Monday, January 24, 2011

ஒரு கல கல கோலப் போட்டி!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்து வந்து போகிறது.  யார் வீட்டிலாவது போய் விருந்து சாப்பிட்டுவிட்டு  அரட்டை அடித்து விட்டு வருவதைத் தவிர வேறு எதுவும் உருப்படியாகச் செய்வதில்லையே என்று என் மனதில் எபோதும் ஒரு குற்ற உணர்ச்சி உண்டு.  சிறு வயதில் "பொங்கலுக்கு ஊருக்குப் போகிறோம்" என்று ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வாய் ஓயாமல் சொல்லி மகிழ்ந்து, பள்ளி விடுமுறை விட்டதும் தாத்தா, அம்மாயி இருந்த கிராமத்திற்கு எல்லாரும் சென்றுவிடுவோம்.  அடுத்த நான்கு நாட்களும், நிற்க நேரமில்லாமல் பரபரப்பாகச் செல்லும்.  அடுப்பாங்கரையில், அப்போதுதான் பொங்கி வைத்த வெண்பொங்கலையும் சக்கரைப்பொங்கலையும் சுவைப்பதும் பின் வாசலுக்கு ஓடிச்சென்று அக்கம்பக்கத்துப் பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போடும் கோலங்களைப் பார்ப்பதுமாக குதூகலமாக ஓடிக்கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது.  அடுத்த நாளோ பரபரப்பிற்கு கேட்கவே வேண்டாம்.  வாசலில் போய் நின்றாலே போதும்.  மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் பூசி, கழுத்தில் மாலை போட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து தெருக்களில் ஓட்டிக்கொண்டு வருவார்கள்.  அரிசி இடிக்கும் உருளையை குறுக்கே போட்டுத் தாண்டச் சொல்லுவார்கள்.  பின்னே ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு ஏரிக்கரையில் ஜல்லிகட்டு நடக்கும்.  ஆனால் மாடு என்னை வந்து முட்டிவிடும் என்கிற பயத்தில் நான் ஜல்லிகட்டு பக்கம் சென்றதே இல்லை.

ஆனால் இப்போது?  நான் மேலே சொன்ன அத்தனையும் ஒரு சினிமா நட்சத்திரம் செய்கிறார்.  நாம் அதை தொலைக்காட்சியில் பார்க்கிறோம்!  ஆம்!  இந்த வருடம் பொங்கல் நிகழ்சிகள் பற்றி ஒரு மாதமாகவே விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் காட்டிக்கொண்டிருந்தார்கள்.  வடிவேலு தன் ஊரில் பொங்கல் கொண்டாடுவது,  சின்னத் திரை கலைஞர்கள் ஒரு கிரமத்திற்குச் சென்று பொங்கல் கொண்டாடுவது, தனுஷ் கொண்டாடுவது....என்று அடுத்தவர்கள் கொண்டாடுவதையே ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு எப்படித்தான் மணிக்கணக்காக பார்த்துக்கொண்டிருப்பது?!

இங்கே அமெரிக்காவில் நாங்கள் தொலைக்காட்சி அவ்வளவாகப் பார்ப்பதில்லை.  யார் வீட்டிலாவது விருந்துக்கு கூப்பிடுவார்கள்.  போய்வருவோம்.  தெரிந்தவர்களை எல்லாம் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சாப்பிடுவதையும் அரட்டை அடிப்பதையுமே செய்துவிட்டு வருவோம்.

