Thursday, July 20, 2006

அத்திலக வாசனைப்போல்?

பெண்களின் கூந்தலில் இயற்கையிலேயே மணம் உண்டா, இல்லையா என்று வரலாற்றில் கேள்வி எழுந்தது போல் எனக்கு இப்ப ஒரு கேள்வி எழுந்திருக்கிறது! பெண்கள் நெற்றியில் வைக்கும் திலகத்திற்கு மணம், வாசனை எதுவும் உண்டா? தமிழ்த் தாய் வாழ்த்தின் பொருளைப் படித்தபோது இந்தக் கேள்வி என் மனதில் எழுந்தது.

தமிழ்த் தாய் வாழ்த்து:

நீராடும் கடலுடுத்த நிலமடந்தை
கெழில் ஒழுகும்சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும்
அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

கடைசி மூன்று வரிகளுக்குப் பொருள்:

"அந்த நெற்றியில் இட்ட பொட்டு போன்றது திராவிட நாடு;அந்தப் பொட்டின் வாசனைபோல் எல்லாத் திசைகளிலும் உன் புகழ் பரவி உலகில் உள்ள எல்லோரும் இன்பமடைய வீற்றிருக்கும் தமிழ்த் தெய்வமே!"

நெற்றிப் பொட்டில் வாசனை வருமா? நான் கேள்விப்பட்டதில்லை. அப்படியே வாசனை வந்தாலும், எல்லாத் திசைகளிலும் பரவும் அளவுக்கு சக்திவாய்ந்த வாசனையாக இருக்குமா?

நான் தமிழ்த் தாய் வாழ்த்தை கிண்டல் செய்யவில்லை. முழு மரியாதையுடன், அதன் பொருளை சரியான முறையில் புரிந்துகொள்வதற்காக கேட்கிறேன். தெரிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்!

Wednesday, July 19, 2006

என் வீட்டுத் தோட்டத்தில்

Image Hosted by ImageShack.us Image Hosted by ImageShack.us

எனக்கு தோட்டம், செடி விசயங்களில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இருந்தாலும், எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் சிறிய தோட்டத்தை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை எட்டிப்பார்ப்பதுண்டு. காரணம், அங்கிருக்கும் புல் தரையில் புற்கள் ஒரளவுக்கு மேல் வளர்ந்துவிட்டால், 'டாண்' என்று வீட்டுக்கு எச்சரிக்கை கடிதம் வந்துவிடும். அப்படி சில நாட்களுக்கு முன் எட்டிப்பார்த்தபோது, குடை மிளகாய் செடியிலும், தக்காளிச் செடியிலும் பிஞ்சு காய்கள்! புதினா, மற்றும் கருவேப்பிலை செடிகளில் புதிய இலைகள்! மல்லிகைச் செடியில் பூக்களும் மொட்டுக்களும்! பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜூன் மாதம் முழுவது அப்பாவும் அம்மாவும் என் வீட்டில் தங்கியிருந்தார்கள். அம்மாவிற்கு பொழுது போவதில் பிரச்சினையே இருக்கவில்லை. தினம் ஒரு குழம்பு, தினம் ஒரு டிபன் என்று 'அவள் விகடன்', பாணியில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். சமையலைத் தவிர வேறு ஏதாவது உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்களேன், எம்ராய்டரி போடறிங்களா? நிட்டிங்(knitting) போடறிங்களா? என்று பல முறை கேட்டுப் பார்த்துவிட்டேன். ம்ஹ¥ம்! திரும்பத் திரும்ப சமையலறையில் தான் போய் நின்றார்கள். சரியென்று விட்டுவிட்டேன்.


அப்பா தோட்டம் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரை ஹோம் டிப்போ(Home Depot) அழைத்துச் சென்று பூந்தொட்டிகள், செடிகள், விதைகள், மற்றும் தோட்ட வேலைக்குத் தேவையான ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தேன். அடுத்த சில நாட்கள் அப்பாவுக்கு நன்றாகப் பொழுது போனது. அவர் அன்று நட்ட செடிகள் தான் இன்று காய்களையும் பூக்களையும் தாங்கி நிற்கின்றன!

20 வருடங்களுக்கு முன்...

