மூன்றாம் நாள் காலை St.Agnes church சென்ற எனக்கு ஒரே ஆச்சரியம். அது ஒரு கிருஸ்த்துவ தேவாலயம் போலவே இல்லை. படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
Astrodome போல அவ்வளவு பெரிய இடம் இல்லையென்றாலும், கிட்டத்தட்ட 200 அடி டையமீட்டர் உள்ள 4000 பேர் உட்காரக் கூடிய ஒரு வட்டமான கூடம் அது. Astrodome போல் இங்கே பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்கவில்லை, ஆனால் இங்கே அவர்களுக்கு ரெட் க்ராஸ் பண உதவி அளித்துக்கொண்டிருந்தது. தினம் 8000 பேர்கள் நீண்ட வரிசைகளில் நின்று ரெட் க்ராஸ் தரும் காசோலை அல்லது டெபிட் கார்டை(debit card) வாங்கிச் சென்றனர். ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து உதவித் தொகை அமைந்தது. அதிகபட்ச உதவித்தொகை $1565.
தேவாலயக் கூடத்தின் ஒரு பகுதியில் கணிணிகள்...மீண்டும் பயிற்சி வேலை. மற்றொரு பகுதியில் தேவாலயத்தின் வெளியில் இருந்துத் தொடங்கும் மிக நீண்ட வரிசையில் நிற்கும் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு குடும்பமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு, இன்ட்டர்வியூ செய்யப்பட்டு பிறகு பணம் அளிக்கப்பட்டனர். அதிகாலை ஐந்து மனியிலிருந்து வரிசையில் நிற்கும் அந்த மக்களைப் பார்த்தால் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. 11 மணியளவில் வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும்போது நிற்க முடியாமல் மயங்கி பலர் விழுந்துவிடுவார்கள். அவர்களுக்கு உடனே மருத்துவ உதவி செய்யப்படும். கூடத்தினுள் எப்பொழுது அழுக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏனென்றால் இன்டர்வியூ செய்யப்படும் போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டைப் பற்றியும், தொலைந்து போய்விட்ட குடும்பத்தாரைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்படும் போது துக்கம் தாளாமல் பலர் அழுதுவிடுவார்கள்.
தினம் காலை பாதிரியார் ஒலிபெருக்கியில் பேசுவார். அவருடைய பேச்சு அங்கே வேலை செய்பவர்கள் எல்லாருக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கும். ஒரு நாள் ஒரு பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன், தனக்கு பண உதவி அளிக்கமுடியாது என்று சொன்ன ஒரு ரெட் க்ராஸ் பெண்ணை முகத்தில் பலமாக ஓங்கிக் குத்தினான். அவளோ, ரத்தம் வழியும் உதடுகளைத் துடைத்துவிட்டு, "மன்னிக்கனும், உங்களுடைய டாக்குமென்ட்ஸ் சந்தேகப்படும்படியாக இருப்பதால், பணம் கொடுக்க முடியாது" என்று பொறுமையாகக் கூற, எனக்கு பிரமிப்பாக இருந்தது. பின்னர் அந்தப் பெண் சொன்னார் "காலையில் பாதிரியார் பேசும்போது, பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால், நீங்கள் அமைதிகாத்து அவர்களை அரவணைக்கவேண்டும். அவர்களுக்கு உங்கள் மேல் கோபம் இல்லை. அவர்களுடைய சூழ்நிலையின் மேல் தான் கோபம் என்று சொன்னார். அதை நினைத்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன்" என்று!
வேலைசெய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தனி சாப்பாட்டு வரிசை. சுட்டெரிக்கும் வெயிலில் சற்று நேரம் நாங்கள் வெளியே காத்திருந்தபின் தான் உணவுக்கூடத்திற்குச் செல்லமுடியும். பிறகு hotdog அல்லது ஏதாவது burger கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே வந்து சாப்பிடுவதற்காகப் போடப்பட்டிருக்கும் ஒரு கொட்டகையில் உட்கார்ந்து சாப்பிடவேண்டும். பெரும்பாலும் அங்கே உட்கார இடம் கிடைக்காது. அதனால் வெயிலில் மண் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவோம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, மரத்தடியில் மண் தரையில் தோழிகளுடன் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.
