Thursday, January 08, 2009

பெரியண்ணன்

துளசியக்கா தன் அக்காவைப் பற்றி கிட்டத்தட்ட 15 பகுதிகள் எழுதியிருந்ததை படித்ததிலிருந்து என் அக்காவைப் பற்றியும் அண்ணன்களைப் பற்றியும் சுவையான நினைவுகளை எழுதவேண்டுமென்கிற ஆவல் எழுந்தது. முதலில் என் பெரியண்ணன் பற்றி.

பெரியண்ணன் என்னைவிட 15 வருடங்கள் மூத்தவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவர் வீட்டிலேயே இல்லை. அதனால் அவரது இளமைக் காலத்தைப் பற்றி பின்னால் மற்றவர்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும். எங்க குடும்பத்தோட பெருமை அவர் என்று சொல்லலாம். படிப்பில் புலியாம். பரீட்சை சமையங்களில் மொட்டை மாடியில் தன் வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுப்பாராம். பள்ளிக்கூடத்தில் நாடகம், நடனம் என்று எல்லாவற்றிலும் வெளுத்து வாங்குவாராம். 'Come September' ('அன்பே வா' என்ற தமிழ்ப் படம் இதனை தழுவி எடுக்கப்பட்டது) என்று அருபதுகளில் வெளிவந்த ஒரு புகழ் பெற்ற ஆங்கிலப்படம் இருக்கிறது. அதன் theme இசைக்கு அண்ணன் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்தியதாக பெருமையாக அம்மா சொல்லுவார். PUC இல் கடலூர் மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இந்தச் செய்தி வந்த மக்கிப் போன செய்தித்தாளை இன்னமும் என் அம்மா தன் பீரோவில் புடவைகளுக்கு அடியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

எனக்கு 3 அல்லது 4 வயதிருக்கும்போதே பெரியண்ணன் சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் படிக்கச் சென்றுவிட்டார். எப்போதாவது விடுமுறைக்கு சிதம்பரம் வருவார். கூடவே தனது zimbabwe, Iran நாட்டு நண்பர்களை அழைத்து வருவார். தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நான் வியப்பாக வேடிக்கைப் பார்த்தது நினைவிருக்கிறது . அண்ணன் விடுமுறைக்கு வருவதில் எனக்குப் பிடித்ததே அவர் சென்னையிலிருந்து வாங்கிக்கொண்டு வரும் இனிப்புகள்! இப்போது 'க்ருஷ்ணா ஸ்வீட்ஸ்' போல் அப்போதெல்லாம் 'இம்ப்பாலா'(Impala) என்று ஒரு இனிப்புக்கடை சென்னையில் மிகவும் பிரசித்தி. அந்தக் கடையிலிருந்து குலாப் ஜாமூன், பால்கோவா வாங்கிவருவார்.

நான் +1 படிக்கையில், பெரியண்ணன் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டு வருடங்கள் வேலை செய்தார். நான் அதே பொறியியல் கல்லூரியில் செரும் போது, அவர் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரிக்குச் சென்றுவிட்டார். நல்லவேளை! அண்ணனிடமிருந்து தப்பித்தோம் என்று நிம்மதியாக இருந்தால், அதில் மண் விழுந்தது!! முதல் வருடத்தில் முதன் முதலில் ஒரு தேர்வு எழுதி முடித்தேன். தேர்வுத் தாளை திருத்தி என் கையில் கொடுத்த ஆசிரியர், "ரவியின் தங்கை தானே நீங்கள்? இவ்வளவு கம்மியா மார்க் எடுத்திருக்கீங்களே?! அடுத்தமுறையாவது அவர் பெயரை காப்பாற்றுங்கள்" என்றார். எனக்கு ரொம்ப அவமானமாகப் போயிற்று :-(
மற்றொரு முறை ஒரு பயிற்சியில், ஒரு கணக்கை போடுவதற்கு calculator உபயோகித்த என்னைப் பார்த்து ஒரு ஆசிரியர், "ரவியின் தங்கைக்கு calculator தேவையா?" என்றார் நக்கலாக! என் அண்ணன் அந்தக் கல்லூரியில் இல்லாதபோதும், நான் அங்கிருந்த நான்கு வருடங்களும் 'ரவியின் தங்கை' என்கிற பாரத்தைச் சுமக்கவேண்டியிருந்தது. நான் அவருடைய தங்கை என்பதற்காக அதிகப்படியான மதிப்பெண் போன்ற ஸ்பெஷல் சலுகையெல்லாம் ஒன்றும் கிடைக்கவில்லை!! அண்ணனின் அறிவைப் பற்றி நான் எப்போதுமே பெருமை கொண்டிருந்தாலும், அவரைப் போலவே நானும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்புகள் என் மீது தினிக்கப்படும்போது எரிச்சலாக இருந்தது. என் பெற்றோர்கள் கூட என்னையோ, என் அக்காவையோ, சின்ன அண்ணனையோ பெரியண்ணனுடன் ஒருபோதும் ஒப்பிட்டுப் பெசியதில்லை!

