Wednesday, March 29, 2006

22 முதல் 72 வரை பெண்கள்

சாகும் வரை காதல் குறையாமலும், வாழ்க்கைத் துணையின் கடைசி மூச்சு வரை கூடவேயிருந்து அன்புடன் கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தலைவணங்கிவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். இது சும்மா கிண்டலுக்குத் தான்.

ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆண் வேண்டும் என்பது அவளுடைய வயதைப் பொருத்து வெகுவாக மாறும். எப்படி?

22 வயது: வெள்ளைக்குதிரையில் ராஜகுமாரன் வேண்டும்! அது சாத்தியமில்லை என்று தெரிந்தும், அப்படியொருவனை கற்பனையிலும் கனவிலும் சந்திக்க முயல்வதை அவளால் தடுக்க முடியாது. ஆணழகனாக, புத்திசாலியாக, வசதியானவனாக, நகைச்சுவை உணர்வுள்ளவனாக, அவளை பூக்களாலும் பரிசு பொருட்களாலும் திக்குமுக்காடச் செய்யும் காதலனாக இருக்கவேண்டும்.

32 வயது: அவன் நல்லவனாக இருந்தால் போதும். காதலும் கவர்ச்சியும் இல்லாவிட்டாலும், நல்ல பழக்க வழக்கங்கள், நிரந்தரமான வேலை இவை அவசியம். இது இல்லாமல், சூப்பர் மார்க்கெட்டுக்கு தன்னுடன் கூடை தூக்கிக்கொண்டு வரவேண்டும், தான் வீட்டில் சமைத்த உணவில் த்ருப்தியடைய வேண்டும், வீட்டு வேலைகள் அவ்வப்போது செய்யவேண்டும். ஒட்டுமொத்தத்தில் ஒரு குடும்பப்பாங்கான ஆண் தேவைப்படுகிறான்.

42 வயது: ஏதோ ஒருவன் இருந்தால் போதும். சற்று தொப்பை இருந்தாலும் பரவாயில்லை. தலையில் கொஞ்சம் முடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தால் போதும். வாரம் ஒரு முறை தன் முகத்தை சவரம் செய்தால் போதும். மாதம் ஒரு முறை அவளை வெளியில் அழைத்துச் சென்றால் போதும். அவள் பேசும் போது அவ்வப்போது புன்னகையும், அவ்வப்போது தலை அசைத்தலும் போதும்.

52 வயது: குறைந்தபட்சம் அவளுடன் அவன் ஒரே வீட்டில் இருந்தாலே போதும். அவள் பெயரை அவன் ஞாபகம் வைத்திருந்தால் மகிழ்ச்சியே. அவள் பேசும் போது தூங்கி விழாமல் இருந்தால் பரவாயில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடந்தால் நன்றாக இருக்கும்.

62 வயது: அவளை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் அவன் பாட்டுக்கு ஒரு ஓரமாக இருந்தால் நன்றாக இருக்கும். தன் பேரக்குழந்தைகளை பயந்து அழவைக்காமல், பாத்ரூம் எங்கிருக்கிறது, அவனுடைய பல் செட் எங்கிருக்கிறது என்று நினைவிருந்தால் போதும். அவளுடைய உதவியில்லாமல் அவனே எழுந்து உடை மாற்றிக்கொண்டால் நலம். அவனுடைய கொரட்டைச் சத்தம் கேட்காத ஒரு இடமாவது அந்த வீட்டில் இருப்பது மிகவும் அவசியம்.

72 வயது: இத்தனை வயது வரை அவள் உயிருடன் இருந்தால் ஆச்சரியம். அப்படியே இருந்துவிட்டால், அவன் சுவாசித்துக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தாலே போதும்.

Thursday, March 23, 2006

உதவியா உபத்திரவமா?

எங்க ஊரில் நடக்கவிருக்கும் ஒரு பட்டிமன்றத்திற்காக தலைப்பு தேடிக்கொண்டிருந்தபோது, இந்தத் தலைப்பு கிடைத்தது - "சமையலறையில் மனைவிக்குக் கணவன் உதவியா? உபத்திரவமா?"

