Tuesday, June 27, 2017

மாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்




எழுத்தாளர் பெருமாள் முருகனை எழுதுலகத்திலிருந்தே விலகிக்கொள்கிறேன் என்றும், என் படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன் என்றும் மனம் நொந்து சொல்ல வைக்கும் அளவு சர்ச்சையில் இழுத்துவிட்ட இந்தப் புத்தகத்தில் என்ன தான் அப்படி சர்ச்சை இருக்கிறது என்று படித்துப் பார்த்தேன். எனது கண்ணோட்டத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.
மாதொருபாகன் கதைச் சுருக்கம்:
பொன்னாவும் காளியும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருக்கும் தம்பதியர். திருமணமாகி 12 வருடங்களாகியும் குழந்தை இல்லை என்பதைத் தவிர அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஊர் வாயும், சமுதாயத்தின் ஈவிரக்கமற்ற எதிர்பார்ப்புகளும் அவர்களின் நிம்மதியைக் குலைக்கிறது. குழந்தை பெறுவதற்காக தன் மேல் திணிக்கப்பட்ட அத்தனை பரிகாரங்களையும் செய்கிறாள் பொன்னா. கசப்பான திரவியங்களைக் குடிக்கிறாள், அறுபது படி விளக்கு பூசை செய்கிறாள், ஆபத்தான மலைப்பாறையைச் சுற்றி வருகிறாள், எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொள்கிறாள்….அப்படியும் நல்லது நடக்கவில்லை. கடைசியாக எஞ்சி இருக்கும் ஒரே ஒரு தீர்வை நோக்கி அவள் தள்ளப்படுகிறாள். கணவன் காளி வேண்டாம் என்று பதறுகிறான். அம்மா, மாமியார், பாட்டி, மச்சினன் என்று எல்லோரும் அதே தீர்வையே வழிமொழிகிறார்கள். தன் மனைவி அதனை ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று காளி நம்புகிறான். ஆனால் விரக்தியின் எல்லையில் இருக்கும் அவளோ, “நீ சரின்னு சொன்னா, நான் செய்யிறேன்என்று சொல்ல, அவன் அதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியாகிறான்.
அது என்ன அப்படி ஒரு தீர்வு என்பது தான் கதையின் உச்சகட்டம்! திருச்செங்கோட்டில் நடக்கும் கோவில் திருவிழாவின் 14 ஆம் நாளன்று சாமி மலையேறும் நாள். அன்று இரவு மட்டும் ஊரின் அத்தனைக் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டு ஆண்கள் எல்லாரும் சாமிகளாகக் கருதப்படுகிறார்கள். குழந்தை இல்லாத பெண்கள் அந்த இரவில் எந்த ஒரு ஆணுடனும் சேரலாம். அதன் மூலம் கிடைக்கும் குழந்தைகள் சாமி குழந்தையாக கருதப்படுகிறார்கள். பொன்னா இந்தத் திருவிழாவிற்குச் செல்கிறாள். தனக்கான சாமியைத் தேர்ந்தெடுக்கவும் செய்கிறாள். காளி அதை அறிந்து மனம் உடைந்து போகிறான். அந்த இரவின் மூலம் பொன்னாவிற்கு வேண்டுமானால் சாமி குழந்தை கிடைக்கலாம், ஆனால் காளியுடன் அவள் வாழ்ந்த அந்த பழைய மகிழ்ச்சியான வாழ்க்கையின் முடிவும் அந்த ஒரு இரவாகவே இருக்கக்கூடும்! கதை முடிவதும் அந்த இரவோடு தான்! அதற்குப் பின் என்ன நடக்கும் என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறார் பெருமாள் முருகன்.
