மைதானத்தை நோக்கிச் செல்லச் செல்ல காட்சிகள் க்ளோஸ் அப்பில் தெரிந்தன. மைதானத்தின் பார்வையாளர் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆரஞ்சு நிற நாற்காலிகள். மைதானத்தைச் சுற்றி வேலிபோல் அமைத்திருந்தனர். வேலிக்கு உள்ளே வரிசையாக படுக்கைகள். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் படுக்கையில் படுத்திருந்தனர். சிலர் செய்வதறியாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். மருத்துவர்கள் ஒரு சிலரை சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் சிலர் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். அனைவர் கண்களிலும் ஒரு வெறுமை தெரிந்தது - தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது, இனி சான் போனால் என்ன முழம் போனால் என்ன என்பது போல்! அங்கிருந்த பெண்கள் மிகவும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருந்தார்கள். காரணம் அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்கவேண்டியிருந்தது. சில குழந்தைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை போலும் அவர்களுக்கு! ஆனால் அம்மாவும் அப்பாவுமே நொந்து நூலாகிப்போய் அங்கே இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அங்கே கண்ணுக்கு எட்டிய வரை எல்லாருமே கருப்பர்கள் தான். எண்ணி ஒரு 20 அல்லது 25 பேர் வெள்ளைகாரர்கள் இருந்திருப்பார்கள்.
மதிய உணவுக்கு மிக நீண்ட வரிசை உருவாகியிருந்தது. வரிசையில் நிற்காமல் ஓரமாக ஒரு நடுத்தரவயதுக்காரர் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தார். அவரின் ஒரு ரெட் க்ராஸ் பெண் "நீங்கள் சாப்பிடப்போவதில்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர் "எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது, மேலும் சக்கரை நோயாளி நான். என்னால் அந்த வரிசையில் வெகு நேரம் நிற்க முடியாது" என்றார். உடனே விரைந்து சென்று அவருக்காக இரண்டு பீஸா துண்டுகளை எடுத்து வந்துக் கொடுத்தார் அந்தப் பெண். அதை வாங்கி பசியுடன் அவசர அவசரமாக சாப்பிடத்தொடங்கினார் அந்த நபர். வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞன், "நான் நீயூ ஆர்லியன்ஸில் இருந்து வெறுத்து ஓடி வந்ததைப் போலவே இங்கிருந்து ஒரு நாள் ஓடப்போகிறேன். I hate Texas" என்று கத்திக்கொண்டிருந்தான்.
அங்கே காத்ரீனாவின் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், சூப்பர் டோமின் (Superdome, New Orleans) பாதிப்பிலிருந்தும் அந்த கெட்ட நினைவுகளிலிருந்தும் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். அப்படி மன நிலை பாதிக்கப்பட்டோ, மன அழுத்தமோ உள்ளவர்களிடம் "Mental Health Service" என்ற அடையாள அட்டை அனிந்த ரெட் க்ராஸ் வாலண்டியர்கள் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு பெண்ணின் புலம்பலைக் கேட்க நேர்ந்தது. "கைக்குழந்தையுடன் சூப்பர் டோமில் நான் மூன்று நாட்கள் கஷ்டப்பட்டேன். கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. கையில் நான் வைத்திருந்த கொஞ்சம் பணமும் திருட்டு போய் விட்டது. ஒரு நாள் கண்ணுக்கெதிரே துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு முறை நான் கழிவறைக்குச் சென்ற போது அங்கே இறந்து கிடந்த ஒரு குழந்தையைப் பார்தேன். அந்தக் காட்சி இப்பொழுதும் நினைவுக்கு வந்து என்னை வாட்டியெடுக்கிறது. சூறாவெளியிலேயே என் உயிர் போயிருக்கக் கூடாதா? இன்னும் எத்தனை நாள், எத்தனை இடத்தில் நான் இருந்து கஷ்டப்பட போகிறேனோ தெரியவில்லையே!" என்று கண்ணீர் வழிய அந்தப் பெண் சொல்ல, எனக்குத் தொண்டையை அடைக்க, அங்கிருந்து நகர்ந்தேன். மற்றொரு இடத்தில் ஒரு தாய் தன் 10 வயது மகனை கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டிருந்தாள். தரையில் பீஸா துண்டுகள் இறைந்து கிடந்தன. "இன்னும் உனக்கு உன் அப்பன் சாப்பாடு போடுவான் என்ற நினைப்பா?" என்று கத்திக்கொண்டிருந்தாள்.
