Wednesday, August 24, 2005

K-mart! நல்ல K-mart!

Image Hosted by Your Image Link
கல்லூரிப் படிபெல்லாம் முடிந்து பச்சை அட்டை கிடைத்து, ஒரு வழியாக அமெரிக்கா வந்து சேர்ந்தபோது(அப்போது எனக்குத் திருமணம் ஆகவில்லை), மேலே படிப்பதா வேலைக்குப் போவதா என்று குழப்பமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வரும் வரை அக்கா வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருக்க வேண்டாமென்று பகுதி நேர வேலைக்கு, McDonalds, Pizza Hut, Walmart, K-mart போன்ற இடங்களில் விண்ணப்பம் செய்தேன். ஒரே வாரத்தில் K-mart இல் வேலை கிடைத்தது. எனக்கு ஒரே சந்தோஷம். எனக்குக் கிடைத்த முதல் வேலை அது! சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $5.25!!! அக்காவும் மாமாவும் "இந்த வேலை உனக்கு நல்ல அனுபவத்தைத் தரும். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கினால் தான் பிற்காலத்தில் எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும்" என்றுச் சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

முதல் நாள் சாமி கும்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினேன். அப்போது என்னிடம் கார் இல்லாததால், அக்கா தான் என்னை K-mart அழைத்துச் சென்றாள். நான் அமெரிக்கா வந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்ததால், இன்னும் அமெரிக்கர்களின் பேச்சு வழக்கு சரிவர புரியாத நிலையில் தான் அப்போது இருந்தேன். எனக்குப் பயிற்சி அளிக்கும் மானேஜர், ஒரு சிகப்பு நிற மேலங்கியை எனக்குக் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார். அந்தச் சட்டையில் இருந்த ஒரு அடையாள அட்டையில் என்னுடைய பெயரும், "Dedicated to Customer Service" என்ற வாக்கியமும் இருந்தது. 'Sporting Goods' என்ற பகுதியில் எனக்கு வேலை என்று சொல்லி அங்கே கூட்டிக் கொண்டு போனார் மானேஜர். "இந்தப் பகுதிக்கு வருபவர்களுக்குத் தேவையான உதவியை நீ செய்ய வேண்டும்" என்றார். அந்தப் பகுதியிலிருக்கும் பொருட்களைப் பார்த்தேன். மீன் பிடிப்பதற்காக உபயோகப் படுத்தும் பொருட்கள், camping பொருட்கள், உடற் பயிற்சி சாதனங்கள் - இவற்றில் பெரும்பான்மையானவற்றை நான் முன்பு பார்த்தது கூட இல்லை! குழம்பிப்போய் நின்ற என்னைப் பார்த்துப் ஆறுதலாகப் புன்னகைத்த மானேஜர், "கவலைப்படாதே, உனக்குப் பயிற்சி அளிப்பது எங்கள் கடமை" என்று சொல்லிவிட்டு, அந்தப் பகுதியிலிருக்கும் பொருட்களின் பட்டியலை என்னிடம் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கம் கொடுத்தார். அதன் பிறகே எனக்கு உயிர் வந்தது. பல அமெரிக்க வழக்கவார்த்தைகள் எனக்கு முதலில் புரியவே இல்லை. உதாரணத்திற்கு ஒரு முறை மானேஜர், "Can you bring a buggy?" என்றார். "buggy" என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அங்கே வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டபோதுதான் தெரிய வந்தது அது தள்ளு வண்டி(shopping cart) என்று! இப்படி தட்டுத் தடுமாறி வேலைகளையும் பேச்சு வழக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். K-mart மூடும் நேரம் இரவு 10 மணி. 9:45 மணிக்கு கடை மூட இன்னும் 15 நிமிடங்களே இருக்கிறதென்று ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும். ஒரு முறை என்னை அறிவிக்கச் சொன்னார்கள். நான் ஒலிபெருக்கியிலெல்லாம் பேசியதே இல்லை! எனக்கு பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது!! அறிவிப்பை ஒரு பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டு, பல முறை பேசிப்பார்த்துகொண்டு ஒரு வழியாக ஒலிபெருக்கியில் அறிவிப்பைச் செய்தேன்! "Your Attention K-mart shoppers! K-mart will be closed in about 15 minutes. Please bring your final purchases to the cash register. Thankyou for shopping at K-mart" - இதுதான் நான் முதல் முதலில் ஒலிபெருக்கியில் பெசியது. நான் பேசி முடித்த அடுத்த நிமிடம் மானேஜர் அங்கு வந்து என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