என்னை நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேன். என் கணவர் சமையலறையில் எனக்கு உதவியா அல்லது உபத்திரவமா?

சமையலறையில் மனைவிக்கு முழுமூச்சாக உதவி செய்யும் கணவன்மார் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். காய்கறி வெட்டிக்கொடுப்பது, பூரி மாவு தேய்த்துத் தருவது போன்ற உதவிகளை செய்கிறார்கள். கணவனும் மனைவியும் ஒற்றுமையாக சேர்ந்து சமைப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கும் என் கணவருக்கும் சண்டையும் விவாதமும் வருவதே சமைலறையில் தான். We just don't synch in the kitchen!

ஒருவருக்கு ஒருவர் சமையலில் உதவி என்கிற பேச்சே எங்கள் வீட்டில் இல்லை. ஏனென்றால் நாங்கள் இருவருமே நன்றாகச் சமைப்போம். அதனால் சமையலறையில் 'ego clash' அடிக்கடி வரும்! தன் அம்மாவின் கைப்பக்குவம் என்கிற மூக்கனாங்கயிற்றைத் தாண்டி மற்ற வகை உணவுகளை சுவைக்கத் தயங்கும் கணவன்மார்களில் என் கணவர் எந்த விதிவிலக்கும் அல்ல. தனியாகச் சமைத்தால் பிரமாதமாகச் சமைப்பார்! குறிப்பாக அசைவ உணவு வகைகளை மிகவும் ரசித்துச் சுவையாகத் தயாரிப்பார். ஆனால் செய்முறையை(recipe) மட்டும் அவரிடம் கேட்டுவிடக்கூடாது. கேட்டீர்களென்றால் லேசாக வயிற்றைக் கலக்கும்! செய்வதை நேரில் பார்த்தால் லேசாகத் தலையே சுற்றும்! சப்பிட்டால்??? உங்கள் ஆயுளில் சில மாதங்கள் குறையலாம்!!! ஆனால் சுவை??? சூப்பரோ சூப்பர்!!! அவர் செய்யும் அனைத்து உணவு வகைகளிலும் இந்த மூன்று ஐட்டங்கள் தவறாமல் இருக்கும்.

1. MTR கரம் மலாசா (MTR ரின் பரம ரசிகர் என் கணவர்)2. MSG - Mono Sodium Glutamate (இது உடம்புக்குக் கெடுதல் என்று தெரிந்தும் அதன் சுவையில் ஒரு "kick" இருக்கிறது என்று விவாதிக்கிறார்)3. பாளம் பாளமாக வெண்ணை அல்லது வண்டி வண்டியாக எண்ணை(oil-bath ஆச்சா என்று நண்பர்கள் கிண்டலடிப்பது வழக்கம்)

மற்றபடி கையில் கிடைத்த பொடி, மசாலா எல்லாவற்றையும் போடுவார். உண்மையிலேயே அவர் செய்யும் உணவு வகையின் செய்முறையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் அவர் சமைக்கும் போது கூடவே இருந்தால் தான் முடியும்! எல்லாவற்றிலும் காரம் தூக்கலாக இருக்கவேண்டும் அவருக்கு. அவர் சமைக்கும் அனைத்து ஐட்டங்களுக்கும் "spicy" என்கிற வார்த்தையை சேர்த்துக்கொள்வார். உதாரணத்திற்கு, "spicy சிக்கன் குழம்பு", "spicy கத்தரி வறுவல்", "spicy பிரியாணி". சமைத்து முடித்தவுடனும் அவர் செய்யும் அலம்பலும் அலட்டலும் தாங்கமுடியாது. சப்பிடுபவர்களைத் "சாப்பாடு எப்படி? உங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சேன். எப்படி இருக்கு?" என்று கேட்டு துளைத்து எடுத்துவிடுவார். ஒரு வாரம் சென்ற பிறகு கூட "போன வாரம் நான் வைத்த குழம்பு அட்டகாசம் இல்ல?" என்று கேட்டுக்கொண்டிருப்பார். அவர் சமைத்ததன் பின் விளைவுகள் பாத்திரங்களைக் கழுவும் பொழுது தெரியும். நான் ஆசை ஆசையாக வாங்கி பார்த்துப் பார்த்து உபயோகித்துக்கொண்டிருந்த non-stick பாத்திரங்களில் கீறல் விழுந்திருக்கும். அவரைக் கூப்பிட்டுக் காட்டி, என்ன செய்தீர்கள் என்று கேட்டால், அதில் கொத்துப் பரோட்டா செய்தேன் என்பார். நம்ம ஊரில் ரோட்டோரக் கடைகளில் பரோட்டாவைக் கொத்தும் போது நம்ம ஊரில் 'டங் டங்' என்று ஒரு சத்தம் வருமில்லையா? அந்த மாதிரி sound effect வரவேண்டுமென்று இரண்டு கரண்டிகளை வைத்துக் கொத்தியதால் பாத்திரத்தில் கீறல் விழுந்துவிட்டது என்பார்!.

