Wednesday, February 02, 2011

ஒரு சாலை வழிப் பயணம்(நந்தலாலா), ஒரு காட்டு வழிப் பயணம்(மைனா)



சமீபத்தில் என் மனதை பாதித்த இரண்டு திரைப்படங்கள் - நந்தலாலா மற்றும் மைனா.   இந்த இரு திரைப்படங்களின் கதை களமும் ஒன்றுதான்  -  நெடுந்தூரப் பயணம்.

ஒரு பயணத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.  கதாநாயகனும் கதாநாயகியும் சந்தர்ப்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக சேர்ந்து பயணிக்க நேரிடுவது,  பின் அது காதலில் முடிவது போன்ற திரைப்படங்களை பார்த்து அலுத்துவிட்டது.  'டைடானிக்' (கப்பல் பயணம்), மெட்ராஸ் டு பாண்டிச்சேரி (பேருந்து பயணம்), An Affair to Remember (கப்பல் பயணம்) - இது போன்ற திரைப் பயணங்கள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தன.

ஆனால்  ஒரு சிறுவன், ஒரு மனநோயாளி மற்றும் ஒரு விலைமாது (நந்தலாலா) சேர்ந்து செல்லும் ஒரு பயணத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?  அந்த மூவரையும் எப்படி இணைக்க முடியும்?     அதேபோல் மைனாவில் ஒரு குற்றவாளி, அவனது காதலி, இரண்டு காவல் துறை அதிகாரிகள் சேர்ந்து மலையடிப் பாதைகளில் நடந்து செல்கிறார்கள்.  இந்தப் பயணம் எப்படி சுவையானதாக இருக்கமுடியும்?

இருந்தது!  அந்தப் பயணங்கள் சுவையானதாக மட்டுமல்லாமல்,  என் மனதை நெருடி கண்களில் கண்ணீரையும் வரவழைத்தன.



நந்தலாலா: அகிலேஷ் என்கிற சிறுவனும் பாஸ்கர் மணி என்கிற மனநோயாளியும் எதிர்பாராத விதமாக சேர்ந்து பயணம் செல்ல நேர்கிறது.  பயணிக்கும் திசை ஒன்றாக இருக்கிறது...நோக்கம் கூட ஒன்றுதான்...இருவருமே தத்தம் தாயைச் சந்திக்கச் செல்கிறார்கள்.  ஆனால் சந்தித்த பின் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் வேறுபடுகிறார்கள்.  அகிலேஷ் தன் தாயின் கண்ணத்தில் முத்தமிட விரும்புகிறான்.  பாஸ்கர் மணி தன் தாயின் கண்ணத்தில் அறைய விரும்புகிறான்.  ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் நடந்ததோ வேறு.  பாஸ்கர் அகிலேஷின் தாயின் கண்ணத்தில் அறைகிறான்.   அகிலேஷோ ஒரு விலைமாதுவை தாயாக ஏற்று அவள் கண்ணத்தில் முத்தமிடுகிறான்.  ஏன் என்று குழப்பமாக இருக்கிறது இல்லையா? விடையை வெள்ளித் திரையில் காண்க!

நாம எல்லாருமே அன்புக்காக ஏங்குகிறோம்.  நாம் எதிர்பார்க்கும் இடத்தில் அன்பு கிடைக்கவில்லையென்றால், அது கிடைக்கும் இடத்தில் இருந்து ஏன் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது?  அல்லது அன்புக்காக ஏங்கும் மற்றொருவரின் மேல் நாம் ஏன் அன்பு செலுத்தக்கூடாது? இது சிறுவன் அகிலேஷ் கற்றுக்கொண்டு, நமக்கும் கற்றுக்கொடுக்கும் பாடம்.  தன் தாய் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாள் என்பதை உணர்ந்தபின், போக்கிடம் இல்லாமல், வேறு பிழைப்பு இல்லாமல் தன் பயணத்தில் தன்னுடன் இணைந்த விலை மாதுவை தன் தாயாக ஏற்கிறான்.  கொஞ்சம் இது 'ஓவர் டிராமா' போல் இருந்தாலும், ஒரு சிறுவனுக்குள்ள உயர்ந்த எண்ணத்தை,  பரந்த மனப்பாண்மையை படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மிஷ்கின்னை பாராட்டியே ஆகவேண்டும்.

