Monday, April 19, 2010

என் பிரசவ அறையில்


எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப் பதியவைக்கும் ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டுமே!

டிசம்பர் 7 ஆம் தேதி (2009) எனது பிரசவ நாளாக குறிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒரு வாரம் முன்பே எனது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தது. எனவே எனது மகப்பேறு மருத்துவர், "இனி நீங்கள் கார் ஓட்டக்கூடாது. வீட்டில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்" என்றார். அன்றே அலுவலகத்தில் மேலாளரிடம் 3 மாதங்கள் மகப்பேறு விடுமுறைக்கு எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அப்பாடா! ஒரு வாரம் வீட்டில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்...நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும்...நல்ல திரைப்படங்கள் பார்க்கவேண்டும், குழந்தைக்கான அந்தச் சின்ன அறையை ஒழுங்குபடுத்தி, நன்றாக அலங்கரிக்க வேண்டும்,என்று மனதிற்குள் பல திட்டங்கள் உருவானது.

ஆனால் நான் நினைத்ததற்கு எதிர்மாறாக இருந்தது அந்த ஒரு வாரம்! புத்தகத்தில் கவனம் பதியவில்லை...தொலைக்காட்சி பார்க்க பிடிக்கவில்லை...படுத்தால் தூக்கம் வரவில்லை...மனம் இருப்புக்கொள்ளாமல் மிக அழுத்தமாக இருந்தது. கெட்ட நினைவுகள் வந்து அலைக்கழித்தன. எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்று ஒருவித திகிலான எதிர்பார்ப்புடனே நாட்கள் சென்றன. பிரசவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு எனக்கு உதவுவதற்காக அக்கா வந்தாள். அதற்குப் பிறகு தான் சற்று நிம்மதியாக இருந்தது. பிரசவதிற்கு முன் தினம் இரவு ஒரு இந்திய உணவகத்திற்கு நான், கணவர், அக்கா மூவரும் சென்றோம். மறுநாள் குழந்தை எப்போது பிறக்கப்போகிறதோ தெரியவில்லை. குழந்தைப் பிறக்கும் வரை சாப்பாடு கொடுக்கமாட்டார்களாம்! அதனால் அடுத்த நாளுக்கும் சேர்த்து நன்றாக வளைத்துக்கட்டினேன்! அன்று வாசிங்டன் டிசியில் சறுக்குப்பணி வேறு. என் கையைப் பிடித்து சாக்கிரதையாக அழைத்துவந்த அக்கா, "இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்" என்று கடிந்துகொண்டாள்.

பிரசவ நாளும் வந்தது...டிசம்பர் 7, 2009!!!

காலை 7 மணி...
பிரசவ நாள் வரை எனக்கு வலி ஏற்படவில்லை என்பதால் அன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரச்சொல்லிட்டார் மருத்துவர். காலை ஏழு மணிக்கு நான், கணவர், அக்கா மூவரும் மருத்துவமணைக்குச் சென்றோம். எனக்கான பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அது ஒரு விடுதி அறை போல் அழகாக வசதியாக இருந்தது. இங்கேயா குழந்தைப் பிறக்கப் போகிறது? அதற்கான அறிகுறியே இல்லையே? என்று சந்தேகத்துடன் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது என் கையில் ஒரு அங்கியைக் கொடுத்த அதனை போட்டுக்கொள்ளச் சொன்னாள் தாதிப் பெண். குளியலறைக்குச் சென்று என் உடைகளை மாற்றி, அந்த மருத்துவமனை அங்கியை அனிந்துகொண்டு வெளியே வந்தேன். என்ன ஆச்சரியம்!! அதற்குள் அந்த விடுதி அறை பிரசவ அறையாக மாறியிருந்தது! அந்த சொகுசுக் கட்டிலும் படுக்கையும் மடக்கி கீழிறக்கப்பட்டு, மருத்துமனைக் கட்டில் அங்கே இருந்தது. பக்கவாட்டில் ஏகப்பட்ட இயந்திரங்கள், ஒயர்கள் எல்லாம் இருந்தன. எனக்கு லேசாக வயிற்றைக் கலக்கியது. கட்டிலில் சென்று படுத்தேன். அங்கிருக்கும் சோபாவில் கணவரும் அக்காவும் உட்கார்ந்து என்னை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு அன்று உதவிய தாதிப் பெண்ணின் பெயர் "டெபி"(Debbie). அவளை என் வாழ்க்கையில் மறக்கவேமுடியாது. சிரித்த முகம், அன்பான பேச்சு. கலவரமாகிப் போயிருந்த எனக்கு "எல்லாம் நன்றாக நடக்கும், உனக்கு உதவ நான் கூடவே இருக்கிறேன்" என்று சொல்லி தைரியமூட்டினாள். அவளுக்கு ஐந்து குழந்தைகளாம்!