கடைசியில் அண்ணனின் பெயரை காப்பாற்றாமலேயே கல்லூரிப் படிப்பை முடித்தேன் :-)

இந்த 'ரவி' எதிர்பார்ப்பு என்னோடு நிற்கவில்லை. எனக்குப் பின் 10 வருடங்களுக்குப் பிறகு அதே கல்லூரியில் சேர்ந்த பெரியண்ணனின் மகனும் நன்றாக மாட்டிக்கொண்டான். அவனுடைய தேர்வுத் தாள்களைப் பார்த்து, "புலிக்குப் பிறந்தது பூனையாகிவிட்டதே" என்று ஆசிரியர்கள் வருத்தப்பட்டார்களாம்!!

சிறு வயதிலிருந்தே நாங்கள் சேர்ந்து இல்லாததால் பெரியண்ணனுக்கும் எனக்கும்மிடையே இருந்த ஒரு நீண்ட இடைவெளி அண்ணனின் திருமணத்திற்கு பின் அண்ணியால் குறைந்தது. அடிக்கடி பாண்டிச்சேரி போய் அண்ணன் வீட்டில் தங்குவேன். அப்போது தான் அண்ணனிடம் பேசிப் பழக சந்தர்ப்பம் கிடைத்தது. அண்ணன் ஆங்கிலப் பாடல்கள் நிறைய கேட்பார். அவருடைய அபிமான குழு CSNY. Crosby, Stills, Nash, Young என்ற நான்கு இசைக்கலைஞர்களை கொண்ட குழு இது. எனக்கு அப்போது அந்த பாடல்களில் ஆங்கில உச்சரிப்புகள் புரியாது. எனக்காக அண்ணன் அந்த வார்த்தைகளை விளக்குவார். அர்த்தமும், பின்னனியும் புலப்படும் போது, அந்தப் பாடல்களைக் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இன்னும் அந்தப் பாடல்கள் என் நினைவில் நீங்காமல் இருக்கின்றன. "Thinking to myself today", "Our House", "Oh Cameal", Beatles இன் "I once had a girl", Eagles இன் 'Hotel California' - இவற்றையெல்லாம் என் அண்ணன்கள் கிட்டாரும் கையுமாக பலமுறை பாடிக்கேட்டிருக்கிறேன்.

மேலும், பொறியியல் கல்லூரிப் படிப்பின் போது நான் திண்டாடியபோதெல்லாம், கடினமான பாடங்களை அவர் எனக்கு பல முறை லாவகமாக, எளிதாக விளக்கியிருக்கிறார். கல்லூரி இறுதி ஆண்டில் என்னுடைய ப்ராஜக்ட் வொர்க்கை(project work) திறமையாக செய்து முடிக்க முழு உதவி செய்தார். அவர் மூளையில் கால் வாசியாவது எனக்கு இருக்கக்கூடாதா என்று நான் பல முறை ஏங்கியிருக்கிறேன். அண்ணன் தன் படிப்பறிவை எனக்குத் தந்து என்னை வளர்த்தார்... என்னால் அவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்? ஏதோ அவருக்குப் பிடித்த மட்டன் குழம்பு, மோர்குழம்பு, பருப்புத் துவையல் என்று அவர் வாசிங்டன் டிசி வரும்போதெல்லாம் இப்போது சமைத்துப் போடுகிறேன் :-)

அடுத்தப் பதிவில் சின்ன அண்ணன் பற்றி...

