Wednesday, January 30, 2008

கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7

கன்னியாகுமரியிலிருந்து கோவளம் கடற்கரைக்கு சுமார் இரண்டரை மணி நேரப் பயணம். வழியில் 'தக்கலை' என்கிற ஊரைத் தாண்டியவுடன், 'பத்மநாபபுரம் அரண்மணை' என்கிற ஒரு சுற்றுலா தளத்தில் நிறுத்தினோம். இந்த அரண்மணை 15 ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் மன்னர்களால் கட்டப்பட்டது. அரண்மணையென்றால் மைசூர் அரண்மணை போல் பளப்பளப்பாக ஆடம்பரமாக இருக்குமென்று கற்பனை செய்யாதீர்கள். இது மிகப் பழமையான கேரளத்து ஓட்டு வீடு பாணியில் இருக்கிறது. ஆனால் மிகப் பெரிஈஈஈஈஈஈஈஈயது!. அதன் பழமையை அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். அந்த அரண்மணையினுள் சென்றால், வெளியே வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. விருந்தாளிகள் அறை, நவராத்திரி மண்டபம், சமையல் அறை, சாப்பாட்டு அறை, மகாராணியின் ஒப்பனை அறை, அந்தபுரம் என்று ஏகப்பட்ட அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஒரு பலகையில் அந்த அறையினைப் பற்றிய விளக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருக்கிறது. மலையாளத்திலும் இருந்ததென்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை. ஒவ்வொரு அறையிலும் ஒரு ஊழியரும் நின்று நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். சுற்றுலாத் துறை இங்கே தன் வேலையை நன்றாகச் செய்திருக்கிறது. நுனுக்கமான மர வேலைப்பாடுகள் கண்ணைக் கவருகின்றன. ஒரே பலா மரத்தில் செய்யப்பட்ட அழகான தூண், 64 மூலிகை மரங்களினால் செய்யப்பட்ட கட்டில், இன்றும் சரியான நேரம் காட்டிக்கொண்டிருக்கும் 300 வருட பழமையான கடிகாரம், மிக அரிய ஓவியங்கள் என்று இந்த அரண்மணையில் சுவாரசியமான விசயங்கள் நிறைய இருக்கின்றன. மர வேலைப்பாடுகள், வித விதமான விளக்குகள் என்று கேரளாவின் பாரம்பரியம் மொத்தமும் இங்கே கொட்டிக்கிடக்கின்றது.
பழமையைப் பாதுகாக்கிறோம் என்று, ஒரு விளக்கு, ஒரு மின் விசிறி கூட போடாமல் விட்டுவிட்டார்கள். ஒரு கட்டத்தில் வியர்த்து விறுவிறுத்து, எப்படா வெளியே போவோம் என்றாகிவிட்டது! ஒரு சின்ன அறிவுரை. காலை 9 மணிக்குத் திறக்கிறார்கள். அப்போதே சென்று பார்த்துவிடுங்கள். உச்சி வெயில் நேரத்தில் சென்றீர்கள் என்றால் சிரமப்படுவீர்கள்.

அடுத்து கோவளம் கடற்கரை. அங்கே விடுதியில் சற்று ஓய்வுக்குப் பின் கடற்கரை சென்றோம். 'கோவளம்' என்றாலே தென்னை மரத் தோட்டம் என்று அர்த்தமாம்! பாறைகளில் மோதும் கடல் அலைகள்...தென்னை மரங்கள், தூரத்திலிருந்த ஒரு ஐயப்பன் கோவிலில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்த கதகளி சத்தம் என்று கேரளா மணம் வீசினாலும், அங்கே பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் தான் திரிந்துகொண்டிருந்தார்கள். கடற்கரையை ஒட்டி ஒரு நீண்ட கடை வீதி இருக்கிறது. கடற்காற்றை வாங்கிக்கொண்டே அங்கே மெதுவாக நடைபோட்டால் நன்றாகப் பொழுது போகிறது. கடைகள் வைத்திருப்பதெல்லாம் வடநாட்டவர்கள். கடைகளில் இருப்பவையெல்லாம் ஸ்பென்சர் ப்ளாசாவில் கிடைக்கும் அதே யானைகள், சிலைகள், சால்வைகள், கம்பளிகள்! தேங்காயில் செய்யப்படும் பாரம்பரிய கேரள கைவினைப் பொருட்கள் அங்கே தென்படவில்லை. கரையை ஒட்டி நிறைய உணவகங்கள் இருந்தன. பாரம்பரிய கேரள உணவான மலபார் செம்மீன் கறி, மீன் மொய்லி,
மீன் பொளிச்சது(மீனை வாழை இலையில் சுற்றி மெல்லிய தீயில் சமைத்தது!) - இதையெல்லாம் ஒரு கை பார்த்தோம்!

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற் கரை என்றப் பெருமையைக் கொண்டிருக்கும் மெரீனா கடற் கரையை விட கோவளம் கடற் கரை பல மடங்கு சுத்தமாக இருந்தது. ஹம்ம்...ஒரு வேளை கலர் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதால் இப்படித் தெரிகிறதோ? :-)

அவ்வளவுதான்...ஊர் சுத்துவதை இத்துடன் முடித்துக்கொண்டேன். அமெரிக்கா திரும்பிச் செல்ல இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. நாட்கள் ஓடியது தெரியவேயில்லை. ஒரு மென் சோகம் தொற்றிக்கொண்டது. ஒரு கடினமான பிரிவுக்கு ஆயத்தமானேன்...

இருங்க இருங்க...என் பயணங்கள் முடிந்தாலும், சொல்லவேண்டியது இன்னும் நிறைய இருக்கு.

எனவே, தொடர்வேன்...

Thursday, January 24, 2008

கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6

முந்தையத் தொடர் பதிவு: மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5

ஒரு அதிகாலை வேளை, திருச்சியிலிருந்து கன்னியாகுமரிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. அம்மா அப்பாவுக்காக பிரத்தியேகமாக நானும் அக்காவும் சேர்ந்து திட்டமிட்ட பயணம் இது. "மாப்பிள்ளைகளும் வந்தால் நன்றாக இருக்கும்" என்று சொன்ன பெற்றோர்களிடம், "வேண்டுமானால் அவர்களுடன் நீங்கள் தனியாகப் போய்க்கொள்ளுங்கள்" என்றோம் நானும் அக்காவும்!

திருச்சியிலிருந்து மதுரை வரை நெடுஞ்சாலை மிக மோசமாக இருந்தது. ஒரு வழிச் சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் போலும். நெடுக வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு வருத்தம் என்னவென்றால், "Take Diversion", "Work In Progress", "Heavy Machine Crossing" போன்ற எச்சரிக்கை பலகைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆனால் அந்தப் பலகைகள் ஏதோ தனியார் நிறுவனத்துனுடையது என்று நினைக்கிறேன்.