சிதம்பரத்தில் இருந்த எங்க வீட்டைச் சுற்றி மிக அழகான தோட்டம் இருந்தது. அத்தனையும் அப்பாவின் கை வண்ணம்! பாரதியார் கூட பத்து பன்னிரண்டு தென்னை மரம் தான் வேண்டுமென்றார். எங்க வீட்டில் 13 தென்னை மரங்கள் இருந்தன. கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி மரங்களும் இருந்தன. அந்த நெல்லி மரத்தை ஒரு உலுக்கு உலுக்கினால் போதும். சட சடவென்று நெல்லிக்காய்கள் கீழே விழும். அவற்றை எடுத்து, கழுவி, உப்புத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட்டால்....அப்பப்பா...இப்போது நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது! ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, மல்லிகை என்று ஏகப்பட்ட பூச்செடிகளும் உண்டு! இதெல்லாம் பத்தாதென்று நிலத்திலேயே அமைக்கப்பட்ட ஒரு சின்ன குளம். அதில் வகை வகையான மீண்கள்! மிகுந்த கலா ரசனையுடன் உருவாக்கப்பட்ட ஒரு அழகான நந்தவனமாக இருந்தது அப்பாவின் தோட்டம். எங்க வீடு இருந்த அந்தக் காலனியில், அப்பாவைப் போலவே தோட்ட வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, "Horticulture Society" ஒன்றைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வருடமும் அந்தக் காலனியிலே சிறந்த தோட்டத்திற்கான போட்டி நடக்கும். அதில் எப்பொழுதுமே 'முருகைய்யன்' என்கிற அப்பாவின் நண்பர் தான் முதல் பரிசு பெறுவார். அப்பாவுக்கு இரண்டாம் பரிசு தான் கிடைக்கும். காரணம், முருகைய்யனின் விட்டில் மரங்களும், செடிகளும் எண்ணிக்கையில் மிக மிக அதிகம். ஆனால் தோட்ட அமைப்பு, தோற்றம் - இவற்றில் எங்க வீடு தான் மிக அழகாக இருக்கும். எங்க வீட்டுத் தோட்டத்தில் எடுத்தப் புகைப்படங்களைப் பார்த்து "எந்த பொட்டானிக்கல் கார்டெனில் எடுத்தீங்க?" என்று பலர் கேட்டதுண்டு. அதனால் இன்று வரை அந்த பரிசு விசயத்தில் எனக்கு வருத்தம் தான்.

10 வருடங்களுக்கு முன் சிதம்பரம் வீட்டை அப்பா நல்ல விலைக்குத் தான் விற்றார். ஆனால் அந்த விலை அந்த நிலத்திற்கும், கட்டிடத்திற்கும் தான். அவர் அந்த வீட்டுத் தோட்டத்தில் பொட்ட நெரத்திற்கும், உழைப்பிற்கும் விலை மதிப்பே கிடையாது! இன்று என் வீட்டுத் தோட்டத்தில் நான்கு செடிகளை வைத்துக்கொண்டு என் அவசர வேலைகளுக்கிடையே அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுவதை கூட பெரிய விசயமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அப்பா அந்தப் பெரிய தோட்டத்தை உருவாக்கி, வளர்த்து, பின் அதை மொத்தமாக இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு வரும் போது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்?

Saturday, July 15, 2006

ஜெயமாலாவும் மீரா ஜாஸ்மினும்

மீரா ஜாஸ்மின், ஜெயமாலா இருவரில், ஜெயமாலாவை சற்றுப் பாராட்டத் தோன்றுகிறது. "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னுடைய ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட மீண்டும் ஐயப்பன் கோவிலுக்குப் போவேன்" என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறார். மேலும் "முதலில் கோவிலில் பந்தோபஸ்த்தை அதிகப்படுத்துங்கள். பிரபலங்களையும் சாதாரண மக்களையும் சமமாக நடத்துங்கள். சட்டங்களை பலகைகளில் துல்லியமாக எழுதிப்போடுங்கள்" என்று கோவில் செயற்குழுவிற்கே அறிவுரைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்.

மாதவிடாய் வரும் பெண்கள் கோவிலுக்கு வந்தால் கோவிலின் புனிதம் கெட்டுப் போய்விடும் என்று சொல்வது உலக மகா முட்டாள்தனம். எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதோ சிந்திப்பதோ கிடையாது. ஆனால் சில அற்புதமான நிகழ்வுகள் நேரும் போது, கடவுள் இருக்கிறாரோ? என்று மனம் தடுமாறும். அப்படி ஒரு அற்புதமான நிகழ்வு தான் ஒரு பெண் கருவுற்று குழந்தை பெறுதல். இந்த நிகழ்வில் ஒரு முக்கிய கட்டம் தான் 'மாதவிடாய்'. அது நடக்காமல் உலகத்தில் எந்த மனிதனும் பிறந்திருக்க முடியாது. மாதவிடாய் என்பதை தீட்டு என்றும் புனிதம் கெட்டுவிடும் என்றும் சொல்லும் சாஸ்த்திரிகளும் தந்திரிகளும், ஏன்? அந்த சபரிமலை ஐயப்பனே கூட அந்த நிகழ்வு இல்லாமல் ஜனித்திருக்க முடியாது. ஒரு உயிரை உருவாக்கி, தன் உடம்பில் தாங்கி, உலகத்திற்குக் கொண்டுவரும் பெண் குலம் கோவிலுக்குப் போவது அந்தக் கோவிலுக்குப் புனிதம் என்று நான் நினைக்கிறேன். இந்த விசயம் சட்டம் படித்தவர்களுக்குக் கூட ஏன் புரியவில்லை? 10 வயதிலிருந்து 55 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சில வருடங்களுக்கு முன் ஆணை பிறப்பித்திருந்ததாமே?!