இந்த வருடமும் பொங்கலுக்கு ஒரு நண்பர் வீட்டிலிருந்து விருந்துக்கு அழைப்பு வந்தது.  இந்த முறை ஏதாவது உருப்படியாக செய்தே ஆகவேண்டும் என்று யோசித்தேன். சிறு வயதில் வாசலில்  தெருவெல்லாம் அடைத்து அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் போட்ட கோலங்கள் ஞாபகம் வர, ஒரு கோலப் போட்டி வைக்கலாமே என்று தோன்றியது.  உடனே தோழிகளுக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பினேன்.  காகிதத்தில் அனைவரும் ஒரு கோலம் வரைய வேண்டும் என்றும், மிக அழகிய கோலத்திற்கு பரிசு உண்டு என்றும், விருந்துக்கு அழைத்தவரே இந்தப் போட்டிக்கு நடுவராக இருப்பார் என்றும் மின்னஞ்சலில் எழுதியிருந்தேன்.  விருந்துக்கு நான்கு நாட்களே இருந்தது.  எல்லாருமே வேலைக்குச் செல்லும் தாய்மார்கள்.  இந்த நான்கு நாட்களுக்குள் ஒரு கோலத்தைக் கற்றுக்கொண்டு வருவார்களா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.  நானும் விருந்துக்கு முதல் நாளன்று தான் இணையத்தில் 'கூகிள்' ஆண்டவரிடம் சென்று 'கோலம்' என்று கேட்டேன்.  ஒரு அருமையான இணையதளம் கிடைத்தது.  அதில் உள்ள ஒரு பொங்கல் பானை கோலத்தை ஆராய்ந்து ஓரளவு வரையக் கற்றுக்கொண்டேன்.  போட்டிக்குத் தயாரானேன்!!  இதுதான் நான் போட்டியில் வரைந்த கோலம்.சரியாக பொங்கலன்றே(சனவரி 15) அந்த விருந்து அமைந்திருந்தது.  தோழிகளெல்லாம் என்னைப் பார்த்தவுடன் கோலப்போட்டியைப் பற்றி ஆர்வமாக கேட்பார்கள் என்று நினத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது!  எல்லாரும் அலவலாவிக்கொண்டும் பொறுமையாக உணவு அருந்திக்கொண்டும் இருந்தார்கள்.  நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்த தருவாயில், ஒரு தோழி "கோலப் போட்டியைப் பற்றிய உங்கள் மின் அஞ்சல் கிடைத்தது, ஆனால் எனக்கு நேரமே இருக்கவில்லை ஒரு கோலத்தை கற்றுக்கொண்டுவர" என்றார்.  ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று நான் யோசிக்கையில் மற்றொரு தோழி, "என்ன கோலப் போட்டி?  எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லையே?" என்று சொன்னார்.  சுத்தம்!  பேசாமல் சக்கரைப் பொங்கலை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகவேண்டியது தான் என்று முடிவு செய்தேன்.

சாப்பிட்டுவிட்டு கை கழுவுகையில், "என்ன, கோலப் போட்டியைத் தொடங்கலாமா?" என்று ஒரு தோழி கேட்டார்.  நான் சந்தேகமாக, "நீங்கள் தயாராக வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன்.  அதற்கு அவர், "என்ன இப்படி கேட்டுட்டீங்க?  நான் இதுக்காக எங்க ஊரில் உறவிணர்களை  skype மூலம் தொடர்பு கொண்டேன்.  அவர்கள் எனக்கு காகிதத்தில் கோலம் வரைந்து காமிராவில் காட்டினார்கள்" என்றார்.  எனக்குப் புல்லரித்து!  இப்படிப்பட்ட சின்சியர் சிகாமணிக்களும் இருக்கிறார்களே என்று.  மற்றொரு தோழி, "நானெல்லாம் கற்றுக்கொள்ளவே தேவையில்லை.  எத்தனை புள்ளி கோலம் வேண்டுமானாலும் வரைவேன்" என்றார்.  மற்றொருவர் கலர் பென்சில்கள் சகிதம் "நான் ரெடி" என்றார்.  ஆண்கள் பக்கத்திலிருந்து "ஏன் நாங்களெல்லாம் கோலம் வரையமாட்டோமா?"  என்று ஒரு குரல் எழுந்தது.  "கோலம் போடத்தெரியும் என்றால் நீங்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்" என்றேன் நான்.  அதற்கு அவர் "ஆண்களை குறைவாக எடை போடாதீர்கள்.  சிறு வயதில் என் அக்கா எனக்கு கோலம் போடக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.  10 புள்ளி, 20 புள்ளி, 50 புள்ளி, ஏன் 100 புள்ளி கூட நான் வைப்பேன்" என்றார்.  "அப்படியா?" என்று நான் ஆச்சரியப்பட, அவர் சற்று குரலை தாழ்த்திக்கொண்டு, "ஆனால் அந்தப் புள்ளிகளை சேர்க்கத்தான் தெரியாது" என்று சொல்ல, அவரது தைரியத்தைப் பாராட்டி அவரை போட்டியில் சேர்த்துக்கொள்ள பெண்கள் முடிவு சேய்தார்கள்.