மதுரை நோக்கிச் செல்லும் போது, பாறைகளினால் ஆன குன்றுகள் நிறையத் தெரிந்தன. சில குன்றுகள் வினோதமான வடிவில் இருந்தன. இந்தக் குன்றுகள் அமெரிக்காவில் இருந்திருந்தால், உடனே அதற்கு ஒரு பெயர் வைத்து, இணையதளம் ஒன்றை வடிவமைத்து, அந்தக் குன்றில் hiking trail அமைத்து அதை ஒரு சுற்றுலா தளமாக மாற்றியிருப்பார்கள்! :-)
மேலூர் தாண்டியபின் எங்குபார்த்தாலும் மு.க அழகிரியின் போஸ்ட்டர்கள். கிருஷ்ணாபுரத்தில் கணிமொழிக்கு வரவேற்பு வாசகங்கள் ஆங்காங்கு தென்பட்டன. கிருஷ்ணாபுரத்தில் அபூர்வ வடிவமைப்பில் பல சிலைகள் இருப்பதாகவும், அவற்றைப் பார்வையிட கணிமொழி அங்கே வந்ததாகவும் அப்பா சொன்னார்.

ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றைக் கடந்து சென்றோம். திருநல்வேலிக்கப்புறம் சாலையோரம் எங்கு பார்த்தாலும் வாழைத்தோப்புகளும் தென்னந்தோப்புகளும்! பச்சைப்பசேலென்று கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. தூரத்தில் மேற்கு மலைத்தொடர் தெரிந்தது.

கன்னியாகுமரி வந்தாகிவிட்டது. விடுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு, மதியம் நான்கு மணிக்கு, படகில் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லலாம் என்று ஆவலாகக் கடற்கரைக்குப் போனால், 3 மணிக்கே படகு சவாரி நிறுத்தப்பட்டுவிட்டது, மீண்டும் காலை 8 மணிக்குத்தான் என்றார்கள். "We missed the boat" என்று ஏமாற்றத்தைத் துடைத்துவிட்டு, கடற்கரையை நோட்டம் விட்டேன். விவேகானதர் மண்டபமும், திருவள்ளுவர் சிலையும் தெரிந்தன. விவேகானந்தர் மண்டபத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அதனால் இப்போது என் முழு கவனமும் திருவள்ளுவர் சிலைமீது தான் இருந்தது. கடல் அலைகளுக்கு நடுவே வானுயர கம்பீரமாக எழுந்து நின்றது திருவள்ளுவர் சிலை. புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினேன்.

வரிசையாக பல வண்ணங்களில் படகுகள், மீண் வலைகள், பாரதிராஜா படத்தில் வருவது போல் கடற்கரையை ஒட்டிய ஒரு தேவாலயம், தென்னை மரங்கள் என்று கன்னியாகுமரி ஒரு எழில்மிகு ஊராகத் தெரிந்தது. சூரிய அஸ்தமத்தைப் பார்க்கலாமென்று காந்தி மண்டபம் சென்றோம். அங்கே ஒரு பெரிய மக்கள் கூட்டம் சூரிய அஸ்தமத்தைப் பார்க்க கிடைத்த இடத்திலெல்லாம் உட்கார்ந்திருந்தது. பெரும்பான்மையாக வட இந்தியர்கள், நிறைய வெளிநாட்டவர்கள் இருந்தார்கள். சிகப்புச் சூரியன் மெல்ல கீழே இறங்கிக்கொண்டிருந்தது. நானும் அக்காவும் ஒரு மதில் சுவரில் ஏறி உட்கார்ந்துகொண்டோம். சூரியன் மெல்ல கீழே இறங்கி கடலுக்குள் சென்று மறைவதற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகியது. நன்றாக திவ்யமாக அந்தக் காட்சியை கண்டுகளித்துவிட்டுத் திரும்பினால் இந்தப் பக்கம் நிலா வெளியே தலை நீட்டி வந்துகொண்டிருந்தது. ஆகா! எவ்வளவு அழகு இந்த இயற்கையில்! காணக் கண்கள் ஆயிரம் வேண்டும்!

அடுத்து கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். போகும் வழியிலெல்லாம் சிறு கடைகள். நிறைய சோழிகளாலான கைவினைப் பொருட்கள் இருந்தன. கோவிலை நெருங்குகையில் "கலைமகளே வருக" என்ற இனிமையானப் பாட்டு வரவேற்றது. உள்ளே போனால், அப்போது தான் அம்மனுக்கு சந்தியா காலத்துப் பூஜை மேள தாளத்துடன் செய்துகொண்டிருந்தார்கள். மற்றுமொரு கண்கொள்ளாக் காட்சி காணக் கிடைத்தது.
கோவிலுக்குப் பின்புறம் ஒரு பூங்கா இருந்தது. அங்கு சென்றபோது, மணி மாலை 7:30 இருக்கும். இருட்டிவிட்டிருந்தது. கோவிலுக்குப் பின்புறம் சென்ற நானும் அக்காவும் வாய் பிளந்து நின்றோம் கண்ணெதிரே தெரிந்ததைப் பார்த்து!!! Breath taking view என்பார்களே, அது இதுதான்! கன்னியா குமரி வந்ததன் "hight light" இந்தக் காட்சி தான் என்று சொல்லலாம். இருட்டில், நிலவொளியில் கடல் பளபளத்துக்கொண்டிருக்க, விவேகானந்தர் மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் அவற்றைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் மெல்லிய ஒளி விளக்கில் ஒளிர்ந்து, உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. கன்னியாகுமரி செல்லும் அனைவரும், இரவு இந்தக் காட்சியை கட்டாயம் பாருங்கள். It is really worth it. கோவிலுக்குப் பின்னால் இருக்கும் பூங்காவில் உள்ள மண்டபத்திலும், படிகட்டுகளிலும், மதில் சுவர்களிலும் மக்கள் உட்கார்ந்து இந்தக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். கடல் காற்று வேறு அள்ளிக் கொண்டு போனது. எட்டு மணியளவில் விவேகாந்தர் மண்டபத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆனால் திருவள்ளுவர் மட்டும் தொடர்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தார்.

அடுத்த நாள் காலை முதல் படகு சவாரியைப் பிடித்து திருவள்ளுவர் சிலை சென்றோம். மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்லும்போது காற்று பலமாக வீசியது. உள்ளிருக்கும் சுவர்களில் திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும் எழுதியிருந்தால் வெளிநட்டவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமே?! மூன்று அடுக்குகள் ஏறிச் சென்றோம். முதல் தவிர மற்ற இரண்டு தளங்களிலும் சுவர்கள் வெறுமையாக இருந்தன. அவற்றியில் ஏதாவது படங்கள் அல்லது திருக்குறள் சம்மந்தப்பட்ட செய்திகள் ஆகியவற்றை பதிக்கலாம். திருவள்ளுவரின் பாதம் அழகாக இருந்தது. தொட்டு வணங்கினேன். இங்கேயும் நிறைய வட இந்தியர்கள் கும்பல் கும்பலாக வந்தார்கள். திருவள்ளுவரின் பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். எனக்கு ஆச்சரியம். இவர்களுக்கு உண்மையிலேயே திருவள்ளுவரைப் பற்றித் தெரியுமா? அல்லது ஏதோ ஒரு சாமி சிலை என்று நினைத்து வணங்கிவிட்டுப் போகிறார்களா? சிலர் திருவள்ளுவரின் பாதத்தில் காதை வைத்து ஏதோ கேட்க முயற்சி செய்தார்கள். ஏதோ அங்கே ஓசை கேட்கும் என்று யாரோ சொன்னார்களாம். எனக்கு எதுவும் கேட்கவில்லை.

