Thursday, October 27, 2005

முடிவில்லாத ஒரு விவாதம்

கடந்த வார இறுதியில் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வந்த இரு நண்பர்களுக்கிடையே நடந்த வாக்குவாதம்.

நண்பர் 1: "அமெரிக்கா சரியான stress country. சீக்கிரமா இந்தியா திரும்பிப் போய்டனும்"

நண்பர் 2: "இந்தியாவில் stress இல்லையா?"

நண்பர் 1: "இல்லைன்னு சொல்லலை. Stress இருந்தால் அதை பகிர்ந்துகொள்ள நண்பர்கள், உறவிணர்கள் இருக்கிறார்கள் அங்கே"

நண்பர் 2: அமெரிக்காவில் உங்களுக்கு நண்பர்கள், உறவிணர்கள் இல்லைன்னா அது உங்கள் சொந்தப் பிரச்சினை. அதற்கு அமெரிக்காவை stress country என்று ஏன் சொல்கிறீர்கள்? உங்களுக்கு அமெரிக்காவில் வாழ்வது stress ஆக உள்ளது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்.

நண்பர் 1: நீங்க என்ன வேனும்னா நினைத்துக்கொள்ளுங்கள். I hate this country. பணியிலும் மழையிலும் ஓடி ஓடி உழைக்க வேண்டியிருக்கு. காலங்கார்த்தால போக்குவரத்து நெரிசல்ல கார் ஓட்டிக்கிட்டு போகவேண்டியிருக்கு. குழந்தைகளை காலையில் பள்ளிக்கூடத்தில் விட்டு பிறகு சாயங்காலம் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கலைப்பா வந்தா, மனைவிக்கு சமையல்ல உதவ வேண்டியிருக்கு. பாத்திரம் கழுவ வேண்டியிருக்கு. சே...சே என்ன வாழ்க்கை இது?

நண்பர் 2: இந்தியாவில் மழையில்லையா? சுட்டெரிக்கும் வெயில் இல்லையா? அங்கே இருப்பவர்கள் பஸ்ஸில் அடித்துப்பிடித்துக்கொண்டு வேலைக்குப் போவதில்லையா?

நண்பர் 1: நான் எதற்கு பஸ்ஸில் போகவேண்டும்? நல்ல கார் வாங்கிக்கொள்வேன்

நண்பர் 2: அப்போ அங்கேயும் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டவேண்டியிருக்குமே?

நண்பர் 1: நான் எதற்கு கார் ஓட்டவேண்டும்? ட்ரைவர் அமர்த்திக்கொள்வேன்.

நண்பர் 2: சரி. இந்தியாவில் இருந்தால் மட்டும் வீட்டில் மனைவிக்கு உதவமாட்டீர்களா?

நண்பர் 1: எனக்கென்ன தலையெழுத்தா? நல்ல சமையல்காரரை நியமித்துக்கொள்வேன்.

நண்பார் 2: குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விடுவது, அழைத்துக்கொள்வது?

நண்பர் 1: அது ட்ரைவரின் வேலை.

நண்பர் 2: அப்போ உங்களுக்கு எந்த stress உம் இருக்காது என்கிறீர்கள்.
நண்பர் 1: கட்டாயமா இருக்காது.

நண்பர் 2: சரி. போக்குவரத்து நெரிசலில் தினம் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் அலுவலகத்திலும் பள்ளியிலும் விட்டு, பின் சாயங்காலம் அழைத்துக்கொள்ளும் அந்த ட்ரைவருக்கும், மாங்கு மாங்கென்று மூன்று வேலையும் சமைத்து, பின் வீட்டு வேலைகளைச் செய்யும் வேலையாளுக்கு stress இருக்காதா?

நண்பர் 1: அது...வந்து...இருக்கலாம்...

நண்பர் 2: அப்ப, நீங்கள் இந்தியா போவது உங்கள் stress ஐ மற்றவர்கள் மேல் இறக்கிவைப்பதற்குத் தானா?

நண்பர் 1: என்ன நீங்க, இப்படி எடக்கு முடக்கா யோசிக்கறீங்க! என்னால ரெண்டு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுது. அதனால் எனக்கும் stress குறையுதுன்னா அதுல என்ன தவறு? நான் உங்களைத் திருப்பிக் கேட்கிறேன். ஒரு அன்னிய நாட்டில் எத்தனை நாள் சார் இருப்பீங்க? நம்மைச் சுற்றி தமிழர்களா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்.