மூன்று வகையான மானிட்டர்கள் என் உடலில் பொருத்தப்பட்டன. ஒன்று எனது இரத்த அழுத்தத்தை 15 நிமிடங்களுக்கொருமுறை அளவிடும் மானிட்டர். இரண்டாவது குழந்தையின் இதயத்துடிப்பைக் காட்டும் மானிட்டர். மூன்றாவது எனது கருப்பையின் அதிர்வுகளை (uterine contractions) வரைபடமாகக் (graph) காட்டும் மானிட்டர். அந்த இரத்த அழுத்த மானிட்டர் தானாகவே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை என் கையைப் பிடித்து இறுக்கி இரத்த அழுத்தத்தை கணக்கிட்டது. ஒவ்வொரு முறையும் இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. தாதிப் பெண் டெபி யின் முகத்தில் கவலைத் தோன்றியது. "மனதை இலேசாக வைத்துக்கொள். உனது இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது குழந்தைக்கு நல்லதல்ல" என்றாள்.

சிரமப்பட்டு என்னை அசுவாசப்படுத்திக்கொண்டேன். சில நிமிடங்கள் அறையில் அமைதி நிலவியது. குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருந்தது. எனது இரத்த அழுத்தம் சற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

காலை 9 மணி...

9 மணியளவில் எனக்கு IV மூலம் Pitocin என்கிற வலி ஏற்படுத்தும் மருந்து செலுத்தப்பட்டது. வலி ஏற்பட ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். நான் கண்களை மூடிப் படுத்திருந்தேன். சில நிமிடங்களில் அப்படியே தூங்கியும் போனேன்.

காலை 11 மணி

எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. சட்டென்று விழித்துக்கொண்டேன். இலேசாக இடுப்பு வலித்தது. வயிற்றினுள் யாரோ அழுத்துவது போல் உணர்ந்தேன். இதுதான் பிரசவ வலியோ?! மணியடித்ததும் டெபி வந்தாள். நிலமையைச் சொன்னேன். என்னை பரிசோதித்து விட்டு, மகிழ்ச்சியுடன், "கருப்பையின் வாயில் 5cm விரிவடைந்திருக்கிறது. பாதி தூரம் கடந்துவிட்டாய்!" என்றாள். நான் பரபரப்பானேன். கருப்பையின் வாயில் 10cm வரை விரிவடைந்த பின்னரே குழந்தை வெளியே வரமுடியும் என்று மருத்துவர் முன்பே விளக்கியிருக்கிறார்.

இன்னும் சில நிமிடங்கள் சென்றபின், என் பனிக்குடம் உடைந்து. ஈரமாக உணர்ந்தேன். மீண்டும் டெபி என்னை பரிசோதித்துவிட்டு "6cm" என்று சொல்லிவிட்டுப் போனாள். பனிக்குடம் உடையும் போது எப்படி இருக்கும் என்றெல்லாம் நான் படித்தும், என் தோழிகளிடம் கேட்டும் வைத்திருந்தேன். நான் அலுவலகத்தில் இருக்கும் போது பனிக்குடனம் உடையாமல் இருக்கவேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் பிரார்தித்து வந்தேன். நல்லவேளை மருத்துவமனைப் படுக்கையில் அது நடந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி!!

மதியம் 1 மணி...

இந்தச் சமையத்தில் வலி அதிகரித்தது. பிரசவ வலி எப்படி இருக்குமென்று நிறைய படித்தேன். தோழிகளின் அனுபவத்தையும் கேட்டிருக்கிறேன். அனால் அதை நானே உணரும் போது அது எங்குமே படிக்காத, யாருமே இது வரை விவரிக்காத ஒரு வித வலியாக இருந்தது!! என்னால் கூட அதனை சரியான வார்த்தைகளைக்கொண்டு விவரிக்க முடியாது. அதை அனுபவித்தால் தான் தெரியும். இருந்தாலும், விவரிக்க முயற்சிக்கிறேன். இடுப்பையும் வயிற்றையும் சுற்றி உள்ளிருந்து யாரோ அழுத்துவது போல் இருந்தது. அந்த அழுத்தம் சின்னதாகத் தொடங்கி பின் அதிகரித்தது. ஒரு உச்சத்திற்கு வந்தபின் மீண்டும் குறைந்தது. சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் தொடங்கி, அதிகரித்து, குறைந்தது. இப்படி ஒரு அலை போல் வந்து வந்து போனது. அந்த அழுத்ததின் அளவிற்குத் தகுந்தார்ப்போல் வலியும் லேசாகத் தொடங்கி, அதிகரித்து, ஒரு உச்சத்திற்குப் போய், பின் குறைந்தது. இப்படி அலை அலையாக பிரசவ வலி தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