மீரா ஜாஸ்மினுடையது ஒரு வித்தியாசமாக பிரச்சினை. எனக்கு ஒரு கேள்வி. மீரா ஜாஸ்மின் இந்துக் கோவிலுக்குள் நுழைந்தது குற்றம், தீட்டு!. அந்தத் தீட்டைக் கழிக்க தீட்டு ஏற்படுத்தியவரிடமே பணம் வாங்குவார்களா??? அந்தப் பணம் மட்டும் தீட்டு இல்லையா? மேலும் சில கேள்விகள்: "இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கோவிலில் நுழையக்கூடாது" என்கிற சட்டம் எந்த வடிவத்தில் இருக்கும்? கோவில் சட்ட திட்டங்கள் ஆவணங்களாக இருக்குமா? அல்லது கோவில் வாசலில் "இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை" என்று பலகை வைப்பதோடு சரியா? பிற மதத்தைச் சார்ந்தவர்கள் இந்து கோவிலுக்கு வருவது இந்து மதத்திற்கு நல்லது தானே? இந்து மதத்தை விரிவு படுத்த இது ஒரு நல்ல வழி தானே?

Wednesday, July 12, 2006

தோழா தோழா தோள் கொடு!

இரண்டு பேர் சம்பந்தப்பட்ட எதுவுமே சிக்கலான விசயம் தான். அந்த விசயம் "நட்பு" என்றால் அது மேலும் சிக்கலானது. அதிலும், அந்த இருவரில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண் என்றால் சிக்கலுக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லை! Cross-gender friendship என்று சொல்லப்படும் "ஆண் - பெண் நட்பு" விவாதிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு சுவாரசியமான தலைப்பு என்பதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

ஆண்-பெண் நட்பு என்றதும் நம் மனதில் எழும் முதல் கேள்வி - ஒரு ஆணும் பெண்ணும் எந்தவிதமான உடல் கவர்ச்சியும் இல்லாமல் கடைசி வரை நண்பர்களாக இருப்பது சாத்தியமா? என்பது தான்.

நம்ம ஊர் தமிழ் சினிமாக்கள் எல்லாம் "சாத்தியம் இல்லை" என்று தான் இன்றுவரை நிரூபித்திருக்கின்றன. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். 'பாலைவனச் சோலை' படத்தில் சுகாசினிக்கும் நான்கு ஆண்களுக்கும் இடையே ஆழமான நட்பு நிலவும். கடைசியில் அதில் ஒருவர் மேல் காதல் ஏற்படும். 'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் ஷாலினியும் பிரசாந்த்தும் இனை பிரியாத நண்பர்களாக இருப்பார்கள். ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படும் போதுதான் இருவருக்கும் மனதில் காதல் ஒளிந்திருப்பது தெரியவரும். இப்படி பலத் திரைப்படங்கள் உள்ளன. நட்பு என்பது பின்னால் தோன்றும் காதலுக்கான அஸ்திவாரமாகத் தான் திரைப்படங்களில் பிரதிபலிக்கப்படுகிறது. திரைப்படங்கள் மட்டுமன்றி நம் வரலாற்றிலும், இதிகாசத்திலும், இலக்கியத்திலும், ஆண்-பெண் நட்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்-பெண் நட்புக்கு எங்கேயும் எதிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை! ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற சமுதாய எதிர்ப்பார்ப்பு, சமுதாய ஆதரவின்மை மற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடு ஆகியவை யதார்த்தமான நட்பு மலர்வதைத் தடுக்கிறது. நம்ம தமிழ்ச் சமுதாயத்தில் தான் இப்படியென்றால், அமெரிக்காவில் கூட ஒரு ஆண் ஒரு பெண்ணின் நெருங்கியத் தோழனாக இருந்தால், அந்த ஆண் ஒரு "gay" ஆக இருப்பானோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது! சில பெண்களும், gay ஆண்களை நண்பர்களாக இருப்பதை விரும்புகிறார்கள். ஏனென்றால் அது தொல்லை இல்லாத நட்பாம்!