"ஒன்னுக் கொன்னு துணையிருக்கும் உலகத்தில...
அன்பு ஒன்னு தான் அனாதையா...
யாரு இத கண்டுகொள்வார்...
கைகளிலே ஏந்திக்கொள்வார்...
சொந்தம் சொல்ல யார் வருவார்...
அன்புக்கு யார் அன்பு செய்வார்..."

என்னமாய் பாடிவிட்டர் ஜேசுதாஸ்?

 பாடல் வரிகள் மனதைத் தொடுகின்றன.  அன்பு கிடைக்காமல் இருப்பவர்களைத் தான் அனாதை என்கிறோம்.  ஆனால் அன்பே அனாதையா இருக்கிறதென்று சொல்லும் போது, அதன் பின்னணயில் இருக்கும் வலியும் கொடூரமும் புலப்படுகிறது.

எனக்குத் தோன்றிய சில குறைகள்: 1. மிஷ்கின் அதிவேகமாகப் பேசுவதால், அவரது வசனங்கள் சரியாகப் புரியவில்லை 2. அடிக்கடி மிஷ்கின்னும், அகிலேஷும் தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு சாலையில் நிற்பது பார்க்க அலுப்பாக இருக்கிறது.  3 விலைமாதுவாக வருபவர் ஏன் மற்ற இருவருடன் இணைந்து பயணிக்கிறார் என்பதற்கு வலுவான ஒரு காரணம் எனக்குப் புலப்படவில்லை.


மைனா:  நந்தலாலா கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறதென்றால்  மைனா தேணி, முன்னார் அருகில் உள்ள மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் பயணிக்கிறது.

தீபாவளியன்று நடக்கும் கதை என்பதால், பின்னணியில் வெடிச் சத்தம்,  குழந்தைகள் இனிப்பு எடுத்துச் செல்வது போன்றவை யதார்த்தமாக இருந்தது.  மசாலா படங்களில் மிடுக்காக சைரன் வைத்த ஜீப்புகளில் செல்லும் காவல் அதிகார்களையே பார்த்துப் பழகிவிட்டோம் நாம்.  இயல்பாக சைக்கிளிலும் ஆட்டோவிலும் செல்லும் சிறைக் காவல் அதிகார்களைப் பார்க்க நன்றாக இருக்கிறது.  அதிகாரி ராமய்யா நடிப்பில் அசத்திவிட்டார்.  அவருடை மனைவி செல் பேசியில் அழைக்கும் போது, "மாமோய்...நீ எங்க இருக்க?" என்று அலறும் அவருடைய  ரிங் டோன் சூப்பர்!  வடிவேலும், விவேக்கும் ரூம் போட்டு யோசித்துச் செய்யும் காமெடியை ராமய்யா மிக இயல்பாக இரசிக்கும்படியாகச் செய்துவிட்டார்.