எனக்குப் பிடிக்காத வேலை காஷ் ரெஜிஸ்டர்(Cash Register). நீண்ட வரிசையாக நிற்கும் கஸ்டமர்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். எல்லாரும் அவசரத்தில் இருப்பார்கள். அப்போது விலை போடுவதில் ஏதாவது பிழை செய்துவிட்டால் அவ்வளவுதான்...தோலைந்தேன்! பிலு பிலு என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். கிருஸ்துமஸ், தாங்ஸ் கிவிங் போன்ற விடுமுறை காலங்களில் அலைமோதும் கூட்டங்களைப் பார்த்தாலே எனக்கு மூச்சு முட்டும். நல்ல வேலையாக என் பயத்தை புரிந்துகொண்ட மானேஜர், பெரும்பாலும் என்னை காஷ் ரெஜிஸ்டருக்கு அழைப்பதில்லை. ஷெல்பில் இருக்கும் பொருட்களை ஒழுங்குப் படுத்துவது, கஸ்டமர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துக்கொடுப்பது, தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்பவர்களுக்கு விளக்கம் தருவது போன்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். ஒரே ஒரு சிரமம் என்னவென்றால், எப்பொழுதும் நின்று கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும்.நடுவில் 10 நிமிடங்கள் இடைவேளை இருக்கும். அப்போதுதான் சிறிது நேரம் உட்காரமுடியும். இரவு 10 மணிக்கு K-mart மூடியவுடன் களைப்பாக வெளியே வரும்போது அக்காவும் அம்மாவும் காரில் காத்துக்கொண்டிருப்பார்கள். நான் பசியுடன் இருப்பேனென்று சாப்பாடும் கொண்டுவந்திருப்பார்கள்! நானாவது பரவாயில்லை பகுதி நேரமாக 5 மணி நேரங்கள் தான் வேலை செய்தேன். சிலர் முழு நேரமாக 10 மணி நேரங்கள் வேலை செய்தார்கள். ஒரு பெண்மனி காலை 5 மணி நேரம் K-mart இல் வேலை செய்துவிட்டு, அடுத்து 5 மணி நேரங்கள் ஒரு உணவகத்தில் வேலை செய்தார். ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டபோது, "என்னுடைய குழந்தைகளும் அவர்களுடைய பள்ளித் தோழர்களைப் போல நூறு டாலர் ஷ¥க்கள் அணிய வேண்டும். அதனால்தான் இந்த சிரமமெல்லாம்" என்று சொன்னார். இப்படி நலிவுற்றவர்கள், பொழுது போவதற்காக வேலைக்கு வரும் வசதியானவர்கள், பள்ளி, கல்லூரி விடுமுறைகளின் போது அடுத்த செமெஸ்டருக்கு பணம் சேமிக்கும் இளைஞர்கள் - இப்படி பலதரப்பட்டவர்கள் அங்கே வேலை செய்தார்கள். எந்தவித வேலையையும் தரம் தாழ்த்திப் பார்க்காத அமெரிக்கர்களின் நோக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நம்ம ஊரில் தான் எத்தனை பாகுபாடு! ஒரு முறை கடையில் ஒரு குழந்தை ஏதோ ஒரு கண்ணாடிப் பொருளை உடைத்துவிட, தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடித்துண்டுகளைக் நான் கூட்டி அள்ளிக்கொண்டிருந்ததை என் அம்மா பார்த்துவிட்டார். அவ்வளவுதான்! 'நான் என் பொண்ணை எப்படியெல்லாம் வளர்த்தேன், இப்படி தரையைக் கூட்டி அள்ளுவதைப் பார்க்கவா?' என்று புலம்பித் தள்ளிவிட்டார்கள்! மற்றோரு உறவினர், 'இன்ஜினீரிங்கெல்லாம் படிச்சிட்டு இங்க போய் எதுக்கு வெலை செய்யற?' என்று இளக்காரமாகக் கேட்டார். உண்மையிலேயே அங்கே ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வேலை செய்துகொண்டிருந்தேன் என்பது அவர்களுக்கு புரிய வாய்ப்பிருக்கவில்லை.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் சம்பள நாள்! என்னுடைய முதல் வாரச் சம்பளம் $115.00!!! அந்தக் காசோலையைக் கையில் வாங்கியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அந்தக் காசொலையின் நகலை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் நான் சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டு ஆசை ஆசையாக அடைகாத்து வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் அமெரிக்காவில் இருந்தார்கள். அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியப் பொருட்களையெல்லாம் வாங்கிக்கொடுத்தபோது ரொமபப் பெருமையாக இருந்தது. இரண்டு மாதங்கள் K-mart இல் வேலை செய்தேன். பிறகு ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலைக்கிடைத்ததால் K-mart வேலையை விட்டுவிட்டேன். அந்த மென்பொருள் கம்பெனியின் நேர்முகத்தேர்வின் போது, ஒரு மானேஜர் என்னை "கஸ்டமர் சர்வீசில் உங்களின் அனுபவத்தை எப்படி மதிப்பிடுவீர்கள் 1 to 10 என்ற அளவு கோளில்?" என்று கேட்டார். நான் சற்று யோசித்து "7" என்றேன். "எப்படிப்பட்ட அனுபவம் அது?" என்று மறுபடியும் அவர் கேட்டபோது, "நான் K-mart இல் இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். பல கஸ்டமர்களுடன் பழகும் வாய்ப்பும் அனுபவமும் கிடைத்தது. கஸ்டமர்களின் எதிர்பார்ப்புகள், நாம் அவர்களிடம் நடந்துகொள்ளும் முறை ஆகியவைகளை நன்றாகக் கற்றுக்கொண்டேன். நான் அணிந்திருந்த மேலங்கியில் உள்ள பாட்ஜில் 'Dedicated to Customer Service' என்று எழுதியிருந்தது. அதற்கு உண்மையாக நடந்துகொண்டேன்" என்று சொல்ல, அந்த மானேஜர் "K-mart இல் வேலை செய்தீர்களா? அப்படியென்றால் பத்துக்கு பத்து மதிப்பெண்களே கொடுக்கலாமே!" என்று சொன்னார். தினமும் கஸ்டமர்களிடம் பேசி அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதன்படி மென்பொருள் உருவாக்கும் அந்தக் கம்பெனியில் எனக்கு வேலைக் கிடைத்ததற்கு என்னுடைய K-mart அனுபவம் ஒரு முக்கிய காரணம் என்று நான் வலுவாக நம்புகிறேன். அதன் பிறகு மென்பொருள் பொறியியல் என் career ஆனது.