கனத்த மனதுடன், மைதானத்தைச் சுற்றி மெதுவாக நடந்தேன். அங்கிருந்த ஒரு மிகப் பெரிய பலகையில் நிறைய நோடிஸ்களும் புகைப்படங்களும் ஒட்டப்பட்டிருந்தன. அருகில் சென்று பார்த்தபோது, அவையெல்லாம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்கள். ஒரு வீட்டின் படம் போட்டிருந்த ஒரு நோட்டிஸ் என்னைக் கவர்ந்தது. ஹ¥ஸ்டனில் வசிக்கும் ஓரு குடும்பம், தங்கள் வீட்டில் இரண்டு அறைகள் காலியாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடுமபங்களில் இரண்டு குடும்பங்களுக்கு தம் வீட்டில் தங்க இடம் கொடுப்பதாகவும் அதில் அறிவித்திருந்தனர். படிக்கவே ரொம்பப் பெருமையாக இருந்தது. தொடர்ந்து நடக்கையில், ஒரு வயதானவர், "தயவு செய்து என்னை பஸ்ஸில் அனுப்புங்கள். விமானத்தில் வேண்டாமே" என்று ஒரு ரெட் க்ராஸ் வாலண்டியரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். 65 வருடங்களில் ஒரு முறைக் கூட விமானத்தில் பறந்ததில்லையாம் அவர். அதற்கு அந்த வாலண்டியர், "நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்திலிருந்து தப்பிக்க வீட்டுக் கூரையிலிருந்து தண்ணீரில் குதித்து நிந்தி தப்பித்து வந்தவர் நீங்கள். அதை விட விமானப் பயணம் ஒன்றும் கடினம் இல்லை" என்று அவரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.
திடீரென்று ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வர, எல்லோரும் அமைதியானார்கள். "நியூ ஆர்லியன்ஸிலிருந்து இப்பொழுது வந்த ஒரு பேருந்தில் இங்கே வந்திருக்கும் டேனியல் கார்ட்டர் தன் மனைவி க்ளாராவைத் தேடிக்கொண்டிருக்கிறார்" என்று அறிவிக்க, மூன்று நாட்களுக்கு முன்பே அங்கு வந்துவிட்ட க்ளாரா என்கிற அந்தப் பெண்மணி "நான் இங்கேதான் இருக்கிறேன்" என்று பெருங்குரலில் அலற, அந்தக் கணவன் ஓடி வந்து அவளைக் கட்டிக்கொள்ள, சுற்றி இருப்பவர்களெல்லாம் கைத்தட்டினார்கள். இதைப்போல் பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காட்சிகள் தினமும் அங்கே நடந்துகொண்டிருந்தது.
மைதானத்தைச் சுற்றி வந்தது உலகத்தையே சுற்றி வந்தது போல் இருந்தது. அடுத்து வந்த இரண்டு நாட்களில், கணிணி அறையிலேயே பெரும்பாலும் வெலை செய்தாலும், ஓய்வு நேரங்களில் மைதானத்திற்குச் சென்று அங்கிருக்கும் ரெட் க்ராஸ் வாலண்டியர்களுக்கு முடிந்த சில உதவிகளைச் செய்து வந்தோம். அதற்குள் கணிணியில் வேலைச் செய்யும் வாலண்டியர்கள் அனைவரும் அந்த மென்பொருளில் நிபுனர்களாகிவிட, எங்களை ஹ¥ஸ்டனில் உள்ள மற்றொரு ஷெல்டருக்கு பயிற்சி அளிக்க அனுப்பினார்கள். அது St.Agnes என்கிற மிகப் பெரிய Baptist Church.
அங்கே காட்சிகள் மாறியிருந்தாலும், சோகங்கள் மாறவில்லை!
தொடரும்...
1 comment:
I went to (y)our home-town (chidambaram) last week and happened to see a link to your blog in Dhinamalar. I hope you will be aware of it.
It is good to see someone writing in Tamil even after going places. Your blogs are good. keep writing.
Post a Comment