Tuesday, November 08, 2011

வாசிங்டனில் செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 3

செய்தி ஊடகத் துறையில் எப்படி பெண்கள் நுழந்தார்கள், பின் எப்படியெல்லாம் முன்னேறி வந்தார்கள் என்பதைப் பற்றி சுவையான செய்திகளை தெரிந்துகொண்டேன்.

Anna Cox Marie என்கிற பெண் எழுத்தாளர், தனது வலைப்பதிவில் அமெரிக்க அரசியல் கிசுகிசுக்களை எழுதி மிகப் பிரபலமானாராம்!  தனது பதிவை வைத்து பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்தாராம்!  ஹம்ம்ம்ம்...நானும் தான் பல வருடங்களாக பதிவு எழுதுகிறேன்.  தினம் ஒரு 10 பேர் படித்தாலே அதிசயமாக இருக்கிறது.  இந்தச் செய்தியை பார்த்தது முதல் எனது பதிவை அடுத்த நிலைக்கு எப்படி எடுத்துச் செல்வதென்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். 

பல வருடங்களுக்கு முன், ஆண் நிருபர்கள் மட்டுமே செய்தித் துறையில் இருந்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் நுழையத் தொடங்கிய போது அது சமூகத்தால் எளிதில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.  ஆனால் பெண்கள் விடவில்லை!  

Melissa ludtke என்கிற பெண், விளையாட்டுச் செய்திகள் பிரிவில் (sports) நிருபராக பணிபுரிந்தார். ஒரு முறை ஆண் விளையாட்டு வீரர்களின் லாக்கர் அறைக்குச் சென்று பேட்டி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டார். ஆனால் அதற்காக அவர் வழக்குத் தொடர்ந்து, அதில் வெற்றி பெற்று ஆண் நிருபர்களுடனான சம உரிமையைப் பெற்றார்!   பெருமைக்குரிய சாதனை! 

நிருபர்கள் பல சூழ்நிலையில் காவல் துறை தடையினைத் தாண்டிச் செல்லவேண்டியிருப்பது தெரிந்ததே. அதற்கான அனுமதிச் சீட்டில், "Please pass him in the police line" என்கிற வரிகளே பல வருடங்களாக இருந்ததாம்.  முதல் முறையாக Rita Good என்கிற பெண் நிருபருக்காக "him" என்பதை "her" என்று கையால் அடித்து மாற்றினார்களாம்!

இப்படி இந்த அருங்காட்சியகத்தில் கொட்டிக் கிடக்கும் செய்திகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.  ஆனால் நேரில் சென்று ஒரு மூழு தினத்தை அங்கே செலவிட்டால் அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.  வாசிங்டன் டிசி பகுதியில் இருப்பவர்களும், வாசிங்டன் டிசிக்கு வருபவர்களும் இந்த அருங்காட்சியகத்தைக் காணத் தவறாதீர்கள். 

Sunday, November 06, 2011

செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 2

புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களுக்கான பகுதிக்குச் சென்றபோது, அங்கே ஒரு திரையில் அந்த விருது பெற்ற சில புகைப்பட நிபுணர்களின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது.  அதில் ஒரு நிபுணர் கூறுகிறார் "It's a honor to be a journalist, because if you care about something, you can make half a million people care about it" என்று.  எவ்வளவு உண்மை!  கொசோவாவில் நடந்த இனப் போராட்டத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது அங்கே இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் வரை.


கொசோவாவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில், இரும்புக் கம்பிகளின் இருபுறம் உள்ள உறவிணர்கள் இந்தக் இரண்டு வயது குழந்தையை முத்தம் கொடுப்பதற்காக கம்பிகளின் வழியாக கைமாற்றம் செய்துகொள்கிறார்கள்.   


தன் உடலில் போதை மருந்தை செலுத்துக்கொள்ளும் ஒரு தாய்!  பின்னால் துவண்டு தூங்கிக்கொண்டிருக்கும் அவளது குழந்தை!  


கொடிய தீ விபத்தில் சிக்கி எரிந்த தன் குழந்தையை அள்ளிக்கொள்ளும் தந்தை! 

இப்படி வாழ்க்கையின் கொடூரங்களை அந்த தருணங்களை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கும் இந்த புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களைப் பார்க்கும் போது இதயம் கனத்தது.  

அதே சமையம்.  இதைவிட பல மடங்கு கொடூர நிகழ்வுகள் ஈழத்தில் நடந்திருந்தும், அவற்றைப் பற்றின எந்தப் பதிவுகளும் புகைப்படங்களும் அந்த அருங்காட்சியகத்தில் இல்லாதது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.  ஈழத்தமிழர்கள் இலங்கை முகாம்களில் கிடந்து அவதிப்படும் பல நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை நான் இணையத்தில் பார்த்திருக்கிறேன்.  அவற்றில் ஒன்றாவது இந்த அருங்காட்சியகத்தில் இருந்திருந்தால், அது தினம் நூற்றுக்கணக்கான இதயங்களை பாதித்திருக்குமே?!  

அடுத்தப் பதிவில் ஊடங்களில் பெண்களைப் பற்றி சில சுவையான தகவல்கள்...