2001, 2002 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் தடாலடியாக கீழிறங்கியபோது, ஆறு மாதங்கள் நானும் என் கணவரும் வேலையில்லாமல் இருந்தோம். முதல் மூன்று மாதங்கள் நம்பிக்கையுடன் வேலைத்தேடினேன். கிடைக்கவேயில்லை. பிறகு சேமிப்பில் இருந்த பணமெல்லாம் வெகு விரைவாகக் கரையத் தொடங்கியதும், மறுபடியும் K-mart, Walmart, McDonalds போன்றவற்றில் விண்ணப்பிக்கலாம் என்றால் ஏனோ அப்போது மனம் கேட்கவில்லை. நம்ம ஊர் ரத்தம் நண்பர்களெல்லாம் இளக்காரமாக நினைப்பார்களோ என்று யோசிக்க வைத்தது. அப்போது என்னுடைய மாமா "உன்னுடைய நண்பர்கள் உன்னைத் தரம் தாழ்த்திப் பார்ப்பார்களென்றால், அவர்கள் உன் நண்பர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்" என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என்னை உலுக்கி நிமிர்ந்து உட்காரவைத்தன. இனி எதற்கும் கவலைப்படக்கூடாதென்று விண்ணப்பங்களை தயார் செய்துகொண்டிருக்கையில் மீண்டும் ஒரு மென்பொருள் கம்பெனியிலேயே வேலைக்கிடைத்தது.

என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த K-mart அலபாமாவில் உள்ளது. சென்ற மாதம் அலபாமா சென்றிருந்தபோது, வலைப்பதிவில் போட புகைப்படம் எடுக்கலாம் என்று K-mart பக்கம் கிளம்பியபோதுதான் அக்கா சொன்னாள், அந்த K-mart மூடப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டதென்று! வருத்தமாக இருந்தது.