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என் ஆசிரியை, வகுப்பறையில், மாணவன்-மாணவி-மணவன்-மாணவி என்று மாற்றி மாற்றி உட்கார வைத்திருப்பார். ஆஹா! ஆண்-பெண் நட்பை பள்ளிப் பருவத்திலிருந்தே வளர்த்தார்களோ என்று நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டாம். ஆசிரியை அப்படி எங்களை உட்கார வைத்ததற்கு காரணம், அப்பதான் நாங்கள் பக்கதிலிருப்பவர்களிடம் பேசாமல் இருப்போம், வகுப்பில் அமைதி நிலவும் என்பதற்காக! அந்த மாதிரியான பள்ளிச் சூழ்நிலையில் படித்துவிட்டு, நான் பொறி இயல் கல்லூரியில் சேரும்போது, சக மாணவர்களுடன் பேசிப் பழக மிகவும் சங்கோஜப்பட்டேன். அந்த சின்ன வயதில் இம்மாதிரி எண்ணங்களைப் பதித்தார்களென்றால், ஆண்-பெண் நட்புக்கு மாறாக விரிசல் தான் ஏற்படும்.

"Cross-gender" நட்பைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இரு பக்க வாதங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு ஆண்-பெண் நட்பு என்பது சுவாரசியமாகத் தோன்றினாலும், "அது வேறு ஏதோ ஒன்றில் சென்று முடிந்துவிடும்" என்கிற பயமும் இருக்கிறது. எந்தவிதமான சபலங்களும் இல்லாமல் புனிதமான நட்பு மட்டுமே கடைபிடிப்பது மிகவும் கடினம். ஒரு ஆண் தன் தோழியுடனோ, ஒரு பெண் தன் தோழனுடனோ காலார நடக்கையில், சேர்ந்து புத்தகம் படிக்கையில், மணிக்கணக்காக பேசுகையில், உணர்ச்சிகள் எப்படி குறுக்கிடாமல் இருக்க முடியும்? என்கின்றனர் சிலர். அப்படியே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவன் அந்த பெண்ணுக்கும், அதே போன்ற மனைவி அந்த ஆணுக்கும் அமைவதன் சாத்தியக்கூறு குறைவு. இதை எழுதும் போது அறிவுமதியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கவிதை வரிகள் சரியாகத் தெரியவில்லை, ஆனால் கருத்து இதுதான்: ஒரு ஆணும், அவனுடைய தோழியும் வெகு நேரம் மனம் விட்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அந்தப் பெண், "நேரம் ஆகிவிட்டது என் கணவர் காத்திருப்பார்" என்று சொல்லி விடைபெற்றுச் சென்றுவிடுகிறாள். நண்பன் நினைக்கிறான், கணவனிடம் ஒரு பெண் "என் நண்பன் காத்திருக்கிறான், நான் அவனைக் காணச் செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு நண்பனைத் தேடி வரும் காலம் வருமா என்று!

ஆண்-பெண் நட்பைப் பற்றி நம்பிக்கையான கருத்துக்களும் இருக்கின்றன. ஆண்கள், பெண்களின் நட்பை அதிகமாக விரும்புகிறார்கள். "பெண்களிடத்தில் ஆண்களிடம் கிடைக்காத ஒரு மிருதுவான மனதை வருடும் அன்பு கிடைக்கிறது. பெண்களிடம் எங்களுடைய பலத்தையோ, செல்வாக்கையோ நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் பலவீனத்தைக் காட்டினாலும், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆண் - பெண் நட்பை பல விசயங்கள் நிர்ணயிக்கின்றன. வயது ஒரு முக்கிய காரணம். கல்லூரி வயதில் தான் அதிகபட்ச ஆண் - பெண் நட்புகள் மலர்கின்றன. திருமணத்திற்குப் பிறகு இந்த வகை நட்புக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கணவனின் நண்பர்கள் அவளுடைய நண்பர்களாக ஆகிறார்கள். அவளுடைய கல்லூரி கால நண்பர்களுடனான நட்பு அவ்வப்போது தொலைபேசுவதோடு நின்று போய்விடுகிறது. மற்றொரு காரணம் ஒருவர் எந்த அளவு முற்போக்குச் சிந்தனை உடையவராக இருக்கிறார் என்பது. ஆண் - பெண் நட்பு கலாசார எல்லைகளுக்குச் சவால் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

வயது, இனம், மதம், நாடு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றைக் கடந்த நட்பு, ஏன் உணர்ச்சிகளைக் கடக்க முடியாது? முடியும்! அது சாத்தியம்! அப்படி என்ன இந்த வகை நட்பினால் நன்மை? ஒரு ஆண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி பெண்ணிடமிருந்தும், ஒரு பெண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி ஒரு ஆணிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியும். ஒரு ஆணின் சிந்தனைகளையும் ஒரு பெண்ணின் சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய சிந்தனை வட்டம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இதனைப் பாராட்டக்கூடிய சமுதாயமாக நம் சமுதாயம் இருக்கவேண்டும்.
Monday, July 10, 2006

