எனது சேகரிப்புக்கெல்லாம் அடுத்த வாரிசு என் மகள் புகழ்மதி தான். ஓராண்டு ஈராண்டு சேகரிப்பெல்லாம் இல்லை. பல ஆண்டுகளாக நான் சேகரித்து வருகிறேன். அப்பா தான் தேடித் தேடி எனக்காகச் சிரமமப்பட்டு சேர்த்தார். அதை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறேன். புகழ்மதி வியக்கும்படி அவளே எதிர்பார்க்காத வண்ணம் அவளிடம் அந்தச் சொத்தை ஒப்படைக்கப் போகிறேன் சில வருடங்கள் கழித்து!
மீண்டும் தாய்மையின் சிறப்பைப் பற்றி தொடங்கிவிட்டீர்களா என்றும், ஏன் இந்த "பில்ட் அப்"? அப்படி என்ன சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என்றும் பலர் கேட்பது புரிகிறது.
|
என் பென்சில் சேகரிப்பில் ஒரு பகுதி |
என் "பென்சில் சேகரிப்பு" பற்றித் தான் நான் குறிப்பிடுகிறேன்! மூன்று நாட்களாக தாய்மை, புத்தகங்கள், தொழிநுட்பம் என்று எழுதி சற்று அலுத்துவிட்டது. ஒரு மாற்றத்திற்காக என்னுடைய பள்ளி கால "hobby" ஆன பென்சில் சேகரிப்பை பற்றி எழுதலாமென்று தோன்றியது. "Hobby" என்பதற்கு தமிழில் வார்த்தை தேடியபோது, "மகிழ் பணி", "விருப்பக் கலை" என்ற இரு வார்த்தைகள் கிடைத்தன. இதில் "விருப்பக் கலை" எனக்குப் பிடித்திருக்கிறது. அதே போல் பென்சில் என்பதற்கு "கரிக்கோல்" என்ற தமிழ் வார்த்தையையும் கண்டறிந்தேன்.
பொதுவாக அஞ்சல் தலைகள், நாணயங்கள் போன்ற சேகரிப்பே பிரபலமான விருப்பக் கலையாக இருந்தது. நான் ஏன் பென்சில்களை சேகரித்தேன் என்பதற்கு என்னிடம் சரியான காரணம் இல்லை.
ஆறாவது, ஏழாவது படிக்கும்போதெல்லாம், அந்த மஞ்சல் நிற "நடராஜ்" பென்சில்களையே உபயோகித்து அலுத்துவிட்டது. அப்பா நிறைய பயணங்கள் செல்வார். போகும் இடத்தில் எல்லாம் ஏதாவது வித்தியாசமான பென்சில்களைப் பார்த்தால் எனக்காக வாங்கி வருவார். அப்படியே சேகரிக்கத் தொடங்கினேன். சும்மா பென்சில்களை வாங்கி வாங்கி பெட்டியில் குவித்து வைத்திருந்த எனக்கு, அப்பா தான் அவற்றை எப்படி பென்சில்களின் அளவு, பயன், வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி, பிரித்து அடுக்கி வைப்பது என்று கற்றுக்கொடுத்தார். எப்படி இதைச் செய்தோம் என்பதக் காட்டுவதற்கு சில புகைப்படங்களை இங்கே செருகியிருக்கிறேன்.
|
தடிமனான பென்சில்கள் |
|
மெல்லிய பென்சில்கள் |
|
வளையும் பென்சில்கள் |
|
வளையும் பென்சில்கள் |
|
வட்டம், முக்கோணம், சதுரம், ஆறுகோணம், முட்டை வடிவ பென்சில்கள் |
|
கல்வி சார்ந்த பென்சில்கள் - (மேலிருந்து கீழ் வரிசையாக) ABCD பென்சில், வாய்பாட்டு பென்சில், யோகா பென்சில், இராமாயணம் படக் கதை பென்சில், பன்னாட்டு தேசியக் கொடிகள் பென்சில் |
|
பயன்/உபயோகத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பென்சில்கள் - கணக்கர்கள் பயன்படுத்தும் பென்சில், சுறுக்கெழுத்து பென்சில்கள், வரை கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்தும் பென்சில்கள், ஸ்டெனோ பென்சில்கள் |
சில சமையம் நான் பள்ளிக்கு உபயோகிக்கும் பென்சில்கள் தொலைந்துவிட்டால் என் சேகரிப்பில் இருந்து ஒரு பென்சிலை எடுத்து சீவிக்கொண்டுச் செல்வேன். அதனால் அவ்வப்போது என் சேகரிப்பில் பென்சில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்தும் இருக்கிறது! அக்கா திருமணமாகி அமெரிக்கா சென்றபின் என் பென்சில் சேகரிப்பு, பன்னாட்டுச் சேகரிப்பாக மாறியது.
