இந்தப் பதிவை நேற்று தமிழ்மணத்தில் சேர்த்தேன். சில பிழைகளும், குழப்பங்களும் இருந்ததால், அவற்றைத் திருத்தி மீண்டும் சேர்க்கிறேன்.
காத்ரீனா வந்து அமெரிக்காவின் அடிவயிற்றைக் கலக்கி, சுழற்றி அடித்து பின் மறைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. அமெரிக்கா எத்தனையோ இயற்கை சீற்றங்களை கடந்து வந்திருந்தாலும், காத்ரீனா என்கிற சூறாவளி வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்பது உண்மை. காரணம் காத்ரீனா ஏற்படுத்திய இயற்கை சேதம் மட்டுமல்ல. நீயூ ஆர்லியன்ஸில் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக மனிதன் ஏற்படுத்தியிருந்த சேதத்தை காத்ரீனா வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுதான் ஒரு முக்கிய காரணம். ஒரு இயற்கைச் சேதத்திற்கான அரசின் உடனடி நடவடிக்கைகள் வழக்கமாக உணவு, தண்ணீர், உடைகள், மருத்துவம், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது. அதே போல், மீடியாவின் நடவடிக்கையும் வழக்கமானது தான் - பாதிக்கப்பட்ட மக்களின் வீரத்தைப் பற்றியும், விவேகத்தைப் பற்றியும், எப்படி அவர்கள் ஒற்றுமையாக இருந்து போராடி அந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தார்கள் என்பது பற்றியும், மீட்பு நடவடிக்கைகள் எப்படி நடந்தன என்பதைப் பற்றியும் எழுதுவது தான். ஆனால் காத்ரீனாவைப் பொறுத்தவரை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக நடந்திருக்கிறது. நிவாரணப் பொருட்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்புவதற்கு முன்பே, ஆயுதம் தாங்கிய படைகளை நியூ ஆர்லியன்ஸ¤க்கு அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அதே போல் மீடியாவும், மீட்புப் பணிகளைப் பற்றிய கதைகளை எழுதுவதற்கு முன்பே கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை போன்ற கொடூரங்களை எழுதவேண்டிய நிலைமை வந்துவிட்டது. இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விசயம் தான். அதைப் பற்றி நான் எழுதப் போவதில்லை. காத்ரீனா தொடர்பாக என்னுடைய சில அனுபவங்களைப் பற்றி மட்டும் எழுதப் போகிறேன்.
ஒரு மாதத்திற்கு முன் வரை காத்ரீனாவின் பாதிப்புடன் எனக்கு நேரடித் தொடர்பு ஏற்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்தத் தொடர்பு ரெட் க்ராஸ் (The American Red Cross) மூலம் எனக்குக் கிடைத்தது. காத்ரீனா போன்ற சூறா¡வளிகள், வெள்ளங்கள், நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைச் சேகரித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு செஞ்சிலுவைச் சங்கம் உபயோகப்படுத்தும் ஒரு மென்பொருளை தயாரித்த IT குழுவில் நானும் இருந்தேன். காத்ரீனாவினால் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே முகாம்கள்(shelter) அமைத்து ரெட் க்ராஸ் தங்கவைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். அதில் பெரும்பான்மையான மக்கள் ஹ¥ஸ்டனில்(Houston) உள்ள ஆஸ்ட்ரோடோம் (Astrodome) என்கிற விளையாட்டு மைதானத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இடங்களில் வேலை செய்யும் ரெட் க்ராஸின் வாலண்டியர்களுக்கு அந்த மென்பொருளை உபயோகிப்பதற்கு அவசர பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் வந்து அலைமோதும் அந்த முகாம்களில் புதிதாகக் கற்றுக்கொண்ட ஒரு மென்பொருளுடன் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். கணிணியைச் சரியாக உபயோகிக்கக்கூடத் தெரியாதவர்ளை ஷெல்டர்களில் ரெட் க்ராஸ் நியமித்திருக்கிறது என்று மீடியா குற்றம் சாட்டத் தொடங்கியதைக் கேட்டு ரெட் க்ராஸ் உஷாரானது!