நண்பர் 2: எங்க இருந்தா என்ன? நம்மைச் சுற்றி நல்லவங்களா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்.

நண்பர் 1: என்ன இருந்தாலும் நம்ம சொந்த ஊர் மாதிரி ஆகுமா?

நண்பர் 2: நான் ஒத்துக்கொள்கிறேன். நம்ம ஊரில் இருப்பது தனி சுகம் தான். ஆனால் அமெரிக்காவில் பல வருடங்கள் இருந்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிப் போவது அவ்வளவு சுலபம் கிடையாது. நீங்கள் முதல் முதலாக அமெரிக்கா வந்தபோது எப்படிப்பட்ட கலாசார அதிர்ச்சி(culture shock) உங்களுக்கு இருந்ததோ, அதே போல் தான் இங்கிருந்து உங்கள் சொந்த ஊருக்குப் போகும் போதும் இருக்கும். உங்கள் நண்பர்களும், உறவிணர்களும் 10 வருடங்களுக்கு முன் நீங்கள் விட்டுவிட்டு வந்த போது இருந்தமாதிரியே நீங்கள் போகும்போதும் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அவர்கள் மாறியிருப்பார்கள். நீங்களும் மாறியிருப்பீர்கள். அமெரிக்காவில் உங்களுடைய 10 வருட அனுபவம் உங்கள் சிந்தனைகளை மாற்றியிருக்கும். வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையை மாற்றியிருக்கும். இந்த மன நிலையில் நீங்கள் இந்தியா போனால் அங்கே இப்போதிருக்கும் கலாசாரத்தை மீண்டும் புதிதாகக்கற்றுக் கொள்ளவேண்டியிருக்கும். இதற்கெல்லாம் நீங்கள் தயாராக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது. என்னுடைய பாயிண்ட் என்னவென்றால், நீங்கள் நினைப்பது போல் அங்கே stress இல்லாமல் வாழ்ந்துவிட முடியது. Stress வேறு வகையாக அங்கே இருக்கிறது.

நண்பர் 1: சரி சார். நீங்க எதுக்காக அமெரிக்காவிலே செட்டில் ஆக முடிவு செய்தீங்க?

நண்பர் 2: என்னுடைய பெற்றோர்கள் என்னுடைய படிப்புக்காக கிராமத்தை விட்டு நகரத்திற்கு குடிபெயர்ந்தார்கள். எனக்காக அவர்களுக்குப் பிடித்த கலாசார அடையாளங்களை விட்டுக்கொடுத்தார்கள். நான் என்னுடைய மற்றும் என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தேன். தூரம் தான் அதிகமே தவிர, என் பெற்றோர்களுக்கு அன்றிருந்த நோக்கம் தான் இன்று எனக்கு இருக்கிறது.

நண்பர் 1: என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நான் பள்ளியும் கல்லூரியும் நம்ம ஊரில் கவர்மெண்ட் செலவில் படித்தேன். இப்போ இங்க வந்து அமெரிக்க கவர்மெண்டுக்குத் தானே என் பணத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்? எல்லாரும் எதிர்காலத்தை முன்னிட்டு அமெரிக்கா வந்துவிட்டால் இந்தியாவுக்கு எப்படி நல்லது நடக்கும்?

நண்பர் 2: ஏன் நடக்காது? இப்ப நான் அமெரிக்காவில் இருப்பதால் தான் இந்தியாவில் இருக்கும் பல உறவிணர்களுக்கு பண உதவி செய்ய முடிகிறது. சில சமூகத் தன்னார்வ நிறுவனங்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறேன். மனம் நிறைவாக இருக்கிறது. நம்ம சுதந்திரப் போராட்ட வீரர்களில் 90% அன்னிய நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தான். அன்னிய நாட்டில் சில வருடங்கள் இருந்துப் பார்த்தால் தான் சுதந்திரம், பேச்சுரிமை, சமூக விழிப்புணர்வு, தேசப்பற்று போன்ற உணர்வுகள் எழும். அப்படி நமக்கு உணர்வுகள் எழுவது இந்தியாவுக்கு நல்லது தானே?

நண்பர் 1: இப்ப என்ன தான் நீங்க சொல்ல வருகிறீர்கள்? யாரும் இந்தியா திரும்பப் போகக்கூடாதுன்னா?