Monday, January 05, 2009

பிரகாஷ்ராஜும் இராதாமோகனும்

'அபியும் நானும்' ஒரு அற்புதமான படம் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஆனால், வழக்கமான வெட்டு குத்து, மசாலா படங்களுக்கிடையே 'அபியும் நானும்' கண்டிப்பாக மனதிற்கு இதமான, ஒரு மாறுபட்ட திரைப்படம். இரண்டரை மணி நேரம் நன்றாகப் பொழுது போயிற்று. விவேக், வடிவேலு போன்றவர்கள் இல்லாமலேயே பல இடங்களில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது.

இதில் பிரகாஷ்ராஜின் 'மூட்' (mood) இருக்கிறதே, அதுதான் அலாதி! அதை நாம் முதலில் உள்வாங்கிக்கொண்டு, அதனை பின் தொடர்ந்தால், சுவையாக, ரசிக்கும்படி இருக்கின்றது. தன் மகளுடனேயே வாழ்க்கையின் அத்தனை மணித்துளிகளையும் கழித்துவிடத் துடிக்கும் ஒரு முட்டாள்தனமான பாசமான தந்தை பிரகாஷ்ராஜ். அப்பாவின் அன்பு வளையித்துனுள்ளேயே வளரும் மகள், வேகமாக வளர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு தாவும் போது, அந்த வேகத்தையும் வலியையும் தாக்குபிடிக்க முடியாமல் திண்டாடும் தந்தையாக பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜைப் போலில்லாமல் அன்பும் கண்டிப்புமான ஒரு யதார்த்தமான அம்மாவாக ஐஸ்வர்யாவின் நடிப்பையும் பாராட்டவேண்டும். ரொம்பவும் பாச மழை பொழிந்து உருக்கமாக பேசுகின்ற வசனமெல்லாம் இல்லை. நகைச்சுவையோடு கூடிய யதார்த்தமான காட்சிகளால் பின்னப்பட்டிருக்கிறது 'அபியும் நானும்'.

தன் குழைந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு பிரகாஷ்ராஜ் இரவு பகலாக புத்தகங்களை வைத்து படிப்பது, நீண்ட தேர்முக வரிசையில் அப்பாக்களெல்லாம் மாங்கு மாங்கென்று படித்துக்கொண்டே நிற்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

பிச்சைகாரராக இருந்து, அபியின் கருணையால் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாறும் குமரவேல் திரை உலகுக்கு ஒரு நல்ல அறிமுகம். அவர் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தின் மூலம் அவர் வளர வாய்ப்புகள் அதிகம். அவருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை!

பிரகாஷ்ராஜின் சின்னச் சின்ன அதிர்ச்சிகளும், ஏமாற்றங்களும், சுதாரித்தல்களுமே இந்தப் படத்தின் கதை! மகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை ஒரு சர்தார்ஜி என்பதை பிரகாஷ்ராஜ் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் காட்சி நல்ல காமெடி. 'என் கனவில் கூட என் மாப்பிள்ளைக்கு டர்பன் கட்டிப் பார்த்ததில்லைடா' என்று நண்பனிடம் சொல்கிறார். இறுதியில் திருமணத்தின் போது அதே நண்பனிடம், 'என் பொண்ணு கல்யாணத்தில மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரி வைக்க ஆசைப்பட்டேன் தெரியுமா?' என்பார். பின்னனியில் பஞ்சாபி பாங்ரா இசை முழங்க அனைவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருப்பார்கள். உங்களால் சிரிக்காமல் இருக்கவே முடியாது :-)

அன்பான தந்தையான பிரகாஷ்ராஜ், மகளைப் பிரிந்து வேதனைப்படும் பிரகாஷ்ராஜ், இறுதியில் பக்குவமானவராக மாறும் பிரகாஷ்ராஜ் - இவர்களையெல்லாம் விட, மாப்பிள்ளை தன் வீட்டுக்கு வந்ததிலிருந்து சிடுசிடுப்பும் கடுகடுப்புமாக வளையவரும் பிரகாஷ்ராஜ் தான் என் மனதைக் கவர்ந்தார்!