எனக்குப் பிடித்தவை:
1. ஒரு பூவரச மரத்தின் அடியில் தொடங்கும் கதை, அதே பூவரச மரத்தின் அடியிலே முடிகிறது.
2. திருச்செங்கோடு கிராமம், அதன் சுற்றுப்புறம், மலைக் கோவில்கள், அங்கு நடக்கும் திருவிழா, திருவிழாவிற்கு வண்டி கட்டிக்கொண்டு வரும் மக்கள்….இவற்றைப் பற்றி மிகச்
சுவாரசியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. மலையின், உச்சி, அங்கிருக்கும் பாறை அமைப்புகள், மலை மண்டபங்களில் விற்கப்படும் கெட்டித் தயிரில் கலந்த கம்மஞ்சோறு….இவற்றைப் பற்றியெல்லாம் படிக்கப் படிக்க, அங்கே திருச்செங்கோட்டிற்கே நேரில் செல்லவேண்டுமென ஆர்வம் எழுகிறது.
3. ஊர்க்கிழவிகள் எல்லாம் காளி பொன்னா தம்பதிக்கு குழந்தை பிறக்காததற்கான காரணங்களாக அவர்களது முன்னோர்கள் செய்த பாவத்தை கதை கதையாகச் சொல்வது வேடிக்கை!
4. குழந்தையின்மை அல்லது மலட்டுத்தன்மையை ஒரு ஆணின் பார்வையில் நான் இதுவரை படித்ததோ கேட்டறிந்ததோ இல்லை. மாதொருபாகன் முழுவதும் காளிஎன்கிற கணவன் கதாபாத்திரத்தின் புலம்பலும் உணர்ச்சி வெளிப்பாடுமே! மனைவி பொன்னாஎந்த அளவு குழந்தை பெறாததற்கு வசவும் கிண்டலும் எதிர்கொள்கிறாளோ, அதே அளவு கணவனும்
எதிர்கொள்கிறான். ஊர் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றுஎன்று கடவுளிடம் மன்றாடும் ஒரு ஆண் கதாப்பாத்திரம் எனக்குப் புதிது. இப்படி ஒரு புதிய கோணத்தில் கதைச் சொல்லியிருக்கும் பெருமாள் முருகனுக்கு பாராட்டுக்கள்.
5. ”மலடிஎன்று குழந்தைப் பெறாத பெண்களை குறிக்கும் இந்தச் சொல் நமது தமிழ் சமுதாயத்தில் மிகப் பிரசித்தம். இந்த வார்த்தை வராத கதைகள் இல்லை, திரைப்படங்கள்
இல்லை, நிஜ வாழ்க்கையிலும் இந்த வார்த்தையை கேட்டுக் கேட்டு மனம் நொந்த பெண்கள் ஏராளம். ஆனால் குழந்தை பெற தகுதியற்ற ஆணுக்கான சொல் எதுவும் இருக்கிறதா? எனக்கு மாதொருபாகன் படிக்கும் வரை அது தெரியாது. காளிகதாபாத்திரம் வறடன்என்று ஊராரால் கேலி செய்யப்படுகிறான். தமிழ் அகராதியைப் பார்த்தபோது தான் தெரிந்தது, அப்படி ஒரு வார்த்தை உண்மையிலேயே இருக்கிறதென்று. வீரியமற்றவன்என்று பொருள். அடப்பாவிகளா! இப்படி ஒரு வார்த்தை இருப்பதையே இருட்டடிப்பு செய்துவிட்டார்களே, என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் ஒரு துணிச்சலான வெளிப்பாட்டிற்கு பெருமாள் முருகனுக்கு நன்றி!