September 9 ஆம் தேதி நான் பாட்டுக்கு அலுவலகத்தில் என் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் மானேஜர் என்னிடம் வந்து "நீ ஹ¥ஸ்டனுக்கு உடனடியாகக் கிளம்ப முடியுமா?" என்று கேட்டார். தீடீரென்று அவர் அப்படிக் கேட்டதால் சற்றுத் திகைத்து, "எதற்கு?" என்று கேட்டேன். "ஹ¥ஸ்டனில்(Houston) ரெட் க்ராஸ் ஷெல்டர்களில் வேலை செய்யும் வாலண்டியர்களுக்கு நம்முடைய மென்பொருளை உபயோகிக்க பயிற்சி அளிக்க வேண்டும். மிகவும் அவசரமாக அவர்களுக்கு உதவி தேவை" என்றார். ஒரு வினாடி யோசித்து "சரி போகிறேன்" என்று சொன்னது தான் தெரியும். மறு நாள் காலையில் விமானத்தில் இருந்தேன். எங்கள் குழுவில் வேலை செய்யும் மற்றோரு அமெரிக்கப் பெண்ணும் என்னுடன் வந்தாள். விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து ஹ¥ஸ்டனில் இருக்கும் ரெட் க்ராஸ் அலுவலகத்திற்குச் சென்றோம். நிமிடத்திற்கு ஒரு டாக்ஸியில் அமெரிக்காவின் எல்லாப் பகுதியிலிருந்தும் ரெட் க்ராஸ் வாலண்டியர்கள் வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள். பிரமிப்பாக இருந்தது ரெட் க்ராஸின் சரித்திரத்தில் கத்ரீனா உண்டாக்கிய பெருஞ் சேதத்தைப் போல் அதுவரை பார்த்ததில்லை என்பதால் எல்லாரும் அங்கே ஆடிப்போய்த்தான் இருந்தார்கள். அடையாள அட்டைகள், ரெட் க்ராஸ் மேலங்கி போன்ற இத்யாதிகளை வாங்கிக்கொண்ட பிறகு நாங்கள் தங்க வேண்டிய விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
ஹ¥ஸ்டன் டெளன் டவுன் பகுதியில் உள்ள Hyatt Regency...மிகச் சொகுசான விடுதி! எனக்கு மனதிற்குள் குற்ற உணர்ச்சி எட்டிப் பார்த்தது. எத்தனைப் பேர் நியூ ஆர்லியன்ஸில் வீடிழந்து படுக்க இடமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்! நமக்கென்ன Hyatt Regency வேண்டியிருக்கிறது? என் மனதில் உள்ளதைப் படித்தது போல் இன்னொரு ரெட் கிராஸ் பெண்மனி சொன்னார் "அடுத்த முறையும் வாலண்டியர் செய்யவேண்டும் என்று நம்மை ஊக்கப்படுத்தவே இந்த மாதிரி வசகிகளெல்லாம் ரெட் கிராஸ் நமக்கு செய்கிறது" என்று. மேலும், அங்கே போன பிறகு தான் தெரிந்தது Hyatt கிட்டத்தட்ட 200 அறைகளை ரெட் க்ராஸ¤க்கும், மீதம் 200 அறைகளை FEMA மற்றும் 'Search and Rescue Operation Squad' போன்ற அமைப்புகளுக்கும் அற்பணித்திருக்கிறது என்று. அறைச் சாவியை வாங்கிக்கொண்டு எலிவேட்டருள் நுழைந்தபோது, கூடவே ஒரு பருமனான பெண்மனி ஒரு பெரிய மூட்டைத் துணிகளுடன் உள்ளே நுழைந்தார். என்னுடைய அலுவலகத் தோழி "இத்தனைத் துணிகளையும் இன்றே ஷாப்பிங்கில் வாங்கினீர்களா?" என்று கேட்க, அந்தப் பெண்மனி "இல்லையம்மா, நாங்கள் homeless people. நியூ ஆர்லியன்ஸிலிருந்து போன வாரம் தான் டெக்ஸாஸ் வந்தோம். இந்தப் பழைய துணிகளெல்லாம் என் பிள்ளைகளுக்கு ரெட் க்ராஸ் ஷெல்டரில் இருந்து எடுத்து வந்தேன். கடவுள் புண்ணியத்தில் சில நாட்களுக்கு எங்களை Hyatt இல் தங்க வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு எங்கே இருக்கப்போகிறோமோ தெரியவில்லை" என்று பெருமூச்சு விட்டார். இதற்கே எனக்கு மனதை யாரோ பிசைந்தது போல் இருந்தது! ஆனால் மறு நாள் நாங்கள் நேரில் பார்த்த காட்சிகள் மனதை உறுக்கிப் பிழிந்துவிட்டன.
தொடரும்...
2 comments:
ரொம்ப நாளைக்குப் பிறகு எழுதுறீங்க.
நேரடியாக உதவிவிட்டு வந்துள்ளீர்கள் உங்களின் சேவைக்கு நன்றி
Post a Comment