சென்ற மாதம் என் அக்காவின் மகளைப் பார்க்க அவள் படிக்கும் U Penn (University of Pennsylvania) என்று அழைக்கப்படும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்த நான், திரும்பி வரும்போது பல சுவையான சிறப்புச் செய்திகளை சேகரித்து வந்தேன்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகமும், Harvard, Yale, Columbia, Cornel போன்ற பல்கலைக்கழகங்களைப் போலவே பெருமைமிக்க Ivy League அமைப்பைச் சேர்ந்தது. இங்கே அக்காவின் மகளுக்கு இடம் கிடைத்தபோது மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம்! பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிப்பார்த்தேன். எல்லாமே புராண காலத்து கட்டிடங்கள். அக்கா மகள் படிக்கும் Moore School of Engineering கட்டிடம் பாடாவாதியாக இருந்தது. என்னடா இது, Ivy League என்று சொல்லுகிறார்கள், ஆனால் நம்ம அண்ணாமலைப் பல்கலைக்கழகமே இதைவிட பிரமாதமா இருக்குமே என்று யோசித்துக்கொண்டே மேலும் அங்கே உலாத்தியபோது...
அந்த வரலாற்றுப் பெட்டகத்தைப் பார்த்தேன்!
இன்று நம்மால் செல் பேசி, காமிரா, கணிணி போன்ற மின் சாதனங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. இப்படிப்பட்ட சொகுசான வாழ்க்கைக்கு மூல காரணமான ஒரு 'தெய்வம்' பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் Moore பொறியியல் கல்லூரி கட்டிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது! அது தான் ENIAC என்று அழைக்கப்படும், இந்த உலகத்தை நவீன மின் யுகத்திற்கு அறிமுகப்படுத்திய முதல் கணிணி!
ஒரு கண்ணாடி அறையில் காட்சிப் பொருளாக வைத்திருந்த இந்த 60 வயது கணிணியைப் பார்த்து பெரிய கும்பிடு ஒன்று போட்டேன்! அதன் தோற்றத்தைப் பார்த்துக் குழம்பிப்போனேன்...கணிணி என்கிறார்கள், ஆனால் மானிட்டர் இல்லை, கீ போர்ட் இல்லை, மெளஸ் இல்லை! மாறாக, நூற்றுக் கணக்கான பொத்தான்களுடனும், பல்புகளுடனும், ஒரு ராட்சத switch board போல இருந்தது. அமெரிக்க ராணுவத்திற்காக 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் உபயோகப்படுத்துவதற்காக பென்சில்வேனியா Electrical Engineering துறையைச் சேர்ந்த வல்லுனர்களால் உருவாக்கப்பட்டதாம் இந்த ENIAC. அங்கே இருந்தது ENIAC இன் சில பகுதிகள் தானாம்! மற்றப் பகுதிகள், வாசிங்டன், கலிபோர்னியா போன்ற பிற இடங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கிறதாம்.
அமெரிக்காவில் கணிணித்துறையில் குப்பைக்கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு, ENIAC சோறு போடும் தெய்வமாகத் தெரிந்தது!!!
அதே பிரமிப்புடன் Moore கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது எதிரே இருந்த பூங்காவில் ஒரு பெரிய உருவச் சிலை தென்பட்டது.
அது யாருடைய சிலை என்று கேட்டபோது, "அது Benjamin Franklin அவர்களுடைய சிலை. அவர் தான் இந்தப் பென்சில்வேனியா பல்கலைக்கழத்தை நிறுவியவர்" என்றார்கள். என்னது?! மின்சாரம் சம்பந்தப்பட்ட பல கண்டுபிடிப்புகளின் தந்தையான அந்த Benjamin Franklinஆ?! என்று வியந்தபோது, அவரேதான் என்று பதில் கிடைத்தது. இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் 'மின்சாரக் கண்ணா' என்று பட்டமளித்திருக்கலாம் என்ற அசட்டு எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை :-)
மின்னல் என்பது மின்சாரம் என்று கண்டறிந்த பென்ஜமினின் சிலைக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு நிமிர்ந்தபோது, இந்தச் செய்தி காதில் விழுந்தது...