என்ன சர்ச்சை?
இந்தக் கதையில் என் அறிவுக்குப் புலப்பட்ட ஒரே ஒரு நெருடல், திருமணமான பெண் கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் உறவு கொள்வது. என்னதான் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெண் அப்படி செய்தாலும் கூட, அந்த ஊரில் அது வழக்கம் என்றாலும் கூட, என்ன ஒரு முற்போக்குப் பார்வையில் இதனை அனுகினாலும் கூட, ஒரு கணவனின் பார்வையில் தன் மனைவி வேறொரு ஆணுடன் உறவு கொள்வது என்பது மிகப் பெரும் மன வேதனை தான்.

கதையில் காளிக்கும் அவனது மச்சினன் முத்துவுக்கும் இது பற்றி நடக்கும் உரையாடல் மிக
முக்கியமானது. நீ உன் பெண்டாட்டியை யாரோ ஒருவனிடம் அனுப்புவியாஎன்று கேட்கும் காளியிடம், ”யாரோ ஒருவன் இல்லைடா, சாமிகிட்டதானே அனுப்புறோம், அது தப்பு இல்லைஎன்கிறான் முத்து. அதற்கு காளி, “என்னடா சாமி? நீயும் நானும் கூட தான் வயசுப் பசங்களா இருக்கும்போது அந்த ராத்திரியில சாமியா போயிருக்கோம். அப்ப நம்மளை சாமியாவா நினைச்சிகிட்டோம்? எந்த அழகான பொண்ணு கிடைப்பான்னு தானே அலஞ்சிக்கிட்டு இருந்தோம்?” என்பான். காளியின் இந்த வார்த்தைகள் சாமியின் பெயரால் நடக்கும் அந்த ஊர் வழக்கத்தின் பின் உள்ள போலித்தனத்தையும், மூட நம்பிக்கையையும் கிழித்துத் தொங்கவிடுகிறது!
ஒரு ஆபத்தான விளிம்பில் பெருமாள் முருகன் மிகக் கவனமாக நடந்திருக்கிறார். கொஞ்சம் தவறினாலும் கதை விரசமாகியிருக்கும். பாராட்டுக்குறிய எழுத்துத் திறமை! கதையில் சில கொச்சையான வார்த்தைகள் கூட, படிப்பதற்கு சற்று சங்கடமாக இருந்தாலும், அவை வட்டார வழக்கில் இருப்பவை தான். அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு நாள் தோறும் ஒரு முறையாவது அந்த “F” வார்த்தையை கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, இந்தக் கதையில் வரும் சொல்லாடல் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை.
சில அறநெறி சார்ந்த நெருடல்கள் இந்தக் கதையில் இருக்கின்றனவே ஒழிய சாதி மதம் சார்ந்த சர்ச்சை எழுந்தது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. என்னைப்பொறுத்த வரையில், ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் வாழ்ந்த மக்களைப் பற்றிய வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் ஒரு சாளரம் தான் இந்த மாதொருபாகன்கதை!


Monday, February 15, 2016

பாலாவின் தாரை தப்பட்டை - ஒரு பார்வை


பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் போன்ற திரைப்படங்களைப் பார்த்தபின் அடுத்து வரும் பாலாவின் திரைப்படம் எப்படி இருக்கும் என்று எல்லோராலும் எளிதாக  ஊகித்துவிட முடியும்.   அது விளிம்பு விலை மனிதர்களின் அவலமான வாழ்கை பற்றியதாக இருக்கும்.  முடிவு மிகக் கொடூரமானதாக இருக்கும்.   அடுத்தடுத்து அவரின் ஒரே மாதிரியான திரைப்படங்கள் அலுப்பாக இருந்தாலும், அவரின் லாப நோக்கற்ற, விடாப்பிடியான சமூக அக்கறை என்னை வியக்க வைக்கிறது.  நலிவுற்ற கீழ்த்தட்டு மனிதர்களைப் பற்றி யாராவது நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.  இல்லையென்றால் அவர்களை நாம் மறந்துவிடக்கூடும்.  அதற்கு பாலாவைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில்?

பாலாவின் திரைப்படங்களை நான் ஒரு பாடம் படிப்பது போல் தான் பார்க்கிறேன்.  பிச்சைக்கார்களைப் பார்திருக்கிறேன்.  அவர்கள் ஏந்திய தட்டில் காசு போட்டிருக்கிறேன்.  அவர்கள் வாழ்கைக்கு அருகே நான் வந்த அந்த அதிகபட்ச நெருக்கம் அது மட்டுமே.  பாலாவின் "நான் கடவுள்"பார்த்தபின் தான் அந்த ஏந்திய தகடுகளுக்கும், அதில் சிதறிக் கிடக்கும் சில்லரைகளுக்கும் அப்பால் அவர்களின் உலகம் எப்படி இருக்குமென்று ​ தெரிந்து கொண்டேன். கரகாட்டக்காரர்களை கோவில் திருவிழாக்களில் பார்த்திருக்கிறேன்.  அந்த இசையோ நடனமோ என்னை
​ வெகுவாக ஈர்க்கவில்லை.  தாரை தப்பட்டை பார்த்தபின் தான் தெரிகிறது, அந்தக் குட்டைப் பாவடைக்குப் பின் உள்ள நீளமான ​சோகம்...
  

