Monday, February 27, 2006

எங்கிருந்தாலும் வாழ்க!

நேற்று முன் தினம் 9 வருடங்களாக என் பாசத்திற்குரியதாக இருந்த ஒரு ஜீவனைப் பிரிய நேரிட்டது!
இந்த அந்நிய மன்னில் எனக்கே எனக்கென்று கிடைத்த முதல் சொத்து அவன்! பனியோ மழையோ வெயிலோ புயலோ, எனக்காக வெளியே எத்தனை நேரமானாலும் காத்துக்கிடப்பான்...
நான் எங்கு வெளியே போனாலும் என்னை பத்திரமாக அழைத்துக்கொண்டுச் செல்வான்...
அவன் எங்கே எந்தக் கூட்டத்தில் நின்றாலும், அவனுடைய உடைந்த மூக்கு அவனை எனக்கு அடையாளம் காட்டிவிடும்...
இரண்டு வருடங்களுக்கு முன் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது கூட சிறு முக்கல் முனகல்களோடு வீட்டில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்தான்...
அவனுக்கு எவ்வளவோ செலவு செய்தும், அவனைக் காப்பாற்ற முடியவில்லை...

அந்த ஜீவன் என்னுடைய பச்சை நிற மாஸ்டா 626 கார்! 9 வருடங்களுக்கு முன் வாங்கியது. அப்போதே 50,000 மைல்கள் ஓடியிருந்தது. அலபாமா வீதிகளில் பெருமையுடன் ஓட்டிக்கொண்டிருந்தேன். திருமணத்திற்குப் பிறகு நானும் என் கணவரும் அந்தக் காரில் டிவி, கம்யூட்டர், மெத்தைகள், சமையல் பாத்திரங்கள் என்று எவ்வளவு திணிக்கமுடியுமோ திணித்து 730 மைல்கள் பயணித்து வாசிங்டன் டிசிக்கு வந்தோம். லேசாக ப்ரேக் அடித்தாலும், பின்னாலிருந்து பொருட்கள் முன்னால் வந்து விழும்! அதன் பிறகு, எத்தனையோ ஊர்களுக்கு அந்தக் காரில் பயணைத்திருக்கிறோம். பின் வந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்யத் தொடங்கியது. வேறு புதுக் கார் வாங்கினோம். ஆனாலும், அந்தப் பழைய காரும் அவ்வப்போது ஆத்திர அவசரத்திற்கு கைக்கொடுத்தது. பிறகு, அதன் அழகான பச்சை நிறம் மங்கி, துறுப்பிடித்து குஷ்டம் வந்ததுபோல் ஆகிவிட்டது. அதற்கப்புறமும் அதை வெளியே ஒட்டுவதற்கு எனக்கு வெக்கமாக இருந்தது. அதனால் கடந்த ஒரு வருடமாக கராஜில் முடங்கிக் கிடந்தது. கடைசி முயற்சியாக அதை ஓடவைக்கலாம் என்று சென்ற வாரம் மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்றேன். இனி அந்தக் காருக்கு பணம் செலவு செய்வது அர்த்தமற்றது என்று கைவிரித்துவிட்டார்கள்! எனவே, என் பாசத்துக்குரிய பச்சை நிற மாஸ்டா 626 காரை Salvation Army க்கு நன்கொடையாக அளித்துவிட்டேன்! கடைசியாக அதனை கார் நிறுத்தத் தளத்தில் அனாதையாக விட்டுவிட்டு வந்தபோது, துக்கம் தொண்டையை அடைத்தது! அதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விற்றுவிடுவார்களாமே? நினக்கவே வேதனையாக இருக்கிறது. எங்கிருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும், என் பச்சை நிறக் கார் வாழ்க!