படத்தின் தொடக்கத்தில் தங்கையின் மேல் அன்பைப் பொழிந்து, பாஸ்கர் என்கிற சிறைக் காவல் அதிகாரியான மச்சானின் மேல் சற்று காண்டாக இருக்கும் அந்த மூன்று முரட்டு அண்ணன்களைப் பார்த்தாலே வயிற்றில் புலியைக் கரைத்தது.  ஏன் தொடக்கத்தில் அந்த அண்ணன் தங்கை தொசைபேசி உரையாடலை அவ்வளவு விலாவரியாகக்  காட்டுகிறார்கள் என்று நான் யோசித்தேன்.  ஆனால் படத்தின் முடிவில் நம் நெஞ்சை பதைக்க வைக்கும் ஒரு பாதகச் செயலுடன் அந்த ஆரம்ப நிகழ்ச்சிகளை அருமையாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு பக்கம் அந்த அமைதியான சிறைக்காவல் அதிகாரி பாஸ்கர்,  அவருடைய திமிர் பிடித்த மனைவி, அவளுடைய முரட்டு அண்ணன்மார்.  இவர்களுக்குத் தொடர்பே  இல்லாமல் சற்றுத் தள்ளி ஒரு மலை கிராமத்தில்  உயிருக்குயிராக நேசிக்கும் சுருளியும் மைனாவும்.  சிறு வயதிலிருந்தே தன் காதலி மைனாவுக்கு வீடு கொடுத்து, வசதி கொடுத்து, படிக்க வைத்து, அவளை வளர்க்க அவளது தாய்க்குச் சமமாக எல்லாவற்றையும் செய்கிறான் சுருளி.  அவளைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதே அவனது கனவு.  அப்படி அவன் கண்ணும் கருத்துமாக பல ஆபத்துகளில் இருந்து காத்து வளர்த்த மைனாவை யாரோ அவர்களுக்குச் சம்மந்தமே இல்லாத மூன்று நபர்கள் (அந்த முரட்டு அண்ணன்கள்) அனியாயமாகக் கொன்று விடுகிறார்கள்.  அதைத் தாங்கமுடியாமல் சுருளி ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான்.

ஏன் அந்த மூன்று அண்ணன்களும் மைனாவை கொலை செய்கிறார்கள் என்பதை வெள்ளித் திரையில் காண்க!  இன்னேரம் கண்டிருப்பீர்கள் :-)

 சுருளி வாழும் அந்த மலைக் கிராமத்திற்குச் சென்று சிறை அதிகாரிகள் பாஸ்கரும் ராமைய்யாவும் சுருளியை பிடித்துக்கொண்டு வரும்போது, மைனாவும் அவனுடன் வருகிறாள்.  அவர்கள் நால்வரும் தேணிக்கு திரும்பி வரும் பயணத்தின் போது அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் அழகான திரைக் கதையாக விரிகிறது.  மைனாவும் சுருளியும் ஒரு ஆப்பக் கடை வைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக முன்னேறிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்.  அந்தச் சிறை அதிகாரிகளோ, தீபாவளி அன்று தம் குடுமபத்தாருடன் இருக்க முடியவில்லையே என்று அவர்கள்  மீது கடுப்பாக இருக்கிறார்கள்.  ஊருக்குப் போனவுடன் அவனை கஞ்சா வழக்கில் வெளியே வரமுடியாதபடி சிறையில் தள்ள திட்டமிடுகிறார்கள்.   இப்படி, அடுத்த என்ன நேரப் போகிறதோ, என்று நம் மனமும் அவர்களை படபடப்புடன் பின் தொடர்கிறது.  இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

இன்னும் இறந்து போன மைனாவை நினைத்தால் மனசு கஷ்டமா இருக்கு.  அதுவும், அவளை துன்புறுத்திக் கொல்லும் போது, அவள் அந்த அண்ணன்களின் காலைப் பிடித்து ஏதோ சொல்லத் துடிப்பாளே, அய்யோ....என்ன கொடுமை?!  வழக்கமாக சுருளி தானே அந்த வில்லன்களைப் பழிவாங்க வேண்டும்?  ஆனால் அவன் தற்கொலை செய்துகொள்ள, சிறை அதிகாரி பாஸ்க ரே தன் மச்சான்களையும் மனைவியையும் வெட்டிச் சாய்க்கிறார்.  நன்றாக வேண்டும் என்று என் மனமும் குரூரமாகச் சந்தோசப்பட்டது!!!