ஃபெட்னா 2006 தமிழர் விழா - ஒரு கண்ணோட்டம்

ஃபெட்னா(FeTNA) 2006 விழா முடிந்த கையோடு, சுந்தரவடிவேல் போல சுடச் சுட பதிவு எழுத ஆசைப்பட்டேன். நேரம் கிடைக்கவில்லை. 1999 ஆம் ஆண்டிலிருந்து என் கணவர் தொடர்ந்து அனைத்து ஃபெட்னா விழாக்களுக்கும் சென்று வருகிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் கதை கேட்டுத் தெரிந்துகொள்வேனே தவிர, நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததில்லை. நான் முதன் முதல் சென்ற ஃபெட்னா விழா 2003 ஆம் ஆண்டில் நியூஜெர்சியில் நடந்த விழா. அப்போது தான், ஃபெட்னா என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒன்று கூட்டக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு என்று தெரியவந்தது. அங்கே நான் சந்தித்த பிரபலங்கள், அவர்கள் என்னிடம் ஏற்படுத்திய பாதிப்புகளினாலும், அதனால் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணத்தாலும், எங்கள் பேட்டையில் நடைபெறுவதாலும், 2004 ஆம் ஆண்டு பால்டிமோரில் நடைபெற்ற ஃபெட்னா விழாவில் முழு மூச்சாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அந்த விழாவில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டன, மேலும் ஆர்வம் அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் முடிந்த வரை ஃபெட்னாவுக்குச் சென்று வர வேண்டும் என்று முடிவெடுத்தேன். சென்ற ஆண்டு சில காரணங்களால் டெக்ஸாஸ் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு நியூயார்க்கில் அதுவும் மன்ஹாட்டனில் விழா என்று தெரிந்ததும் குதூகலமாக முன் பதிவு செய்தோம். பிறகு ஃபெட்னா இணையதளத்தில் விழாவுக்கு வரும் பிரபலங்கள் பட்டியலைப் பார்த்ததும் சற்று ஏமாற்றமாக இருந்தது. ராதிகா, சரத்குமார், வைரமுத்து, பா.விஜய், அறிவொளி, வினோதினி, ஸ்வாதி, தேவிப்பிரியா, குட்டி, வாணி ஜெயராம், ஹாரிஸ் ராகவேந்திரா, மாதங்கி, விஜயலக்ஷ்மி நவநீதக்கிருஷ்ணன் குழுவினர் ... இதில் அறிவொளி, விஜயலக்ஷ்மி குழுவினர் தவிர மற்றவர்கள் எல்லாருமே சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு முறையும் சினிமா துறையிலிருந்து கலைஞர்களை வரவழைப்பது வழக்கம் தான் என்றாலும், இந்த முறை இத்தனை பேர் தேவையா என்று தோன்றியது. விழாவுக்கு ஒரு மாதத்திற்கும் முன், விஜயலக்ஷ்மி குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டதால் அவருடைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. என்னுடைய ஆர்வம் காற்றிறங்கிய பலூன் போலானது. போவதா வேண்டாமா என்று யோசனையில் இருந்தபோது, நண்பர்களெல்லாம் சும்மா ஜாலியா போய் வரலாம் வாருங்கள் என்று ஊக்கப்படுத்தியதால், சரியென்று கிளம்பினோம்.

சனிக்கிழமை(ஜூலை 1) காலை சுமார் 10 மணிக்கு விழா நடக்கும் மன்ஹாட்டன் சென்ட்டருக்கு அருகில் இருந்த ஹோட்டல் நியூயார்க்கரில் பதிவுச் சீட்டுக்களையும், விழா மலர், மற்றும் சில இத்யாதிகள் அடங்கிய பையையும் பெற்றுக்கொண்டோம். விழா மலரை எடுத்துப் பார்த்தேன். அட்டை படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மன்ஹாட்டன் வீதிகளில் தமிழன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு போவது போல் தீட்டப்பட்டப் படம் (தமிழனுக்கு அடையாளம் மாட்டு வண்டி தானா? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், அது ஒரு பாரம்பரியச் சின்னம் என்பதற்காக அப்படி போட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது). அதைப் பார்த்ததும், அன்று காலை நானும் கணவரும் மன்ஹாட்டனில் வந்திறங்கிய காட்சி கண் முன் தெரிந்தது. அரங்கித்தில் இருந்து இரண்டு ப்ளாக்குகள் தள்ளி காரை நிறுத்தியிருந்தோம். நான் பட்டுப்புடவையை இழுத்துச் செருகிக்கொண்டு, என் கணவர் பட்டு வேஷ்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு, பெட்டி, பைகளுடன் சாலைகளைக் கடக்கையில், மன்ஹாட்டன் மக்கள் எங்களை வினோதமாகப் பார்த்தார்கள். மாட்டு வண்டி ஒன்று எங்களுக்குக் கிடைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் :-)