விருந்துக்கு எங்களை அழைத்த, நான் அன்பாக ஆண்ட்டி என்று அழைக்கும் பெண்மணி  தான் போட்டியின் நடுவர் என்று முன்பே முடிவெடுக்கப்பட்டிருந்தது.  பாவம் அவர்.  அன்று முழுவதும் எங்களுக்கு விருந்து சமைத்து ஏற்கனவே களைத்து காணப்பட்டார்.  சாப்பாட்டுக் கடை முடியவே இரவு 10 மணி ஆகிவிட்டது.  இதற்கப்பறம் கோலப் போட்டியா என்று மனதிற்குள் இருந்திருக்கும் அயர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாக கோலப் போட்டியை தொடங்கி வைக்க "டைமர்" சகிதம் வந்தார்.  கிட்டத் தட்ட 15 பெண்கள் இருந்தார்கள்.  முன் அறையில் உள்ள ஒரு நீளமான மேஜையில் எங்களையெல்லாம் உட்காரச் சொன்னார்.  அனைவருக்கும் கோலம் வரைய வெள்ளை காகிதம் மற்றும் பென்சில்கள் கொடுத்தார்.  உற்சாக மிகுதியால் ஆளுக்கொரு விதி முறையை ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  "15 நிமிடங்கள் தான் போட்டிக்கான நேரம்" என்று ஒருவர் சொல்ல, "அய்யோ!  நான் புள்ளி வைத்து முடிக்கவே 15 நிமிடம் ஆகிவிடுமே" என்று ஒருவர் பதைபதைக்க, "கொடுத்த நேரத்தில் எத்தனைக் கோலங்கள் வேண்டுமானாலும் போடலாம்" என்று ஒருவர் குழப்ப, "கோலத்தை அழித்து திருத்துவதெல்லாம் கூடாது" என்று ஒருவர் கண்டிக்க...கோலாகலமாக கோலப் போட்டி தொடங்கியது.  புள்ளி வைக்கத் தொடங்கியபோது, சல சலவென்று பின்னால் ஒரே சத்தம்!  பளிச் பளிச் என்று காமிரா ப்ளாஷ் வெளிச்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.  கணவன்மார்கள் அனைவரும் பின்னால் நின்று தம் அருமை மனைவிகளின் கைத்திறனை பதிவு செய்துகொண்டிருந்தார்கள்!!  கூடவே ரன்னிங் கமெண்ட்ரி வேறு!  "வெகு வேகமாக மாலதி 20 புள்ளி 9 வரிசை கோலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார்" என்கிற கமெண்ட்ரியை கேட்டதும் எனக்கு பகீரென்றது.  நான் அப்போது தான் புள்ளிகள் வைத்து முடித்திருந்தேன்.  நான் பயின்ற கோலத்தில் நான்கு பொங்கல் பானைகள் இருந்தன.  அதில் மூன்று பானைகளை சரியாகப் போட்டுவிட்டேன்.  நான்காவது பானை போடும்போது ஒரு தவறான கோட்டை இழுத்துவிட்டேன்.  அதான் கோடுகளை அழித்து திருத்தக்கூடாது என்று சொல்லிவிட்டார்களே?!  அதனால் எனது கோலம் சற்று சொதப்பலாகி விட்டது.