Sunday, February 26, 2006

உங்கள் ஆதரவு தேவை

பெண்கள் இன்று பல துறைகளில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகளுக்கு, அந்தந்த துறைகளில் உயர் பதவி வகிக்கும் பெண்களாலோ அல்லது பெண் தலைவர்களாலோ தீர்வு காண முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பல பெண்கள் அவ்வாறு முயற்சிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சில உதாரணங்களைப் பார்க்கும் போது எனது நம்பிக்கை நலிவுற்றுப் போகிறது. இன்று மற்ற எல்லாத் துறைகளையும் விட பெண்களுக்கு பாதகமாக இருப்பது ஊடகங்களே. குறிப்பாக தொலைக்காட்சி. அதிலும் குறிப்பாக தொலைக்காட்சித் தொடர்கள். முகூர்த்தம், மலர்கள், மனைவி, செல்வி, கோலங்கள், கணவருக்காக, தீர்க்கசுமங்கலி போன்ற சன் தொலைக்காட்சித் தொடர்களின் பெயர்களைப் பார்த்தாலே புரியும் பெண்களைக் குறிவைத்துத்தான் சன் தொலைகாட்சியின் பெரும்பான்மையான வியாபாரம் இருக்கிறது என்று. இந்தத் தொடர்களில் ஒன்றிரண்டை அவ்வபோது நான் பார்ப்பதுண்டு. இவை எல்லாவற்றிலும் 'செல்வி' என்றத் தொடர் தான் என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்துகிறது. இந்தத் தொடரின் தயாரிப்பாளர் ராதிகா. ராதிகா ஒரு புகழ் பெற்ற நடிகை என்பது தெரிந்த விசயமே. அவருடைய தந்தை எம்.ஆர். ராதா பெரியாரின் கொள்கைகளைத் தழுவியவர். அந்த வளர்ப்பில் வந்தவர் ராதிகா. மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி பொருளாதார ரீதியாக வெற்றிபெற்றவர். மற்ற பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய இவர், பெண்களைக் கேவலப்படுத்தும் வகையில் ஒரு தொடரை தொலைக்காட்சியில் செய்வது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. 'செல்வி' தொடரில் செல்வியாக வரும் இவர், மருந்துக்குக் கூட புன்னகை செய்யமாட்டார். குடும்பப் பாரத்தை தாங்கும் சுமைதாங்கி! சதா சோகமயாமாக வலையவரும் இவர் தன் நெருங்கியத் தோழியின் கணவரையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொள்கிறார் மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி. உலகம் முழுவதும் இந்தத் திருமணம் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் ராதிகாவின் தோழிக்கு மட்டும் அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதாம்! இப்படிக்கூட ஒரு பெண்ணை முட்டாளாக்க முடியுமா? மாயா என்ற மற்றொரு பெண் செல்வியின் கணவரை அபகரிக்கத் திட்டம் போடுகிறாள். ஆக இந்தத் தொடரில், படித்த நல்ல குடுமபத்திலிருந்து வந்த மூன்று பெண்களுக்கு ஒரு ஆணைச் சுற்றி வருவதே முழு நேர வேலை! பார்க்கவே சகிக்கவில்லை. நான் பார்த்து வேதனையடைந்த மற்றோரு காட்சி - ராதிகாவின் தங்கையின் கணவன் இறந்துவிடுகிறான். இரண்டு கைக்குழந்தைகளுக்கு தாயான அந்தத் தங்கைக்கு விலாவரியாக சடங்கு வைத்து அவள் பொட்டையும் பூவையும் அழிக்கிறார்கள் சுற்றியிருக்கும் பெண்கள்!

ஒன்று சுய மரியாதை அற்றவர்களாக பெண்கள் இந்தத் தொடர்களில் சித்தரிக்கப்படுகிறார்கள், அல்லது NASA Engineer ரீதிக்கு மூலையில் ஒளி வட்டம் உள்ள பெண்களாக - உதாரணத்திற்கு 'ஆனந்தம்' தொடர் கதாநாயகி சுகண்யா போல் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தத் தொடரில் சுகண்யா கடவுள் போல் கொண்டாடப்படுகிறார். குடும்பத்திலும் தொழிலிலும் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடை காண்கிறார். இவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கிறது.

