Monday, May 14, 2012

தாய்மை என்னும் விசித்திரம்

அன்னையர் தின வாரத்தில், என் தாய்மை அனுபவங்களை எழுதாமல் இருப்பதா?!



எனக்குத் திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்தே என் மகள் பிறந்தாள்.  "குழந்தை பிறந்தபின் உன் உலகமே மாறிவிடும்" என்று எல்லோரும் சொன்னார்கள்.  அது தெரிந்த விசயம் தானே? என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டேன். உலகம் மாறிவிடும் என்று அவர்கள் சொன்னதற்கு நான் செய்து கொண்ட அர்த்தம்...பல இரவுகள் தூக்கம் தொலைக்க நேரிடும், எனக்கென்று நேரம் இருக்காது, முன்பு போல் ஜாலியாக வெளியே சுற்ற முடியாது, எந்த நேரமும் குழந்தையைப் பற்றியே சிந்தனை இருக்கும்....போன்றவைதான்.  ஆனால் எவ்வளவு சுலபமாகத் தாய்மையை எடைபோட்டுவிட்டேன் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை...உலகம் மாறும் என்று சொன்னவர்கள், எப்படியெல்லாம் மாறும் என்பதைச் சொல்லவில்லை. என் மூலமாக உலகத்திற்கு வரும் ஒரு குழந்தை, என் உலகத்தை எப்படி மாற்றமுடியும் என்று பார்த்துவிடுகிறேன் என்று பிறக்காத குழந்தையிடம் சவால் விட்டேன்.



 ஆனால் பிரசவத்தின் போது அந்த மருத்துவமனை கட்டிலில் வேறு ஏதோ ஒரு மர்மம் ஒவ்வொரு தாய்க்கும் நடக்கிறது என்று நினைக்கிறேன்.   திருமணம் ஆனபின் கூட ஒரு பெண் வலுகட்டாயமாக தன்னை மாற்றிக்கொள்கிறாள் அந்த புதிய வாழ்க்கைக்கு ஏற்றாற் போல.  ஆனால் தாயாகும் போது அவள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை! தன்னை அறியாமலேயே தானாக மாறிவிடுகிறாள்.  சில மாதங்கள் சென்றபின் தான் அந்த மாற்றத்தையே உணரமுடிகிறது.  நல்லவிதமான மாற்றங்களைப் பற்றி எழுத வேண்டியதில்லை.  அது எல்லா தாய்மார்களுக்கும் தெரிந்ததே.  ஆனால் நான் எதிர்பாராத  எதிர்மறையான மாற்றங்கள் சில என்னுள் ஏற்பட்டது.  எனக்கு பட்டியல் போடுவது மிகவும் பிடிக்கும்.