நான் சமைக்கும்போது அவர் கூட இருந்தாலும் சண்டை தான் வரும்! இன்னும் கொஞ்சம் எண்ணை ஊத்தச் சொல்லுவர். நான் சற்று அசந்தால், எனக்குத் தெரியாமல் குழம்பில் மிளகாய்ப்பொடியை கூடுதலாகப் போடுவார்!
மனைவி ஊருக்குப் போய்விட்டால் கணவன்மார்கள் வெளியிலோ அல்லது நண்பர்கள் வீட்டிலோ சாப்பிடுவார்கள். ஆனல் எங்கள் வீட்டில் தலைகீழ்! நான் வீட்டில் இல்லையென்றால் என் கணவர் நண்பர்களை அழைத்து எங்கள் வீட்டில் சாப்பாடு போடுவார். ஆனால் நானும் அவரும் சேர்ந்து சமைப்பதோ, நான் அவருக்கு சமையலில் உதவி செய்வதோ, அவர் எனக்கு உதவி செய்வதோ எங்கள் வீட்டில் நடக்காத காரியம்.

அவர் நன்றாகச் சமைப்பதனால் அவர் செய்யும் உபத்திரவங்களை பொறுத்துக்கொள்வதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அதனால், அவர் எனக்கு சமையலறையில் "நிறைய உதவி, கொஞ்சம் உபத்திரவம்" என்று பட்டிமன்றத் தீர்ப்பு சொல்லலாம். உங்கள் வீட்டில் எப்படி?

Monday, March 06, 2006

ஈவ் டீசிங் - என் அனுபவங்கள்

Eve Teasing Blog-a-thon பற்றிய சுட்டியை மதி அனுப்பியிருந்தார். என்னுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

'Eve teasing' என்கிற வார்த்தை வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே அதன் அனுபவங்களால் பல முறை வேதனை அடைந்திருக்கிறேன் தமிழ் நாட்டில் இருந்தபோது. கல்லூரி நாட்களில் என் வீட்டுக்கும் கல்லூரிக்கும் இடையே உள்ள ஆண்கள் விடுதியைத் தாண்டித்தான் ஒவ்வொரு நாளும் செல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் நானும், என்னைப் போல் பல மாணவிகளும் ஆண்கள் விடுதியைத் தாண்டிப் போகும்போது மாணவர்கள் எங்கள் பெயர்களைச் சொல்லி கூக்குரலிடுவார்கள், விசில் அடிப்பார்கள். அந்த இடத்தைக் கடந்து செல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். மாணவிகளெல்லாம் செர்ந்து வார இறுதிகளில் எப்போதாவது சினிமாவுக்கோ, உணவகங்களுக்கு செல்வோம். அங்கேயும் இதே கூக்குரல்களும், கேலிப்பேச்சும், கோணல் பார்வைகளும் பின்தொடரும். பெண்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், சுதந்திரமாக கல்லூரி வளாகங்களில் வளையவரும் சூழ்நிலை அவ்வளவாக அப்போது இருக்கவில்லை.