கன்னியாகுமரி உண்மையிலேயே ஒரு மிக அழகிய சுற்றுலா தளம். மூன்று கடல்கள் கலக்கும் இடம், இந்தியாவின் கடை கோடி, காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை - இப்படி பல சிறப்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதென்றால் அது பெரிய விஷயம் தானே? இன்னும் கொஞ்சம் சுற்றுலாத் துறை சிரத்தை எடுத்து கன்னியா குமரியைப் பராமரித்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து கோவளம் கடற்கரை நோக்கிப் பயணம்...

தொடரும்...

Saturday, January 19, 2008

மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5

முந்தைய தொடர் பதிவு: மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4

பொங்கலுக்கு மயிலாடுதுறை வருகிறேனென்று மாமியாரிடம் முன்னமே சொல்லியிருந்தேன். பொங்கலுக்கு முன் தினம் மாலை மயிலாடுதுறை வந்துவிட்டேன். என் கணவர் பிறந்து வளர்ந்த ஊர் அது. எல்லாருக்குமே தம் பூர்வீக மண்ணின் மீது பற்று இருக்கத்தான் செய்யும். ஆனால் என் கணவர் ஒரு படி மேலே போய், மயிலாடுதுறை தான் உலகத்திலேயே சிறந்த இடம் என்பார்!

வாசிங்டன் டிசியில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை, வாசிங்டன் நகருக்கு ஒரு 'மினி' சுற்றுலா அழைத்துச் செல்வது கணவரின் வழக்கம். அதுபோல், என்னை மயிலாடுதுறையில் மினி சுற்றுலா அழைத்துச் சென்றார். மயிலாடுதுறை மேம்பாலம், மணிக்கூண்டு, கடைத்தெரு என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். தான் ஆறாவது படிக்கும் போது முதல் முதலாக பரோட்டா வாங்கிச் சாப்பிட்ட 'ஜெய்' பரோட்டா கடையைக் காட்டினார். அப்போது ஒரு பரோட்டா 35 பைசாவம்!

கடைத்தெருவின் நடுவே நின்று, "இது தான் என் ராஜாங்கம்! இங்கே உனக்கு என்ன வேண்டும், கேள்" என்றார். "எனக்கு சூடா பட்டாணியும் வறுத்த கடலையும் வேண்டும்" என்றேன். உடனே ஒரு கடைக்குச் சென்று வாங்கி வந்தார். கடையின் பெயர் மறந்துவிட்டது, ஆனால் அது அங்கே பிரபலமான கடையாம். நிறைய நகைக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. 'சீமாட்டி' துணிக்கடையில் சென்னைக்கு இணையாகத் துணிகள் அருமையாகக் கிடைக்கின்றன.
கணவரின் பாட்டி, சித்தி, மாமா என்று எல்லாருமே 5 நிமிட நடையில் இருந்தார்கள். எல்லோரையும் பார்த்து பொங்கலன்று ஆசீர்வாதம் வாங்கியதில், நிறைய 'கலெக்ஷன்' கிடைத்தது. அடுத்த கட்ட ஷாப்பிங் செய்ய உதவியாக இருக்குமென்று பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன் :-)

வாசிங்டன் டிசியில் என்னுடைய சமையல் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலம். என் சமையல் திறனை மாமியாருக்கு எப்படி நிரூபிக்கலாம் என்று யோசித்தேன். சரி, ஏதாவது சிறப்பு உணவு செய்து அசத்தலாம் என்று சமையலறைக்குச் சென்று நோட்டமிட்டேன். முதலில் அங்கே கத்தி இல்லை. அரிவாள் மனை தான் இருந்தது. எனக்கு அதில் காய்கறி வெட்டி பழக்கம் இல்லை. மேலும், அரிசி எங்கே இருக்கு, பருப்பு எங்கே இருக்கு, உப்பு எங்கே இருக்கு என்று ஒவ்வொன்றாக மாமியாரை கேட்டு கேட்டு நான் சமைப்பதற்குள் அவரே வெறுத்துப் போய்விடுவார் என்பதால், "உங்களுக்கு சமைத்துப் போடனும்னு ஆசைதான், ஆனால் உங்கள் சமையல் முன் என் சமையல் கால் தூசி. உங்க கையால் இப்படி பிரமாதமான உணவைச் சாப்பிட எனக்கு இதைவிட்டால் அப்பறம் எப்ப வாய்ப்பு கிடைக்கும்?" என்று மாமியாரின் தலையில் இரு கூடை ஐஸ்சை கொட்டிவிட்டு சமையலறையிலிருந்து நழுவினேன்! அடுத்த இரண்டு நாட்களில் 'அவனுக்குப் அது பிடிக்கும் அவனுக்குப் இது பிடிக்கும். இதெல்லாம் அமெரிக்காவில் சாப்பிட முடியாது, பாவம்' என்று மாமியார் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை வரிசையாகச் செய்து போட்டார். நான் மனதிற்குள் குமைந்தேன்...எனக்குக் கூடத் தான் இதெல்லாம் நன்றாகச் செய்யத் தெரியும். யாராவது என் மாமியாரிடம் சொல்லுங்களேன்?! :-)

மயிலாடுதுறை வாழ்க்கை நன்றாகத் தானிருந்தது. சின்ன, அமைதியான ஊர். எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். கடைத்தெரு கலகலப்பாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக புடவைக் கட்டி, மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் பெரியவர்கள் ஆசீர்வதித்து இட்டுவிட்ட விபூதி குங்குமத்துடன் நடமாடுகையில் எனக்கே என்னைப் பார்த்து வித்தியாசமாக இருந்தது. ஆனால் அது பிடித்திருந்தது.

சென்னை, திருச்சி, மயிலாடுதுறை என்று இதுவரை உள்ளூரிலேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த நான், நாளை கன்னியா குமரி மற்றும் கேரளா செல்கிறேன். சென்று வந்தபின் அந்தப் பயணத்தைப் பற்றி எழுதுகிறேன்.

தொடரும்...

Friday, January 18, 2008

மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4

முந்தைய தொடர் பதிவுகள்:

சென்னையிலிருந்து தாரா - 1

சென்னையிலிருந்து தாரா - 2

திருச்சியிலிருந்து தாரா - 3

திருச்சியில் சில நாட்கள் ஒய்வுக்குப் பின், பந்தடித்தது போல் மீண்டும் சென்னையில்! என்ன செய்வது??? சென்னையை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தாலும், செய்ய வேண்டிய வேலைகளும், பார்க்க வேண்டியவர்களும், வாங்க வேண்டியவைகளும் சென்னையில் தானே இருக்கின்றன?