அப்படி நான் உணர்ந்த சில விசித்திர/எதிர்மறை மாற்றங்கள் இதோ:
  • முதலில் நான் உணர்ந்த மாற்றம் - எனது சிந்தனைகளில்.  தாய்மை என் சிந்தனைகளை முடமாக்கவில்லை, ஆனால் அதன் திசையை மாற்றிவிட்டது.  இப்பொழுதெல்லாம், குழந்தைகள், அவர்களின் சாப்பாடு, விளையாட்டுப் பொருட்கள் - இவற்றைப் பற்றியே நான் அதிகம் சிந்திக்கிறேன். இந்த வார நட்சத்திர பதிவுகளை எழுத உட்கார்ந்தபோது கூட, எனக்கு தாய்மை, குழந்தை வளர்ப்பு போன்ற தலைப்புகளில் எழுதுவதற்குத் தான் சரளமாக கருத்துக்கள் வந்து விழுந்தன.
  • என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகள் எங்கே ஓடிப் போய் ஒளிந்துகொண்டன என்றே தெரியவில்லை!  எனக்குப் பிடித்த உணவுவகைகள், என்னுடைய சுகமான எழுதும் அனுபவம், நிதானமாக காப்பி குடித்துக்கொண்டே இணையத்தில் மேயும் நேரம், என் அலங்கார கைப்பை...என்று இவை எல்லாமே பின் தள்ளப்பட்டுவிட்டன...என் இலக்குகளும், முன்னுரிமைகளும் என்னை கேட்காமலேயே தானாக மாற்றி  வரிசைபடுத்தப்பட்டன...ஆனால் என்ன ஆச்சரியம்...இதனால் எனக்கு துளி அளவும் வருத்தம் ஏற்படவில்லை! 
  • சற்று சுயநலக்காரியாகவும் மாறினேன்.  பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் சற்றே மறந்திருந்த உறவுகளின் பால் மீண்டும் கவனம் திரும்பியது.  என் மகளுக்கு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அக்கா, அண்ணன் என்று எல்லா உறவுகளின் அன்பும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அதிக நேரம் உறவுகளுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினேன்.
  •  என் மொழி உணர்வைத் தாண்டி மகள் "mommy" என்று என்னை அழைப்பதைக் கேட்டு இரசித்தேன்!   அவள் ஆசையாக அப்படி அழைக்கும் பொழுது, அம்மா என்று அழைக்கச் சொல்லி திருத்த மனம் வரவிட்டாலும், அதன் அவசியத்தை மறக்கவில்லை. 
  • என்னுள் இருந்த பெண்ணியமும் இறந்தது.  குழந்தைப் பிறப்பைப் போல் வேறு ஒரு அற்புதம் ஒரு பெண்ணிற்கு நிகழவே முடியாது என்று ஆழமாக நம்புகிறேன்.  தினம் மகளுக்காக பிசைந்த சாதத்தை ஒரு பருக்கை விடாமல் அவளுக்கு ஊட்டி முடிப்பதையும், அவளுடைய உடைகளை துவைத்து, மடித்து அழகாக வரிசைப் படுத்துவதையுமே எனது மிகப் பெரிய சாதனைகளாக நினைக்கிறேன்!
  • கூடுதலாக ஒரு தாய்-தந்தை அற்ற குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற என் பல வருடக் கொள்கை இடிந்தது.  என் மகளை நேசிப்பது போல மற்றொரு குழந்தையை என்னால் நேசிக்க முடியுமா என்கிற ஐயம் மனதில் வந்துவிட்டது.  இதை மிகுந்த குற்ற உணர்வோடுச் சொல்கிறேன்.
  •  சில தோல்விகள் என்னை பயமுறுத்துகின்றன...என் மகள் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும்போது,  அவளை என் கணவரிடம் விட்டுவிட்டு நான் வெளியில் செல்லும் நேரங்களில், "அம்மா எங்கே?" என்று அவள் கேட்காதபோது, என் சொல் பேச்சை மதிக்காதபோது, ஒரு தாயாக நான் தோல்வியடைகிறேன்...
  • எப்பொழுதுமே அன்றைய தினத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நான், இப்பொழுது என் வயோதிகத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன்.  எனக்கு எழுபது வயதாகி , உடல் நொடிந்து போகும்போது, மகளுக்கு  அப்போது திருமணம் ஆகி, கணவர், குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள் என்ற யதார்தத்தைத் தாண்டி, அவளை என்னால் பார்த்துக்கொள்ள முடியாதே என்று அர்த்தமற்று கவலைப்படுகிறேன்.  

எத்தனை தோல்விகள், பயங்கள், வருத்தங்கள் இருந்தால் என்ன?   முப்பது பேருக்கு மத்தியில், அவள் என்னைத் தேடி, ஒவ்வொருவராக அன்னாந்துப் பார்த்து, அது நான் இல்லை என்று தெரிந்ததும் முகம் வாடி, கடைசியாக என்னைப் பார்ததும் முகம் பளிச்சிட ஓடி வந்து கட்டிக்கொள்கையில், வாழ்க்கையில் அத்தனை வெற்றிகளும் எனக்குக் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்.

தாய்மை வெல்க!

பி.கு:

எனது பிரசவ அனுபவத்தைப் பற்றி நான் முன்பு எழுதிய பதிவுகளின் சுட்டிகள் இதோ:
என் பிரசவ அறையில் - 1
என் பிரசவ அறையில் - 2















  











6 comments:

துளசி கோபால் said...

சூப்பர் பதிவு தாரா!

குழந்தையைச் சுற்றியே (நம்)உலகம் அமைந்துவிடுகிறது என்பதே உண்மை!

எனக்கு(ம்) மகள் 9 வருசம் முடிஞ்சு பத்தாவதில் கிடைத்தாள்.

ராமலக்ஷ்மி said...

தாய்மை என்றும் விசித்திரம்தான். அழகான பகிர்வு.

ஹுஸைனம்மா said...

எல்லாப் பாயிண்டுக்கும் ஸேம் ப்ளட் போட்டுக்கிறேன்.

//என் சொல் பேச்சை மதிக்காதபோது//
அதுசரி, ரெண்டரை வயசுக் குழந்தைக்கே இப்படியா? ;-))))

இன்னும் பசங்க வளர்ந்து டீனேஜ் ஆகும்போது(ம், பின்னரும்) நிறையத் தோற்கவேண்டியிருக்கும். அதுக்கெல்லாம் சோர்ந்து போயிடக்கூடாதுன்னுதான் இறைவன் பெண்களுக்கு இந்தத் தாய்மை உணர்வைக் கொடுத்திருக்கானோன்னு தோணுது!! :-))))))

தாரா said...

துளசி அக்கா & ராமலஷ்மி - மிக்க நன்றி

தாரா

தாரா said...
This comment has been removed by the author.
சாந்தி மாரியப்பன் said...

அருமையான பகிர்வு..