இந்தத் தொடர்களில் பெண்கள் பேசும் வசனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! உதாரணத்திற்கு சில;

"ஒரு சுமங்கலி விதவையாகலாம், ஆனால் ஒரு விதவை சுமங்கலியாவது பெரும் பாவம்"

"இந்தத் தாலியும் பூவும் பொட்டும் என் கணவர் போட்ட பிச்சை"

"இந்த வீட்டிலே ஒரு மூலையில் நான் வேலைக்காரி போல் இருந்துவிடுகிறேன்"

பெண்களைப் பெண்களாக எப்போது சித்தரிக்கப்போகிறார்கள்? அன்றாட யதார்த்த வாழ்க்கையில் வரும் பெண்களை ஏன் தொலைக்காட்சித் தொடர்களில் காணமுடியவில்லை? காரணம் தொலைகாட்சி நிறுவனங்களில் சுயநலம். பெண்களைப் பெண்களாக சித்தரித்தால் வியாபாரம் ஆகாது. ஒன்று அவள் பிழியப் பிழிய அழவேண்டும், அல்லது தீய சக்தியாக உருக்கொண்டு மற்றவர்களை அழிக்கவேண்டும் அல்லது உலகத்தில் உள்ள அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆபத்பாந்தவளாக இருக்கவேண்டும். அப்போதுதான் வியாபாரம் நடக்கும். தொலைக்காட்சி நிறுவனங்கள் சமூக சேவை செய்வோம் என்று எந்த வாக்கும் அளிக்கவில்லை என்றாலும், ஒரு குறைந்தபட்ச சமூகப் பொறுப்பாவது அவர்களிடம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. நடிகை குஷ்பூ தமிழ்க் கலாசாரத்தைப் பற்றி ஒரு நாள் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டார் என்று தமிழ்நாடே கொந்தளித்ததே, தமிழ்த் தொலைகாட்சிகளில் நாள் தோறும் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழ்க் கலாசாரத்தைக் கொன்று புதைத்துக்கொண்டிருக்கிறார்களே, அதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? எதிர்ப்புகளை நம்மால் முடிந்தபோது, முடிந்த வடிவத்தில் தெரிவித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

இங்கே வாசிங்டன் பகுதியில், WAR(Women's Alliance for Rationality) என்கிற அமைப்பினர், தமிழ்த் தொலைகாட்சியில் பெண்களை சித்தரிக்கும் முறையை எதிர்த்து ஒரு இணைய விண்ணப்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் சுட்டியை இங்கே இடுகிறேன் - http://www.petitiononline.com/TVWAR001/petition.html இதில் கையெழுத்திட்டு உங்களது ஆதரவைத் தெரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சுட்டியை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பிவையுங்கள். மதி கந்தசாமியும் தன் வலைபதிவில் இதைப்பற்றி எழுதியுருக்கிறார் - http://mathy.kandasamy.net/musings/2006/02/26/324

Thursday, February 23, 2006

பெண்களின் பார்வையில் தொழில்நுட்பம்(Technology Through Women's Eyes)

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவியான ராபின் ஆப்ராம்ஸ், ஐ.நா சபையில் சில வருடங்களுக்கு முன் நடந்த பெண்களுக்கான ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள் இங்கே...

பெண்கள் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பல முக்கிய சாதனைகளை பல வருடங்களாகச் செய்து வந்தாலும், அவையெல்லாம் இன்றும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ரகசியங்களாகவே இருக்கின்றன. உதாரணத்திற்கு, Charles Babbage என்பவர் யாரென்று சுலபமாக சொல்லிவிடலாம். கணிணி இயந்திரத்தை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தவர். ஆனால் அவருடனேயே பணியாற்றிய Ada Byron King என்கிற பெண் தான் உலகின் முதல் கம்பூட்டர் ப்ரொக்ராமர் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அதே போல் 19ஆம் நூற்றாண்டில் நவீன கம்பைலர்கள் மூலம் மென்பொருள் தயாரிப்பதற்கான மகத்தான முயற்சிகளுக்காக Grace Hopper என்கிற பெண்மணிக்கு பல விருதுகள் கிடைத்தன, "Man of the Year" விருது உட்பட!!!

அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் எப்படி வெவ்வேறு விதமாக தொழில் நுட்பத்தைப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கின்றன. ஆண்கள் எப்பொழுதும் தமது கணிணிகளின் ஹார்ட் டிஸ்க்கின்(hard disk) அளவு பற்றியும் மைக்ரோ ப்ராஸஸர்களின்(micro proccessor) வேகத்தையும் பற்றியே பெருமையயடித்துக்கொண்டிருப்பார்கள். பெண்கள், கணிணிப் பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறதென்பதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. உபயோகிக்க எளிதாக இருக்கவேண்டும், வேலை முடியவேண்டும் - இதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு. ஒர் ஆராய்ச்சியில் எதிர்காலத்தில் கணிணிகள் எப்படி இருக்கவேண்டும் என்று ஆண்களையும் பெண்களையும் கற்பனைச் செய்யச் சொன்னபோது, உலகம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும் கருவிகளாக எதிர்கால கணிணிகளை ஆண்கள் கற்பனைச் செய்தார்கள். பெண்களோ, மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கருவிகளாக எதிர்கால கணிணிகளை கற்பனைச் செய்தார்கள். பெண்கள் ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகவும் முடிவாகவும் கணிணிகளைப் பார்க்கிறார்கள். ஆண்கள் தம் உடல் சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்யும் கருவியாக கணிணிகளைப் பார்க்கிறார்கள்.

இந்த தொழில் நுட்பப் பார்வை வித்தியாசம், அமெரிக்காவில் சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது. 10 வயது முதல் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் கணிணிகளின் மேல் சம அளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். 10 வயதிற்கு மேல், பெண் குழந்தைகளின் ஈடுபாடு வெகுவாகக் குறைந்துவிடுகிறது. குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் மென்பொருள் விளையாட்டுக்கள் பெரும்பான்மையாக ஆண்களால் தயாரிக்கப்படுகின்றன. இந்த விளையாட்டுக்களின் கரு பெரும்பான்மையாக போர், சண்டை, துப்பாக்கி சூடு, அழித்தல், க்ரைம், ஏதாவது ஒன்றை மீட்டெடுப்பது போன்றவையாகவே இருக்கின்றன. பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளை விரும்புவதில்லை. பெண்களுக்கு பொதுவாக தனியாக விளையாடாமல் இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து குழுவாக விளையாடுவது பிடிக்கும். மேலும் பெண்களுக்கு யாரையும் அழிப்பதோ, யாரும் இறந்துபோவதோ பிடிக்காது. இந்தக் காரணங்களினால், 10 வயதிற்குமேல் பெண் குழந்தைகளின் கணிணி ஈடுபாடு குறைகிறது. "Game Boy" என்று தானே அந்த விளையாட்டுக்களுக்கு பெயர் கூட வைக்கிறார்கள்?

சிறு வயதில் ஏற்படுத்தப்படும் இந்த பால்நிலை பாகுபாடுதான்(gender discrimination) பிற்காலத்தில் பெண்கள் தொழில்நுட்பத்துறைகளில் நுழைவதா வேண்டாமா என்கிற முடிவை பாதிக்கிறது. ஆனால் இந்தப் பாகுபாடு இப்போது வெகு வேகமாக மாறி வருகிறது. கணிணிகளின் சக்திக்கும் வேகத்திற்கும் இணையாக அதன் உபயோகத்தன்மையும் மதிப்பிடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் கையிலே கணிணிகளைத் தினிக்கவேண்டும் என்று ஆசைப்படும் நிறுவனங்கள், அந்த மக்கள் தொகையில் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்றார்போல் கணிணிகளையும் மென்பொருள்களையும் தயாரித்து வருகின்றன. பெண்களுக்கு ஏற்றது போல் என்றால் கணிணிகளை பிங்க் நிறத்தில் உருவாக்கவேண்டும் என்று அர்த்தமில்லை!