முதல் நாள் காலை நிகழ்ச்சிகள் சுறு சுறுப்பாக இருக்கவேண்டாமா? அதற்கு மாறாக, தூக்கத்தை வரவழைத்தன. சுமார் 45 நிமிடங்கள் மேடையை ஒரு நடன ஆசிரியையிடம் கொடுத்துவிட்டார்கள். அவர் ஒவ்வொரு மாணவியாக அறிமுகப்படுத்தி, நடனத்தைப் பற்றிய விளக்கத்தை விலாவரியாகப் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்கத் தேசிய கீதத்துக்குப் பிறகு இந்திய தேசியக் கீதம் பாட வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் சொன்னார். பாடினால் என்ன? என்று நான் கேட்டபோது, ஃபெட்னா வட அமெரிக்கவில் நிறுவப்பட்ட ஒரு தமிழ் அமைப்பு. இதில் இந்தியத் தமிழர்கள் மட்டுமன்றி, பிற நாட்டுத் தமிழர்களும் கலந்துகொள்கிறார்கள். அப்படியிருக்கும் போது இந்திய தேசியக் கீதத்தை மட்டும் பாடுவது முறையில்லை என்று சொன்னார். சரியென்று பட்டது எனக்கு. வரிசையாக நடனங்களைப் பார்க்க ஆர்வமில்லாமல் மதிய உணவுக்காக உணவுக்கூடத்திற்குச் சென்றோம். சுந்தரவடிவேல் சொன்னது போல் சாப்பாட்டுக் கடை கூத்தை தனிப் பதிவாகத் தான் போடவேண்டும். இருந்தாலும், பல வருடங்களாக இங்கே நடக்கும் தமிழ்ச் சங்க விழாக்களில் உணவுக்காக நீண்ட வரிசையில் நின்று காத்திருத்தல், உணவுக் கிடைக்காமல் பின்னிரவில் வீடு செல்லும் போது மெக்டொனால்ட்ஸ், டாக்கொ பெல் போன்ற உணவகங்களில் சாப்பிடுதல் போன்றவையெல்லாம் பழகிவிட்டன. அதனால் உணவு விஷயம் பெரிதாகத் தெரியவில்லை. மதிய உணவுக்குப் பின் அன்றைய நிகழ்ச்சி நிரலை எடுத்துப் பார்த்தேன். அதில் நான் பார்க்க விரும்பிய நிகழ்ச்சிகள் இரண்டே இரண்டு தான். 4 மணிக்கு புலவர் அறிவொளி தலைமையில் பட்டிமன்றம். 7 மணிக்கு வைரமுத்து, அன்புமணி, சரத் குமார், ராதிகா ஆகியோரின் உரைகள். விடுதி அறையில் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு 4 மணிக்கு பட்டிமன்றத்திற்கு வந்து அமர்ந்தோம். பட்டிமன்றம் நன்றாகப் போனது, ஆனால் நான் எதிர்பார்த்தது போல் கலகலப்பாகவோ, விறுவிறுப்பாகவோ இல்லை. 7 மணி நிகழ்ச்சியில் வைரமுத்து மற்றும் அன்புமனியின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. வைரமுத்து பேசும் போது "இந்தியத் தமிழர்கள் தமிழுக்கு முகம் கொடுத்தார்கள். இலங்கைத் தமிழர்கள் தமிழுக்கு முகவரி கொடுத்தார்கள்" என்றார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது!. மேலும், "இங்கே முன் வரிசையில் இந்தியத் தமிழர்கள் வெளிச்சத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன். இங்கேயுமா இலங்கைத் தமிழர்கள் பின்னால் இருட்டில் அமர்ந்திருக்க வேண்டும்?" என்றார். கூட்டம் எழுந்து நின்று ஆர்ப்பரித்தது! அன்புமணி பேசும்போது, "வெளிநாடுகளில் நான் ஒரு தமிழன் என்று சொன்னாலே, உடனே Are you from Srilanka? என்று தான் கேட்கிறார்கள்" என்றார். அதற்கும் கரகோஷம். இலங்கைத் தமிழர்களுக்கு ஃபெட்னாவில் எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன். ஆனால் வந்திருந்த அனைவருமே இப்படி அடுத்தடுத்துப் பேசியது என்னவோ ஃபெட்னாவின் நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்றார் போல் பேசியது போல் செயற்கையாக இருந்தது. சரத் குமார், தமிழ் நாட்டில் இருக்கும் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்குதலின் அவசியத்தைப் பற்றிப் பேசுகையில், "தமிழ் படிக்கமாட்டேன் என்று சொல்பவர்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை" என்றார். வைரமுத்து, அன்புமனி, சரத் எல்லாருமே தமிழை மையக்கருத்தாக வைத்துப் பேசினார்கள். ராதிகா