'சிங்காரச் சென்னை', 'மெடிக்கல் மெக்கா' போன்ற பட்டங்களுக்கு சென்னை பொருந்தாவிட்டாலும், 'shopper's paradise' என்கிற பட்டத்திற்கு 100% பொருந்தும்! எத்தனை துணிக்கடைகள்? எத்தனை நகைக்கடைகள்? எத்தனை வகைகள்?! டி.நகரில் 'போத்தீஸ்' துணிக்கடைக்குச் சென்று எனக்கு மயக்கமே வந்துவிட்டது. 'துணிக்கடல்' என்று தான் சொல்லவேண்டும். மனிதர்களும் அங்கே கடல் அலை போல் வந்து மோதுகிறார்கள். பனகல் பார்க் வட்டாரம் மிகவும் ஜன நெருக்கடியாக இருக்கிறது. காரணம், சரவணா ஸ்டோர்ஸ், குமரன், நல்லி, சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி என்று பிரபலமான துணிக்கடைகள் அத்தனையும் அங்கே தான் இருக்கிறது. எல்லா துணிக்கடைக்காரர்களும் அங்கே தான் போட்டிப் போட்டுக்கொண்டு கடைத் தொடங்குகிறார்கள். சற்று அமைதியாக, குளுமையாக ஷாப்பிங் செய்யவேண்டுமானால் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்லலாம். 'சிட்டி சென்டர்', 'மாயா ஜால்' போன்ற இடங்களுக்கு இன்னும் போகவில்லை நான். 'பாஷ்மினா' வகை சால்வைகளை மக்கள் இப்போது அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் மெல்லிய வகை சால்வைகள் அவை. பல வண்ணங்களிலும், டிசைன்களிலும் இவற்றைக் கடைகளில் பார்க்கலாம். 200 ரூபாயிலிருந்து 5000 ருபாய் வரைக்கும் பல ரகங்கள் இருக்கின்றன. ஸ்பென்சரில் பேரம் பேசினால் 100 அல்லது 200 ருபாய் வரை குறைத்து வாங்கலாம்.

டிசைனர் புடவைகள் சமீப காலமாக மிகவும் பிரபலம். ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு எதிர்தார்ப்போல் 'மோக்க்ஷா' என்று ஒரு துணிக்கடையில் அழகான டிசைனர் புடவைகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அதேபோல் அண்ணா நகரில் 'திவா' என்கிற கடையும் இருக்கிறது. வீட்டுக்கு அலங்காரப் பொருட்கள் வாங்கவேண்டுமென்றால், 'கல்பத்ருமா', 'தார்' போன்ற கடைகள் இருக்கின்றன. 'பூம்புகார்', 'விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்' கடைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். ''fashion jewellery' வாங்க, பாண்டி பஜாரில் 'ஜில் மில்' கடை! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்!

ஒரு சூறாவளி ஷாப்பிங் செய்துவிட்டு, சென்னை சங்கமம் பார்க்கவேண்டுமென்று அடித்துப்பிடித்துக்கொண்டு மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு ஓடினேன். மாலை 5 மணி இருக்கும். பூங்காவின் வாசலில் ஒரு சில வாகனங்கள்...சிறு சலசலப்பு. பூங்காவினுள் நுழைந்தபோது ஒலிபெருக்கியில் பாட்டுச் சத்தம் கேட்டது. இனிமையான தமிழ்ப் பாடல்கள்...திருக்குறள் காதில் விழுந்தது. பூங்காவின் மையத்தில் மேடை போட்டிருந்தது. மேடைக்கு முன் தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதில் சிலரும், மரத்தடிகளில் சிலரும் அமர்ந்திருந்தார்கள். மணி 5:10...சலசலப்பு அதிகரித்தது. கூட்டம் கூடத் தொடங்கியது. திடிரென்றுப் பார்த்தால் நிற்கக் கூட இடம் இல்லாத அளவு அவ்வளவு கூட்டம். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டுப் புறக் கலைகளைப் பார்க்க இவ்வளவு பேர் ஆர்வமாக வந்திருக்கிறார்களே என்று.நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் நையாண்டி மேளமும் உறுமி மேளமும். அதிரும் மேள இசையைக் கூட்டம் தலையசைத்து, தாளம்போட்டுக் கேட்டு ரசித்தது. அடுத்து கணீரென்ற குரலில் 'வந்தனம்' பாடினார் ஒரு பெரியவர். அப்பறம் கரகம். சுழன்று சுழன்று கரகம் ஆடியப் பெண்மணியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. அப்பறம் 71 வயது பெரியவர் காவடி ஆடினார். காவடியில் இத்தனை சாகசங்கள் இருக்கிறதாவென்று ஆச்சரியமாக இருந்தது. அப்பறம் பறை!!! சூப்பர்!!! அடி தூள் கிளப்பிவிட்டார்கள்! இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால் எனக்கே ஆட்டம் வந்திருக்கும். நரம்பெல்லாம் புடைக்கவைக்கும்படி இருந்தது பறை அடியும் ஆட்டமும். சென்னை சங்கமத்தில் ஒரு நிகழ்ச்சியையாவது பார்க்க முடிந்ததே என்கிற மன திருப்தியுடன் அங்கிருந்து அகன்றேன்.


அடுத்த நாள் புத்தகக் கண்காட்சியையும் பார்த்துவிட வேண்டுமென்று பூந்தமல்லி சாலையில் உள்ள பச்சையப்பா கல்லூரியை நோக்கி விரைந்தேன். கண்காட்சி 10 மணிக்கு என்று நினைத்து அங்கே சென்றால், 11 மணிக்கு தொடங்குகிறது என்றார்கள். ஒரு மணி நேரம் அங்கே காத்திருக்க அவகாசம் இல்லை எனக்கு என்பதால், சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு நடையைக் கட்டினேன். அங்கே என்னைக் கவர்ந்த ஒரு போஸ்டர் "இந்தியாவின் முதல் ம்யூசிகல் ATM". பணத்தை செலுத்திவிட்டு வேண்டிய இசையை குறுந்தட்டில் இறக்கிக் கொள்ளலாம்! இது சுவாரசியமான வசதியாகப் பட்டது எனக்கு.

தங்கியிருந்த இடத்திற்கு திரும்பச் செல்கையில், முதலமைச்சர் எங்கோ 3 மணிக்கு செல்கிறாராம். அதனால் போக்குவரத்தை கண்டபடி அங்கேயும் இங்கேயும் மாற்றிவிட்டதால், திக்கித் திணறி ஜெமினி மேம்பாலத்தைத் தாண்டி வருவதற்குள் உடம்பிலுள்ள தெம்பெல்லாம் வற்றிவிட்டது!!! திரும்பி என்கிட்டயா வந்தாய்? உனக்கு நல்லா வேண்டும் என்று என்னைப் பார்த்துக் கெக்கலித்தது சென்னை!!!

