Thursday, November 08, 2007

பட்டாசு இல்லாத தீபாவளி சாத்தியமா?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி கொண்டாடுவதை கைவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அமெரிக்காவுக்கு வந்த புதிதில் தீபாவளி கொண்டாட்டத்தை விட்டுவிடக்கூடாதென்று மல்லு கட்டிக்கொண்டு ஒரு இனிப்பும் ஒரு காரமுமாவது செய்து, நண்பர்களையெல்லாம் விருந்துக்கு வீட்டுக்கு அழைத்ததுண்டு. சில வருடங்களுக்குப் பின் இது அலுத்துவிட்டது. நல்ல சாப்பாடு, நண்பர்களைச் சந்தித்தல் - இதைத் தான் பல முறை பல வார இறுதிகளில் செய்கிறோமே? தீபாவளி அன்றும் இதையே செய்வது அர்த்தமற்றதாகத் தெரிந்தது. எனவே தீபாவளிக் கொண்டாட்டம், வாழ்த்துத் தெரிவிப்பதுடன் நின்றுபோய்விட்டது.

ஆனால், அம்மா அப்பாவோடு சிதம்பரத்தில் இருந்த காலங்களில் பழைய தீபாவளி கொண்டாட்டங்கள் நினைவில் அழியாமல் இருக்கின்றன. சிறு வயதிலிருந்தே, தீபாவளி ஒரு பயம் கலந்த திகிலான பண்டிகையாகத் தான் இருந்தது எனக்கு. பாட்டாசு வெடிச் சத்தம் கேட்டால் தூக்கிவாரிப்போடும். காதைப் பொத்தியபடி தான் தீபாவளியன்று முழுவதும் இருப்பேன். வெங்காய வெடி, டேப் வெடி போன்ற சிறிய வெடிகளை ஓரளவு பயமில்லாமல் வெடிப்பேன். லஷ்மி வெடி, யாணை வெடி என்று பெரிய பெரிய பட்டாசுகளை வெடிக்கும் என் அண்ணன் பிள்ளைகள் என்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள்!!! மத்தாப்புக் கொளுத்தினால் கூட, எங்கே அது கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்து பாதி எரியும் போதே தூக்கிப் போட்டுவிடுவேன். எங்கள் வீட்டில் அப்போது ஒரு பொமரேனியன் நாய் வளர்த்தோம். அதுக்கும் வெடிச் சத்தம் ஆகாது. தீபாவளியன்று கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கினால், இரண்டு நாட்கள் சென்று தான் அது வெளியே வரும். கிட்டத்தட்ட நானும் அப்படித்தான் காதைப் பொத்திக்கொண்டு வீட்டினுள் எங்காவது உட்கார்ந்திருப்பேன். தீபாவளியின் போது மழைக் காலம் என்பதால், பட்டாசுகள் நமத்துப் போய்விடும். அதைத் தவிர்ப்பதற்காக, எல்லா பட்டாசுகளையும் சற்று வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவேண்டுமென்று, அவைகளை அடுப்பின் அருகில் அடுக்கி வைத்திருப்பான் அண்ணன் மகன். எங்கே அவை சூடாகி வெடித்துவிடுமோ என்று வேற பயமாக இருக்கும்!

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பே அண்ணன்கள் குடும்பத்துடன் சிதம்பரத்திற்கு வந்துவிடுவார்கள். அக்கா அவளுடைய திருமணத்திற்குப் பிறகு எந்த தீபாவளிக்கும் எங்களுடன் இருந்ததாக நினைவில்லை. நான் எப்போது புது உடை வாங்கினாலும், அதை உடனே போட்டுப் பார்த்துவிடுவேன். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், என் தீபாவளி புத்தாடையை மட்டும் உடனே போடவே முடியாது. சின்ன அண்ணி அனுமதிக்க மாட்டார். ஏனென்றால் தீபாவளி அன்று காலையில் அந்த உடைகளை சாமியிடம் வைத்து கும்பிட்டு, அதில் குங்குமம் தடவிய பின் தான் அணியவேண்டும் என்பார். அதுவரை ஆசையுடன் காத்திருப்பேன் நான்!

சமையலறையில் நீண்ட நேரம் அம்மாவால் நிற்கமுடியாது என்பதால், தீபாவளிக்கு முதல் நாள் ஸ்டவ் அடுப்பை எடுத்து வெளி வெராண்டாவில் கீழே வைத்துக்கொண்டு, தரையில் ஒரு பலகையில் உட்கார்ந்து பலகாரம் செய்யத் தொடங்குவார்கள். அதிரசம், பாதுஷா, லட்டு, அச்சு முறுக்கு, ரிப்பன் முறுக்கு, கார சோமாசி என்று விடிய விடிய பலகாரம் உருவாகிக்கொண்டே இருக்கும். நாங்களெல்லாம் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்துக்கொண்டு பலகாரத்தை ருசி பார்த்துக்கொண்டும் அரைட்டையடித்துக்கொண்டும் இருப்போம். அப்பறம் ஒவ்வொரு பலகாரத்திலும் இரண்டு இரண்டாக எடுத்து பாக்கெட் போட்டு அடுக்கி வைப்போம். வீட்டில் வேலை செய்பவர்கள், அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் என்று ஒவ்வொருவராக வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் பலகாரப் பாக்கெட்டும் பணமும் வைத்துக்கொடுப்பார் அப்பா. எலக்ட்ரீஷியன், டெக்னீஷியன், போஸ்ட் மேன் என்று நாங்கள் மாதக்கணக்கில் பார்க்காதவர்கள் கூட வந்து நிற்பார்கள். அப்பா புகைப்படப் பிரியர். புத்தாடையில் எல்லாரையும் பல இடங்களில் வைத்து புகைப்படம் நிறைய எடுப்பார். இதெல்லாம் நடக்கும் போது பிண்ணனியில் பட்டாசுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

