந்த ஒரு புகழ் பெற்ற ஆங்கிலப்படம் இருக்கிறது. அதன் theme இசைக்கு அண்ணன் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்தியதாக பெருமையாக அம்மா சொல்லுவார். PUC இல் கடலூர் மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இந்தச் செய்தி வந்த மக்கிப் போன செய்தித்தாளை இன்னமும் என் அம்மா தன் பீரோவில் புடவைகளுக்கு அடியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

எனக்கு 3 அல்லது 4 வயதிருக்கும்போதே பெரியண்ணன் சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் படிக்கச் சென்றுவிட்டார். எப்போதாவது விடுமுறைக்கு சிதம்பரம் வருவார். கூடவே தனது zimbabwe, Iran நாட்டு நண்பர்களை அழைத்து வருவார். தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நான் வியப்பாக வேடிக்கைப் பார்த்தது நினைவிருக்கிறது . அண்ணன் விடுமுறைக்கு வருவதில் எனக்குப் பிடித்ததே அவர் சென்னையிலிருந்து வாங்கிக்கொண்டு வரும் இனிப்புகள்! இப்போது 'க்ருஷ்ணா ஸ்வீட்ஸ்' போல் அப்போதெல்லாம் 'இம்ப்பாலா'(Impala) என்று ஒரு இனிப்புக்கடை சென்னையில் மிகவும் பிரசித்தி. அந்தக் கடையிலிருந்து குலாப் ஜாமூன், பால்கோவா வாங்கிவருவார்.

நான் +1 படிக்கையில், பெரியண்ணன் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டு வருடங்கள் வேலை செய்தார். நான் அதே பொறியியல் கல்லூரியில் செரும் போது, அவர் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரிக்குச் சென்றுவிட்டார். நல்லவேளை! அண்ணனிடமிருந்து தப்பித்தோம் என்று நிம்மதியாக இருந்தால், அதில் மண் விழுந்தது!! முதல் வருடத்தில் முதன் முதலில் ஒரு தேர்வு எழுதி முடித்தேன். தேர்வுத் தாளை திருத்தி என் கையில் கொடுத்த ஆசிரியர், "ரவியின் தங்கை தானே நீங்கள்? இவ்வளவு கம்மியா மார்க் எடுத்திருக்கீங்களே?! அடுத்தமுறையாவது அவர் பெயரை காப்பாற்றுங்கள்" என்றார். எனக்கு ரொம்ப அவமானமாகப் போயிற்று :-(
மற்றொரு முறை ஒரு பயிற்சியில், ஒரு கணக்கை போடுவதற்கு calculator உபயோகித்த என்னைப் பார்த்து ஒரு ஆசிரியர், "ரவியின் தங்கைக்கு calculator தேவையா?" என்றார் நக்கலாக! என் அண்ணன் அந்தக் கல்லூரியில் இல்லாதபோதும், நான் அங்கிருந்த நான்கு வருடங்களும் 'ரவியின் தங்கை' என்கிற பாரத்தைச் சுமக்கவேண்டியிருந்தது. நான் அவருடைய தங்கை என்பதற்காக அதிகப்படியான மதிப்பெண் போன்ற ஸ்பெஷல் சலுகையெல்லாம் ஒன்றும் கிடைக்கவில்லை!! அண்ணனின் அறிவைப் பற்றி நான் எப்போதுமே பெருமை கொண்டிருந்தாலும், அவரைப் போலவே நானும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்புகள் என் மீது தினிக்கப்படும்போது எரிச்சலாக இருந்தது. என் பெற்றோர்கள் கூட என்னையோ, என் அக்காவையோ, சின்ன அண்ணனையோ பெரியண்ணனுடன் ஒருபோதும் ஒப்பிட்டுப் பெசியதில்லை!

கடைசியில் அண்ணனின் பெயரை காப்பாற்றாமலேயே கல்லூரிப் படிப்பை முடித்தேன் :-)

இந்த 'ரவி' எதிர்பார்ப்பு என்னோடு நிற்கவில்லை. எனக்குப் பின் 10 வருடங்களுக்குப் பிறகு அதே கல்லூரியில் சேர்ந்த பெரியண்ணனின் மகனும் நன்றாக மாட்டிக்கொண்டான். அவனுடைய தேர்வுத் தாள்களைப் பார்த்து, "புலிக்குப் பிறந்தது பூனையாகிவிட்டதே" என்று ஆசிரியர்கள் வருத்தப்பட்டார்களாம்!!