அடுத்து நான் தஞ்சம் புகுந்தது மயிலாடுதுறையில் மாமியார் வீட்டில்!

தொடரும்...

Tuesday, January 01, 2008

திருச்சியிலிருந்து தாரா - 3

முந்தைய பதிவுகள்:

சென்னையிலிருந்து தாரா - 1
சென்னையிலிருந்து தாரா - 2

சென்னையிலிருந்து தப்பி திருச்சி வந்ததும் அக்கடா என்றிருந்தது. சென்னையைப் போல் திருச்சி பரபரப்பாக இல்லை. நிறைய இடங்களில் புதிய சாலை போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. அமைச்சர் கே.என் நேரு திருச்சியை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக அப்பா சொன்னார். எப்போது திருச்சி வந்தாலும் மலைக்கோட்டை கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வது வழக்கம். அந்தி சாயும் நேரத்தில் அந்த விபூதி குங்கும வாசனை, 'டிங் டிங்' என்ற கோவில் மணியோசை, புடைவையைப் படபடக்க வைக்கும் தென்றல் காற்று, மேலிருந்து கீழே பார்க்கும் போது மினுமினுக்கும் திருச்சி மாநகரம் - இதெல்லாம் ஒரு ரம்மியமாக சூழ்நிலையாக இருக்கும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பே மலைக்கோட்டை ஏறும் போது தஸ்புஸ் என்று மூச்சு வாங்கியது. இந்த முறை கட்டாயம் ஏற முடியாதென்று முடிவு செய்து, மலைக்கொட்டையை ஒரு ஏக்கப் பார்வை பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டேன். தெப்பக்குளம் அருகில் உள்ள கடைத்தெரு எப்போதும் போல் ஜகஜோதியாக இருந்தது. 'சாரதாஸ்' கடையை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஒரு தெரு முழுவதுமே சாரதாஸ் கடை தான்! திருச்சியில் புகழ்பெற்ற மங்கள் & மங்கள் பாத்திரக்கடைக்குப் போட்டியாக சென்னை ரத்தினா ஸ்டோர்ஸை அங்கே தொடங்கியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் திருச்சியும் சென்னைபோல் கூட்டமுன் நெரிசலுமாக மாறப்போவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன!

இரண்டு நாட்கள் அம்மா அப்பாவுடன் அமைதியாகப் பொழுதை ஓட்டினேன். அதற்கப் பிறகு சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்று மனம் உறுத்த, ஒரு சிறிய அறிவுப்பூர்வமான பயணம் சென்று வந்தேன். திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலை என்று ஒரு இடம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு இளங்குமரனார் என்று ஒரு தமிழ் அறிஞர் பெட்னா விழாவுக்கு வந்திருந்தார். 80 வயதாகும் இவர், தமிழில், முக்கியமாக திருக்குறளில் பல ஆராய்ச்சிகள் செய்து சாதனைகள் புரிந்துள்ளார். 1963 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு கையினால் விருது வாங்கியிருக்கிறார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் பயணித்தால், அல்லூர் தாண்டி இடது புறம் இருக்கிறது அவர் தோற்றுவித்து நடத்தும் இந்தத் திருவள்ளுவர் தவச்சாலை. அது ஒரு பழைய மாடிவீடு. உள்ளே நுழைந்தபோது, தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் ஐயா இளங்குமரனார். அந்த வீட்டில் ஒரு அராய்ச்சியகம், நூலகம், ஆலயம் என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன. நூலகத்தில் கிட்டத்தட்ட 17,000 அரிய தமிழ்ப் புத்தகங்கள் - சங்க இலக்கியங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உட்பட இருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில் ஐயா பார்த்துப் பார்த்து இந்த நூல்களைச் சேகரித்திருக்கிறார். தமிழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இங்கே வந்து இந்தப் புத்தகங்களை அங்கேயே படித்துவிட்டு குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். மாடியில் ஆராய்ச்சிக்கூடம். அங்கே இருப்பவற்றைப் பார்த்து வாய்பிளந்தேன் நான். ஒரு பெரிய அறையின் இடது புறமும் வலது புறமும் ஐயா வாங்கிய விருதுகளும், கேடயங்களும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அறையின் நீள வாக்கில் போடப்பட்டிருந்த நீண்ட மேஜைகளில் தமிழ் அறிஞ்சர்களின் புகைப்படங்கள், திருக்குறளை மொழிபெயர்த்தவர்களின் புகைப்படங்கள் அழகாக ஒட்டப்பட்டிருந்தன. பாரதியார், தேவநேயப் பாவாணர் போன்றவர்களின் கையெழுத்திப் பிரதிகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எப்பேற்பட்ட சேமிப்புகள் இவை!!! கோடி ரூபாய் கொடுத்தாலும் இவை வெளியே எங்கேயும் கிடைக்காது. ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியேறி கீழே வந்தால், வீட்டின் பக்கவாட்டில் ஒரு சிறிய ஆலயம். உள்ளே திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலை. காவிரி ஓடும் பூமியில் திருவள்ளுவருக்கு இப்படியொரு தவச்சாலையை அமைத்து சுயநலமில்லாத தமிழ்ச் சேவை செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் ஐயாவை என்னவென்று சொல்வது? விவரிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம்!

இந்தச் தவச்சாலை ஒரு பொக்கிஷம்! என்னுடைய ஆசை என்னவென்றால், தமிழக அரசு அல்லது சுற்றுலாத் துறை இந்த தவச்சாலையைத் தத்தெடுத்துக்கொண்டு, அதனை செம்மைப்படுத்த வேண்டும். திருச்சியில் உள்ள சுற்றுலா தளங்களின் பட்டியலில் இந்தச் தவச்சாலையும் இடம்பெறவேண்டும். தற்போது அங்கே இருக்கும் அரிய புத்தகங்களெல்லாம் பழுப்பு நிற அட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பல நவீன புத்தக பாதுகாப்பு முறைகள் வந்துவிட்டன. அந்த உதவிகள் அங்கே வழங்கப்படவேண்டும். இந்தப் புத்தகங்களைப் போலவே ஐயா இளங்குமரனாரும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். இவருக்குப் பின் இந்தத் தவச்சாலையும் பொக்கிஷங்களும் யாருடையப் பொறுப்பில் விடப்படும் என்று அவரிடம் கேட்க நினைத்துக் கேட்காமல் வந்துவிட்டேன்.