பெண்களுக்கு மற்றத் துறைகளில் முன்னேற என்னென்ன சிரமங்கள் இருக்கின்றனவோ, அதே சிரமங்கள் தொழில் நுட்பத் துறைகளிலும் இருக்கின்றன - உதாரணமாக பால்நிலை பாகுபாடு, சிறந்த உதாரணங்களோ, வழிகாட்டிகளோ இல்லாமை, குடும்பப் பொறுப்புகள். இவை இல்லாமல் தொழில்நுட்பத் துறைக்கென்று ஒரு தனித்துவம் மிக்க கலாசாரம் உண்டு. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், இரவு நேரங்களில் வேலை செய்வது, அளவுக்கு அதிகமாக caffeine உட்கொள்வது, கணிணிகளின் மேல் அதீத மோகம் கொண்டிருப்பதும் அதன் தொடர்பாகவே பேசிக்கொண்டிருப்பது, உடைகள் மற்றும் சுத்த பத்தத்தில் நாட்டம் இல்லாமை ஆகியவை. பெண்கள் இந்தக் கலாசாரத்தில் கலந்துகொள்ளத் தயங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பொறியியல் மற்றும் கணிணித்துறையில் கல்வி பயிலும் பெண்கள் பெரும்பான்மையானோர் இளநிலையிலேயே தம் படிப்பை நிறுத்துக்கொள்கிறார்கள். முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கு படிப்பைத் தொடரும் பெண்கள் மிகவும் குறைவு. கணிணித் துறையில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் போன்ற பதவிகளில் பெண்கள் இருப்பதும் மிக அறிதே.

தொழில் நுட்பத் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, தொழில்நுட்பத் துறையில் பெண்கள் நுழைவதற்காக மறுக்கமுடியாத காரணங்களை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும்? குறைந்தபட்சம் மூன்று வழிமுறைகளில் கவனம் செலுத்தலாம்;

1. பால்நிலை பாகுபாட்டிற்கு எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வழிகளிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டேயிருக்க வேண்டும். ஒரு சமூக அமைப்போ ஒரு நிறுவனமோ பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அந்த அமைப்பில் மற்றும் நிறுவனத்தில் செயல்படும் பெண்களின் எண்ணிக்கையைக்கொண்டு தீர்மானிக்கலாம். பெண் குழந்தைகளும் பயன்பெறும்படி கல்வி மற்றும் விளையாட்டு மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும்.

2. ஆசான்களாக, எடுத்துக்காட்டுகளாக விளங்கும் பெண் சாதனையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். உயர் பதவியில் இருக்கும் பெண்கள் பிற பெண்களின் பார்வையில் படவேண்டும். தொழிநுட்பத் துறையில் வெற்றிகரமான பாதை பெண்களுக்குச் சாத்தியம் என்பதை பெண் சாதனையாளர்களால்தான் நிரூபிக்க முடியும். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால், பெண்கள் தொழிநுட்பக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் தம் படிப்பை சீக்கிரமே முடித்துக்கொள்வார்கள் தவறான காரணத்திற்காக.

3. பெண்கள் குடும்பப் பொறுப்பையும், அலுவலகப் பொறுப்பையும் சீராக, திறமையாகக் கையாளுவதில் உள்ள சிரமங்களுக்குத் தீர்வு காணவேண்டும். குழந்தைகள் காப்பகங்கள், குழந்தைப் பேற்றின் போது விடுமுறை, வீட்டில் இருந்தே அலுவலக வேலையைச் செய்வது போன்ற வசதிகளை மேம்படுத்தினால் அது பெண்களுக்கு உற்சாகத்தைத் தரும். பெண்களை வேலைக்கு நியமித்தால் வேலைகள் தடைபடும் என்ற தவறான பார்வை விலகவேண்டும். நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்புகளின் திட்டங்களையும் செயல்முறைகளையும் சற்றே மாற்றியமைப்பதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

கணிணிகளால் எந்தப் புரட்சியையும் செய்யமுடியாது. கணிணியைக் கொண்டு மக்களால் என்ன செய்யமுடியும் என்பது தான் மகத்தான புரட்சி!.

