Friday, October 21, 2005

பரதநாட்டியம் - Redefined

புதிதாக ஏதாவது கண்டுபிடிப்பது, துணிந்து ஒரு முயற்சியில் இறங்குவது, செய்ய முடியாததைச் செய்வது, அதை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்வது, தடைகளை உடைப்பது, இவை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி காண்பது - இப்படியெல்லாம் செய்பவர்கள் படைப்புத்திறன்(creativity) உள்ளவர்கள் என்று படித்தேன். பெரும்பாலும் கலைஞர்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். இருக்கவேண்டும்.

சமீபத்தில் நடிகை/நாட்டியக் கலைஞர் ஷோபனாவின் "Shyama, The Mystical Indian Woman" என்கிற நடன நிகழ்ச்சியில் ஷோபனாவின் படைப்புத் திறனைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது. பொதுவாக எனக்கு பரதநாட்டியம் மிகவும் பிடிக்கும். ஆனால் அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பரதநாட்டிய நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்துப்போய்விட்டது. அலுத்துப்போய்விட்ட என் ரசனையை புதுப்பித்தது இந்த நிகழ்ச்சி.

Image Hosted by ImageShack.us

சிக்கென்று மேடைக்கு வந்த ஷோபனா ஒரு நிமிடம் தில்லானா மோகனாம்பாள் பத்மினியைக் கண்ணில் நிறுத்தினார். வழக்கமாக பரதநாட்டிய மேடைகளில் இருக்கும் நடராஜர் சிலையை அங்கே காணவில்லை. வினாயகரை வணங்கி ஆடும் அந்த முதல் நடனமும் இல்லை. இங்கே தான் ஷோபனா தடைகளை உடைக்கிறார்! எடுத்த எடுப்பில் ஒரு காளி நடனம். காளி நடனத்தின் போது இசையில் special sound effects புகுத்தி ஒரு பயம் கலந்த சூழ்நிலையை உருவாக்கியிருந்தார். வழக்கமாக மிருதங்கமும் வயலினும் மட்டுமே பரதநாட்டிய இசைக்கு உபயோகப்படுத்துவார்கள். அடுத்து வந்த 'அஞ்சலி' என்கிற நடனத்திற்கு கம்பீரமான வீணை இசையை பிரத்யேகமாக உபயோகித்திருந்தது மிக அருமை! ஷோபனாவுடன் அவருடைய மூன்று மாணவிகளும் சேர்ந்து ஆடினார்கள்.

Image Hosted by www.MyImagesHost.net


அடுத்து ஒரு நாட்டிய நாடகம். நாடகத்தின் கரு இதுதான் - ஷ்யாமா என்கிற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாப்பிள்ளையின் தாய் அதிகப்படியாக வரதட்சினை கேட்கிறார். பெண்ணின் தாய், தன் அழகில்லாத பெண்ணுக்கு திருமணம் ஆனாலே போதும் என்று வரதட்சினை கொடுக்க ஒத்துக்கொள்கிறார். வரதட்சினை பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. திருமண நாளும் வருகிறது. அன்றும் சில பொருட்களை கேட்டு உடனே அவற்றைக் கொண்டுவந்தால் தான் திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள் மாப்பிள்ளையும் அவன் தாயும். பொருட்களைக் கொண்டுவருகிறேன் என்று வெளியே செல்லும் ஷ்யாமா, போலீஸ¤டன் திரும்பி வருகிறாள். மாப்பிள்ளையும் அவன் தாயும் கைது செய்யப்படுகிறார்கள். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு புது முயற்சி! பணத்தாசை பிடித்த மாமியாராக நாட்டிய நாடகத்தில் அசத்தினார் ஷோபனா.

Image Hosted by www.MyImagesHost.net

அடுத்து வந்த நடனங்கள் மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த Johann Sebastian Bach என்கிற புகழ் பெற்ற இசைக்கலைஞரின் இசைக்கு அமைக்கப்பட்ட ஒரு நடனத்தில் கொஞ்சம் bale கொஞ்சம் tap dance என்று பரதநாட்டியத்துடன் அளவாகக் கலந்து அளித்தார் ஷோபனா. அடுத்து ஏ.ஆர். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' பாடலுக்கு ஆடிய நடனம், இந்தியாவின் பல முகங்களை அழகாகப் பிரதிபலிபலித்தது. குறிப்பாக க்ரிக்கெட் விளையாட்டு, அழகிப்போட்டியில் 'cat walk', எல்லையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் போரில் ஈடுபடுவது போன்றவற்றை மிகத் துல்லியமாகவும், லாவகமாகவும் பரதநாட்டியத்தில் ஷோபனாவும் அவருடைய மாணவிகளும் அளித்தது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. இவை எதிலுமே பரதநாட்டியத்தின் அழகோ, கெளரவமோ சற்றும் குறைந்துவிடவில்லை. ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரால் மட்டுமே இப்படி ஒரு கலை வடிவத்தின் அழகு குறையாமல், அதன் கலாசார எல்லைகளைத் தாண்டாமல் ஒரு புதிய கோணத்தை நிறுவ முடியும்.