சென்னையிலிருந்து தாரா - 2

வெள்ளி, டிசம்பர் 28, சென்னை மெரீனா கடற்கரை, காலை 7 மணி

ரம்மியமான காலைப்பொழுது...தங்க நிறத்தில் சூரிய ஒளியில் கடல் தகதகத்துக்கொண்டிருந்தது. தூரத்தில் மீன் பிடிக்கும் படகுகள் ஓவியம் போல் தெரிந்தன. கடற்கரை சாலையில் நிறைய கார்கள், ரெண்டு சக்கர வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. உற்சாகமாக பலர் நடைபயில்கிறார்கள். சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். புடவை கட்டி டென்னிஸ் ஷ¥ அனிந்து வாக்கிங் செல்லும் பெண்களைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. தண்ணீருக்கு அருகே போகலாம் என்று உடன் வந்த தம்பிகளிடம் சொன்னேன். வேண்டாம் இங்கேயே நடக்கலாம் என்றார்கள். நான் அவர்களிடமிருந்து விலகி, கடலை நோக்கி நடந்தேன். சூரியனின் ஒளியில் படகுகளின் அழகை ரசித்துக்கொண்டே நடந்து போய் கடல் நீரில் காலை நனைத்தேன். சிலீரென்று சுகமாக இருந்தது. கடலோரத்திலேயே தண்ணீரில் காலை நனைத்தபடியே நடந்தேன். இடது புறம் கடல். வலது பக்கம் ஆங்காங்கே மனிதக் கழிவுகள். இதற்குமேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் நான் கலர் கண்ணாடி போட்டிருக்கிறேன் என்பார்கள். நீங்க வந்து கழிப்பறை கட்டிக்கொடுங்கள் என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். சென்னை வாசிகள் சுகாதாரமான காற்றை சுவாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ மெரீனா கடற்கரைக்கு வராமல் இருப்பது நல்லது. எனக்கு மனம் கனத்தது. நான் நேசித்த சென்னையா இது?!

மெரீனாவிலிருந்து அருகே உள்ள சரவணபவன் உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டோம். அந்த மாதிரி ஒரு மெது வடையை நான் என் வாழ்நாளில் சுவைத்ததே கிடையாது!!! அவ்வளவு சுவையாக மொறுமொறுவென்று இருந்தது. சரவணபவன் பற்றி தம்பிகள் நிறைய நல்ல விசயங்கள் சொன்னார்கள். அங்கே பறிமாறுபவர்கள் நன்றாகப் பயிற்சி பெற்றவர்களாம். 'டிப்ஸ்' கொடுத்தால் வாங்கமாட்டார்களாம். தண்ணீரைக் கொட்டுவது, சாம்பாரைச் சிந்துவது போன்ற எந்த தவறும் அங்கே நடக்காதாம். உயர் தர AC உணவகங்களுக்கு மட்டுமே நாடிப் போகும் வி.ஐ.பி க்கள் விரும்பிச் செல்லும் ஒரே நடுத்தர உணவகம் சரவணபவன் தானாம்! கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே ஒரு குறை. கீழே இருக்கும் படம் சரவணபவனில் மேசையில் வைக்கும் பேப்பர். அதில் எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதையும், மருந்துக்குக்கூட தமிழில் எதுவும் இல்லை என்பதையும் பார்க்கலாம். மெனு அட்டையை நான் பார்க்கவில்லை. ஒரு வேளை அதில் தமிழில் இருந்திருக்கலாம்.

சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. பல இடங்களில்பாதைகளை ஒரு வழிப் (one way) பாதையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்கு போனாலும் போக்குவரத்து நெரிசல். இன்று வைக்கோவுக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது போலும். சாலைகலெங்கும் வைக்கோவின் போஸ்டர்கள். சேது சமுத்திர நாயகன், தமிழர்களின் முகவரி, வாலிபப் பெரியார், நாளைய தமிழகம், மறுமலர்ச்சி நாயகன் என்று வைக்கொவின் புகழ் பாடும் வாசகங்கள் எங்கே பார்த்தாலும்! புடவைக் கடைகள், நகைகடைகளின் பானர்கள் பிரம்மாண்டமாக நகரத்தின் எல்லா முக்கிய இடங்களிலும் காணப்படுகின்றன.

புத்தகக் கண்காட்சியைப் பற்றி ஒன்றிரண்டு பானர்கள் பார்த்தேன். சென்னை சங்கமத்தைப் பற்றிய எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

சனி, டிசம்பர் 29, விழுப்புரம்

விழுப்புரம் அருகில் உள்ள சித்தனங்கூருக்கு இன்று பயணம். அமெரிக்காவில் பிலடெல்பியா(philadelphia) நகரில் Phil Mock என்று ஒரு அமெரிக்கர், ஒரு சேவை அமைப்பை நடத்துகிறார். இந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல ஏழை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் கல்விப் பயன் பெறுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் கல்விக்கும் ஒரு sponsor இருப்பார்கள். வருடம் இரண்டு முறை தமிழகம் வரும் Phil, இந்தக் குழந்தைகளுக்காக முகாம்கள் நடத்துகிறார். இந்த முறை சித்தனங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் முகாம் நடந்துகொண்டிருந்தது. அந்த முகாமுக்கு நானும் என் கணவரும் சென்றிருந்தோம்.

சென்னையை விட்டு வெளியேரி கார் NH 45 நெடுஞ்சாலையை எடுத்ததும் 'அப்பாடா' என்றிருந்தது. அருமையாக இருக்கிறது இந்த நெடுஞ்சாலை. இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று மரங்கள். வழியில் காரை நிறுத்தி இளநீர் குடித்தொம். வழியில் நடிகர் விஜயகாந்தின் பொறியியல் கல்லூரியைக் கணவர் காட்டினார். மேல்மருவத்தூரைக் கடக்கையில் எங்கெங்கும் சிவப்பு வண்ணம், வேப்ப இலை கட்டிய பேருந்துகள்.

