Sunday, May 13, 2012

தாய்மை எனப்படுவது யாதெனில்...நேற்று மே மாதம் 13 ஆம் தெதி...தாய்மையைக் கொண்டாடும் "அன்னையர் தினம்"! அனைத்து தாய்மார்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

என் மகள் புகழ்மதி பிறந்தபின், இரண்டு அன்னையர் தினங்களை நான் கடந்துவிட்டேன்.  பரிசு பொருட்கள், பூக்கள், வாழ்த்துக்கள், விருந்து என்று கொண்டாடியாகிவிட்டது.   தாய்மை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான் என்றாலும், மனதின் ஓரத்தில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது.   நான் ஒரு சராசரித் தாய்...பெரிதாக சவால்கள் எதுவும் எனக்கு இல்லை.  தாய்மையின் அத்தனை சிறப்பையும், மகிழ்ச்சியையும் ஒவ்வொரு நாளும் இரசித்து, அனுபவித்து வருகிறேன், எனக்கு நேரமும், வாய்ப்பும் இருப்பதனால். ஆனால்...

நான் புகழ்மதியை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லும் அதே நேரம், எங்கோ ஒரு தாய் தன் குழந்தைக்கு அடுத்த வேளை உணவு தேடி அலைகிறாள்.  நான் புகழ்மதியை அணைத்துக்கொண்டு பஞ்சு மெத்தையில் படுத்திருக்கையில், எங்கோ ஒரு தாய் ஒரு இடிந்த சுவற்றிற்குப் பின்னால் தன் குழந்தையை பாதுகாப்பாக ஒரு இரவேனும் தூங்கவைக்க முயல்கிறாள்.

துன்பகரமான சூழல்களில், ஆபத்தான சூழல்களில், கடும் ஏழ்மையில் கூட தம் குழந்தைகளுக்கு ஒரு விடியலைக் காட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்மார்களை இந்த அன்னையர் தினத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.

புகழ்மதி வயிற்றில் இருந்தபோது,  நான் இணையத்தில் படித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது.  CARE என்கிற ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த Melanie Brooks என்கிற பெண்மணி, 2009 வருடம் அன்னையர் தினத்தன்று, இலங்கையில் வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த தாய்மார்களுடன் அன்று முழுக்க இருந்து பேசிக்கொண்டிருந்தாராம்.  அந்தத் தாய்மார்கள் பல மாதங்களாக கால் நடையாக குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக ஓடி ஒளிந்து தப்பித்து கடைசியில் அந்த அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தவர்கள்.  அவர்களுடைய இலக்கு ஒன்று தான்.  தம் குழந்தைகளுக்கு அடுத்த வேளை சாப்பாடும் பாதுகாப்பும்.  அந்த சுட்டெரிக்கும் வெயிலில், தன் 6 மாதக் குழந்தைக்கு விசிறிக்கொண்டிருந்த ஒரு தாய், கழுத்தளவு தண்ணீரில் அந்தக் குழந்தையை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு, போர் வளாகத்தில் இருந்து தப்பி ஓடி வந்தவராம்! என்னால் அந்த சூழ்நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

அந்த ஈழத் தாய்மார்களை நான் நேரில் பார்த்ததில்லை.  அவர்களுடைய துயரத்தை நான் வேறு எதனுடனும் ஒப்பிட விரும்பவில்லை.  ஆனால் அமெரிக்காவில் கத்ரீனா என்கிற சூறாவளி ஒரு ஊரையே அழித்த போது, வீடு வாசல் இழந்தவர்களுக்கு உதவ, ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஒரு முகாமில் நான் சில வாரங்கள் வேலை செய்தேன்.  அப்போது அங்கே அந்த தொண்டு நிறுவனம் வழங்கும் உதவிக் காசோலையையும் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு சுட்டெரிக்கும் வெயிலில் கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கால் கடுக்க நிற்கும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன்.

இவர்கள் மட்டுமன்றி, உலகத்தில் வாழும் அத்தனை விதவைத் தாய்மார்கள், விவாகரத்தான "single mothers" என்று அழைக்கப்படும் ஒற்றைத் தாய்மார்கள், தம் வீட்டிலேயே வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தாய்மார்கள்...இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையில் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கை இருப்பதற்கே அவர்களின் குழந்தைகள் தான் காரணமாக இருப்பார்கள்.

ஓரு ஆங்கிலக் கவிதை என் மனதைப் பிழிந்து போட்டது...

“my mother, poor fish,
wanting to be happy, beaten two or three times a
week, telling me to be happy: "Henry, smile!
why don't you ever smile?"

and then she would smile, to show me how, and it was the
saddest smile I ever saw”

― Charles Bukowskiஎன்னுடன் பணி புரியும் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் என்னிடம் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி மனம் விட்டு பேசிக்கொண்டிருந்த போது, தனது 10 ஆவது வயதில் ஒரு நாள் அவளுடைய தந்தை ஏதோ ஒரு விவாதத்தின் போது, கொதிக்கும் நீரை தன் தாய் மீது கொட்டியதாகச் சொன்னாள்.  அந்தத் தாய் அத்தனை வேதனையிலும், தன் மகள்களை அந்த மனிதாபிமானமற்ற மனிதரிடம் விட்டு செல்லக்கூடாதென்று, அவர்களையும் இழுத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடினாராம்! 