இங்கேயும் இரண்டு நாட்களில் கணிணி பயிற்சி வேலை முடிந்துவிட, எங்களை ஒரு பிரத்யேக குழுவில் உதவி செய்யச் சொன்னார்கள். பணம் வாங்குவதில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் அங்கே நடந்துகொண்டிருப்பது அப்போது தான் எனக்குத் தெரிய வந்தது. ஒருவரே நான்கைந்து முறை வந்து பணம் வாங்குவது, டெபிட் கார்ட் முழுவதும் செலவு செய்துவிட்டு மீண்டும் வந்து அந்தக் கார்ட்டை தொலைத்துவிட்டேன் என்று சொல்வது - இது போல் நாளுக்கு நாள் நடந்துகொண்டிருந்தது. அப்படி சந்தேகப்படும்படியான நபர்களைப் பற்றிய தகவல்களை மென்பொருளில் தேடிக்கண்டுபிடித்துச், சொல்வது என் வேலை! டெபிட் கார்ட் எண்னை மென்பொருளில் உள்ளிட்டு என்னென்ன அந்த கார்ட்டில் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அவசியத் தேவைக்காக அளிக்கப்படும் இந்த கார்டில் அலங்காரப் பொருட்கள், விலை உயர்ந்த காலணிகள், இசைத் தட்டுகள், விலை உயர்ந்த உணவகங்களில் உணவு போன்றவை வாங்கப்பட்டிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இப்படி கணிணியில் எல்லாவற்றையும் பார்க்க முடியும் என்று கூட அந்த மக்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் இரண்டு நபர்கள் என்னருகில் வந்து அமர்ந்து, சில டெபிட் கார்டுகளைக் கொடுத்து, இவற்றின் செலவு கணக்கை கணிணியில் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவர்களிடம் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அங்கிருப்பவர்கள் எல்லாம் ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போன்ற சாதாரண உடைகளையே அனிந்திருக்க, இந்த இருவர் மட்டும் சலவை செய்யப்பட்ட முழுக்கை சட்டையும் பாண்ட்டும் அனிந்திருந்தார்கள். ஆஜானுபாகுவாக இருந்தார்கள். பின்னர் தெரியவந்தது அவர்கள் FBI அதிகாரிகள் என்று. உதவித் தொகையை ஏமாற்றிப் பெருபவர்களை அங்கேயே அவ்வப்போது கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அடுத்து வந்த நாட்களில் FBI அதிகாரிகளுடன் அமர்ந்து வேலை செய்ததில் பெருமையாக இருந்தாலும், சற்று உதறலாகவும் இருந்தது. FBI மட்டும் அன்றி, DMV அதிகாரிகளும் அங்கே இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் லைசன்ஸ்களை உடனடியாக அவர்களுடைய மென்பொருளில் சரிபார்த்துக்கொண்டிருந்தார்கள். கோடிக்கணக்கான மக்களின் நன்கொடை பணம் தவறான நபருக்குப் போய்ச்சேர்ந்துவிடக்கூடாது என்பதில் ரெட் க்ராஸ் குறியாக இருந்தது.
நான் ஹ¥ஸ்டனில் இருந்து செப்டம்பர் 23 ஆம் தேதி கிளம்புவதாக இருந்தேன். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ரீட்டா என்கிற மற்றொரு சூறாவளி உருவாகி, டெக்ஸாஸில் உள்ள கால்வெஸ்டன் எங்கிற கடலோரப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹ¥ஸ்டன் கால்வெஸ்டனில் இருந்து 30 மைல்கள் தான். எனவே ஹ¥ஸ்டனில் இருப்பவர்களையெல்லாம் சற்று உள்ளடங்கிய சான் அந்தானியோ, ஆஸ்டின் போன்ற இடங்களுக்குச் செல்லச் சொல்லி உத்தரவு வந்தது. வெளியூரில் இருந்து வந்திருக்கும் ரெட் க்ராஸ் தொண்டர்களையெல்லாம் தத்தம் ஊர்களுக்கு உடனடியாகக் கிளம்பச் சொல்லிவிட்டார்கள்.