எனக்கு பல கேள்விகளை ஷோபனாவிடன் கேட்கவேண்டும் என்று ஆவல் இருந்தாலும், அதற்கு சாத்தியம் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய பெரும்பான்மையான கேள்விகளுக்கு நான் இனையத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்த ஷோபனாவின் சில நேர்க்காணல்களின் மூலம் விடைகள் கிடைத்தன. மற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசம் - இசை! இங்கே இசைக்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி ஷோபனா சொன்னது - "என்னால் சாதாரண, அல்லது சராசரிக்குக் குறைவாக உள்ள இசைக்கு நாட்டியமாட முடியாது. அதனால் என்னுடைய நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு பிரபலமான இசைக்கலைஞர்களையே நான் நியமிக்கிறேன். அவர்களை முழுமையாக நிகழ்ச்சியில் ஈடுபடுத்துகிறேன். இசையின் உணர்வுகளை என் நாட்டிய அசைவுகளில் பிரதிபலிக்க முயற்சிக்கிறேன்".

மேலும் அவர் "எப்பொழுதுமே கடவுளைப் பற்றிய நாட்டியங்களை ஆடாமல், சாதாரண மனிதர்களைப் பற்றியும் ஆடி வருகிறேன். பலர் என்னை பரதநாட்டியத்தின் சம்பிரதாயத்தைக் குலைக்கிறேன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். நான் அவர்களைக் கேட்கிறேன், யாருக்கு பரதநாட்டியத்தின் வேர்களைப் பற்றி தெரியும்? பல நூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்களையும், சிற்பங்களையும் தானே நாம் பார்த்திருக்கிறோம்? அப்படித்தான் உடைகள் இருந்தன, அப்படித்தான் நடன அசைவுகள் இருந்தன என்று எப்படித் தெரியும்? அது அந்த ஓவியருடைய அல்லது சிற்பியினுடைய கற்பனையாக இருந்திருக்கலாம் இல்லையா? இப்படித்தான் ஒரு கலையை வெளிப்படுத்த வேண்டும் என்று கட்டுப்படுத்துவது சரியல்ல. சில எல்லைகள் இருக்கவேண்டும். அந்த எல்லைக்குள் ஏற்படும் தேடலும், அந்தத் தேடலின் வெளிப்பாடும் அந்தக் கலை வடிவத்தை மேலும் அழகுபடுத்தும்." என்று கூறியிருக்கிறார்.

ஷோபனா, உங்கள் தேடலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்!

8 comments:

Priya said...
This comment has been removed by a blog administrator.
Priya said...

தாரா,
ஒரு சிறந்த கலைஞரைப் பற்றிய நல்ல பதிவு. ஷோபனாவைப் பற்றி இன்னும் சிறிது விவரமாக எழுதுங்களேன்.

kurunagaiatgmaildotcom என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப இயலுமா?
நன்றி

நளாயினி said...

வாசித்தப் புல்லரித்துப்போனேன். உங்களின் எழுத்தோட்டம் குhட அந்த நடன இசையின் வேகத்தோடு வந்திருப்பதாக உணர்கிறேன்.
உடலை அசைக்க செய்து விட்டிருக்கிறீர்கள் என்னை பலவருடங்களின் பின். நன்றி.

அன்பு said...

ஷ்யாமா என்கிற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாப்பிள்ளையின் தாய் அதிகப்படியாக வரதட்சினை கேட்கிறார். பெண்ணின் தாய், தன் அழகில்லாத பெண்ணுக்கு திருமணம் ஆனாலே போதும் என்று வரதட்சினை கொடுக்க ஒத்துக்கொள்கிறார். வரதட்சினை பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. திருமண நாளும் வருகிறது. அன்றும் சில பொருட்களை கேட்டு உடனே அவற்றைக் கொண்டுவந்தால் தான் திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள் மாப்பிள்ளையும் அவன் தாயும். பொருட்களைக் கொண்டுவருகிறேன் என்று வெளியே செல்லும் ஷ்யாமா, போலீஸ¤டன் திரும்பி வருகிறாள். மாப்பிள்ளையும் அவன் தாயும் கைது செய்யப்படுகிறார்கள். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு புது முயற்சி! பணத்தாசை பிடித்த மாமியாராக நாட்டிய நாடகத்தில் அசத்தினார் ஷோபனா.

பரதத்தில் இத்தனையுமா!? சம்பிரதாய பரதநாட்டியம் எனக்குப்புரியாது என்று மனதுள் நினைத்தே பல நேரம் ஓரிரு நிமிடங்களுக்குமேல் லயிக்காமல் வேறுபக்கம் போயிருக்கிறேன். ஆனால், பரதநாட்டியத்தை மாறுபட்டமுறையில் வெகு அழகாக ரசித்து, லயித்து பாராட்டி இங்கு பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள், மிக்க நன்றி.
ஷோபனாவின் "லைவ் இன் ப்ராட்வே" என்றொரு டிவிடி வட்டு பார்த்தேன் - முடிந்தால் வாங்கிப்பார்க்கிறேன். நன்றி.

Thara said...
This comment has been removed by a blog administrator.
Thara said...

Thanks Nalayini & Anbu.

Anbu, please don't buy that DVD. I bought it and was dissappointed. Shobana's dance was excellent, but the sound video recording quality was very poor.

Thara.

Go.Ganesh said...

பரதநாட்டியத்தில் இத்தனை விஷயங்கள் செய்ய முடியுமென்று அடிக்கடி நிரூபித்து வருபவர் ஷோபனா. தகதிமிதா என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்திருந்தால் உடனே புரியும். ஆனாலும் நீங்கள் சொல்வதை பார்த்தால் அவரது உழைப்பு இப்பொழுது பலமடங்கு பெருகியிருக்கிறது போலும்.

துளசி கோபால் said...

தாரா,

நல்ல அருமையான பதிவு.

எங்கியோ தீஞ்ச வாசனை வருதா?

எல்லாம் இங்கே நியூஸியில் இருந்துதான்.

இதுக்கெல்லாம் இங்கே கொடுப்பனை இல்லை தாரா.