நான் அமெரிக்கா வந்த புதிதில் K-Mart என்கிற அங்காடியில் பகுதி நேர வேலை செய்தேன். அங்கே காலை 8 மணியிலிருந்து 4 மணி வரை வேலை செய்துவிட்டு, அதன் பின் இரவு 10 மணி வரை மற்றொரு உணவகத்தில் வேலை செய்த ஒரு பெண்மணியிடன், "ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்?" என்று கேட்டபோது, "என் மகனும் அவனது பள்ளித் தோழர்கள் போலவே $100 ஷூக்கள் எப்போது அணிவது?" என்று கேட்டார். அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை.  அதனால் அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது.  இப்பொழுது தான் புரிகிறது, அன்று தாய்மையை அதன் மிகச் சிறந்த வடிவில் நான் பார்த்திருக்கிறேன் என்று!

இந்தச் சூழலுக்கு மிகப் பொருத்தமான ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது...

கள்ளிக் காட்டில் பிறந்த தாயே
என்னக் கல்லுடைத்து வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைத்த தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே


சும்மாவா தூக்கி தேசிய விருது கொடுத்தார்கள் இந்த வரிகளை எழுதிய வைரமுத்துவுக்கு?!

சரி!  தாய்மையின் சிறப்பைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது.  இப்பொழுது ஒரு சிறிய போட்டி, இந்த வலைப்பதிவிற்கு வந்தவர்களுக்கு!

தாய்மை எனப்படுவது யாதெனில்...

என்கிற வாக்கியத்தை அழகான அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிறைவு செய்யவும்.  அதிகபட்சம் நான்கு வார்த்தைகள் உபயோகிக்கலாம்.  முயற்சி செய்து பாருங்கள்.  தாய்மை என்பது பற்றி மற்றவர்களின் வரையறை என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்!
12 comments:

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்துகளும் அன்னையர் தின வாழ்த்துகளும் சொல்லிக் கொள்கிறேன் தாரா.

நல்வரவு.

Kumaran said...

தாய்மை எனப்படுவது யாதெனில்
தூய்மை அன்பின் பொருள்.

குமரன்

தாரா said...

நன்றி துளசி அக்கா! நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பெயரை என் பதிவில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

தாரா.

தாரா said...

குமரன் - அருமையான வாக்கியம்! போட்டியின் முதல் பங்கேற்பாளர் நீங்கள். மிக்க நன்றி.

தாரா.

ஹுஸைனம்மா said...

நட்சத்திர வாழ்த்துகள்!!

2004 முதல் பதிவுலகில் இருக்கீங்க என்பது... பிரமிக்க வைக்குது!! இப்போத்தான் முதன்முதலில் உங்க பதிவுகள்பக்கம் வருகிறேன்.

//மனதின் ஓரத்தில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது//
எனக்கும்!!

கோவி.கண்ணன் said...

அன்னையர் நாள் நல்வாழ்த்துகள்.

தாய்மை எனப்படுவது யாதெனில்....
அன்னைத் தெரசாவின் உருவத்தைத் தவிர்த்து வேறொன்றை எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நான் ஒரு கிறித்துவன் அல்ல.

தாரா said...

ஹூஸைனம்மா - வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்கள் பதிவுகளையும் நான் சென்ற வாரம் தான் பார்த்தேன். மிக சுவாரசியமான பதிவுகள். நீங்கள் கடைசி நாள் எழுதிய "நட்சத்திர டிப்ஸ்" உதவியாக இருந்தது.

தாரா

தாரா said...

கோவி.கண்ணன் - அன்னைத் தெரசா உலகத்திற்கே தாயாக இருந்தவர். தெய்வத்திற்கு சமமானவர். நன்றி.

தாரா.

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திரத்திற்கு நட்சத்திர வாழ்த்துகள்.
அருமையான எழுத்து.
உங்கள் பதிவை முதல் தடவையாகப் படிக்கிறேன்.மனதை அள்ளிவிட்டது.

தாய்மை எனப்படுவது யாதெனில்
அண்மையில் இருக்கும் கடவுள்.

ramachandranusha(உஷா) said...

தாய்மை என்பது பிற உயிருக்கு இரங்கும் உணர்வு. இது ஆணுக்கு உண்டு. அவனும்
தாயுமானவன் இல்லையா?

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறோம் இல்லையா
:-)

Diva said...

தாய்மை என்பது யாதெனில்..தியாகத்தின், தன்னலமின்மையின் மறு பொருள்.

~திவா

Balaji-paari said...

தாய்மை என்பது யாதெனில்... தந்தைமையின் ஊற்றுக்கண்.