மறு நாள் விமானத்தில் வாசிங்டனுக்குப் பறந்துகொண்டிருந்த எனக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்பிவிட்டதில் சற்று ஏமாற்றமாகவும், ஏதோ ரீட்டாவுக்காகப் பயந்து புறமுதுகு காட்டி ஓடுவதைப் போலவும் ஒரு உணர்வு இருந்தது. ஆனால் இந்தப் பயணம் எனக்கு ஒரு விலைமதிக்க முடியாத அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பயணத்திற்குப் பிறகு, என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் சிரமங்களெல்லாம் மிக அற்பமாக எனக்குத் தெரிகின்றன. இந்தப் பயணத்திற்குப் பிறகு என்னுடைய சில சிந்தனைகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். ஒரு நண்பர் கூட கிண்டல் செய்தார் "நீங்கள் மாறுவதற்கு ஒரு சூறாவளி தேவைப்பட்டிருக்கிறது" என்று. உண்மை தான்! காத்ரீனா என்கிற சூறாவளி கொடுத்த அனுபவங்களை என்னால் என்றுமே மறக்கமுடியாது.
ரெட் க்ராஸைப் பற்றி மிக அதிகமாக மீடியா சொல்லும் குற்றச்சாட்டு என்னவென்றால், மிக அதிகமான அளவில் நன்கொடைகளைத் திரட்டும் ரெட் க்ராஸ், செய்வதென்னவோ குறைவு தான்! அதாவது, $1565 என்பது ஒரு குடும்பத்திற்கு எத்தனை நாட்கள் வரும் என்று மீடியா கவலைப்பட்டது. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொகை குறைவாக இருக்கலாம், ஆனால் அந்தத் தொகை எத்தனை குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டது என்பதை கணக்கிலெடுத்தால் அது மிகப் பெரிய தொகை. நான் St.Agnes இல் இருந்த அந்த 10 நாட்களில் மட்டும் 45 மில்லியன் டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரெட் க்ராஸின் குறிக்கோள் உடனடி நிவாரணம் (emergency relief) அளிப்பது மட்டுமே. நீண்ட கால பண உதவியோ, கட்டிடம் கட்டுவதோ, இடிபாடுகளிடையே சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதோ ரெட் க்ராஸின் வேலை இல்லை. பேரிடர் நடக்கும் இடங்களில் உடனடி தேவகளான உணவு, உடை, பாதுகாப்பான இடம், மருத்துவம், உடனடித் தேவைக்கான பணம் இவற்றை அளிப்பதுதான் ரெட் க்ராஸின் வேலை. இதை நிறைய பேர் புரிந்துகொள்வதில்லை. "Redcross can do a little more than a doughnut" என்று மற்றோரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அதிபர் கேலி செய்தார் என்று பத்திரிக்கையில் படித்தேன். பசித்த வயிற்றுக்கு அந்த ஒரு doughnut எவ்வளவு முக்கியம்?
முற்றும்!
3 comments:
தாரா
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. குற்றம் கூரும் எல்லோருமே உண்மையான முழுதகவலையும் சொல்வதும் இல்லை.
காத்ரீனா முடிந்த பின் தாமதம் நடந்தாலும் அதன்பின் செய்த உதவிகள் மட்டும் இல்லை, தன்னார்வ தொண்டர்களும் உழைக்கும் மப்பான்மையும் பொறூமையும் நான் பார்த்து வியந்திருக்கிறேன்.
தாரா,
என்னதான் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதளங்களில் கத்ரீனா, ரீடா புயல்கள் செய்திகளைத் தெரிந்துகொண்டாலும், தங்களின் பதிவு வேறு கோணத்தில் அறிய வைத்தது. உங்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் இந்தப் பதிவுகள் மனமாற்றங்களைத் தரும் என்றே கருதுகிறேன்.
Thanks for sharing your experiance Tara.
Post a Comment