"அனைவரும் பார்க்கவேண்டிய படம்" என்று நிறைய படங்களை நண்பர்களுக்குப் பரிந்துரைத்திருக்கிறேன்.  ஆனால் பாலாவின் படங்களை அப்படி பரிந்துரைக்க எனக்கு தயக்கம் உண்டு.  அவர் படங்களைப் பார்க்க ஒரு துணிவு வேண்டும்.  தீவிர மன பாதிப்புக்கும், சில தூக்கமற்ற இரவுகளுக்கும் நம்மை நாமே காவு கொடுக்கவேண்டும். பாலாவின் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு அல்ல...அது ஒரு 
வலி! 

இனி தாரை தப்பட்டை பற்றி...

பாலாவையே தூக்கியடித்து புறந்தள்ளிய "சூராவளி" யாக வரலட்சுமி!!   
​ணிரத்தினமோ, கவுதம் மேனனோ தம் கனவிலும் கற்பனை செய்திருக்க முடியாத அப்படி ஒரு கதாபாத்திரம்!  குடிகாரி, குட்டைப் பாவாடை கட்டிய கெட்ட ஆட்டக்காரி...ஆனால் நல்ல மனசுக்காரி.   தன் மாமனின் மேல் யார் கைவைத்தாலும் அவரை அடித்து துவம்சம் செய்வாள், ஆனால் அதே மாமன் தன்னை ​வேறு ஒருவனை திருமணம் செய்துகொள்ளச் சொல்லும் போது, அவனை தானே காலால் உதைத்து ஆற்றில் தள்ளி விடுவாள்.  முதல் பாதி முழுவதும் தன் அபாரமான நடிப்புத் திறமையால் வரலட்சுமியே நிறைந்து நிற்கிறார்.  வெளி நாட்டில் "பாலே" நடனம் பயின்ற ஒரு பெண் எப்படி தாரைக்கும் தப்பட்டைக்கும் இப்படி அதிரடியாக ஆடமுடியும் என்று வியக்க வைக்கிறார்.  முதல் பாதி கதையின் கருவுடன் ஒட்டி விறுவிறுப்பாக நகர்கிறது.  பாலாவின் முந்தைய படங்கள் தந்த பயத்தால், அந்த கரகாட்டக் குழு அந்தமான் செல்ல கப்பல் ஏறும் போது பகீரென்று அடிவயிறு கலங்கியது...எங்கே அவர்கள் அந்தமானில் மாட்டிகொண்டு அடிமைகளாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படப்போகிறார்களோ என்று!  

​ஆனால் நல்ல வேளை...சில பிரச்சினைகளுக்குப் பிறகு நல்லபடியாக ஊர் திரும்பிவிடுகிறார்கள்.  

இடைவேளைக்குப் பிறகு படம் மையக் கருத்திலிருந்து தடம் மாறி பாலாவின் வழக்கமான கொடூரங்களால்  நிரப்பப்பட்டுள்ளது.  ஒரு அருமையான திரைப்படமாக இருந்திருக்க வேண்டிய தாரை தப்பட்டையில், தேவையற்ற வன்முறைக் காட்சிகளை பொதித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார் பாலா.  பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடிவாங்குகிறார்கள்,  அவர்களின் கூந்தல் மழிக்கப்படுகிறது, வாடகைத் தாயாக விற்கப்படுகிறார்கள்...இத்தனை வன்முறைகளைக் காட்டித்தான் ஆகவேண்டுமா பாலா? 