Tuesday, August 09, 2005

அரங்கேற்ற அலம்பல் - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி...

பொருளாதாரத் தேவைக்காக நாட்டியம் கற்றுக்கொண்ட காலங்களெல்லாம் எப்போதோ போய்விட்டது. இப்போது சமூகத்தில் நாட்டியக் கலைஞர்களின் இடமும் வெகுவாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்காவில் அரங்கேற்றம் என்பது ஒரு நாட்டிய career இன் தொடக்கமாகக் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, ஒரு நீண்ட நாட்டியப் பயிற்சியின் முடிவாகவே கருதப்படுகிறது. அரங்கேற்றத்தை இலகாக வைத்துத்தான் பயிற்சியே மேற்கொள்ளப்படுகிறது. 'அப்பாடா! அரங்கேற்றம் முடிந்தாகிவிட்டது! இனிமே படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்' என்றுதான் இங்கே பல பெற்றோர்களும் பிள்ளைகளும் நினைக்கிறார்கள். அரங்கேற்றத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாட்டியம் ஆடும் பெண்கள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. Ann Marie Gaston என்பவர், தன்னுடைய "Temple to Theater" என்கிற புத்தகத்தில் இப்படி சொல்லுகிறார். "...to many of the families, whose childern attend Bharata Natyam classes in this country, the purpose of the ritual, and even the meaning of the word 'Arangetram' is a mystery. This has unfortunately led to the redefinition of the Arangetram as being 'the termination of the learning phase,' a phase that was part time to begin with."

தொடர்ந்து பரதநாட்டியத்தைக் கற்றுக்கொள்வதும், ஆடுவதும் அவரவர்கள் விருப்பம். எனக்கு புரியாத சிலவற்றை கேள்விகளாக இங்கே முன் வைக்கிறேன். பரதநாட்டியத்தை கலாசாரத்தோடு போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் அதை ஒரு நாட்டியக் கலை வடிவமாக மட்டுமே பார்ப்பதுசாத்தியமா? பரதநாட்டியத்தின் முலம் இந்தியக் கலாசாரத்தின் வேர்களுடன் தொடர்பில் இருக்கமுடியுமென்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் இதுவே பரத நாட்டியம் கற்றுக்கொள்வதற்கான ஒரே காரணமாக இருப்பது சரியா? எல்லாக் கலைவடிவங்களும், அதன் பூர்வீகத்துடன் நெருங்கியத் தொடர்புடையதாகத் தான் இருக்கும். அதனால் தான் கலையையும் கலாசாரத்தையும் எளிதில் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. பரதநாட்டியம் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக மட்டும் இருக்கக் கூடாது. அந்தக் கலாசாரத்தையே சவால்விடும் தன்மை மிக்கதாகவும் இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அது ஒரு பிரச்சாரம் போல் இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் தான் கிருஷ்ணலீலைகளையும், தசாவதாரங்களையும், வள்ளித் திருமணத்தையும் பார்த்துக்கொண்டிருப்பது? இவையெல்லாம் முடிந்து போன கலாசார வரலாறுகள். பரதநாட்டியம்நம் நாட்டுக் கலாசாரச் சின்னம் என்றால், ஏன் நிகழ் கால கலாசாரத்தை பரதநாட்டியங்கள் பிரதிபலிப்பதில்லை? சமீபத்தில் நான் பார்த்த ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஒரு திருக்குறளுக்கு உதாரணமாக அன்னைத் தெரேஸாவைப் பிரதிபலித்திருந்தார்கள். இது போல் புதிய முயற்சிகளைப் பார்பது மிக அபூர்வமாக இருக்கிறதே, ஏன்? ஒரு அரங்கேற்றத்தில் 10 நடனங்கள் இருக்கிறதென்றால், 5 நடனங்களில் கிருஷ்ணரைப்பற்றியும் முருகரைப்பற்றியும் சொல்லிவிட்டு மீதி 5 நடனங்களிலாவது சமூக அக்கறையுடைய செய்திகளைச் சொல்லலாம் இல்லையா?