என்னுடைய கருத்து: அமெரிக்காவை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு, தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். அங்கே பெண்களின் பார்வையில் தொழிநுட்பம் எப்படியிருக்கிறது? அமெரிக்காவை விட நம் ஊரில் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக கணிணித்துறையில் இருக்கும் பெண்கள் அதிகம் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தத் துறையில் அவர்களுடைய முன்னேற்றம் ஒரு நிலையில் தேங்கிவிடுகிறது. நிறைய பெண்கள் கணிணிப் பொறியியல் துறையில் இளநிலைக் கல்வியில் நுழைகிறார்கள். படிப்பை முடித்துவிட்டு IT நிறுவனங்களில் இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ வேலைக்கும் போகிறார்கள். ஆனால் அதில் எத்தனைப் பேர் தம் துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்றோ சாதனைப் படைக்கவேண்டுமென்றோ நினைக்கிறார்கள்? ஒரு சிலர் மட்டுமே. அப்படி நினைக்காதவர்களில் நானும் ஒருத்தி! இங்கே வாசிங்டனில் உள்ள எனது நண்பர்கள் வட்டாரத்தை ஒரு சர்வே(survey) க்கு எடுத்துக்கொண்டால், 20 குடும்பங்களில் உள்ள மனைவிமார்கள் அத்தனைப் பேருமே IT துறையில் வேலை செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து அதில் ஒன்றிரண்டு பெண்களைத் தவிர மற்றவர்கள் எல்லாமே (நான் உட்பட) கூடுதல் சம்பாத்தியம் இருந்தால் வசதியாக வாழலாம், எதிர்காலத் திட்டங்களுக்கு சேமிக்கலாம் என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் வேலைக்குச் செல்கிறார்கள். அதற்குக் காரணம், குடும்பப் பொறுப்பு பெண்களின் சுய ஆர்வத்தை விழுங்கிவிகிறது என்பது என் கருத்து. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ராபின் ஆப்ராம்ஸ் முன் வைத்த அந்த மூன்று வழிமுறைகளையும் நம் ஊரில் அமல்படுத்தினால் இந்த நிலை மாறுமா?

Thursday, February 16, 2006

மலர் அம்பும் சிவப்பு இதயமும்

நேற்றைய முன் தின 'காதலர் தினம்', ஒரு சில வாழ்த்துக்கள் தவிர வேறு எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி என்னைக் கடந்து சென்றது. 9 வருடங்களுக்கு முன்னால் சென்னையில் ஹாஸ்டலில் தங்கியிருந்த போது, என்னுடைய அறைத் தோழிகள் எல்லோருக்கும் 'காதலர் தின' வாழ்த்து அட்டைகள் வந்தது. அப்போது சினேகிதனாக இருந்த என் கணவரை தொலைபேசியில் அழைத்து, "எனக்கு உடனே ஒர் valentines day வாழ்த்து அட்டை அனுப்பு" என்று உத்தரவு போட்டேன். மாயவரத்துப் பட்டிக்காடான அவர், "அப்படின்னா என்ன?" என்றார்! அவருக்கு காதலர் தினமென்றால் என்ன என்பதை விளக்கி எங்கே எப்படி வாழ்த்து அட்டை வாங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து, சிகப்பு ரோஜாக்கள் போட்ட வாழ்த்து அட்டை எனக்கு வந்து சேர்வதற்குள், காதலர் தின "த்ரில்l" எல்லாம் போய்விட்டது எனக்கு. அதற்குப் பிறகு காதலர் தினத்தைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. 'காதலர் தினம்' போன்ற luxury க்கள் நம் நாட்டுக்குத் தேவையில்லை என்பது என் கருத்து. இருந்தாலும், இது நம் நாட்டுக் கலாசாரத்திற்கு எதிரானது என்று போராட்டம் நடத்துபவர்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