நண்பர் 2: கட்டாயம் அப்படிச் சொல்லலை. தாராளமாக இந்தியா போங்கள்.
ஆனால் அமெரிக்காவில் இருப்பது stress என்று மட்டும் சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் இங்கே உங்களுக்கு வாழத் தெரியவில்லை என்று அர்த்தம்.

நண்பர் 1: அட! இங்கே எப்படி வாழ வேண்டும் என்றுதான் கொஞ்சம் சொல்லுங்களேன். தெரிந்துகொள்கிறேன்.

அதற்குள் நண்பர் 2 வுக்கு செல் போனில் அவசர அழைப்பு வந்ததனால், வாக்குவாதத்தை அடுத்த சந்திப்பின் போது தொடரலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அமெரிக்காவில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று தனக்குத்தான் தெரியவில்லையோ என்று யோசித்துக்கொண்டே நண்பர் 1 ன்னும் விடைபெற்றார். சாப்பாட்டையும் போட்டு, விவாதிக்கவும் இடம் கொடுத்தால் இப்படி முடிவைச் சொல்லாமல் பாதியிலேயே போய்விட்டார்களே? மறுபடியும் இந்த இருவரையும் சாப்பிடக்கூப்பிட்டால் தான் முடிவு தெரியும் போலிருக்கிறது!

13 comments:

KARTHIKRAMAS said...

காரசாரமா இருக்கு.

Priya said...

அது சரி தாரா. அமெரிக்க வாழ்க்கை பற்றி உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க

பத்மா அர்விந்த் said...

பூமியில் இருப்பதும் வானில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

தாரா,
உங்களின் "நண்பர்1" இந்தியா செல்வதற்காக சொல்லும் முக்கிய காரணம் அங்கு சோம்பேறித்தனமாக இருப்பதற்காக மட்டுமே. உண்மையிலேயே இந்தியா பற்றிய எண்ணங்களாலும், பழைய நினைவுகளாலும் உந்தப்பட்டு திரும்பிச் செல்ல நினைப்பவர்களுக்கும் இவருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

//நண்பர் 2:
இப்ப நான் அமெரிக்காவில் இருப்பதால் தான் இந்தியாவில் இருக்கும் பல உறவிணர்களுக்கு பண உதவி செய்ய முடிகிறது. சில சமூகத் தன்னார்வ நிறுவனங்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறேன். மனம் நிறைவாக இருக்கிறது. //

பணம் முக்கியமான உதவிதான் ஆனால் அது மட்டும் முக்கியம் அல்ல.இங்கு இருந்தே இந்தியாவிற்கு சேவைக்காக பணம் அனுப்புவது போனில் துக்கம் விசாரிப்பது போன்றதே. கூடவே இருந்து துக்கத்தில் பங்கு கொண்டு தோளோடு தோள் கொடுப்பது போன்று நிச்சயம் இருக்காது.
நண்பர்2 வேறு ஏதும் செய்ய முடியாமல் இது மட்டுமாவது செய்கிறாரே நல்லது.

//நம்ம சுதந்திரப் போராட்ட வீரர்களில் 90% அன்னிய நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தான். அன்னிய நாட்டில் சில வருடங்கள் இருந்துப் பார்த்தால் தான் சுதந்திரம், பேச்சுரிமை, சமூக விழிப்புணர்வு, தேசப்பற்று போன்ற உணர்வுகள் எழும். //

அவர்கள் எல்லாம் அந்நிய நாட்டிலேயே "செட்டில்" ஆக வில்லை. கண்டதை,கேட்டதை இந்தியாற்கு வந்து செயல்படுத்தியவர்கள் குறைந்தபட்சம் திரும்பி வந்து தங்களால் முடிந்தவற்றை செய்தார்கள்.


திரைகடலோடி திரவியம் தேடுவது தவறில்லை. கூட்டம் நெரிசல் சுகாதாரம் என்று கூறிவிட்டு அடுத்த நாட்டிலேயே தங்கிவிடுவதும் சுயநலம்தான்.

நீங்கள் சொன்னபடி இது முடிவில்லா விவாதம்தான். அவரவர் முடிந்த அளவிற்கு தான் பிறந்த தாய் நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்தால் நல்லது. தாய் நாடு சரியில்லை இங்கே நான் வசதியாக இரிக்கிறேன் என்று தாய் நாட்டுக்குடியுரிமையை விட்டுவிடுபவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நான் ஒன்றும் யோக்கியன் இல்லை. பணம் காசுக்காக இங்குதான் இன்னமும் இருக்கிறேன். :-(((

மயிலாடுதுறை சிவா said...