டெபி என்னிடம் "Epidural எடுத்துக்கொள்கிறாயா?" என்று கேட்டாள். Epidural என்கிற அற்புதத்தைப் பற்றி மருத்துவர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அது ஒரு வலி நிவாரண மருந்து. அமெரிக்காவில் பெரும்பாலான பெண்கள் பிரசவத்தின் போது இந்த மருந்தை எடுத்துக்கொள்வார்கள். சிலர் வலி நிவாரணம் இல்லாமலேயே வலியுடன் குழந்தைப் பெற்றுக்கொள்வார்களாம்.

நான் டெபியிடம், "Epidural இப்போது வேண்டாம். என்னால் எவ்வளவு நேரம் வலியை பொறுத்துக்கொள்ள முடிகிறது என்று பார்க்கிறேன்". என்றேன். வலி அலை அலையாக வந்து போய்க்கொண்டிருந்தது. அக்கா தன் கையைக் கொடுத்தாள். பிடித்து இறுக்கிக்கொண்டேன். அவளுக்கு கை வலிக்கத் தொடங்கியபோது, கணவர் கைகொடுத்தார். ஒரு கட்டத்தில் எனக்கு மூச்சுத் திணறியது. கண்களில் கண்ணீர் வந்தது. வலி பொறுக்கவில்லை. "Epidural கொடுத்துவிடுங்கள்" என்றேன். டெபி சட்டென்று பேஜரின் மூலம் anesthesiologist ஐ அழைத்தாள். அவர் வந்து எனது முதுகுத்தண்டின் அருகில் ஊசி மூலம் அந்த மருந்தைப் போடுவதற்கு 15 நிமிடங்கள் ஆனது. அந்த 15 நிமிடங்களும் வலியால் துடித்துக்கொண்டிருந்த என்னை டெபி அணைத்துப் பிடித்துக்கொண்டாள். என் முதுகை வருடிக்கொண்டே என்னுடன் பேசிக்கொண்டிருன்தாள். மருந்தை செலித்திய பின் என்னை சாய்வாகப் படுக்கையில் படுக்கவைத்தாள். என்ன ஆச்சரியம்!! ஐந்தே நிமிடத்தில் என்னை வாட்டியெடுத்த வலி கானாமல் போய்விட்டது. ஆனால் அந்த அழுத்தம் தொடர்ச்சியாக அலை அலையாக வந்தபடி இருந்தது. கர்ப்பப் பையிலிருந்து குழந்தையை மெதுவாக வெளியே தள்ளுவதற்கான ஏற்பாடு தான் அந்த அழுத்தமும் அதிர்வும்.

மதியம் 4 மணி...

மீண்டும் என்னை பரிசோதித்த டெபி, "9cm ஆகிவிட்டது! இனிமேல் தான் நமக்கு நிறைய வேலை இருக்கிறது. குழந்தையை வெளியே தள்ளத் தயாரா?" என்றாள். அந்த நிமிடம் வரை எனக்கு சுகப் பிரசவம் ஆகும் என நம்பிக்கை இல்லை. கடைசியில் சிசேரியனில் தான் முடியும் என்று அதற்கும் தயாராக இருந்தேன். நான் பல மாதங்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் மகப்பேற்றைப் பற்றிப் படித்திருந்தவையெல்லாம், என் பிரசவ அறையில் எனக்கு மறந்துவிட்டிருந்தது...ஏழு பவுண்டு எடையுள்ள ஒரு குழந்தையை என் உடலில் இருந்து வெளியே கொண்டுவர நான் எந்த விதத்திலும் தயாராக இல்லை, அனால் டெபி யிடம், "நான் தயார்" என்றேன். டெபி மீண்டும், "Lamaze வகுப்பில் நீ கற்றுக்கொண்ட மூச்சுப் பயிற்சி நினைவிருக்கிறதா?" என்று கேட்டாள். என் மூலை மரத்துப்போயிருந்தது! "நினைவில்லை" என்று பதிலளித்தேன்.