முதல் பாதியில் கரகாட்டக்காரர்களின் உடை, உடல்மொழி, நடன அசைவுகள் மற்றும் உரையாடலில் உள்ள கொச்சைத்தனம் சற்று மிகைப்படுத்தப்பட்டிருந்ததாகத் தோன்றியது எனக்கு.  ஆபாசத்திற்காக  தன் படங்களில் சமரசம் செய்யக்கூடியவர் அல்ல பாலா.  ஒரு வேளை படிப்பறிவில்லதவர்கள், கரகாட்டத்தைத் தவிர வேறு எதையும் சிறு வயதிலிருந்தே அறிந்திறாதவர்கள் அப்படித்தான் கொச்சையாகப் பேசுவார்கள் என்று பாலா சொல்கிறார் போல.  நானும் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் பார்த்திருக்கிறேன்.  கலைஞர்கள் இந்த அளவு குறைந்த உடைகள் ​ணிந்ததாக, எனக்கு நினைவில்லை.    மனதில் பல கேள்விகள் எழுகிறது.  ஒரு காலத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து இரசிக்கப்பட்ட கரகாட்டம் அல்லது தெருக்கூத்து இதுதானா? இல்லையென்றால் பாலா கண்பித்த இந்த கரகாட்டம் எந்த விதம்? 

இளையராஜாவின் இசைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.   அந்தமான் கோவில் திருவிழாவில் கரகாட்டக் குழு ஆடும் "வதன வதன வடிவேலா" பாடலி​ல்​ அடி தூள் கிளப்பிவிட்டார்.  அதே போல் "பாருருவாயா" பாடலில் நெஞ்சம் நெகிழவும் வைத்துவிட்டார்.  கதையின் களத்தோடு பின்னிப்
பி​ணை​ந்த இசை.  

ஆக மொத்தத்தில் இது அனைவரும் பார்க்கவேண்டிய படம் அல்ல.  ஆனால் பார்த்தீர்களென்றால், சமுதாயத்தின் பிந்தங்கிய கலையின் மீதும் கலைஞர்களின் மீதும் ஒரு கனிவு பிறக்கும்...வசந்தபாலனின் "அங்காடித் தெரு" பார்த்தபின் துணிக்கடை தொழிலாளர்களின் மீது கனிவு ஏற்பட்டதைப் போல!   .  

Saturday, January 19, 2013

தமிழகப் பயணம் 2013 - மதுரை


மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சுறுசுறுப்பாக பதிவு எழுத வந்திருக்கிறேன்.  தற்போது திருச்சியில் இருக்கிறேன்.  இந்தத் தமிழகப் பயணத்தில் எனது அனுபவங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் முகநூலில் தினம் இரண்டு வரி குறுஞ்செய்தி இடுவதில் அதிக ஆர்வம் இருந்ததால் நீண்ட பதிவுகள் எழுத முடியவில்லை.  என்னை மீண்டும் பதிவு எழுத வைத்தது மதுரை பயணம்!  

திருச்சியில் ஒரு வாரம் எந்த வேலையுமின்றி சும்மா சாப்பிடுவதும் தூங்குவதுமாக பொழுதைக் கழித்துவிட்டு, கணவரின் குடும்பத்துடன் மதுரை சென்றேன்.  கோவிலும், கோவில் சார்ந்த நகரம் என்பதாலும், அது பொங்கல் சமையம் என்பதாலும், மதுரை ஆர்ப்பாட்டமும் கலகலப்புமாக இருந்தது. கோவில் சார்ந்த ஊரான சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, மதுரை பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது.  அலங்கநல்லூர் ஜல்லிகட்டு பார்ப்பதற்காகவே நிறைய வெளிநாட்டவர் வந்திருந்தனர்.  மூன்று வயது புகழ்மதியை பயணிக்கும் போது சமாளிக்க பல விதங்களில் திட்டமிட்டு, பல பொருட்களை வாங்கி, பல பைகளில் போட்டு, அவள் எந்த நேரத்தில் எதைக் கேட்பாளோ என்று நான் கவலைப்பட்டுக்கொண்டே மதுரை வீதிகளில் நடந்தபோது, ஒரு வெளிநாட்டுத் தம்பதியைப் பார்த்து அசந்து போனேன்.  அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் - 4 முதல் பத்து வயது வரையில்!  கணவனும் மனைவியும் ஆளுக்கொரு மிகப் பெரிய மூட்டையை முதுகில் சுமந்துகொண்டு நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் சென்றுகொண்டிருந்தார்கள்.  எனக்கு உண்மையில் மிக வியப்பாக இருந்தது! 