சித்தனங்கூரில் உள்ள பள்ளியில் நுழைந்தோம். தென்னந்தோப்புக்குள் இருந்தது அந்தப் பள்ளி. உள்ளே ஒரு அறையில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து சாம்பார் சாதத்தைக் கையில் பிசைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார் Phil. எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மதிய உணவு நேரம் என்பதால் குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். Phil தாத்தா என்றும், Phil மாமா என்று அவரை அன்புடன் அழைக்கும் அந்தக் குழந்தைகளில் பலர் தலித் குழந்தைகள். அவர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, உற்சாகமாக அந்த முகாமில் நடக்கும் வகுப்புகளைப் பற்றியும் பயிற்சிகளைப் பற்றியும் எங்களுக்குச் சொன்னார்கள். அவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து "ஒரு நல்ல கிராமம் எப்படி இருக்க வேண்டும்?" "ஒரு நல்ல தாய் எப்படி இருக்க வேண்டும்?" போன்ற தலைப்புகளைக் கொடுத்து ஒரு குழுவாகக் குழந்தைகளை கலந்தாலோசிக்கச் செய்து பின்னர் அவர்களது எண்ணங்களை கேட்டறிகிறார்கள். அவர்களுக்கு இசை பயிற்சியும் உண்டு.தனக்குத் தமிழ் தெரியாததை ஒரு ஊனமாகக் கருதி, தீவிரமாகத் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார் Phil. 'இலை' க்கும் 'இல்லை' க்குமான உச்சரிப்பைத் தன்னால் பிரித்துப்பார்கவே முடியவில்லையென்றும், தமிழ் பேசுவதற்காக தன் நாக்கினால் ஒரு ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சியே நடத்தவேண்டியிருக்கிறது என்றும் சொன்னார். அவருக்கும் 60 வயதிருக்கும். அவர் நினைத்திருந்தால் வயதான காலத்தில் அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் ஒய்வு ஊதியத்தில் நிம்மதியாக வசதியாக இருக்கலாம். ஆனால், ஏழைக் குழந்தைகளுக்கு, அதுவும் தமிழ்நாட்டில் வந்து அவர் செய்யும் சேவையை என்னவென்று சொல்வது? ராயப்பன் என்கிற தலித் இளைஞனை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் Phil. நாங்கள் Phil இடம் விடைபெற்று சென்னை திரும்புகையில் விழுப்புரம் வரை அந்த இளைஞனும் எங்களுடன் காரில் வந்தார். ரொம்பத் துடிப்பான இளைஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரியில் மூன்று வருடங்கள் இசை படித்தவர். வீணை இசையில் கில்லாடி. சொந்தமாக வீணை வாங்கக் கூட வசதியில்லாத இவருக்கு Phil தான் வீணை வாங்கிக்கொடுத்தாராம். அவரை பாடச்சொல்லிக் கேட்டபோது, 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' என்கிறப் பாடலைப் பாடினார். அப்படி ஒரு கணீரென்ற குரல். இசையில் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற தவிப்பு அவரிடம் தெரிந்தது. சாதிக்கவேண்டுமென்றால் சென்னையில் போய் உட்காரவேண்டும், ஆனால் அங்கே போய் எங்கே தங்குவதென்று தெரியவில்லை. இப்போது அங்கங்கே பாட்டு வகுப்பு நடத்தி சம்பாதித்து பெற்றோர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். பொழப்பை விட்டுவிட்டு சென்னை போகவும் முடியாது. வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பில்லாத சூழ்நிலைக்கைதியாக இருக்கிறேன் என்று அவர் சொன்னபோது தொண்டையில் ஏதொ அடைத்தது. தூர்தர்ஷனில் விண்ணப்பம் செய்திருப்பதாகச் சொன்னார். "கற்றது தமிழ்" படத்தில் இளையராஜா பாடிய பாட்டு பாடுங்கள் என்றபோது, அந்தப் பாட்டு கேட்டதில்லை, என்னிடம் காசெட் ப்ளேயர் இல்லை என்றார். வடலூரில் இருக்கும் அவருடைய வீட்டு முகவரியை எழுதி வாங்கிக்கொண்டேன். ஒரு நல்ல காசெட் ப்ளேயர் வாங்கி அவருக்கு அனுப்பவேண்டும்.

சென்னைக்குள் தாம்பரத்தில் நுழைந்தபோது மாலை மணி ஐந்து. வேளச்சேரியில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றடைந்தபோது மணி எட்டு!!!. கத்திப்பாறைக்கருகில் பாலம் கட்டுவதால் போக்குவரத்து நெரிசல்! மெதுவாக கணவரிடம், "நாளைக்கு நான் திருச்சி போய்விடட்டுமா? எனக்குச் சென்னை சரிப்பட்டு வரலை" என்றேன்.

தொடரும்...

சென்னையிலிருந்து தாரா - 1

ஐந்து வருடங்கள் கழித்து தமிழகம் வந்திருக்கிறேன். வந்து ஒரு வாரம் ஆகிறது. என் அனுபவங்களை தினம் ஒரு வலைப்பதிவாக எழுதவேண்டுமென்று விருப்பம். ஆனால் நேரமோ இணையத் தொடர்போ அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. என் வெளிப்பாட்டில் மகிழ்ச்சியும் இருக்கலாம், வருத்தமும் இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இருக்கிறோம் என்கிற திமிரோ அலட்டலோ கட்டாயம் இல்லை. நான் 26 வருடங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவள். இது போன்ற பயணங்கள் எனக்குத் தாய்நாட்டுடனான பந்தத்தினை வலுவாக்குமே தவிர, என்னை விலகிச் செல்லத் தூண்டாது என்று ஆழமாக நம்புகிறேன்.

செவ்வாய் டிசம்பர் 25 அமெரிக்க நேரம் இரவு மணி 10:00

லுப்தான்ஸா விமானம் அட்லாண்டிக் கடலின் மேல் பறந்துகொண்டிருக்கிறது. இந்தத் தொலை தூர விமானப் பயணத்தில் நேரத்தை கொல்வதற்காகவே ஒரு போர்ட்டபிள் டிவிடி ப்ளேயரை கொண்டுவந்திருந்தேன். அதில் எனக்குப் பிடித்த ஒரு திரைப்பட குறுந்தட்டைப் போட்டு ஆவலுடன் காதில் ஹெட் போனைப் பொருத்திக்கொண்டேன். ஆனால் விமானத்தின் இரைச்சலில், காதில் ஒன்றும் சரியாக விழவில்லை. சரி, வலைப்பதிவு எழுதலாமென்று, தலைக்கு மேலே உள்ள விளக்கை போட்டுக்கொண்டு, மடிக்கணிணியில் தட்டச்சு செய்யத் தொடங்குகிறேன்.

சென்னையின்பால் எனக்கு ஒரு அபரிமிதமான பிரியம் உண்டு. காரணம், அங்கே நல்ல நினைவுகளை நான் விட்டுச் சென்றேன். அவற்றை மீட்டெடுக்க மீண்டும் அங்கே செல்கிறேன்! "எப்போது திருச்சி வருவாய்?" என்று கேட்ட பெற்றோர்களிடமும், "நேராக மாயவரம் வந்துவிடு" என்று சொன்ன மாமியாரிடமும், "நான் ஒரு வாரம் சென்னையில் தான் இருக்கப்போகிறேன். நீங்களெல்லாம் சென்னை வந்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டேன். சென்னையில் அங்கே போகனும் இங்கே போகனும், அதை வாங்கனும் இதை வாங்கனும் என்று அடுக்கிக்கொண்டே போன என்னிடம், "நீ ரொம்ப ஓவராக சென்னையைப் பற்றி கற்பனை செய்யாதே. ஏமாற்றமடைவாய்" என்று சொன்னார் கணவர். அதையும் மீறி மனம் கொள்ளா அவலுடன் சென்னை வந்திறங்கினேன்!