சர்தார்ஜி மாப்பிள்ளைக்காக சப்பாத்தி, ராஜ்மா என்று வீட்டில் விருந்து அமர்க்களப்பட, 'எனக்கு இட்லி சாம்பார் வேணும்' என்று மனைவியிடம் அடம்பிடிப்பது...

எல்லாரும் மாப்பிள்ளையின் இண்டர்வியூவை தொலைகாட்சியில் பார்த்துகொண்டிருக்க, பொறாமை தாங்காமல், 'போன் எதுவும் வந்ததா?' என்றும், 'கொஞ்சம் டீ போடேன்' என்றும் சம்பந்தமேயில்லாமல் எல்லார் கவனத்தையும் கலைக்க முயல்வது...

துணிக்கடையில் இந்தி பாடல் ஒலிக்க, 'ஏன்? தமிழ் பாட்டு போடமாட்டீங்களா?' என்று கடைக்காரரிடம் சிடுசிடுப்பது...

மகளுக்கு மாப்பிள்ளை தேர்ந்தெடுத்த புடவை பிடித்துவிட, அந்தக் கடுப்பில் 'லுங்கி இருக்கா?' என்று சத்தமாக மீண்டும் கடைக்காரரிடம் கேட்பது...

இதெல்லாம் நல்ல ரசிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் :-)

மற்றொரு குறை எனக்குத் தோன்றியது என்னவென்றால், அபி தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை பிரகாஷ்ரஜுக்கும் பிடிக்கவேண்டும் என்பதற்காக, அவர் பிரதமந்திரியின் அபிமான ஆலோசகர் என்றும், ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தையே தத்தெடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஒரு உன்னதமானவர் என்றும் அவரை ஒரு தியாகி ரீதியில் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் அப்படியெல்லாம் இல்லாமல், சாதாரணமாக படித்து வேலையில் இருக்கும் ஒருவராக இருந்திருந்தால்?! அப்படியிருந்தாலும் பெண்ணுக்காக விட்டுக்கொடுத்து தானே ஆகவேண்டும்?

மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கலங்கி போய் உட்கார்ந்திருக்கிறார்கள் பிரகாஷ்ராஜும் மனைவி ஐஸ்வர்யாவும். அப்போது பிரகாஷ்ராஜ் சொல்லுவார் - "நீ என்னை காதலிச்சப்ப, எனக்காக உங்க வீட்டை எதிர்த்தப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்காக இத்தனை வருஷமா உன் அம்மா அப்பாகிட்ட பேசாம இருந்தப்ப ரொம்ப கர்வப்பட்டேன். ஆனால் இப்பதான் புரியுது...அவங்களும் என்னை மாதிரி தானே கலங்கிப்போய் தனிமரமா உட்கார்ந்திருப்பாங்க?! அபி கல்யாணத்துக்கு அவங்களையும் கூப்பிடலாமா?"

படத்தின் ஆரம்பக்காட்சிகளில் சிறு பிள்ளைத்தனமான, முட்டாள்தனமாக இருந்த இவர், மகளின் திருமணத்தின் போது ஒரு பண்பட்ட மனிதராக மாறுவதை இந்தக் காட்சியில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இராதாமோகன்.

ஒரு குழந்தை வளர்ந்து பெரியவளாகி காதலித்து திருமணம் செய்துகொள்வதை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம். ஒரு தந்தை வளர்ந்து படிப்படியாக பக்குவமடைவதை இந்தப் படத்தில் தான் நான் பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், மொழி, இப்பொழுது அபியும் நானும் இப்படி குடும்பத்தோடு சென்று பார்க்ககூடிய நல்ல திரைப் படங்களை உருவாக்கும் இயக்குனர் இராதாமோகனுக்கு என் பாராட்டுக்கள்.