பின்னர் நான் சென்னையில் கணிணிப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்தபோது நடந்த சில சம்பவங்கள் இன்னும் என் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. தினசரி மைலாப்பூரிலிருந்து டி நகருக்கு பல்லவன் பேருந்தில் பயணம் செய்யவேண்டும். கூட்டம் நிரம்பி வழியும் அந்தப் பேருந்துகளில் ஆண்களுக்கு மத்தியில் முட்டிக்கொண்டும் இடித்துக்கொண்டும் பயணம் செய்வதென்னவோ பழகிவிட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் ஒரு ஆள் வரம்பு மீறி என்னிடம் நடந்துகொண்டான். சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தும் அளவு அன்று எனக்குத் தைரியம் இல்லை. கோபமும் அழுகையும், அருவெறுப்பும், இயலாமையுமாக அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் உடனே இறங்கி அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதேன்.

மற்றுமொரு நாளில், அதே சென்னையில் ஒரு நாள் பயிற்சி முடிய இரவு 9 மணியாகிவிட்டது. டி நகரிலிருந்து மைலாப்பூர் செல்வதற்கு தவறானப் பேருந்தில் தெரியாமல் ஏறிவிட, அது எழும்பூருக்குச் சென்றுவிட்டது. தவறை உணர்ந்து எழும்பூரில் ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். அது எந்த இடம் என்று கூட சரியாகத் தெரியவில்லை. சற்றுத் தள்ளி இருந்த சில பெட்டிக்கடைகளைத் தவிர வேறு ஆள் நடமாட்டம் இல்லை. அடுத்து அங்கே வரும் பேருந்தில் ஏறிவிடலாம் என்று காத்திருந்தேன். அப்போது பைக்கில் ஒரு இளைஞன் வந்தான். பைக்கை நிறுத்திவிட்டு என்னிடம் வந்து "ஹலோ, நீங்க எங்கே போகனும்?" என்றான். நான் "மைலப்பூர்" என்றேன். "நானும் அங்கதான் போறேன், வாங்க உங்களை அங்கே ட்ராப் பன்னிவிடுகிறேன்" என்றான். எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது. "பரவாயில்லை, நானே போய்க்கொள்கிறேன்" என்றேன். மறுபடியும் அவன் "நீங்க என்னைத் தவறாக நினைக்கறீங்கன்னு நினைக்கிறேன். நான் டீசன்டான ஆள்தான். உங்களுக்கு உதவனும்கிற எண்ணத்தோடதான் கேட்டேன், பயப்படாம வாங்க" என்றான். நான் பேச மறுத்து பயத்தில் உறைந்துபோய் நிற்க, அவனும் விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்தான். நல்ல வெளையாக ஒரு பேருந்து வந்து நின்றது. அது எங்கே போகிறது என்று கூடப் பார்க்காமல், அந்த இடத்திலிருந்து அகன்றால் போது என்று ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டேன். வீட்டிற்குச் சென்று தோழிகளிடம் நடந்ததைச் சொல்லி வழக்கம்போல் அழுதேன்!

ஒரு முறை சினிமா கொட்டகையில் குடித்துவிட்டு என்னருகில் வந்தமர்ந்த ஒருவன், கேள்வி மேல் கேள்விகேட்டு என்னை வம்பில் இழுக்க, பாதி சினிமாவில் எழுந்து வெளியே சென்றுவிட்ட அனுபவமும் உண்டு.

சரிகா ஷா போன்ற உயிர் துறந்த பெண்களைப் பார்க்கும்போது என்னுடைய அனுபவங்கள் மிகச் சாதாரணமானவையே. ஆனால் அன்று என் சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் குலைத்தவை. இந்த ஈவ் டீசிங் இந்தியாவில் மட்டுமே வழக்கத்தில் இருக்கிறது என்றாலும், மற்ற நாடுகளில் "sexual harrassment" என்று வேறு விதமாக அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றிய சில சுற்றுலா பதிப்புகளில் ஈவ் டீசிங் பற்றி எச்சரிக்கைக் கூட இருக்கிறதாம்! எவ்வளவு பெரிய மானக்கேடு!

சட்டம், மாறுவேட போலீஸ் போன்றவற்றால் ஈவ் டீசிங் தொல்லைகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன, இருந்தாலும் சினிமாக்களில் ஈவ் டீசிங் காட்சிகளை படம் போட்டு வண்ணமயமாகக் காட்டாமல் இருந்தால் இன்னும் குறையும் என்று நம்புகிறேன்.