தொடக்கத்தில் தமிழ் மொழி, கலாசாரம் என்று லேசாகத் தொட்டுவிட்டு, பின் தன்னைப் பற்றியப் பெருமையையே பேசினார். தான் சினிமாவில் முன்னுக்கு வந்தது, தனது கடின உழைப்பு, தான் சாதித்தது என்று ஒரே சுய புராணமாக இருந்தது. ராதிகா, சரத் இருவருமே ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல், கருணாநிதியை 'தமிழினத் தலைவர்' என்று குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசியது வியப்பாக இருந்தது. அடுத்து 'முத்தமிழ் முழக்கம்' என்கிற நடன நிகழ்ச்சிக்கு முன் கிடைத்த சிறு இடைவேளையில் நண்பர்களுடன் அரங்கத்தைவிட்டு வெளியேறினேன். இரவு 10 மணியிருக்கும். வெளியே அருமையாகத் தென்றல் காற்று! காலார நடந்து எதிரே இருந்த ஸ்டார் பக்ஸ் காப்பிக் கடைக்குப் போனால் அது மூடியிருந்தது! மன்ஹாட்டனில், அதுவும் இரவு 10 மணிக்கு, அதுவும் ஸ்டார் பக்ஸ் மூடியிருக்கிறதா?! வியப்பாக இருந்தது. வேறொரு கடையில் தேனீர் குடித்துவிட்டு மீண்டும் அரங்கத்திற்கு வந்தபோது 'முத்தமிழ் முழக்கம்' தொடங்கியிருந்தது. இயல், இசை, நாடகம் என்று 3 பகுதிகள் கொண்ட நடனம். அருமையாக இருந்தது. ஆனால் மிக நீண்டதாக இருந்தது. இயல், இசை பகுதியைப் பார்ப்பதற்குள் கண்கள் சொருகியதால், அன்றைய கூத்துக்கு முத்தாய்ப்பு வைத்துவிட்டு விடுதி அறைக்குச் சென்றுவிட்டோம்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமைக்(ஜூலை 2) காலை. நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன். இரவு 7 மணி வரை அரங்கத்தினுள் நுழையவேண்டாம் என்று முடிவு செய்தேன். நண்பர்களுடன் சைனா டெளன், லிட்டில் இடாலி போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மாலை 8 மணிக்கு அரங்கத்திற்குத் திரும்பினேன். 'குட்டி' யின் நடனம் முடிவடைந்திருந்தது. பிரமாதமாக இருந்தது என்று எல்லாரும் சொன்னார்கள். அடுத்து நடிகை ஸ்வாதி குழுவினர் நடனம். ஸ்வாதியின் உடையைப் பார்த்ததும் 'பக்' கென்றிருந்தது. உடன் ஆடிய அமெரிக்கா வாழ் நடனக் கலைஞர்களின் உடையும் அப்படியே. வழக்கமாக மலேசியா, சிங்கப்பூரில் நடிக நடிகையர் நடத்தும் கலை நிகழ்ச்சி போல் ஃபெட்னாவையும் நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. யாரையும் குறை சொல்ல முடியாது. இது ஒரு கம்யூனிகேஷன் இடைவெளி தான். கலைஞர்களை ஏற்பாடு செய்யும் ஃபெட்னா நிர்வாகிகள், அவர்கள் என்ன மாதிரி நடனம் ஆடுகிறார்கள், என்ன உடை அனிகிறார்கள் என்பது போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஸ்வாதி, வினோதினி, தேவிப்பிரியா போன்றவர்களுக்கு ஃபெட்னாவைப் பற்றி யாரும் விளக்கிச் சொல்லியிருக்கவும் மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இது மற்றுமொரு கலை நிகழ்ச்சி. அவ்வளவுதான்! பலர் இந்த நடன நிகழ்ச்சியை ரசித்தாலும், பலர் வருத்தப்படவும் செய்தார்கள். உடையை கலாசாரக் கட்டுப்பாட்டுகளுடன் சம்பந்தப் படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் உடை என்பது உடம்பு, வயது, சூழ்நிலை ஆகிய மூன்றிற்கும் கட்டாயம் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஃபெட்னா விழா எற்பாட்டின் போது நிர்வாகிகள் திரைப் படக் கலைஞர்களின் உடை, எந்தவிதமான நடனம் ஆடுகிறார்கள் போன்ற விவரங்களையும் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி தொடங்கியது. வாணி ஜெயராம் எழுபது, எண்பதுகளில் வந்த இனிமையான திரைப்படப் பாடல்களைப் பாடினார். ஹாரிஸ் ராகவேந்திரா, மற்றும் மாதங்கியும் இனிமையான பாடல்களைப் பாடினார்களில்.