மன்மதன் மலர் அம்பை எய்தினால் காதல் வயப்படுவார்கள் என்று சொன்னதும் நம் கலாசாரம் தானே? ரோமியோ ஜூலியட் ஜோடியைத் தோற்கடிக்கும் வகையில் லைலா-மஜ்னு, ஷாஹ்ஜஹான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, தேவதாஸ்-பார்வதி போன்ற காதல் ஜோடிகளை உயர்வாகக் கொண்டாடியதும் நம் கலாசாரம் தானே? இவ்வளவு ஏன்? 'காமசூத்திரா' வை உலகத்திற்கு கொடுத்ததே நம் நாடுதானே? இப்படிப்பட்ட கலாசாரத்தை சிகப்பு ரோஜாக்களும், சிகப்பு பலூன்களும், சிகப்பு வாழ்த்து அட்டைகளும் என்ன செய்துவிட முடியும்? இவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டால் மட்டும் இளைஞர்கள் காதலிக்காமல் இருந்துவிடப்போவதில்லை. இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையிலேயே டேட்டிங், வாழ்த்து அட்டைகள், பார்ட்டி எல்லாமே ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. காதலர் தினத்தன்று சற்றுக் கூடுதல் ஆர்வத்துடனும், அதிகப்படியாகவும் நடக்கிறது. இதெல்லாம் சும்மா ஒரு நாள் கூத்துதான். இனி அடுத்த பிப்ரவரி வரை இதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை. யோசித்துப் பார்த்தால், இது ஒரு மதச் சார்பற்ற கொண்டாட்டம்! காதலர் தினத்தை விட பல மடங்கு ஆபத்தான விசயங்கள் நம் கலாசாரத்தையும் சமுதாயத்தையும் சீரழித்து வருகின்றன. அவற்றில் கவனம் செலுத்தலாம் என்பது என் கருத்து.

ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால் மேலை நாட்டுக் கலாசாரத்தை காப்பியடிப்பவர்கள், அதில் உள்ள நல்ல விசயங்களை விட்டுவிடுகிறார்கள். நம்ம ஊரில் கொண்டாடப்படும் 'காதலர் தின' மும் இங்கு அமெரிக்காவில் கொண்டாடப்படும் 'Valentine's Day' யும் அடிப்படை ஒன்று தான் என்றாலும், ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. நம்ம ஊரில் கொண்டாடுவது காதலர்கள் மட்டுமே. அமெரிக்காவில் காதலர்கள் மட்டும் இன்றி குடும்பத்தினர், நண்பர்கள், குழந்தைகள் எல்லோருமே கொண்டாடுகிறார்கள். தன் மனதிற்கு பிடித்தவர்களுக்கு வாழுத்து அட்டையோ, பரிசோ கொடுக்கிறார்கள். அது அப்பாவாகவோ, அத்தையாகவோ, ஆசிரியராகவோ கூட இருக்கலாம். பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு பள்ளியில் 'Valentines Day' பார்ட்டிகள் நடக்கிறது. 'காதல்' என்பது பொதுவாக 'அன்பு' என்ற கருத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே விதைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விசயம் என்று நான் நினைக்கிறேன். மேலும் அமெரிக்காவில் பூக்கள் அதிகப்படியாக விற்பனையாகும் நாள் Valentines Day, அதற்கு அடுத்து Mother's Day. இந்தியாவில் அன்னையர் தினம் காதலர் தினம் போல் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில்லை. காதலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் இளைஞர்கள் தாய்மைக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

காதலர் தினத்தை வைத்து மும்பய், சென்னை பொன்ற இடங்களில் நடந்த மார்க்கெட்டிங் வித்தைகளைப் பற்றி BBC South Asia வில் படித்தபோது வியப்பாக இருந்தது. ஒரு ice cream கம்பனி, மும்பய் கடற்கரையில் மிகப் பெரிய காதலர் தின வாழ்த்து அட்டையை நிறுத்துயிருந்ததாம்! மற்றொரு நிறுவனம், டைட்டானிக் கப்பல் போன்ற ராட்சத கப்பல் பொம்மையை எல்லா கல்லூரி வாசல்களிலும் கொண்டுவந்து நிறுத்த, காதல் ஜோடிகளெல்லாம் அந்தக் கப்பலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்களாம்! நம்ம ஊரில் கொண்டாட்டங்கள் எல்லாமே மிகைப்படுத்தப்படுகின்றன. கும்பகோணம் மகாமகத்திற்கும், வருடாந்திர வினாயகர் சதுர்த்திக்கும், ஹோலி பண்டிகைக்கும் நடக்காத ஆர்ப்பாட்டமா காதலர் தினத்திற்கு நடக்கிறது?

Wednesday, February 15, 2006

உயிர் வாழும் தந்திரமாம்!

விகடனின் 2005 ஆம் ஆண்டு தீபாவளி மலரில் கதை ஒன்றை நேற்றுப் படித்தேன்.