புதன் டிசம்பர் 26 இந்திய நேரம் பின்னிரவு மணி 12:30

சென்னை விமான நிலையம்...முதல் அதிர்ச்சி கழிப்பறைகள். எத்தனை வெளிநாட்டவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்கள்?! அவர்கள் நம்ம ஊரைப்பற்றி என்ன நினைப்பார்கள்?! ஹலோ!!! தமிழக அரசாங்கமே! தமிழகச் சுற்றுலா துறையே! கொஞ்சம் முழிச்சிக்கோங்க! வெளிநாட்டவர்களை விடுங்கள். கழிப்பறைகள் சுத்தமாக இருக்கவேண்டுமென்பது ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு தானே? அடுத்து நம்மை வரவேற்கிறது இமிகிரேஷன் அதிகாரிகளின் இறுகிய முகங்கள். களைத்து வரும் பயணிகளுக்காக ஒரு புன்னகை, ஒரு "குட் மார்னிங்", ஒரு "Have a nice stay"...எதுவும் கிடையாது. இதற்காக ஒன்றும் பணம் செலவழிக்கவேண்டியதில்லையே?! நான் ஏதோ அமெரிக்கா போய்விட்டு வந்து அலட்டுகிறேன் என்று என்னைத் தவறாக நினைக்கவேண்டாம். என்னுடைய தமிழகம் எல்லாருக்கும் இனிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் தான் எழுதுகிறேன். இதெல்லாம் புதிதல்ல. அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இருந்தாலும் பகிர்ந்துகொள்ள, பதியவைக்க ஆசை.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும், சூடான சென்னைக் காற்றும் அன்பான உறவுகளும் வந்து அனைத்துக்கொண்டன...குளிரிலும் பனியிலும் உறைந்திருந்திருந்த வாசிங்டன் டிசி கண்களிருந்தும், நினைவிலிருந்தும் மறைந்தது. ஆஹா! இனி நான்கு வாரங்கள் அமெரிக்கா பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாதென்று குதுகலித்தது மனசு.

வியாழன் டிசம்பர் 27 சென்னை

இன்று ஒரு முக்கியமான வேலை இருந்தது. என் கணவருக்கு ஒரு மாதத்திற்கு முன் வலது கையில் மணிகட்டுக்கும் முழங்கைக்கும் மத்தியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, cast என்று சொல்லப்படும் கட்டு போட்டிருந்தார். அந்தக் கட்டைப் பிரித்துவிட்டு எலும்பு சேர்ந்திருக்கிறதா என்று பரிசோதனைச் செய்யவேண்டும். ஏற்கனவே இதற்கு நேரம் ஒதுக்கியிருந்த எலும்பு முறிவு மருத்துவரைப் பார்க்க அடையார் சென்றோம். அந்த மருத்துவர், x-ray எடுப்பதற்காக அங்கிருந்து வேறொரு லேபுக்கு அனுப்பினார். அங்கிருந்து x-ray எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் வந்தோம். x-ray பார்த்துவிட்டு எலும்பு இன்னும் முழுமையாகச் சேரவில்லையென்றும், இன்னும் 3 வாரங்களுக்கு fore arm splint என்று சொல்லப்படும் ஒரு வகை கட்டு கையில் போடவேண்டும் என்றார். சரி போட்டு விடுங்கள் என்றால், அந்த வகை கட்டு தன்னிடம் இல்லையென்றும், மலர் மருத்துவமனை அல்லது தேவகி மருத்துவமனை சென்று கேட்டுப்பாருங்கள் என்றார். மலர் மருத்துவமனை சென்றோம். அங்கே அந்த splint இல்லை என்றார்கள். ஒரு தொலைபேசி எண்ணைக்கொடுத்து, அவருடன் தொடர்பு கொள்ளுங்கள் அவர் விட்டுக்கு வந்து உங்கள் கையை அளவெடுத்துவிட்டு இரண்டு நாட்களில் அந்த அளவில் splint செய்து தருவார் என்றார்கள். இரண்டு நாட்கள் கையை இப்படி கட்டு போடாமல் வைத்திருக்கலாமா என்று கேட்டால், அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்று சொன்னார்கள்!!!

அடுத்து தேவகி மருத்துவமனைக்குச் சென்றோம். splint எல்லாம் இங்கே இல்லை சார். இங்கே இருக்கும்னு யார் சொன்னாங்க? என்றார்கள். Physio Therapy, Pharmacy, Lift போன்ற அறிவிப்பு பலகைகளெல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. மிகுந்த மன வேதனையுடன் இதனைச் சொல்கிறேன்...அங்கே ஒரு சுகாதாரமான சூழ்நிலையே இல்லை. தேவகி மருத்துவமனைக்கு என்னவாயிற்று? தேவகி மருத்துவமனையின் மகப்பேரு மருத்துவர்கள் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்?!!!

பல இடங்களில் ஏறி இறங்கியும் splint கிடைக்காததால் மலர் மருத்துவமனை சிபாரிசு செய்தவரைத் தொடர்பு கொண்டோம். அவர் வீட்டுக்கு வந்து, நல்ல வேளை கணவரின் கை அளவிலேயே அவரிடம் ஒரு splint இருந்தது. அதை கணவருக்குப் போட்டுவிட்டார். ஆக, காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த splint அலைச்சல், மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இது நடந்தது Medical Mecca அல்லது Indian Mecca of Health Care என்று அழைக்கப்படும் சென்னையில்!!!

சற்று அசுவாசத்திற்குப் பிறகு, டி.நகரில் உள்ள ஆர்.எம்.கே.வி, குமரன் சில்க்ஸ் போன்ற துணிக்கடைகளுக்குச் சென்றேன். சிரித்த முகத்துடன் வரவேற்பு! எந்த மாதிரி உங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் விசாரித்து வழி காட்டுகிறார்கள். பொறுமையாக துணிகளை எடுத்துக்காட்டுகிறார்கள். பாராட்டப்படவேண்டிய விசயம்.

இரவு உணவு உறவிணர்களுடன் 'காரைக்குடி' உணவகத்தில்!. இந்த உணவகம் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். இது ஒரு உயர் தர அசைவ மற்றும் சைவ உணவகம். சுத்தமான செட்டினாட்டு உணவு. செட்டி நாட்டுப் பாரம்பரியத்தின் படி, எவர்சில்வர் தட்டில் வாழை இலை வைத்துப் பறிமாறுகிறார்கள். தண்ணீர் 'லோட்டா' வில். பித்தளைப் பாத்திரங்கள். செட்டினாட்டு பாணியில் மரத் தூண்கள். எனக்கு அங்கே மிகவும் பிடித்தது சுவர்களை அலங்கரித்த பெரிய படங்கள் - ஜல்லிக் கட்டு காட்சி, பெரிய பாத்திரங்கள் வைத்து சமைக்கும் காட்சி போன்ற படங்கள். இந்த மாதிரிப் படங்கள் வெளியே கிடைக்குமாவென்றுத் தெரியவில்லை. தேடிப்பிடித்து என் வீட்டுச் சமையல் அறையில் மாட்ட வேண்டும். உணவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். "சுவை" என்பதன் உண்மையான அர்த்தம் இந்த உணவகத்திலே தெரியும்!!! அழிந்து போய்க்கொண்டிருக்கும் பாரம்பரியங்களைக் காப்பாற்ற இது போன்ற உணவகங்களும் கருவிகளாக இருக்கின்றன!

இன்றைய பொழுது முடிந்தது. நாளை காலை 6 மணிக்கு மெரீனா கடற்கரைக்குச் சென்று காலார நடந்து வரலாம் என்று சித்தியின் பிள்ளைகள் சொல்ல, குதூகலத்துடன் சரியென்று சொல்லி தூங்கச் சென்றேன்.

மறு நாள் காலை கடற்கரையில்?!

தொடரும்...