முடிவாக நான் சொல்ல விரும்புவது, அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், அரங்கெற்றத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம், நம் குழந்தைகளை நம் கலாசாரத்துடன் தொடர்பில் வைத்துக்கொள்ள அரும்பாடுபடுகிறோம். அரங்கேற்றத்துடன் முடிந்துபோய்விடும் பரதநாட்டிய வகுப்புகள் இந்தப் பாடுபடலின் ஒரு பகுதி என்றால், அப்படியே இருக்கட்டும். ஆனால் அரங்கேற்றம் செய்துவிட்டால் மட்டும் சாதித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது. நம் மூதாதையர்களால் நமக்குக் கிடைத்த அந்த அரிய கலையை சமூகத்திற்கும், அடுத்த சந்ததியினருக்கும் ஒரு நல்ல வடிவில் எடுத்துச் செல்லுதல் தான் உண்மையான சாதனை. அதற்கான சிந்தனையைத் தூண்டிவிடும் நிகழ்ச்சியாக அரங்கேற்றங்கள் இருக்கவேண்டும்.

Friday, August 05, 2005

அரங்கேற்ற அலம்பல் - 2

சிலப்பதிகாரத்தில் மாதவியின் வரலாற்றுப் புகழ் பெற்ற அரங்கேற்றத்தில் தொடங்கி, இன்று graduation party போல் கொண்டாடப்படும் நவீன அரங்கேற்றங்கள் வரை கொஞ்சம் அலசிப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை!

சிலப்பதிகாரத்தில் 12 வயது மாதவியின் அரங்கேற்றத்தைப் பற்றி 'அரங்கேறு கதை' என்கிற தனி அத்தியாயத்தில் இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார். நான் படித்ததில்லை, கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதைய மேடை அலங்காரங்கள், உடை அலங்காரங்கள், நாட்டியம் தொடங்கும் முன் செய்யப்படும் சம்பிரதாயங்கள் பற்றியெல்லாம் அந்த அத்தியாயத்தில் விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறதாம். அதிலிருந்து புராண காலத்தில் ஒரு புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட நாட்டிய கலைஞரை முதன் முதலாக மன்னரின் முன் நாட்டியமாட வைத்து அவரது ஆசியைப் பெறுவது என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருந்தது என்பது தெரிய வருகிறது. இப்போது பரத நாட்டியம் என்று அழக்கப்படுகிற இந்த நாட்டியக் கலை அன்று 'தாசி ஆட்டம்' அல்லது 'சதிர்' என்று அழைக்கப்ப்ட்டது. அன்றைய தேவதாசி கலாசாரத்தில், ஒரு புதிய நாட்டியப் பெண்னின் முறையான அறிமுகத்திற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று, அவளது நாட்டியத் திறமையை மற்றவர்களுக்கு முன் நிரூபிப்பது, இரண்டாவது, நாட்டியத்தையே தொழிலாகக் கொண்டிருக்கும் வம்சம் என்பதால், மன்னர் மட்டும் அன்றி, பிற ஆதரவாளர்களையும் திரட்டும் பொருளாதார ரீதியான முயற்சியாகவும் அரங்கேற்றங்கள் இருந்தன.

பின் வந்த காலங்களில் 'தாசி ஆட்டம்' ஒடுக்கப்பட்டு பரதநாட்டியமாக உருப்பெற்று சமுதாய ரீதியாக பெரும் மாற்றத்தைக் கண்டது. அரங்கேற்றங்கள் கோவில்களில் இருந்து சபாக்களுக்கு இடம் மாறின. தாழ்ந்த சாதியைச் சார்ந்த தேவதாசிகள் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த நாட்டியத்தை, நடுத்தர வர்க்கத்தினர் - பெரும்பான்மையாக பிராமணர்கள் ஆடத் தொடங்கியிருந்தனர். அவர்கள் நாட்டியத் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல என்பதால், நாட்டியக் கலையின் மீதுள்ள பொருளாதார நோக்கம் நீங்கி, கலையார்வத்தின் அடிப்படையில் அரங்கேற்றங்கள் நடைபெற்றன. அரங்கேற்றங்கள் நாட்டியப் பெண், மற்றும் நாட்டிய ஆசிரியரின் தரத்தையும், திறமையயும் அளவிடும் ஒரு சந்தர்ப்பமாக இருந்தன. அரங்கேற்றதிற்கு வரும் பார்வையாளர்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள். புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்கள், நாட்டிய ஆசிரியர்கள், நாட்டிய ரசிகர்கள், விமர்சகர்கள் பார்வையாளர்களாக இருந்ததால், அவர்களுடைய கருத்துக்களும், விமர்சனங்களும் நாட்டியக் கலைஞர்களின் திறமையை சீரமைத்துக்கொள்ள பெரிதும் உதவியாக கருதப்பட்டது. கலையார்வம் மிக்க ஒரு சமூகத்தின் ஒருங்கிணைப்பாக அரங்கேற்றங்கள் இருந்தன.

