Wednesday, July 13, 2005

திருவாசகம் கற்றுகொடுத்த இளையராஜாவுக்கு நன்றி!

ஒரு நீஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு திருவாசகத்தை மீண்டும் கேட்டேன்...symphony இசை வடிவத்தில்!

இதற்கு முன் பள்ளியில் தமிழாசிரியை திருவாசகப் பாடல்களை பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு 'திருவருட்செல்வர்' என்கிற திரைப்படத்தில் சிவாஜி மாணிக்கவாசகராக நடித்து, திருவாசகத்தை உருக உருக பாடியதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய திருவாசக அறிவு இவ்வளவுதான்! கடந்த இரண்டு வருடங்களாக இளையராஜாவின் symphony முயற்சிப் பற்றி நிறைய காதில் விழுந்துகொண்டிருந்தது. சென்ற வார இறுதியில் எங்க ஊரில் நடந்த திருக்குறள் மாநாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த திருவாசகம் இசைத்தட்டை வாங்கி வந்து கேட்டுத்தான் பார்க்கலாமே என்று அதை ஓடவிட்டேன்.

வழக்கமான பானியில் பக்திப் பாடல்களை எதிர்பார்த்தவர்களுக்கு இது ஒரு புதிய பயணமாக இருக்கும். முதல் முறை கேட்கும் போது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. திருவாசகத்தை முன்பே படித்திராததால் வார்த்தைகள் புரியவில்லை. பின்னனி இசையும் என்னவோ ரொம்ப ஓங்கி இருந்ததாகப் பட்டது. தபலா, வயலின், புல்லாங்குழல் இல்லாத பக்திப் பாடல்களை உள் வாங்கிக் கொள்ளச் சற்று சிரமமாக இருந்தது. இவ்வளவு முயற்சி எடுத்து பெருஞ்செலவில் பதிவாக்கப்பட்ட இசையாச்சே, இதில் கட்டாயம் ஏதாவது விசயம் இருக்கவேண்டும். எனக்குப் புரியவில்லை என்பதற்காக இப்படியே விட்டுவிடக்கூடாது என்று தோன்றியது. அதனால் மறுவேலையாக அந்த இசைத்தட்டில் இருந்த ஆறு திருவாசகப் பாடல்களையும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒரு முறைக்கு இரு முறை படித்துவிட்டு மீண்டும் இசைத்தட்டை ஓடவிட்டேன். இப்போது கொஞ்சம் பொருளும் விளங்கியது, இசையையும் சற்று பாராட்ட முடிந்தது. நல்ல வேளை இளையராஜா அவரே பாடியிருக்கிறார். அவருடைய தடித்த, கணீரென்ற குரல் திருவாசகத்திற்கு பொருத்தமாக இருந்தது. இரண்டு நாட்களாக என்னுடைய அலுவலகத்திலும் head phone வைத்துக்கொண்டு திருவாசகம் சிம்பனியைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் பதிய ஆரம்பித்திருக்கிறது.

என் மனதைத் தொட்டது இரண்டு பாடல்கள் மட்டுமே என்றாலும், 6 பாடல்களைப் பற்றியும் என் கருத்தை எழுதுகிறேன்.

1. பூவார் சென்னிமன்னன் எம் புயங்கப் பெருமான் சிறியோமை
இந்தப் பாடல் மந்திரம் ஓதுவதைப் போலதான் இருந்தது. பின்னனி ஆர்கெஸ்ட்ராவும், கோரஸ¤ம் கூட அதே பானியில் தான் இருந்தது. இடை இடையே மேற்கத்திய இசை. அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை.

2. பொல்லா வினையேன்! நின் பெருஞ்சீர் புகழுமாறு ஒன்றறியேன்! (என் மனதைத் தொட்ட பாடல் - 1)
Symphony orchestra வின் பிரம்மாண்டம் இந்தப் பாடலில் தான் தெரிகிறது. மாணிக்கவாசகர் இந்தப் பாடலை எழுதும் போது எந்த மன நிலையில் இருந்தார் என்பதை இளையராஜா புரிந்துகொண்டவர் போல உருகி உருகி பாடியிருக்கிறார். லேசாகக் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. திருவாசகத்தில் இவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகளா? தெரியாமல் போய்விட்டதே. ஒரு கட்டத்தில் மாணிக்கவாசகர் தன்னை இந்தப் பிறவியிலிருந்து விடுவிக்குமாறு கடவுளைக் கெஞ்சுகிறார். ஒரு கட்டத்தில் தன் மீது கடவுள் காட்டும் கருணைக்கு நன்றி கூறுகிறார். ஒரே பாடலில் பல மன நிலைகள் அருமையாக கோர்க்கப்பட்டிருக்கிறது. இன்னொரு சிறப்பு ஒவ்வொரு முக்கியமான வரியையும் இளையராஜா பாடிய பிறகு, அதையே ஆங்கிலத்தில் Roy Harcourt பாடி ஒரு broadway musical effect ஐத் தருகிறார்! "எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்" என்ற வரிகளுக்கு "so many forms I must wear, so many lives I must bear" என்று Roy உச்சஸ்தாயில் பாடுவது அருமை!