சிறு வயதிலிருந்தே நாங்கள் சேர்ந்து இல்லாததால் பெரியண்ணனுக்கும் எனக்கும்மிடையே இருந்த ஒரு நீண்ட இடைவெளி அண்ணனின் திருமணத்திற்கு பின் அண்ணியால் குறைந்தது. அடிக்கடி பாண்டிச்சேரி போய் அண்ணன் வீட்டில் தங்குவேன். அப்போது தான் அண்ணனிடம் பேசிப் பழக சந்தர்ப்பம் கிடைத்தது. அண்ணன் ஆங்கிலப் பாடல்கள் நிறைய கேட்பார். அவருடைய அபிமான குழு CSNY. Crosby, Stills, Nash, Young என்ற நான்கு இசைக்கலைஞர்களை கொண்ட குழு இது. எனக்கு அப்போது அந்த பாடல்களில் ஆங்கில உச்சரிப்புகள் புரியாது. எனக்காக அண்ணன் அந்த வார்த்தைகளை விளக்குவார். அர்த்தமும், பின்னனியும் புலப்படும் போது, அந்தப் பாடல்களைக் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இன்னும் அந்தப் பாடல்கள் என் நினைவில் நீங்காமல் இருக்கின்றன. "Thinking to myself today", "Our House", "Oh Cameal", Beatles இன் "I once had a girl", Eagles இன் 'Hotel California' - இவற்றையெல்லாம் என் அண்ணன்கள் கிட்டாரும் கையுமாக பலமுறை பாடிக்கேட்டிருக்கிறேன்.

மேலும், பொறியியல் கல்லூரிப் படிப்பின் போது நான் திண்டாடியபோதெல்லாம், கடினமான பாடங்களை அவர் எனக்கு பல முறை லாவகமாக, எளிதாக விளக்கியிருக்கிறார். கல்லூரி இறுதி ஆண்டில் என்னுடைய ப்ராஜக்ட் வொர்க்கை(project work) திறமையாக செய்து முடிக்க முழு உதவி செய்தார். அவர் மூளையில் கால் வாசியாவது எனக்கு இருக்கக்கூடாதா என்று நான் பல முறை ஏங்கியிருக்கிறேன். அண்ணன் தன் படிப்பறிவை எனக்குத் தந்து என்னை வளர்த்தார்... என்னால் அவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்? ஏதோ அவருக்குப் பிடித்த மட்டன் குழம்பு, மோர்குழம்பு, பருப்புத் துவையல் என்று அவர் வாசிங்டன் டிசி வரும்போதெல்லாம் இப்போது சமைத்துப் போடுகிறேன் :-)

அடுத்தப் பதிவில் சின்ன அண்ணன் பற்றி...

Monday, January 05, 2009

பிரகாஷ்ராஜும் இராதாமோகனும்

'அபியும் நானும்' ஒரு அற்புதமான படம் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஆனால், வழக்கமான வெட்டு குத்து, மசாலா படங்களுக்கிடையே 'அபியும் நானும்' கண்டிப்பாக மனதிற்கு இதமான, ஒரு மாறுபட்ட திரைப்படம். இரண்டரை மணி நேரம் நன்றாகப் பொழுது போயிற்று. விவேக், வடிவேலு போன்றவர்கள் இல்லாமலேயே பல இடங்களில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது.

இதில் பிரகாஷ்ராஜின் 'மூட்' (mood) இருக்கிறதே, அதுதான் அலாதி! அதை நாம் முதலில் உள்வாங்கிக்கொண்டு, அதனை பின் தொடர்ந்தால், சுவையாக, ரசிக்கும்படி இருக்கின்றது. தன் மகளுடனேயே வாழ்க்கையின் அத்தனை மணித்துளிகளையும் கழித்துவிடத் துடிக்கும் ஒரு முட்டாள்தனமான பாசமான தந்தை பிரகாஷ்ராஜ். அப்பாவின் அன்பு வளையித்துனுள்ளேயே வளரும் மகள், வேகமாக வளர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு தாவும் போது, அந்த வேகத்தையும் வலியையும் தாக்குபிடிக்க முடியாமல் திண்டாடும் தந்தையாக பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜைப் போலில்லாமல் அன்பும் கண்டிப்புமான ஒரு யதார்த்தமான அம்மாவாக ஐஸ்வர்யாவின் நடிப்பையும் பாராட்டவேண்டும். ரொம்பவும் பாச மழை பொழிந்து உருக்கமாக பேசுகின்ற வசனமெல்லாம் இல்லை. நகைச்சுவையோடு கூடிய யதார்த்தமான காட்சிகளால் பின்னப்பட்டிருக்கிறது 'அபியும் நானும்'.

தன் குழைந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு பிரகாஷ்ராஜ் இரவு பகலாக புத்தகங்களை வைத்து படிப்பது, நீண்ட தேர்முக வரிசையில் அப்பாக்களெல்லாம் மாங்கு மாங்கென்று படித்துக்கொண்டே நிற்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

பிச்சைகாரராக இருந்து, அபியின் கருணையால் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாறும் குமரவேல் திரை உலகுக்கு ஒரு நல்ல அறிமுகம். அவர் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தின் மூலம் அவர் வளர வாய்ப்புகள் அதிகம். அவருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை!