காலங்கள் மாற மாற, பார்வையாளர்களும் மாறினார்கள். சமீப காலங்களாக அரங்கேற்றங்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சியாக மாறிவிட்டன. நண்பர்களும், உறவிணர்களும் மட்டுமே பார்வையாளர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் இந்தியக் கலாசாரத்தின் முக்கிய அம்சமாக பரதநாட்டியம் கருதப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் இந்தியப் பெற்றோர்கள், அதிவேகமாக தமது குழந்தைகளை அடித்துக்கொண்டு போகும் மேலை நாட்டுக் கலாசாரத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றும் கருவியாக பரதநாட்டியத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேநடத்தப்படும் அரங்கேற்றங்களில் 'எல்லாரும் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் பெண்ணை நமது கலாசாரத்தின்படிதான் வளர்த்திருக்கிறோம்' என்று மற்றவர்களிடம் பறைசாற்றிக்கொள்ளும் தோனியே தெரிகிறது. அரங்கேற்றங்கள் திருமணத்திற்கு இணையான ஆடம்பரத்துடன் நடத்தப்படுகின்றன. பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு இது ஒரு நல்ல வியாபாரம். சாதாரணமான இசை நிகழ்ச்சிகளை விட அரங்கேற்றங்களுக்கு அதிகமான ஊதியம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அது மட்டிமில்லாமல் பளபளக்கும் அழைப்பு அட்டைகள், இசைக் கலைஞர்களுக்கும், நாட்டியக் குருவுக்கும் பரிசுகள், வந்திருப்பவர்களுக்கெல்லாம் பரிசுகள் அடங்கிய பை (gift bag or doggy bag), மாலை சிற்றுண்டி, இரவு உணவு - இப்படி செலவுப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நடனங்களுக்கு நடுவே ஆன்மீக சொற்பொழிவு, முக்கிய பிரமுகர்களின் பேச்சு, மனதை உருக்கும் நன்றி உரை எல்லாம் உண்டு! நான் சென்றிருந்த ஒரு அரங்கேற்றத்தில் அரங்கத்தின் வாசலில் ஒரு மிகப் பெரிய ரங்கோலி கோலம் போட்டு அதை ரோஜாப்பூ இதழ்களால் நிரப்பியிருந்தார்கள். மற்றொரு அரங்கேற்றத்தில் நாட்டியப் பெண்ணின் ஆளுயரப் புகைப்படங்கள் வைத்திருந்தார்கள். சுலபமாக ஒரு அரங்கேற்றத்தின் செலவு $20000 இருக்கும்.

இதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். பணம் இருப்பவர்கள் தாம் நினைத்ததை செய்கிறார்கள். அதைப் பார்த்து புருவம் உயர்த்தமுடியுமே தவிர, அப்படி செய்வது தவறு என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. என்னுடைய கவலை என்னவென்றால், இத்தனை கலாட்டாவிற்கும் ஆடம்பரத்திற்கும் நடுவில் அந்த நாட்டியத்தின் கலையுணர்வு (artistic value) தொலைந்து போய்விடுகிறது. நாட்டியம் ஆடும் பெண்ணின் முக பாவத்தையும், அவள் பாதங்களின் லாவகத்தையும் கவனிக்காமல், நிகழ்ச்சிக்கு யார் வந்திருக்கிறார்கள், யார் வரவில்லை, ஏன் வரவில்லை, 5 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் சித்தி பெண், சென்ற வருடம் மாமா இறந்தபோது நேரில் சென்று விசாரிக்க முடியாத துக்கத்தை அத்தையிடம் அன்று விசாரிக்கும் உறவினர்கள். ஒரு நண்பர் சொன்னார், " நான் என் பெண்ணிடம் சொல்லிவிட்டேன், இந்த வருடம் அரங்கேற்றம் வேண்டுமா, கார் வேண்டுமா, graduation party வேண்டுமா என்று நீயே முடிவுசெய்துகொள் என்று" அப்படியென்று. - இப்படியாக தனது வரலாற்று புகழ் மிக்க பாரம்பரியத்தை இழந்து இன்று பரிதாபமான நிலையில் அரங்கேற்றங்கள் இருக்கின்றன.