நாங்கள் தங்கியிருந்தது மதுரை ரெசிடென்சி (Madurai Residency) என்கிற விடுதியில்.  மதுரைக்குச் செல்லுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த விடுதியில் தங்கலாம்.  மிக அற்புதமான விடுதி அது. வரவேற்பு பகுதியில், பொங்கல் முன்னிட்டு பொங்கல் பானைகள், கரும்பு, மாடு பொம்மைகள், மாட்டு வண்டி என்று அலங்காரம் அபாரமாக இருந்தது.  அமெரிக்காவில் ஒரு நல்ல விடுதியில் தங்கினால் ஒரு இரவுக்கு 100 டாலர்கள் வரும். இந்த விடுதி கிட்டத்தட்ட அமெரிக்கத் தரம் என்று சொல்லலாம்.  ஒரு இரவுக்கு 60 டாலர்கள் ஆனது. காலையில் "Complimentary breakfast " இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் கூட்டம் அதிகப்படியாக இருந்ததால், கோவிலுக்குச் சற்று தொலைவிலேயே வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.  கோவிலைச் சுற்றி இருந்த வீதிக்கு வந்தபோது, அங்கே கோலப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது!  வீதியின் இரண்டு பக்கமும் பெண்கள் வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போட்டுக்கொண்டிருந்தார்கள்.  நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டியிருந்ததால், சிறு கொடை போன்ற தொப்பியை தலையில் அணிந்திருந்தார்கள்.  கோலங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கையில், புகழ்மதி திடீரென்று "அம்மா மிக்கி மவுஸ் பாரு" என்று குதூகலத்துடன் கத்தினாள்.  மதுரையில் எங்கே மிக்கி மவுஸ் வந்தது என்று பார்த்தால், அங்கே ஒரு பெண் மிக்கி மவுஸ் கோலம் போட்டிருந்தார்! எனக்கு அருகில் இருந்த பார்வையாளர் ஒருவர், "கோலத்தைப் போடச் சொன்னால், கார்ட்டூன் பொம்மையை வரைந்து வைத்திருக்கிறார்கள்" என்று அலுத்துக்கொண்டார். மற்றொரு பெண் "வின்னி த பூ" கோலம் போட்டிருந்தார்.  இந்த பெண்கள் எல்லாம் கல்லூரிப் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஏன் இவர்கள் மற்றவர்கள் போல் பாரம்பரிய கோலங்களைப் போடவில்லை?  இளம் வயதினர் புதுமையையும் மாற்றத்தையும் விரும்புவார்கள் என்பது தெரிந்ததே, ஆனால், மிக்கி மவுசுக்கும் புதுமைக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை.

அந்தக் கோவிலைச் சுற்றி இருக்கும் வீதிகளில் தான் எத்தனை உயிரோட்டம்!  அல்வா கடைகள், இட்லி கடைகள், பொம்மை கடைகள், துணிக்கடைகள், இன்னும் பல!   

கோவில் வாசலில் பாதுகாப்பு பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.  மீனாட்சி அம்மன் தரிசனத்திற்கு மிக நீண்ட வரிசை நின்றது.  அந்தக் கூட்டத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சமாளிப்பது சிரமம் என்பதால் கோவிலை ஒரு சுற்று நிதானமாக சுற்றி வந்து அங்கிருந்த குளத்தின் படிகட்டுகளில் அமர்ந்தோம். கோவில் கோவில் தான்! கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த பூசை மணிச் சத்தம், மந்திரம் ஓதுவது, விபூதி வாசனை, எரியும் நெய் விளக்குகள், கோபுரங்களின் கம்பீரம், எல்லாமே ஒரு பரவசத்தை ஏற்படுத்துகிறது!