Wednesday, November 28, 2007

திரைப்படங்களில் போர்/யுத்தம்/கலவரம்

சமீபத்தில் போர்/யுத்தம் சம்பந்தப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அருமையான திரைப்படங்கள் அவை. ஆங்கிலத்தில் நிறைய போர் திரைப்படங்கள் இருக்கின்றன. உலகப்போரில் இருந்துத் தொடங்கி, பின் வியட்னாம் போர் வரை ஏராளமானப் படங்கள்! இப்போதும் ஈராக்கில் நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் பற்றி சமீபத்தில் தான் திரைப்படங்கள் வரத்தொடங்கியுள்ளது. போரினை பின் புலமாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாக ஏராளமான கதை அமைப்புகள் குவிந்து கிடக்கின்றன. போரின் பயங்கரம், துயரம், தியாகம், போர் முகாம்களில் நடக்கும் நிகழ்வுகள், எதிரிகளிடமிருந்து தப்பித்தல், சமூகத்தில் போரின் தாக்கம், வீர தீர செயல்கள் - இப்படி சொல்லிகொண்டே போகலாம். காதலும் நகைச்சுவையும் கூட ஆங்காங்கே சில திரைப்படங்களில் கலந்திருக்கும். சில போர்த் திரைப்படங்கள் மக்களிடையே தேசபக்தியைப் பரப்புவதற்காகவே எடுக்கப்பட்டதுபோல் இருக்கும். ஹாலிவுட்டுக்கும்(hollywood) பெண்டகனுக்கும்(pentagon) இது ஒரு ரகசிய உடன்பாடாக இருக்குமோ என்றுகூட ஒரு நண்பர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார்!

இந்தியாவில் கூட இந்தியா-பாகிஸ்தான் போர், கார்கில் போர் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இதையெல்லாம் வைத்து தமிழ் திரைப்படம் எடுக்க யாருக்கும் தோன்றவில்லையே? சிவாஜி, எம்.ஜி.யார் காலத்தில் சரித்திரப் போர் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலும் பார்த்தீர்களென்றால் கதாநாயகன் ஒருவனே ஒரு நாட்டைக் காப்பாற்றுவது, இளவரசியைக் கைப்பிடிப்பது போன்ற மையக்கருத்துக்கள் தான் இருக்கும். நிகழ்காலத்தில், நாம் வாழும் காலத்தில் நடக்கும் போர் நிகழ்வுகளைப் பற்றி தமிழில் திரைப்படம் வந்ததில்லை.

காதல், ஹீரோயிசம், ஆபாசம் இவையெல்லாம் சற்றும் இல்லாத கலப்படமில்லாத அக்மார்க் போர் திரைப்படம் ஒன்று பார்க்கவேண்டுமென்றால், "Tora Tora Tora" என்ற ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்க்கலாம். "Tora" என்றால் ஜப்பானிய மொழியில் "தாக்கு"(attack) என்று அர்த்தம். பேர்ல் ஹார்பரில்(Pearl Harbor) உள்ள அமெரிக்கக் கடற்படையின் மீது எதிர்பாராதவிதமாக ஜப்பானியர்கள் விமானத் தாக்குதல் நடத்தி, தூங்கிக்கொண்டிருந்த ஒரு மிருகத்தை உசுப்பி விட்டு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவை தள்ளிவிட்ட அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை மிகத் திறமையாக காட்சியமைத்திருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படமா என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஜப்பானிய விமானங்கள் பறந்து பறந்து குண்டு போடும் காட்கள் அதி அற்புதம்! இந்தப் படம் வெளிவந்த காலத்தில், கணிணியைக் கொண்டு கிராபிக்ஸ் சாகசங்கள் செய்யும் வசதிகள் எல்லாம் கிடையாது. படத்தில் வரும் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் எல்லாமே நிஜமானவை! இந்தத் தாக்குதலின் போது அமெரிக்கர்களின் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறுகளை மூடி மறைக்காமல் காட்டியது பாராட்டுக்குறியது. ஒரு போர் சூழலின் மத்தியிலேயே நம்மை கொண்டு செல்லும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் இது.