பிரகாஷ்ராஜின் சின்னச் சின்ன அதிர்ச்சிகளும், ஏமாற்றங்களும், சுதாரித்தல்களுமே இந்தப் படத்தின் கதை! மகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை ஒரு சர்தார்ஜி என்பதை பிரகாஷ்ராஜ் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் காட்சி நல்ல காமெடி. 'என் கனவில் கூட என் மாப்பிள்ளைக்கு டர்பன் கட்டிப் பார்த்ததில்லைடா' என்று நண்பனிடம் சொல்கிறார். இறுதியில் திருமணத்தின் போது அதே நண்பனிடம், 'என் பொண்ணு கல்யாணத்தில மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரி வைக்க ஆசைப்பட்டேன் தெரியுமா?' என்பார். பின்னனியில் பஞ்சாபி பாங்ரா இசை முழங்க அனைவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருப்பார்கள். உங்களால் சிரிக்காமல் இருக்கவே முடியாது :-)

அன்பான தந்தையான பிரகாஷ்ராஜ், மகளைப் பிரிந்து வேதனைப்படும் பிரகாஷ்ராஜ், இறுதியில் பக்குவமானவராக மாறும் பிரகாஷ்ராஜ் - இவர்களையெல்லாம் விட, மாப்பிள்ளை தன் வீட்டுக்கு வந்ததிலிருந்து சிடுசிடுப்பும் கடுகடுப்புமாக வளையவரும் பிரகாஷ்ராஜ் தான் என் மனதைக் கவர்ந்தார்!

சர்தார்ஜி மாப்பிள்ளைக்காக சப்பாத்தி, ராஜ்மா என்று வீட்டில் விருந்து அமர்க்களப்பட, 'எனக்கு இட்லி சாம்பார் வேணும்' என்று மனைவியிடம் அடம்பிடிப்பது...

எல்லாரும் மாப்பிள்ளையின் இண்டர்வியூவை தொலைகாட்சியில் பார்த்துகொண்டிருக்க, பொறாமை தாங்காமல், 'போன் எதுவும் வந்ததா?' என்றும், 'கொஞ்சம் டீ போடேன்' என்றும் சம்பந்தமேயில்லாமல் எல்லார் கவனத்தையும் கலைக்க முயல்வது...

துணிக்கடையில் இந்தி பாடல் ஒலிக்க, 'ஏன்? தமிழ் பாட்டு போடமாட்டீங்களா?' என்று கடைக்காரரிடம் சிடுசிடுப்பது...

மகளுக்கு மாப்பிள்ளை தேர்ந்தெடுத்த புடவை பிடித்துவிட, அந்தக் கடுப்பில் 'லுங்கி இருக்கா?' என்று சத்தமாக மீண்டும் கடைக்காரரிடம் கேட்பது...

இதெல்லாம் நல்ல ரசிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் :-)

மற்றொரு குறை எனக்குத் தோன்றியது என்னவென்றால், அபி தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை பிரகாஷ்ரஜுக்கும் பிடிக்கவேண்டும் என்பதற்காக, அவர் பிரதமந்திரியின் அபிமான ஆலோசகர் என்றும், ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தையே தத்தெடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஒரு உன்னதமானவர் என்றும் அவரை ஒரு தியாகி ரீதியில் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் அப்படியெல்லாம் இல்லாமல், சாதாரணமாக படித்து வேலையில் இருக்கும் ஒருவராக இருந்திருந்தால்?! அப்படியிருந்தாலும் பெண்ணுக்காக விட்டுக்கொடுத்து தானே ஆகவேண்டும்?

மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கலங்கி போய் உட்கார்ந்திருக்கிறார்கள் பிரகாஷ்ராஜும் மனைவி ஐஸ்வர்யாவும். அப்போது பிரகாஷ்ராஜ் சொல்லுவார் - "நீ என்னை காதலிச்சப்ப, எனக்காக உங்க வீட்டை எதிர்த்தப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்காக இத்தனை வருஷமா உன் அம்மா அப்பாகிட்ட பேசாம இருந்தப்ப ரொம்ப கர்வப்பட்டேன். ஆனால் இப்பதான் புரியுது...அவங்களும் என்னை மாதிரி தானே கலங்கிப்போய் தனிமரமா உட்கார்ந்திருப்பாங்க?! அபி கல்யாணத்துக்கு அவங்களையும் கூப்பிடலாமா?"

படத்தின் ஆரம்பக்காட்சிகளில் சிறு பிள்ளைத்தனமான, முட்டாள்தனமாக இருந்த இவர், மகளின் திருமணத்தின் போது ஒரு பண்பட்ட மனிதராக மாறுவதை இந்தக் காட்சியில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இராதாமோகன்.

ஒரு குழந்தை வளர்ந்து பெரியவளாகி காதலித்து திருமணம் செய்துகொள்வதை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம். ஒரு தந்தை வளர்ந்து படிப்படியாக பக்குவமடைவதை இந்தப் படத்தில் தான் நான் பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், மொழி, இப்பொழுது அபியும் நானும் இப்படி குடும்பத்தோடு சென்று பார்க்ககூடிய நல்ல திரைப் படங்களை உருவாக்கும் இயக்குனர் இராதாமோகனுக்கு என் பாராட்டுக்கள்.