டெபி எனக்கு அந்த மூச்சுப் பயிற்சியை நினைவூட்டினாள். "ஒரு அலை வரும்வரை காத்திரு. பின் நன்றாக மூச்சை உள்ளிழுத்துக்கொள். நான் 1, 2, 3 என்று எண்ணுவேன். 10 சொல்லும் வரை நன்றாக கடுமையாக முக்கி குழந்தையை வெளியே தள்ளு. 10 சொன்னபின் மூச்சை விடு. அடுத்த அலை வரும்போது மீண்டும் இது போல் செய்யவேண்டும்".

மாலை 5 மணி

அதுவரை என் பிரசவ அறைக்கு டெபி மட்டுமே வந்து போய்க்கொண்டிருந்தாள். குழந்தை வெளியே வரும் நேரம் வந்துவிட்டதால், என்னுடைய மகப்பேரு மருத்துவரும், இன்னும் இரண்டு தாதிப் பெண்களும் அறைக்குள் வந்தனர். என் பிரசவ அறை கலை கட்டியது!

முதல் சில நிமிடங்கள் எனக்குச் சரியாக மூச்சை இழுத்து குழந்தையைத் தள்ளத் தெரியவில்லை. டெபி பொறுமை இழக்காமல் மீண்டும் எனக்குப் பயிற்சி அளித்தாள். பின்னர் எனக்கே அந்த உத்தி பிடிபட்டது. கணவர் என் பக்கவாட்டில் நின்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். டெபி, மருத்துவர், மற்ற இரண்டு தாதிப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து "மூச்சை பிடி...தள்ளு...முச்சை விடு...ம்ம்ம்ம் அடுத்து மூச்சை பிடி..." என்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தனர். எனக்கு வியர்த்து ஊத்தியது. தொண்டை வரண்டது. "தண்ணீர் வேண்டும்" என்றேன். ஒரு சிறிய ஐஸ் கட்டியை வாயில் வைத்தாள் டெபி.

30 நிமிடங்கள் சென்றன. எனக்கு உடலில் உள்ள சத்தெல்லாம் இறங்கிவிட்டது. குழந்தை நன்றாகக் கீழே இறங்கி இருந்தது தெரிந்த து, ஏனென்றால் என் மேல் வயிற்றைத் தொட்டுப் பார்த்த மருத்துவர், அந்த இடம் காலியாக இருப்பதை உணர்ந்து, "குழந்தை நன்றாகக் கீழே இறங்கியிரு க்கிறது. இன்னும் கடுமையாக தள்ளுவதற்கு நீ முயற்சி செய்யவேண்டும். உனக்கு சிசேரியன் செய்ய நான் விரும்பவில்லை" என்றார்.

மாலை மணி 5:30...

மீண்டும் 15 நிமிடங்கள் கடுமையான முயற்சி தொடர்ந்தது. இந்தக் குழந்தை இப்போதைக்கு வெளியே வராது. இது ஒரு மிக நீண்ட நாளாக இருக்கப்போகிறது என்று நான் நொந்து போய் மற்றவர்கள் முகத்தைப் பார்த்தபோது, எல்லோரும் சட்டென்று பரபரப்பானார்கள்! கணவரின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஆர்வம் கலந்த கலவரம் தெரிந்தது. இடுப்புக்கு கீழ் எனக்கு மரத்துவிட்டதால் எனக்கு என்ன நடக்கிறதென்று உணரமுடியவில்லை. "என்ன ஆச்சு?" என்று கணவரிடம் கேட்டேன். "குழந்தையின் தலை தெரிகிறது" என்றார் அவர். "இன்னும் 2 அல்லது 3 முறை கடுமையாகத் தள்ளு. குழந்தை வெளியே வந்துவிடும்" என்றார் மருத்துவர்.

அவ்வளவுதான்! எனக்குள் என்னப் புகுந்தது என்று தெரியாது. உடலில் மிஞ்சியிருந்த அத்தனை சத்தையும் கூட்டி வெறி வந்தது போல் மூச்சைப் பிடித்து தள்ளினேன். மாலை 5:49 க்கு என் மகள் என் கருவறையிலிருந்து என் பிரசவ அறைக்கு வந்தாள்!!! அவள் வெளியே வந்தவுடன் என்னால் அவளைப் பார்க்க முடியவில்லை. தாதிப் பெண்கள் அவளை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அசதியால் சொருகிய என் கண்களின் ஓரத்தில் அவளது பாதங்கள் தான் தென்பட்டன!

"புத்தம் புதிய ரத்த ரோஜா...பூமி தொடா பிள்ளையின் பாதம்" என்கிற பாடல் வரிகள் என் மனதிற்குள் ஓடியது!

நானும் என் மகளும் இன்னும் சில நிமிடங்களில் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறோம்! அந்தச் சந்திப்பைப் பற்றி அடுத்தப் பதிவில்...