"Home of the Brave" என்று சமீபத்தில் வந்த ஒரு படம் பார்த்தேன். "Home of the Brave" என்கிற வார்த்தைகள் அமெரிக்க தேசிய கீதத்தில் இடம் பெறுகின்ற வார்த்தைகள் என்று ஒர் நண்பர் சொல்லி தெரிந்துகொண்டேன். இது ஒரு முழுமையான போர்த் திரைப்படம் அல்ல, ஆனால் ஈராக்கில் சில காலம் இருந்துவிட்டு ஊர் திரும்பும் அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலரின் வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்பு. போரில் நண்பர்களை, உடல் உறுப்புகளை, மன நிம்மதியை இழந்த இவர்களுக்கு, யதார்த்த குடும்ப வாழ்க்கையில் தங்களைப் பொறுத்திக்கொள்வது சிரமமாய் இருக்கிறது. குண்டு வெடிப்பில் ஒரு கையை இழந்த ஒரு இளம் விராங்கணைக்கு, எந்தக் கவலையுமில்லாமல் SUV வாகனங்களை ஓட்டிக்கொண்டு வந்து StarBucks கடையில் காப்பி குடிக்கும் பொறுப்பற்றவர்களை கண்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஈராக் ராணுவ முகாமில் மருத்துவராக இருந்த ஒருவர், தன்னால் காப்பாற்ற முடியாமல் இறந்து போனவர்களை மறக்கமுடியாமல் குடிக்கத் தொடங்கிவிடுகிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவருடைய மனைவி, ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து "போராடியது நீ மட்டும் தானா? நீ இங்கே இல்லாத போது குழந்தைகளை வளர்க்க, வீட்டைப் பார்த்துக்கொள்ள, பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள என்று தினம் தினம் நானும் தான் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்தேன். ஆனால் உன்னைப் போல் குடிக்காமல், நீ உயிருடன் திரும்பி வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்" என்று சீறுவது அருமை! தன் கண்ணெதிரே எதிரியின் துப்பாக்கிக்கு பலியான தன் உயிர் நண்பனின் நினைவிலிருந்து மீள முடியாத மற்றொரு ராணுவ வீரன், எங்கெங்கோ வேலைத் தேடி, கடைசியில் தன்னை எங்குமே பொறுத்திக்கொள்ள இயலமால் ராணுவத்திற்கே திரும்பிவிடுகிறான். மிகவும் உணர்வுப்பூர்வமானத் திரைப்படம்.

நாடுகளுக்கிடையே நடக்கும் யுத்தம் மட்டுமன்றி, இரு இனங்களுக்கிடையேயும் யுத்தங்கள் நடக்கின்றன. "Hotel Rwanda" என்கிறத் திரைப்படம் ரவாண்டாவில் உள்ள டுட்சி இனத்தினருக்கும் ஹுட்டு இனத்தினருக்கும் இடையே நடக்கும் இனக்கலவரத்தைப் பற்றியது. அதே போல் அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையேயான இனக்கலவரத்தைப் பற்றி பல நல்ல திரைப்படங்கள் இருக்கின்றன - "Missisippi Burning", "In The Heat Of The Night". இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைப் பற்றியும் ஆங்கிலத் திரைப்படங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. "ஆணிவேர்"(குண்டு வெடித்தவுடன், எல்லாரும் அந்த இடத்தைவிட்டுத் தப்பித்து வேறு திசையில் ஓடும் போது, அந்த இளைஞன் மட்டும் குண்டு வெடித்த அந்த திசையை நோக்கி ஓடுகிறான் - அங்கே காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக! என்ன ஒரு உணர்வுபூர்வமான சித்தரிப்பு!), "காற்றுக்கென்ன வேலி" போன்ற தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த இனக்கலவரத்தை ஆங்கில இயக்குனர்கள் திரைப்படமாக்கினால் சர்வதேச அளவில் வெளிச்சம் கிடைக்குமென்று தோன்றுகிறது.

ஆனால் ஈராக் கலவரம் பற்றிய திரைப்படங்களை பெரும்பாலான அமெரிக்க மக்கள் விரும்பிப் பார்ப்பதில்லை என்றொரு கருத்து இருக்கிறது. உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் பற்றிய திரைப்படங்கள் வெகுவாக வரவேற்கப்பட்டன, ஏனென்றால் அந்தத் திரைப்படங்களெல்லாம் போர் முடிந்து பல ஆண்டுகள் சென்றபின் எடுக்கப்பட்டன. ஆனால் ஈராக் பற்றிய திரைப்படங்கள் தற்போது தினம் செய்திகளில் படிக்கும், பார்க்கும் பயங்கரங்களை காட்சிகளாகக் கொண்டிருப்பதால், மக்கள் அவற்றைப் பார்க்கத் தயங்குவது புரிந்துகொள்ள முடிகிறது.

"A Bridge Too Far", "Behind Enemy Lines", "Rules of Engagement", "Black Hawk Down", "Courage Under Fire" - இவையெல்லாம் நான் பார்த்து ரசித்த அருமையான போர் திரைப்படங்கள்.

ஹூம்ம்ம்ம்...இப்படிப்பட்ட நல்லத் திரைப்படங்கள் தமிழில் எப்போது வரும்? 'பஞ்ச்' வசனங்கள், காதல் லீலைகள், அறுவாள் சண்டை...இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமா வரமாட்டேங்குதே?!

4 comments:

Anonymous said...

Good Post Thara. Thanks for recommending good movies.

ஹாரி said...

//கதாநாயகன் ஒருவனே ஒரு நாட்டைக் காப்பாற்றுவது, இளவரசியைக் கைப்பிடிப்பது//

Not only in those days. Todays Heroes are also doing the same thing.

Anonymous said...

How about Saving private ryan and my beautiful days?

பாண்டியன் said...

நல்ல பதிவு . வாழ்த்துக்கள்