திருமணம் ஆகாத ஒரு இளைஞன் இருக்கிறான். திருமணம், பிள்ளைக்குட்டிகள், ஸ்கூல் அட்மிஷன் போன்ற தொல்லைகளில் ஈடுபட அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் தனிமையான இரவுகள் அவனுக்கு போர் அடிக்கின்றன. ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறான். அன்றிரவு அவனுடைய வீட்டில் தங்குகிறாள். இரவு மகிழ்ச்சியாகக் கழிகிறது. மறுநாள் காலை அவள் போய்விடுவாள் என்று நினைக்கிறான். அனால் மறுநாள் மாலை அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது அவள் இன்னும் அங்கேயே இருக்கிறாள். அன்றிரவும் மகிழ்ச்சியாகப் போகிறது. அடுத்த நாளாவது அவள் போய்விடுவாள் என்று நினக்கிறான். ஆனால் அவளோ போக மறுக்கிறாள். வீட்டைத் தலைகீழாக மாற்றுகிறாள். அவனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு, அவன் வீட்டில் இல்லை என்றும், அவனால் எங்கும் வரமுடியாது என்றும் பதிலளிக்கிறாள். செய்வதறியாது முழிக்கிறான் அவன். அவளிடம் நல்லவிதமாகப் பேசி வீட்டை விட்டு அனுப்ப முயல்கிறான். ஆனால் அவள் விடுவதாக இல்லை. போலீஸில் புகார் செய்கிறான், அவளுக்கு விஷம் கொடுக்க முயல்கிறான். அவள் எல்லாவற்றையும் திறமையாக சமாளிக்கிறாள். கடைசியில் மனம் வெறுத்துப் போய், வீட்டுச் சாவியை அவளிடம் தூக்கியெறிந்து, "இனி நீயே இந்த வீட்டில் இரு. நான் போகிறேன்" என்று வெளியேறிவிடுகிறான். உடனே அவள் தொலைபேசியில் ஒருவரை அழைத்து "வினோத், இன்னொரு வீடு கிடைத்துவிட்டது! நல்ல ஏரியா! உடனே விற்பதற்கு ஏற்பாடு செய்!" என்று சொல்லுகிறாள்.

இத்தோடு கதை முடிகிறது. பரவாயில்லை, இது ஒரு நல்ல knot உள்ள ஒரு கதை என்று தோன்றியது. இந்தக் கதைக்கான முடிவுரை இப்படியிருந்தது - "இந்த நவீன உலகத்தில் உயிர் வாழக் கற்றுக்கொள்ளும் பல தந்திரங்களில் ஒன்றைத்தான் இந்தக் கதாநாயகி கடைபிடிக்கிறாள். சிலருக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி தரலாம். ஆனால் இதுதான் இன்றைய தினங்களின் யதார்த்தம்!"

முடிவுரை கொஞ்சம் இடித்தது! இந்தக் கதாநாயகி செய்தது உயிர் வாழ கற்றுக்கொள்ளும் தந்திரம் அல்ல. வசதியாக வாழக் கற்றுக்கொள்ளும் தந்திரம் இது! உயிர் வாழ்வதற்கு மூன்று வேளை சாப்பாடும் தங்க ஒரு இடமும் இருந்தால் போதுமே? இவள் செய்வதைப் பார்த்தால் பல வீடுகளை இந்த மாதிரி ஏமாற்றி வளைத்துப் போட்டிருப்பாள் போலிருக்கிறதே. சரி, இது ஒரு கதைதான் என்று விட்டுவிடலாமென்றால், "இதுதான் இன்றைய தினங்களின் யதார்த்தம்" என்று முடிவுரையில் இருக்கிறது. இந்த மாதிரிப் பெண்கள் சிலர் இருக்கலாம், ஆனால் அப்படி இருப்பது தான் இன்றைய யதார்த்தம் என்றெல்லாம் சொல்லுவது டூ மச்!!! யார் இப்படியெல்லாம் எழுதியிருப்பது என்று முன் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால், எழுதியது சுஜாதா!!! என்னவாயிற்று இவருக்கு???