Friday, May 18, 2012

ஒரிகாமி - ஜப்பானிய காகிதக் கலை


மழை நாட்களில் காகிதக் கப்பல் செய்து சாலையோரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மிதக்க விடாத குழந்தைகளே இருக்க முடியாது.  சட்டென்று நோட்டு புத்தகத்தில் ஒரு காகிதத்தை கிழித்து நொடியில் ஒரு கப்பல் செய்துவிடுவார்கள்!  சிறுவர்களிடையே காகிதக் கப்பல் பிரபலம் என்பதைப் போல், கல்லூரியில் காகித "ராக்கெட்" மிகப் பிரபலம்!  கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவிகள் பக்கம் காகித ராக்கெட் செய்து வீசிக்கொண்டிருப்பார்கள்.  சிலவற்றில் ஏதாவது செய்திகள் கூட எழுதியிருக்கும்...சில சமையம் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் வாத்தியார் மீது கூட இந்த ராக்கெட்டுகள் வந்து பாயும்.

விளையாட்டாக நாம் செய்யும் இந்த காகித உருவங்களுப்பின் "ஒரிகாமி(Origami)" என்கிற முறையான கலை இருக்கிறது.  ஜப்பான் நாட்டில் தோன்றிய கலை இது.  ஜப்பானிய மொழியில் "ஒரி" என்றால் "மடிப்பு" என்றும் "காமி" என்றால் "காகிதம்" என்றும் பொருள்.  ஒரு சதுர வடிவமான காகிதத்தை பல விதமாக மடித்து ஒரு உருவம் செய்வதே இந்த கலையின் இலக்கு.  இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,  காகிதங்களை கத்தரிக்கவோ, பசை கொண்டு ஒட்டவோ கூடாது!  திறமையான மடிப்புகளின் மூலமாகவே வேண்டிய உருவங்களை செய்துவிடலாம்.

இன்று நான் செய்த பூனை முகம்


இந்த ஒரிகாமிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?  மீண்டும் அப்பாவை இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது.   பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு முறை பொழுது போகவில்லை. என்ன செய்யலாம் என்று அப்பாவை நச்சரித்துக்கொண்டிருந்தேன்.  அப்பா ஒரு நாள் "ஒரிகாமி" பற்றிய புத்தகம் ஒன்றை நூலகத்தில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார்.  இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து முழு புத்தகத்தையும் படித்தோம்.  காகிதத்தை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன் நான்.  பின்னர் பல நாட்கள் அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதில் கொடுத்திருந்த படங்கள், பாடங்கள் இவற்றைப் பார்த்து பார்த்து, பல நோட்டு புத்தக காகிதங்களை விரயம் செய்து சில உருவங்களைச் செய்யக் கற்றுக்கொண்டேன்.  சில காகித மடிப்புகள் மிகச் சிக்கலானவை.  படத்தைப் பார்த்து புரிந்துகொள்வது மிகக் கடினம்.  மண்டையை உடைத்துக்கொண்டு அதனை சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு உருவத்தை கொண்டு வருவதற்குள் பைத்தியமே பிடித்துவிடும்.  மாலை அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் நான் செய்த காகித உருவங்களை பெருமையாக அவரிடம் காட்டுவேன்.  நான் அந்த அளவு சிரத்தையாக ஒரிகாமி கலையைக் கற்றுகொள்வதில் மகிழ்ந்த அப்பா, எனக்கு ஒரிகாமி உருவங்கள் செய்வதற்கு வண்ணக் காகிதங்களை வாங்கித் தந்தார்.  வண்ணக் காகிதங்களில் நான் செய்த வீடு, தொப்பி, மீன், தவளை, பெட்டி, பூ போன்ற உருவங்கள் மேலும் அழகாக இருந்தன.  சில வருடங்கள் ஒரிகாமி எனது விருப்பக் கலையாக இருந்தது.

நான் செய்த யானை முகம்

ஆனால் எப்படி என் புத்தக வாசிப்பு, பென்சில் சேகரிப்பு இவற்றின் மீதான ஆர்வத்தை நான் பல வருடங்கள் கிடப்பில் போட்டிருந்தேனோ, அதே போல் தான் இந்த ஒரிகாமி கலையையும் பள்ளிப் படிப்பு முடிந்தது கிடப்பில் போட்டுவிட்டேன்.  நடுநடுவே வீட்டிற்கு வரும் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவதற்காக, காகிதத்தை எடுத்து ஏதாவது ஒரு உருவத்தை செய்து காட்டியதுண்டு.  அதற்குப் பிறகு, இந்தப் பதிவு எழுதும் இந்தச் சமையத்தில், ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்து பார்க்கலாம் என்று இணையத்தைப் பார்த்து இந்த உருவங்களைச் செய்தேன்.   பள்ளி நாட்களில் எனக்குக் இருந்த அதே ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் மீண்டும் மீட்டெடுக்க முடிந்தது.

நான் செய்த வீடு


இப்பொழுது நிறைய இணையதளங்கள், யூ ட்யூப் வீடியோக்கள் எல்லாம் ஒரிகாமி பற்றி வந்துவிட்டன.  இந்தக் கலையை இப்பொழுது கற்றுக்கொள்வது மிகவும் எளிது.  குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க இது ஒரு நல்ல வழி.  படத்தில் இருக்கும் உருவங்கள் எல்லாம் மிக எளிதாகச் செய்யக்கூடியவை தான். ஆனால், இவற்றை விட பல நிலைகள் கடினமான உருவங்களெல்லாம் கூட செய்யமுடியும்.  

7 comments:

துளசி கோபால் said...

அந்த யானையை நியூஸிக்குப் பார்ஸல் செஞ்சுருங்க தாரா!

தாரா said...

துளசி அக்கா - உங்களுக்கு இல்லாததா? :-)

தாரா

சிட்டுக்குருவி said...

எனக்கு ஒரு புறா செஞ்சிதாங்கோ...நிறையப்பேருக்கு அந்த மாதிரி....செய்திகள் கொஞ்சம் அனுப்ப வேண்டியிருக்கிறது..

ஹுஸைனம்மா said...

மகளுக்கென்று நிறைய கலைகள் வச்சிருக்கீங்க போல, வாழ்த்துகள்!!

தாரா said...

சிட்டுகுருவி - இந்த இணையதளத்தைப் பார்த்து நீங்களே புறா செய்ய கற்றுக்கொள்ளலாம்! :-)
http://www.origami-instructions.com/

தாரா

பழனி.கந்தசாமி said...

நல்ல தகவல்.

அமைதிச்சாரல் said...

ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க. இங்கேயும் கேஜி வகுப்புகள்ல குழந்தைகளைச் செய்யச்சொல்லுவாங்க.

ரொம்ப நாளுக்கு முன்னாடி 'சிதம்பர ரகசியம்'ன்னு ஒரு தொடர் வந்துட்டிருந்தது. அதுல டைட்டிலில் ஒரிகாமியில் செஞ்ச நிறைய உருவங்களைக் காட்டுவாங்க. உங்க பகிர்வு படிச்சதும் அந்த ஞாபகம் வந்துச்சு..