பல ஆண்டுகளுக்கு முன் இதே கல்லூரியில் படித்து இப்போது அமெரிக்காவில் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் கிருஷ்ணா சிங் என்ற இந்தியர், இந்தக் கல்லூரியில் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைப்பதற்காக 20 மில்லியன் டாலர்கள் நன்கொடையாகக் இந்த வருடம் கொடுத்திருக்கிறாராம். $20 மில்லியன்!!! வாயடைத்துப் போனேன்!
அடுத்து இன்னொரு சிறப்பு அதே தெருவில்!
இதே பல்கலைக் கழகத்தில் தான் உலகப் புகழ் பெற்ற Wharton School of Business இருக்கிறது! இங்கே படித்தால் 5 வருடங்களில் மில்லியனர் ஆகிவிடலாம் என்று சொல்லுகிறார்கள்! இந்தக் கல்லூரியினுள்ளும் நுழைந்து நோட்டம் விட்டபோது, மாணவர்கள் அமைதியாக ஆங்காங்கே உட்கார்ந்து மடிக்கணிணியில் மூழ்கியிருந்தார்க்ள். இவர்களுக்கெல்லாம் எவ்வளவு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
இதெல்லாம் பத்தாதென்று, இங்கே இருக்கும் மருத்துவக் கல்லூரி அமெரிக்காவிலேயே முதல் மருத்துவக் கல்லூரியாம்! இங்கே இருக்கும் நர்ஸிங் கல்லூரி அமெரிக்காவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்...இப்படி அடுக்கடுக்காக சிறப்புச் செய்திகள் வந்துகொண்டே இருக்க, எனக்குத் திகட்டியது! அப்பப்பா...இதுக்குமேல் தாக்குபிடிக்கமுடியவில்லை. இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்க நீ கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்று அக்கா மகளை வாழ்த்திவிட்டு ஊர் திரும்பினேன். பல கோவில்களையும் பல தெய்வங்களையும் பார்த்த ஒரு புண்ணிய யாத்திரை போல் இருந்தது இந்தப் பென்சில்வேனியா பயணம்.
4 comments:
பல கோவில்களையும் பல தெய்வங்களையும் பார்த்த ஒரு புண்ணிய யாத்திரை போல் இருந்தது இந்தப் பென்சில்வேனியா பயணம்//
அது :-) உங்கள் அக்கா மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி உஷா!
தாரா.
ஃபில்லி மிகுந்த வரலாற்றுச் சிறப்புடையது. உடைந்த "விடுதலை மணி" ("லிபர்டி பெல்"லைச் சொன்னேங்க!), அமெரிக்க நாட்டின் முதல் தலைநகரம், கத்தோலிக்க சர்ச்சின் (பழைய/புதிய)வெற்றி/தோல்விகள், ஜெர்மனை அமெரிக்க நாட்டின் ஆட்சி மொழியாக்க (1750களில்) முனைந்தது என்று பல. "ஓல்டு பென்"னை இன்றும் அங்கே தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் (அன்றைய நாட்களில் சமையலறை வீட்டின் கீழே பேஸ்மண்டில் இருந்ததுண்டாம்; தீ விபத்துக்கள் நிகழாமல் தடுக்க பென் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார்...) முதல் சர்ச் போல் பல முதல்-கள் இங்கே! அது மட்டுமல்லாது, பல்வேறு மதக் (eclectic) கலவையும் கூட! Quaker வரலாறு படித்துப் பாருங்கள்; ஆமிஷ்-உம் அந்த பக்கம் தான். ந்யூயார்க்கின் அவசர அடி இல்லாவிட்டாலும் அத்தனை அலம்பல் (attitude!?)உம் உண்டு. City of brotherly love shares its history with UPenn. Great school! Good luck!
தகவல்கள் நிறைந்த கட்டுரைக்கு நன்றி.
Post a Comment