இந்தப் பாடலின் நடுவில் சிவபுராணத்தையும் புகுத்தியிருக்கிறார் இளையராஜா.
"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!" என்கிற வரிகளைக் கேட்க்கும் போது கொஞ்சம் பரவசமாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடல் ஒரு Roller Coaster of emotions!

3 ஆவது பாடல் - ஏதோ ஒரு சினிமாப் பாடல் மெட்டு இது. எந்தப் பாடல் என்று எவ்வளவோ முயன்றும் நினைவுக்கு வரவில்லை. ஒன்றும் பிரமாதமாக இல்லை.

4 ஆவது பாடல் - ஒன்றும் விசேஷமாக இல்லை

5 ஆவது பாடல் - கும்மி பாட்டு மெட்டு போல் இருந்தது. பொருத்தமாகவே இல்லை.

6. புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்! (என் மனதைத் தொட்ட பாடல் - 2)
இந்தப் பாடல் எனக்குப் பிடித்து போய்விட்டதற்கு friendly ஆன மெட்டு ஒரு காரணம். இளையராஜாவின் 'தானனா தானா நானா"...super!!!ஆனால் பாடல் தொடங்குவதற்கு முன் "இதுதான் symphony ஆர்கெஸ்ட்ராவா? ரொம்ப நல்லா இருக்கே" என்று அவர் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதைத் தவிர்த்திருக்கலாம். அதே சமயம் பாடல்களை எப்படி தேர்ந்தெடுத்து மெட்டுக்குள் பொருத்தினார் என்பது அவருடைய அந்த சில வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இந்தப் பாடலின் வரிகளும் கருத்தும் மிகவும் அழகு. எனக்கு அரைகுறையாகப் புரிந்ததை சொல்கிறேன்.

புற்றில் வாழ்கிற பாம்பைக் கண்டு அஞ்சமாட்டேன், பொய் பேசுபவர்களைக் கண்டு அஞ்சமாட்டேன். உன்னைத் தவிர மற்றுமொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டு அஞ்சுகிறேன்!

வன்புலால் வேலும் அஞ்சேன்(புரியலை..) வளையல் அணிந்தவர்களின் கடைக்கண் பார்வைக்கு அஞ்சமாட்டேன். உன் இனிய அருளைப் பருகாத அன்பில்லாதவர்களைக் கண்டு அஞ்சுகிறேன்!

நோய் வந்தாலும் அஞ்சமாட்டேன், பிறப்பு இறப்புக்கும் அஞ்சமாட்டேன். உன் அடி பணிந்து திருநீற்றை அணியாதவர்களைக்கண்டு அஞ்சுகிறேன்! இப்படி போகிறது பாட்டு.

இந்த இசைப் பயணத்தில் எனக்குப் புலப்பட்ட சில தாழ்மையான கருத்துக்கள்;

1. சினிமாப் பாடல்களின் சாயலோ அல்லது கிறிஸ்துவ ஸ்தோத்திரப் பாடல்களின் சாயலோ பெரும்பான்மையான பாடல்களில் தெரிகிறது. தவறில்லை. இருந்தாலும், மெட்டுக்களை இன்னும் கவனமாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

2. இந்தப் பாடல்களை இளையராஜா நம்ம ஊரிலேயே உள்ள ஒரு recording theater இல் பதிவு செய்திருக்கலாமோ? Symphony இசையப் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால், அந்த வித்தியாசத்தை என்னால் பாராட்ட முடியவில்லை. நம்ம ஊரு orchestra ஏன் சரிவராது? ஆனால் இளையராஜா ஹங்கேரி சென்று திருவாசகத்திற்கு symphony இசையமைத்ததால் தான் திருவாசகத்தின் மேல் சர்வதேச அளவில் வெளிச்சம் விழுந்திருக்கிறது என்பது புரிகிறது.

3. இரண்டாவது பாடலில் ஆங்கிலத்திலும் பாடியது போல மற்ற பாடல்களிலும் செய்திருக்கலாம்.

இது ஒரு விமர்சனம் என்பதை விட, ஒரு புதுமையான அனுபவம் என்று சொல்லலாம். என்னைப் போல் எத்தனை ஞான சூனியங்கள் இந்த இசை முயற்சியைப் புரிந்துகொள்வதற்காக திருவாசகத்தைப் படித்திருப்பார்கள்! அந்த மட்டில் இளையராஜாவுக்கு இது பெரும் வெற்றியே. திருவாசகத்தை உலகெங்கும் பரப்பவேண்டும் என்கிற அவரது உயர்ந்த நோக்கத்திற்கு தலை வணங்குகின்றேன். உ.வே சுவாமிநாத ஐயர் 200 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயிருந்த தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவற்றிற்கு புத்தக வடிவத்தைத் தந்தார். அது போலவே இன்று சீண்டப்படாமல் இருக்கும் திருவாசகம், தேவாரம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களுக்கு இசை வடிவங்கள் கொடுத்து அவற்றை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல நமக்கு இளையராஜாக்கள் அவசியம் தேவைப்படுகிறார்கள்.