அடுத்தப்பதிவில் இன்னும் தொடரும்...

Wednesday, August 03, 2005

அரங்கேற்ற அலம்பல் - 1

சென்ற மாதம் தான் என் அக்கா மகள்களின்(இரட்டையர்கள்) பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்து முடிந்தது. அக்காவுக்கு உதவியாக இருப்போமே என்று நான் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு அக்கா வீட்டில் போய் இறங்கிவிட்டேன். நான் அங்கே சென்ற சில நிமிடங்களிலேயே என்னை ஓரம் கட்டிய அக்காவின் கணவர், "உங்க அக்கா எல்லா வேலைகளையும் அவளே தான் செய்வேன்னு எல்லாத்தையும் அவ தலை மேல போட்டுக்கிட்டா. யார் மேலயும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. யாருக்கும் எந்த வேலையும் கொடுக்க மாட்டேங்கறா. நீதான் அவகிட்ட பேசி சில வேலைகளை பொறுப்பெடுத்துக்கனும்" என்று கவலையோடு கேட்டுக்கொண்டார். எனக்கு முக்கியத்துவம் கிடைத்த மகிழ்ச்சியிலும், இங்கே வாசிங்டனில் பல விழாக்களில் கிடைத்த அனுபவமும் கொடுத்த மமதையில் நான் அவரிடம், "கவலைப்படாதீங்க, மேடை அலங்காரத்தை என் பொறுப்பில் விட்டுடுங்க....கலைக்கிபுடறேன்!" என்றேன். அன்றிரவே பேனா பேப்பர் சகிதம் அக்காவுடன் உட்கார்ந்து மேடை அலங்கார ஐடியாக்களை அள்ளி விட்டேன். ஒவ்வொரு ஐடியாவையும் பொறுமையாக கேட்ட அக்கா, ஒவ்வொன்றையும் அது சரியா வராது...இது சரியா வராது என்று சொல்லிக் கொண்டு வர, என்னுடைய உற்சாகம் காற்று இறங்கிய பலூன் போல் ஆனது. மேடை அலங்காரத்தை மறுபடியும் அக்காவிடமே விட்டுவிட்டு, வெளியே கடைகளுக்குப் போய் வாங்க வேண்டிய பொருட்களையாவது வாங்கலாம், அதில் ஒன்றும் குழப்பம் இருக்காது என்று நினைத்தேன். அக்காவிடன் ஷாப்பிங் லிஸ்ட்டை நான் கேட்க, அரை மனதுடன் என்னிடம் கொடுத்தாள். பெரும்பாலான பொருட்கள் Walmart இல் கிடைக்கும் என்பதால் முதலில் அங்கே சென்றேன். லிஸ்ட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுக்கும் போதும், ஒவ்வொரு சந்தேகம் என் மனதில் உதித்தது. இந்த அளவு சரியா? இந்த நிறம் சரியா? இவ்வளவு விலை போட்டிருக்கே? அக்காவுக்கு இரண்டு முறை போன் செய்து என் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டேன். மூன்றாவது முறை போன் போட்டபோது, "இதுக்குதான் நானே எல்லாத்தையும் வாங்கிக்கறேன்னு சொன்னேன், கேட்டியா? இப்ப பார் நூறு தடவை போன் பன்னி என் வேலையை கெடுத்துகிட்டு இருக்க! நீ ஷாப்பிங் பன்னினது போதும், முதல்ல கிளம்பி வா. நான் அப்பறமா போய் வாங்கிக்கறேன்." என்று சத்தம் போட்டாள்! தொங்கிய முகத்துடன் வீட்டுக்கு வந்த என்னிடமிருந்து ஷாப்பிங் லிஸ்ட்டை அக்கா பிடுங்கி வைத்துக்கொண்டாள். அடுத்து என்ன பொறுப்பை எடுத்துகொள்வது என்று யோசித்தேன். ஒரு வாரத்துக்கு முன்பே பக்கவாத்திய இசைக்கலைஞர்கள் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டிருந்தனர். அவர்களை கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அன்று மாலை ஒத்திகை முடிந்து கலைப்புடன் வீட்டுக்கு வந்த இசைக்கலைஞர்களை அமரச்சொல்லிவிட்டு, சூடாக ஏலக்காய் டீ போட்டுக் கொண்டுபோய் அவர்களிடம் நீட்ட, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அவர்கள். அதில் ஒருவர் "உங்களுக்குத் தெரியாதா? நாங்க டீ குடிக்கமாட்டோம்" என்றார். மற்றொருவர் "எனக்கு சக்கரைப் போடாமல் காபி வேனும்" என்றார். மற்றொருவர் "எனக்கு ஏதாவது ஜூஸ் கொடுங்கோ. ஐஸ் வேண்டாம்"...மற்றொருவர் "நேத்து உங்க சிஸ்டர் அருமையா பாயாஸம் பன்னியிருந்தா. அது ஒரு கப் கொடுங்களேன்"....எனக்குத் தலை சுற்றியது. ஆபத் பாந்தவர் போல் அங்கே வந்த என் அக்கா, "தள்ளுடி" என்று என்னை ஒதுக்கிவிட்டு, சர சரவென அவர்கள் கேட்டதைத் தயாரித்துக் கொடுத்தாள். அரங்கேற்ற நாள் வரை இதே போல் தான் - நானோ, மற்றவர்களோ எந்த வேலையையும் அக்காவின் தலையீடு இல்லாமல் செய்து முடிக்க முடியாமல் செயலிழந்து நிற்பதும், பின் அக்கா தலையிலேயே அந்த வேலை மீண்டும் விழுவதுமாக இருந்தது.

