மறு நாள் காலை விடுதி அறையில் கண்விழித்தபோது அங்கே சூழ்ந்திருந்த அமைதி 'நீ வாசிங்டனில் இல்லை' என்று உணர்த்தியது. வாசிங்டன் டிசியில் காலையில் ஆம்புலன்ஸ்களின் அலறல்களைக் கேட்டுக்கொண்டே எழுந்திருப்பதுதான் வழக்கம். ஹ¥ஸ்டனின் அமைதியான, அலட்டிக்கொள்ளாத சூழல் வித்தியாசமாகத் தெரிந்தது. 9 மணியளவில் ஒரு ரெட் க்ராஸ் வாகனம் எங்களை Reliance City என்கிற இடத்திற்கு அழைத்துச் சென்றது. Reliance City என்பது, Astrodome, Reliance Center, Reliance Arena என்கிற மூன்று கட்டிடங்களைக் கொண்ட ஒரு சிறிய நகரம் போல் காட்சியளித்தது. அப்படியொரு மிகப் பிரம்மாண்டமான கட்டிட அமைப்பை நான் அதுவரைப் பார்த்ததே இல்லை! உள்ளே கிட்டத்தட்ட 25,000 பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்த Reliance City, இதுவரை அமெரிக்க வரலாறு கண்ட மிகப் பெரிய evacuation center.
அங்கே சென்று இறங்கியதுமே, அந்தச் சூழ்நிலையின் தீவிரம் என்னைத் தாக்கியது. வாசலிலும், கட்டிடத்தின் சுற்றுப் பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான ஆயுதம் தாங்கிய போலீஸார்! பக்கவாட்டில் இரண்டு பெரிய Walmart ட்ரக்குகள் உடைகள், காலணிகள், கம்பளிகள் போன்றவற்றை இறக்கிக்கொண்டிருந்தது. Salvation Army வண்டிகள், உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் வண்டிகள் அவ்வப்போது வந்து உணவு பொருட்கள், தண்ணீர் என்று வரிசையாக இறக்கிக்கொண்டிருந்தன. Shell, Exon-Mobile போன்ற நிறுவனங்களில் இருந்து நிறைய தன்னார்வத் தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஹ¥ஸ்டனின் சுட்டெரிக்கும் வெயிலை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எங்களுடைய ரெட் க்ராஸ் அடையாள அட்டையைப் பார்த்ததும் மறு பேச்சு பேசாமல் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
நானும், மரியாவும் (உடன் வந்தப் பெண்) Astrodome க்கு வழி கேட்டு அங்கே சென்றோம். அங்கே Head of Operations யார் என்று கேட்டுக் அவரைத் தேடுக்கண்டுபிடிப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. ஒரு வழியாக அவரைப் பார்த்து நாங்கள் யார், எங்கிருந்து எதற்காக வந்திருக்கிறோம் என்ற விபரங்களை விளக்கிய பிறகு, எங்களை இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட கணிணிகள் இருந்தன. அதில் எங்களுடைய மென்பொருள் ஓடிக்கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பூர்த்தி செய்த 'Hurricane Katrina Intake Sheet' என்கிற தாள்களை அடுக்கடுக்காக ஒருவர் அந்த அறையில் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருக்க, அந்த தாளில் உள்ள விபரங்களை கணிணியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் ரெட் க்ராஸ் ஒரு temp agency மூலம் வேலைக்கு நியமித்திருந்தது. அவர்களுக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $20! நாங்கள் அவர்களுக்கு 'Trainers from Washington DC" என்று அறிமுகப்படுத்தப்பட்டோம். 'நீங்கள் யார் எங்களுக்கு பயிற்சி அளிக்க' என்பது போல் ஒரு பார்வை முதலில் பார்த்தார்கள். அன்று முழுவதும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து மென்பொருளைப் பற்றி அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தோம். வந்த வேலையை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தாலும், மனதின் ஓரத்தில் பாதிக்கப்படவர்களை இங்கே எந்த இடத்தில் இருக்கிறார்கள்? அவர்களைப் போய் பார்க்கவேண்டுமே என்கிற ஆவல் இருந்துகொண்டிருந்தது. மரியாவுக்கும் அந்தே ஆவல் எழ, மதிய உணவு இடைவேளையில், கணிணி அறையிலிருந்து கழற்றிக்கொண்டு கால் போன போக்கில் நடந்து கண்ணில் கண்ட கதவுகளையெல்லாம் திறந்து பார்த்தோம். அப்படியொரு கதவைத் திறந்தபோது, ஒரு மிகப் பெரிய indoor மைதானம் தெரிந்தது. அங்கே நான் பார்த்த காட்சி...
"என்ன இது ஒரு refugee camp போல் இருக்கிறதே!" என்று நான் மரியாவிடம் சொன்னேன். அப்போது எங்களைக் கடந்து சென்ற ஒருவர் சட்டென்று நின்று, "உஷ்ஷ்ஷ்... இங்கே refugee camp என்கிற வார்த்தையை உபயோகிக்காதீர்கள். அந்த மக்கள் கேட்டார்களென்றால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. மேலும், அவர்களை மிகச் சாக்கிரதையாக அனுக வேண்டும். குடி, போதை மற்றும் சிகரெட் பழக்கம் உடையவர்களை வெளியே போகவிடாமல் ஒட்டுமொத்தமாக ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தால், அந்த இடம் எப்படியிருக்குமோ, அது போல் தான் அந்த மைதானம் இருக்கிறது. அதனால் சாக்கிரதை!" என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். நானும் மரியாவும் கதவுக்கருகில் நின்று, உள்ளே போவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தோம். பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மனதில் திகிலுடன், விரிந்த கண்களுடன் படிகளில் இறங்கி மைதானத்தை நோக்கிச் சென்றோம்.
தொடரும்...
1 comment:
அன்புள்ள தாரா அவர்களுக்கு,
தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். அருமை. இன்றைய தினமலரில் நீங்கள் எழுதியுள்ள அனுபவத்தை பிரசுரித்துள்ளேன். இரண்டாம் பக்கம் வெளியாகி உள்ளது. தினமலர் அமெரிக்காவில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இன்டர்நெட்டிலும் நீங்கள் அதைப் படிக்கலாம்.
http://www.dinamalar.com/2005oct12/flash.asp
அன்புள்ள நண்பன்,
சு.நாகரத்தினம்,
தினமலர், மதுரை.
snagarathinam@gmail.com
Post a Comment