சிறு வயதில் தொடங்கிய என் பென்சில் சேகரிப்பு, கல்லூரி இறுதி ஆண்டு வரை ஆர்வமாகத் தொடர்ந்தது. அதன் பின் நான் சேகரித்த எல்லா பென்சில்களையும் ஒரு பெட்டியில் போட்டு அலமாரியில் வைத்துவிட்டேன். கடைசியாக எண்ணிய போது கிட்டத்தட்ட 300 பென்சில்கள் இருந்தன.
கல்லூரி இறுதுயாண்டிற்கு பின், மேற்படிப்பு, வேலை, திருமணம் என்று வாழ்க்கை ஓடியதால், பெட்டியில் போட்டு மூடிவைத்த பென்சில் சேகரிப்பு அப்படியே இருந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இந்தப் பதிவை எழுதுவதற்காக அந்தப் பெட்டியை தூசி தட்டி திறந்தபோது, அப்பாவின் நினைவால் கண்கள் கசிந்தன... எத்தனை நாட்கள் அந்தப் பென்சில்களை வைத்துக்கொண்டு நானும் அப்பாவும் சுவாரசியமாகப் பொழுது போக்கியிருக்கிறோம்?!
விருப்பக் கலைக்கெல்லாம் நேரமில்லை என்று பலர் அதைப் பற்றி பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் விருப்பக் கலையில் ஈடுபடுவது குடும்பத்துடன் தரமான நேரம் செலவிட ஒரு நல்ல வழி. எனக்கும் அப்பாவுக்கு உள்ள பாசப் பிணைப்பிற்கு இந்த பென்சில் சேகரிப்புக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
ஒரு முறை என் அலுவலகத்தில் ஒரு விருந்து கூட்டத்தின் போது எல்லோரும் தங்களைப் பற்றி யாருக்கும் இதுவரை தெரியாத ஒரு சுவாரசியமான செய்தியை பறிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டோம். நான் என்னுடைய முறை வந்த போது, "நான் பென்சில்கள் சேகரிக்கிறேன்" என்று சொன்னேன். சிலர் "அப்படியா" என்று ஆச்சரியப்பட்டார்கள். இது முடிந்து பல நாட்கள் சென்றுவிட்டது. ஒரு நாள் காலை என் அலுவலக மேசையில் இரண்டு அழகான பென்சில்களும், அதனுடன் ஒரு சிறு குறிப்பில், "நீங்கள் பென்சில்கள் சேகரிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். உங்கள் சேகரிப்பில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று எழுதியிருந்தது. இன்று வரை அது யார் என்றே எனக்குத் தெரியாது!
நானும் அப்பாவும் உருவாக்கிய இந்த பென்சில் சேகரிப்பை மேலும் விரிவாக்கி, அதற்கு அடுத்த வாரிசாக புகழ்மதியை நியமிக்க வேண்டும். என் விருப்பக் கலையின் மீது நான் மறந்திருந்த ஆர்வத்தை மீட்டெடுக்க உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி!
8 comments:
விருப்பக் கலையாக பென்சில் சேகரிப்பை இப்போதுதான் அறிய வருகிறேன். சுவாரஸ்யம். சேகரிப்பும் மிக அருமை.
இனி எங்காவது வித்தியாசமான பென்சில்களைப் பார்த்தால் உங்கள் நினைவு நிச்சயம் வரும்:)!
ராமலஷ்மி - மிக்க நன்றி!
தாரா
அட!
சுவாரஷ்யமான பதிவு....இன்று சில தமிழ்மொழியின் புதிய வார்த்தைகளை படித்துக் கொண்டேன் பகிர்வுக்கு நன்றி...
அருமையான கலெக்ஷன். சுமார் 300 பென்சில்கள் விதவிதமாக சேகரித்துள்ளீர்கள். வளையும் பென்சில்கள் நல்லாயிருக்கு. இன்னும் தொடருங்கள்.
தபால்தலை, நாணயங்கள், பன்னாட்டு ரூபாய் நோட்டுகள்ன்னு சேகரிப்பாங்க.. நீங்க வித்தியாசமா பென்சில் சேகரிக்கும் பொழுதுபோக்கைக் கொண்டிருக்கிறீங்க.. அருமை.
300 உங்க மகள் காலத்துல 3000 ஆகட்டும் ;-))
சேகரிச்ச்சது சரி, எத்தனை பென்சில்கள் செலவழிச்சிருப்பீங்க இதுவரை? ஹி.. ஹி..
Post a Comment