அரங்கேற்ற நாளும் வந்தது. நான் அமெரிக்கா வந்தபோது அக்காவின் மகள்களுக்கு 8 வயது. அப்போதே பரதநாட்டியம் கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் ஊரில் நடக்கும் விழாக்களில் அவர்களுடைய பரதநாட்டிய நிகழ்ச்சி இருக்கிறதென்று சொல்லி அக்கா ஆசையாக கூட்டிக்கொண்டு போவாள். அக்கா மகள்கள் இருவரும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒரே ஒரு நிமிடம் வந்து நடராஜர் சிலைக்கு பூ போட்டுவிட்டு போய்விடுவார்கள். அந்த ஒரு நிமிடத்திற்குள் அக்கா பன்னும் அலம்பல் இருக்கே! அவள் முகத்தில் பெருமிதம் வழியும். போட்டோ எடுக்கவும் வீடியோ எடுக்கவும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பாள். பிறகு சில வருடங்கள் கழித்து அந்த ஒரு நிமிடம் ஐந்து நிமிடங்களாகி ஒரு சிறு பகுதிக்கு மட்டும் நடனமாட வருவார்கள். அப்போதெல்லாம், அக்கா பெண்கள் அரங்கேற்றம் வரை வருவார்கள் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அவர்கள் பல வார இறுதிகளைத் தொலைத்து, பொறுமை இழக்காமல் 10 வருடங்களாக சிரமப்பட்டு பரதநாட்டியம் கற்றுக்கொண்டதின் பலனை அரங்கேற்றதின் போது பார்க்கமுடிந்தது. ரொம்ப அழகாக ஆடினார்கள். முதல் நாட்டியத்தின் போதே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அக்காவின் முகத்தைப் பார்த்தேன். 8 வயதில் தன் மகள்களின் அந்த ஒரு நிமிட மேடைத் தோற்றத்தின் போது இருந்த அதே பெருமிதம் அன்றும் அவள் முகத்தில்.

ஊருக்குக் கிளம்பும் நாளன்று மீண்டும் என்னை ஓரம் கட்டிய அக்காவின் கணவர், "உங்கக்கா இந்த முறை நம்ம எல்லாரையும் டம்மி பன்னிட்டா. கவலைப்படாதே, அடுத்த வருஷம் பசங்களோட graduation party இருக்கு. அதுல அவளை டம்மி பன்னிட்டு நம்ம எல்லா ஏற்பாட்டையும் செய்து ஜமாய்ச்சிடலாம்" என்றார். நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். அக்கா இல்லாமல் அந்த வீட்டில் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது என்று நான் தான் பார்த்துவிட்டேனே.

அமெரிக்காவில் நடக்கும் அரங்கேற்றங்கள் பற்றி எனக்கு நிறைய கருத்துக்கள் இருக்கின்றன. அடுத்தப் பதிவில் அவற்றை எழுதுகிறேன்.