பட்டாசுச் சத்தங்கள் சற்று ஓய்ந்த மாலை நேரம் தான் எனக்குப் பிடித்த நேரம். அப்போது தான் தீபாவளி 'மூட்' வரும் எனக்கு. பலகாரப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அக்கம்பக்கத்திலிருக்கும் வீடுகளுக்குப் போய் எங்கள் வீட்டுப் பலகாரங்களை அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் வீட்டுப் பலகாரங்களை எங்களுக்குக் கொடுப்பார்கள். தெருவில் நடந்து போகும் போது, மற்ற வீடுகளின் வாசலில் பட்டாசு வெடித்துக்கொண்டிருப்ப்பார்கள். எங்கே என் மேல் வெடி விழுந்துவிடுமோ என்று கவனமாக ஒதுங்கி ஒதுங்கி நடந்துச் செல்வேன். "பண்டமாற்றம்" முடிந்து வீடு வருகையில் இருட்டிவிட்டிருக்கும். இரவு உணவிற்குப் பிறகு எல்லாரும் வீட்டு வாசலில் வந்து அமர்வோம். அண்ணன்களும், பிள்ளைகளும் மத்தாப்பு, புஸ்வானம், சங்கு சக்கரம் என்று கொளுத்தித் தள்ளுவார்கள். பார்க்க ஒரே ஒளிமயமாக ஜகஜோதியாக இருக்கும். தீபாவளி முடிந்து இரண்டொரு நாட்களில் அண்ணன்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள். வீடு வெறிச்சென்று இருக்கும். மீண்டும் பொங்கலுக்கு அவர்கள் வருவார்கள் என்று ஆசையாகக் காத்திருப்போம்.

இன்று அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்கள், பிள்ளைகள், அம்மா செய்யும் பலகாரங்கள், புது உடைகள் - இவற்றையெல்லாம் ரொம்ப மிஸ் பன்னுகிறேன். ஆனால், பட்டாசுகளும் மத்தாப்புகளும் என்றுமே எனக்கு அபிமானமாக இருந்தது இல்லை. ஒரு சின்ன பட்டாசுச் சத்தத்திற்கே பயந்தவள் நான். ஆனால் உலகத்தில் போர் நடக்கும் எத்தனை நாடுகளில் வெடிச் சத்தத்தினூடே மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்?! மத்தாப்பு என் கையைச் சுட்டு விடுமோ என்று பயந்திருக்கிறேன், ஆனால் எத்தனை வீடுகள், எத்தனை உயிர்கள் தீயில் எரிந்து சாம்பலாகின்றன? இலங்கையில், ஈராக்கில்...ஏன் அமெரிக்காவில் கூட சமீபத்தில் தென் கலிபோர்னியா தீ விபத்தில் எத்தனைப் பேர் வீடு இழந்திருக்கிறார்கள்? கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத இழப்புகள் அவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் பிள்ளைகளுக்கு "வெடி", "கொளுத்து", "பாம்(bomb)", "ராக்கெட்" போன்ற வார்த்தைகளை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டுமா? தீபாவளியில் நல்ல விசயங்களான, தீபங்கள் வைத்து அலங்கரித்தல், இனிப்புகளைப் பகிரிந்துகொள்ளுதல், புத்தாடை அணிதல் போன்றவற்றை மட்டும் பின்பற்றி, இந்த வெடி வெடிக்கும் விசயத்தை மட்டும் விட்டுவிட்டால் தான் என்ன?

3 comments:

தஞ்சாவூரான் said...

நல்ல சிந்தனை. என்னதான் இருந்தாலும், தமிழகத்தில் திருவிழா, பண்டிகைகள் கொண்டாடுவதுபோல் எங்கும் வராது.

மத்தாப்பு, பட்டாசு மேல் உள்ள மோகம் முன்புபோல் இப்போது இல்லையென்றே தோன்றுகிறது.

ஸ்ரீநிவாசன் said...

வாழ்த்துக்கள்!

பட்டாசு, ஆட்டம் பாம், ஹைட்ரஜன் (!) பாம் எல்லாம் இப்போ வெடிக்கறதில்லைன்னாலும் முன்னெல்லாம் வெடிச்சு விளையாடியிருக்கேன். ஆனா இந்த ராக்கெட்னு ஒன்னு சொன்னீங்க பாருங்க.... இன்னைக்கு (தீபாவளி) சாயங்காலம் ஏழு மணி அளவுள கொஞ்சநேரம் மொட்டை மாடியில உலாத்திட்டு வந்தேன்... ஏதோ போர்க்களத்துக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு! இப்ப வர ராக்கெட்டெல்லாம் வானத்துல போய் வெடிக்கறதில்ல, கண்டம் விட்டு கண்டம் பாயற மிஸைல் மாதிரி ஒரு வீட்ல விடற ராக்கெட் பக்கத்து தெரு வீட்டுல போய் தான் வெடிக்குது. மத்ததை பத்தி எனக்கு தெரியாது, ஆனா இந்த ராக்கெட்டை முதல்ல தடை பண்ணனும் ஆமா.

John P. Benedict said...

கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து தான் தீபாவளி கொண்டாடிக் கொள்ள வேண்டியுள்ளது. நானும் இப்படி ஒன்றுஎழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்