சரியாக 15 நிமிடங்கள் ஆனதும் டைமர் ஒலிக்க, அனைவரும் கோலம் வரைந்த காகிதத்தில் தத்தம் பெயர்களை எழுதி நடுவரிடம் கொடுத்தார்கள்.  "யாராவது கோலம் சரியா போடலைன்னா வேறு யாருடைய பெயரையாவது எழுதிக் கொடுத்துவிடுங்கள்" என்று ஆண்கள் பக்கத்திலிருந்து அற்வுபூர்வமான யோசனை வந்தது!  நடுவர் ஒவ்வொரு கோலமாக எடுத்து எல்லோருக்கும் காட்டினார்.  ஒரு சிலர் கோலத்தில் புலிகள் போல.  பெரிய சிக்கல் கோலமெல்லாம் போட்டிருந்தார்கள்.  சிலர் சின்ன சின்னதாக நிறைய கோலங்கள் போட்டிருந்தார்கள்.  என்னைப் போலவே சிலர் முடிக்க முடியாமல் பாதியில் விட்டிருந்தார்கள்.  சிலர் புள்ளி வைத்து போடத்தெரியாமல் படமாக வரைந்திருந்தார்கள்.  யாருக்கு பரிசு கிடைக்கப்போகிறது என்று நாங்களெல்லாம் ஆர்வமாக காத்திருந்தோம்.  நடுவர் பங்குபெற்ற அத்தனைப் பெண்களுக்கும் பரிசு கொடுத்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

போட்டி முடிந்த பின்னரும் அதைப் பற்றிய குதூகலப் பேச்சும், கிண்டல்களும் தொடர...நான் கண்கள் மூடி அந்த சத்தங்களை உள்வாங்கினேன். சல்லென்று விமானத்தில் நேராக என் அம்மாயி வீட்டுக்குச் சென்று இறங்கி, அடுப்பாங்கரைக்கு ஓடிப்போய் அவர் செய்த சக்கரை பொங்கலைச் சாப்பிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.  கோலம் போட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், கோலம் போட்டதே இல்லை என்றும் சொன்ன பெண்களை சுற்றி உட்கார வைத்து கோலம் போட வைத்தது இந்தப் பொங்கல் திருநாளின் சிறப்பாக அமைந்தது.  அதற்காக ஆர்வமாக பங்கெடுத்த அனைத்துப் பெண்களுக்கும், ஆண்களுக்கும், விருந்து பரிசும் அளித்த எங்கள் அன்பு ஆண்ட்டிக்கும் நன்றிகள் பல!  எல்லாருக்கும் மேல் ஒருவருக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இத்தனை கூச்சலுக்கும் கலாட்டாவுக்கும் இடையே முழித்துக்கொள்ளாமல் சமர்த்தாகத் தூங்கிக்கொண்டிருந்த எனது ஒரு வயது மகளுக்கு ஒரு பெரிய நன்றி.  அவள் மட்டும் நடுவில் முழித்துவிட்டிருந்தால், ஒரு பொங்கல் பானையுடன் எனது கோலம் நின்றிருக்கும்!!

இந்த வருடப் பொங்கல் தின கொண்டாட்டம் கொடுத்த ஊக்கத்தில், அடுத்த பொங்கல் தினத்திற்கான போட்டியையும் இப்போதே முடிவு செய்துவிட்டேன்.  "Painting the Pongal Pot" என்பதே அந்தப் போட்டியின் பெயர்.  பெயரிலிருந்தே அந்த போட்டி விபரங்கள் ஓரளவு புரியும்படி இருக்கிறதென்று நினைக்கிறேன்.