திங்கள் கிழமை(ஜூலை 3) முழுவதும் வீணாகப் போனது! திங்கள் இரவு 6 மணிக்கு மன்ஹாட்டன் க்ரூஸ்(Cruise)! அதுவரை என்ன செய்வது? 5 மணி வரை எப்படியோ கதை பன்னிவிட்டு, கப்பல் நிற்கும் இடத்திற்குச் சென்றோம். கப்பலில், மன்னிக்கவும்! படகில் ஏறிய உடனேயே எனக்கு முகம் சுருங்கியது! கடலில் பயணிக்கும் 'ராயல் கரீபியன்', 'கார்னிவெல்' போன்ற சொகுசுக் கப்பல்கள் போல் இதுவும் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஓரளவாவது பெரிதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் சென்றது ஒரு ஃபெர்ரி படகு(ferry boat)! மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மேலே டெக்கில்(deck) நல்ல வேளையாக காற்றோட்டமாக உட்கார இடம் கிடைத்தது. சுற்றிலும் நியூயார்க்கின் ரம்மியமானக் காட்சிகள். உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடங்கள் இல்லாத ந்யூயார்க்கைப் பார்க்கும் போது மனம் கரைந்தது!

ராதிகாவும் சரத் குமாரும் டெக்கில் வந்து சற்று நேரம் நின்றிருந்தார்கள். அங்கே இருந்த உறவினர் ஒருவர் அவர்களைப் பார்த்ததும் ஆர்வத்துடன் எழுந்து நிற்க, அவருடைய மனைவி "ஒரு நடிகைக்காக எழுந்து நிற்கனுமா?" என்று கோபப்பட்டார். யாருக்காக எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், ஒரு பெண் நடிகையாக இருந்தால் அவள் மரியாதைக்குரியவள் அல்ல என்ற அவருடைய கருத்து என்னை வருத்தப்பட வைத்தது. சில நிமிடங்களில் நடிகை ஸ்வாதி அங்கே வந்தார். அன்று அவர் அனிந்திருந்த உடையும் பார்க்கச் சகிக்கவில்லை. படகின் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு வெளிப்புறத்திலிருந்து ஒருவர் ஏற முயன்று ஒரு கம்பத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார். யாராக இருக்கும் என்று பார்த்தால், அவர் நடிகர் - நடனக் கலைஞர் குட்டி! அவருக்கு ஒரு கால் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். குடித்திருந்தார். அவருக்கு இது தேவைதானா? என்னவாயிற்று இந்த நடிகர்களுக்கு? பெயரும், புகழும், பணமும் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நல்லபடியாக இருக்கலாமே?

க்ரூஸ் முடிந்து, மீண்டும் விடுதிக்கு வந்து பெட்டிப் படுக்கைகளை எடுத்துக்கொண்டு காரில் ஏற்றி, ந்யூயார்க்கை விட்டு வெளியேறியபோது, அப்பாடா என்றிருந்தது. ஆனால் மனம் வருத்தப்பட்டது, இரண்டு நாட்களாக ஆர்வத்திற்கும் அறிவிற்கும் தீனி கிடைக்கவில்லையே என்று. முந்தைய விழாக்களில் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ், பிரபஞ்சன், சிவகாமி(I.A.S), நர்த்தகி நடராஜன், கவிஞர் சேரன் போன்றோரின் சந்திப்பும் அவர்கள் பரிமாறிய கருத்துக்களும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அதைப்போல் எடுத்துச் செல்வதற்கு இந்த விழாவில் எந்தக் நினைவும் கருத்தும் இல்லை! ஆனால் மீண்டும் அடுத்த ஆண்டும் ஃபெட்னா விழாவுக்குப் போவேன். இந்த விழாவில் பல பாடங்கள் கற்ற ஃபெட்னா நிர்வாகிகள் அடுத்த விழாவில் பிழைகளைத் திருத்தி சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

நான் பார்க்காத சில நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நடன நிகழ்ச்சிகளின் மேல் எனக்கு வெறுப்பில்லை. ஆனால் போதும் போதுமென்கிற அளவு பல விழாக்களில் பார்த்தாகிவிட்டது. நான் பார்த்த நிகழ்ச்சிகள் மிகவும் குறைவு. நான் அரங்கத்தினுள் இருந்த நேரத்தை விட விடுதி அறையிலும் மன்ஹாட்டன் தெருக்களிலும் இருந்த நேரம் தான் அதிகம். எனவே விழாவைப் பற்றிய என்னுடைய இந்தக் கண்ணோட்டம் என்னுடையது மட்டுமே.