பலூன் மாமா கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
எனக்கு சில நண்பர்கள் தெரியும் யாராவது தமிழகம் சென்று மீண்டும்
குடியேற போகிறேன் என்றாலே அவர்களிடம் நம் நாட்டில் உள்ள
குறைகளை மட்டும் பேசி அவர்களை குழப்பத்தில் மூழ்க அடித்து
விடுவார். என்னை பொறுத்தவரை இந்த நாட்டிற்கு வரும் பொழுது
நாம் நாலு காசு சம்பாரிக்க மட்டுமே வந்தோம், முடிந்தவுடன் பொட்டியை
தூக்குவது நலம். இதனை சொர்க்க பூமியாக நினைத்து இருப்பவர்கள்
இங்கேயே இருகட்டும். அவர்களுக்கு நம் உறவுகளை பற்றி கவலை இல்லை
என்பது என் தாழ்மையான கருத்து. சொர்க்கமே என்றாலும் நம்மவூர் போல வருமா?
நன்றி
சிவா...

வாசன் said...
This comment has been removed by a blog administrator.
வாசன் said...
This comment has been removed by a blog administrator.
Thara said...

என்றைக்காக இருந்தாலும் தமிழகம் திரும்பிப் போய்விடவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். என்னைப்போல் பலர் அப்படி னினைக்கலாம்.

அது என்னைக்கு என்பது தான் எல்லாருடைய வாழ்க்கையிலும் விடைகான முடியாத கேள்வி.

அதுவரை அமெரிக்க வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதில் எந்த சிரமமும் இருப்பதாகத் தெரியவில்லை.

உறவுகளின் அருகாமையை இழப்போம் என்று தெரிந்தும் தானே அமெரிக்கா வருவதற்கு முடிவு செய்தோம்? அந்த முடிவுக்கு னாம் தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அமெரிக்காவை குறை சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை.

மேலும், இந்தியாவிற்குத் திரும்பிப் போனால் னன்றாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது என்று வாதிடுபவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பலவற்றை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்காவிலேயே வாழ் னாள் முழுவதும் கழிக்கவேண்டுமென்றால் அது என்னால் முடியாது.

ஊருக்காக செய்யவேண்டியது னிறைய இருக்கிறது.

தாரா.

Thara said...

கருத்துச் சொன்ன அனைவருக்கும் னன்றி.

தாரா.

-/பெயரிலி. said...

எங்கே வாழ்வதென்பது தனிப்பட்ட ஒருவரின் அந்த நேரத்துக்குரிய எதிர்பார்ப்புகளினை முன்னிட்ட விருப்புவெறுப்புகளின் அடிப்படையிலேயே அமைகின்றதென்று நினைக்கிறேன். இதனைப் போய்
"நாடு 'அ' சொர்க்கம்;
நாடு 'ஆ' நரகம்"
என்று சூத்திரம்போல வகுத்துக்கொள்வது சரியெனத் தோன்றவில்லை.

KARTHIKRAMAS said...

தாரா இந்தாருங்கள். http://karthikramas.blogdrive.com/archive/45.html

பெயரிலியின் கருத்தோடு ஒப்புதலுண்டு.

Thara said...

பெயரிலி, உங்கள் கருத்தோடு முழு உடன்பாடு எனக்கு. அதையே தான் சொல்ல வந்தேன், உங்களைப்போல தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

தாரா.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//எங்கே வாழ்வதென்பது தனிப்பட்ட ஒருவரின் அந்த நேரத்துக்குரிய எதிர்பார்ப்புகளினை முன்னிட்ட விருப்புவெறுப்புகளின் அடிப்படையிலேயே அமைகின்றதென்று //

தனது சுய விருப்பு வெறுப்பை வைத்து அடுத்தவனை எடைபோடும் போதுதான் பிரச்சனையே.
"அ" வில் செட்டில் ஆக நினைப்பவர்கள் அதற்காக "இ" யை குறை சொல்வதோ,
"இ" க்கு திரும்ப நினைப்பவர்கள் அதற்காக "அ" வின் மேது சேற்றைவாரி தூற்றுவதோ இல்லாமல் இருந்தால் பிரச்சனை இல்லை.

இங்கு பிரச்சனையே இவர்கள் இருப்பதற்காகவும்,போவதற்காகவும் சொல்லும் அபத்தமான காரணங்கள்தான்.