Tuesday, November 13, 2007

ஒரு பொம்மையின் கதை

Image Hosting by Picoodle.com

பார்பி(Barbie) என்கிற பொம்மையைப் பற்றி எல்லாரும் கேள்விபட்டிருப்பீர்கள். சாதாரண பொம்மைகளுக்கும் பார்பிக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. பொதுவாக சிறுமிகள் வைத்து விளையாடும் பொம்மைகள் ஒரு சிறு குழந்தை வடிவத்தில் இருக்கும். அதனை தூக்கிவைத்து, அரவணைத்து, குளிக்க வைத்து, சோறூட்டி அம்மா விளையாட்டு விளையாடுவார்கள் சிறுமிகள். ஆனால் 'பார்பி' என்கிற பொம்மை ஒரு அழகிய பதின்ம வயது இளம் பெண். தங்க நிறக் கூந்தல், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்கள், வாழைத்தண்டு போன்ற கால்கள், கவர்ச்சியான மெல்லிய உடல் - ஒரு இளம் அமெரிக்கப் பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புவாளோ அப்படியே இருக்கும் ஒரு பொம்மை. அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பா, ரஷ்யா, இந்தியா போன்ற பல நாடுகளில் அந்தந்த கலாசாரத்திற்கேற்ப மாறுபட்ட உடையலங்காரங்களுடன் வலம் வந்தாள் இந்த பார்பி! இந்தியாவில் புடவையும் சுரிதாரும் அனிந்த பார்பியை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படி ஒரு அழகான பொம்மையை யாராவது வெறுக்கமுடியுமா?

முடியும். பெண்களை ஒரு அழகு பிம்பமாக விளம்பரப்படுத்தும் ஒரு கலாசாரத்தின் பிரதிநிதியான பார்பி பொம்மையை பெண்ணியவாதிகள் வெறுத்தார்கள். மேலும், 'அழகு' என்பதற்கு தவறான அர்தத்தை தம் குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்பாத தாய்மார்கள் பார்பியை வெறுத்தார்கள். பார்பியுடன் வரும் அவளுடைய கார், வீடு, அலங்காரப் பொருள்கள் எல்லாமே ஒரு சொகுசு வாழ்க்கையையும் பணக்காரத் தன்மையையும் மட்டுமே வெளிப்படுத்தின. பார்பி நினைத்தபடியெல்லாம் வாழ்ந்தாள். மருத்துவராக, விமானப் பனிப்பெண்ணாக, முதலாளியாக, நடிகையாக, வழக்கறிஞ்சராக, இளவரசியாக! அவளுக்கு என்றுமே வயதாகாது, தலை நரைக்காது, முகத்தில் சுறுக்கம் விழாது, உடல் பருக்காது! இப்படிபட்ட பார்பியைப் பார்த்து வளரும் குழந்தைகளின் மனதில் தவறான ஆசைகளும் ஏக்கங்களும் விதைக்கப்படுவது இயற்கைதானே? யதார்த்த வாழ்க்கையில் அன்றாடம் போராட்டங்களிடையே வாழ்பவர்களுக்கு, பார்பியின் சொகுசு தோற்றமும் வாழ்க்கை முறையும் எட்டிப்பிடிக்க முடியாத ஒரு கனவாக இருந்தது. எந்த ஒரு கொள்கையும், சமூக நல நோக்கும் இல்லாத, பொறுப்பற்ற ஒரு தவறான எடுத்துக்காட்டாக விளங்கிய பார்பி பொம்மையை தம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க மறுத்தார்கள் பல பெற்றோர்கள்.

எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்த பார்பி, அதிகப்படியான எதிர்ப்பை சந்தித்தது மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில். ஈரானில் பார்பி பிரவேசித்தபோது, அது ஈரானிய கலாசாரத்திற்கு எதிரே பெண்களைக் கலகம் செய்யத் தூண்டிவிடும் என்று அஞ்சினார்கள் பலர். அமெரிக்க ஏவுகணைகளை விட பார்பி பொம்மைகள் ஆபத்தானவை என்று அங்கே பேசப்பட்டது!!!

Image Hosting by Picoodle.com

இந்தியாவிலும் பார்பிக்கு ஏகப்பட்ட எதிர்ப்புதான்! 'தீவாளி பார்பி' என்று சென்ற வருடம் வெளிவந்த பார்பி, புடவை, நகை, பொட்டு அணிந்து இந்தியப் பெண்ணாக காட்சியளித்தாலும், இந்தியப் பெற்றோர்கள் தயங்கினார்கள். "உயரமான, ஒல்லியான, இந்தியப் பெண்களின் நிறத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத வெள்ளைத் தோல் உடைய, மேற்கத்திய சொகுசு வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு பெண் பொம்மையின் பின்னால் எங்கள் குழந்தைகள் ஓடவேண்டுமென்றால், நாங்கள் அவர்களுக்கு உலக அழகி ஐஷ்வர்யா ராயையே காட்டுவோமே?! அவராவது உருப்படியான காரியங்கள் சிலவற்றைச் செய்கிறார்!" என்று அங்கலாய்க்கிறார்கள் இந்தியப் பெண்ணியவாதிகள்! மேலும், பார்பியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அவளுடைய ஆண் தோழன் 'கென்'(Ken) என்கிற ஆண் பொம்மை இந்தியாவில் விற்பனை ஆகவேயில்லை!

இன்றும் பார்பி பொம்மைகள் விற்பனையில் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் சில வருடங்களுக்கு முன் இருந்த பார்பி ஜூரம் என்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஒரு சாதாரண பொம்மைக்குப் பின் இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது. இன்று விற்பனையில் இருக்கும் எந்த ஒரு பொம்மையும் எல்லாவித குடும்ப மற்றும் கலாசார அம்சங்களையும் அரவணைக்கமுடியாது என்பது உண்மையாக இருந்தாலும், அறிவுபூர்வமாகச் சிந்திக்க நம் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் பொம்மைகளே உலக மார்கெட்டில் விற்கப்படவேண்டும் என்று ஒரு விதி முறையோ சட்டமோ இருந்தால் நன்றாக இருக்கும்.

No comments: