Wednesday, June 20, 2007

உலக அகதிகளுக்காக - A New Home, A New Life.

இன்று உலக அகதிகள் தினம்! அவர்களைப் பற்றி நினைக்காமல் இருப்பது நியாயமில்லை.

ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியூர் சென்றாலே, எப்படா வீட்டுக்குத் திரும்பிப் போகலாம் என்று தோன்றும். திரும்பி வந்து வீட்டுக் கதவைத் திறந்ததும், "அப்பாடா! Home Sweet Home!" என்று மனம் புளகாங்கிதம் அடையும். உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், திரும்பி வர ஒரு இடம் இருக்கிறது என்பது எவ்வளவு நிம்மதியான, பாதுகாப்பான உணர்வு? ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீட்டையும், நாட்டையும் விட்டுச் செல்கிறார்கள். வேறு நாடுகளில் குடியேறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு ஒரு இடமும், அவர்கள் திரும்பி வரும்போது வரவேற்க சொந்த பந்தங்களும் காத்திருக்கும்.

ஆனால் அகதிகள்? தம் சொந்த வீட்டில், நாட்டில் இருக்கலாமா வேண்டாமா என்பதை தெரிவு செய்யும் உரிமையே இல்லாமல் பாதுகாப்பைத் தேடி சொந்த வீட்டை விட்டு வெளியேறுவது கொடுமை! திரும்பி வருவதற்கு இடம் இல்லாமல், திரும்பிப் பார்ப்பதற்கும் எதுவும் இல்லாமல், கடந்த காலம் சிதைக்கப்பட்டு, எதிர்காலம் பிடுங்கப்பட்டு....சொந்த பந்தங்களைப் பிரிந்து...எத்தனை துயரத்தை தாங்கிக்கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?! சொந்த மண்ணில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட இவர்கள், வேற்று மண்ணில் கால் ஊன்றி, தம் பழைய வாழ்க்கையை சற்றேனும் ஒத்திருக்கும் ஒரு புதிய வாழ்க்கையை படிப்படியாக அமைக்க முற்படுகிறார்கள். தமக்கும் தம் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படும் என்கிற நம்பிக்கையையும் வலுக்கட்டாயமாக வளர்த்துக்கொள்கிறார்கள். தம் சொந்த நாட்டிற்கே எப்படியேனும் திரும்பிப் போய்விடவேண்டும் என்று பிடிவாதமாக அகதிகள் முகாம்களிலேயே இன்னும் இருப்பவர்களும் உண்டு. தொலைத்த வீட்டையும் நாட்டையும் மீட்டெடுக்கமுடியாவிட்டாலும், தொலைந்து போன பாதுகாப்பு உணர்வை இவர்களுக்கு மீட்டுக் கொடுப்பது அரசாங்கங்களால் தான் முடியும்.

எனக்கு 12 வயதிருக்கும் போது என் சித்தப்பா குடும்பத்தினர் கொழும்புவிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள். சித்தி அப்போது 6 மாத கர்ப்பிணி. 10 வயதில் ஒரு பெண். சித்தப்பா இந்தியாவிலிருந்து பல வருடங்களுக்கு முன் இலங்கைச் சென்றவர். இலங்கையில் சித்தப்பாவின் வீடு தீ வைத்து எறிக்கப்பட்டது என்றும், குடும்பத்துடன் சுவர் ஏறிக் குதித்து தப்பி வந்தார்கள் என்றும் பின்னர் தெரியவந்தது. சில மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது என் சித்தி பெண் செய்யும் குறும்புகளுக்கும், தவறுகளுக்கும், அப்பா என்னைத்தான் கண்டிப்பார். "ஏன் என்னையே திட்டறீங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்?" என்று அழும் என்னை, "அவங்க இலங்கைல எவ்வவளவோ கஷட்டத்தை அனுபவிச்சு, சொந்த வீடு, பணம் எல்லாத்தையும் இழந்துட்டு வந்திருக்காங்க. நாம தான் அவங்களுக்கு அனுசரனையா இருக்கனும். அவள் உன் தங்கைதானே? அவள் எது செய்தாலும், நீ பொறுத்துப் போகனும்" என்று விளக்கினார். சில மாதங்கள் எங்கள் சிதம்பரம் வீட்டில் தங்கியிருந்த சித்தப்பா, பின் திருச்சியில் ஒரு வியாபாரம் தொடங்கி படிப்படியாக காலூன்றி, இன்று ஓரளவு நல்ல நிலமையில் இருக்கிறார்.

என் அண்ணி(முதல் அண்ணனின் மனைவி) ஒரு இலங்கைத் தமிழர். சாகவச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். அண்ணியுடைய பெற்றோர்கள், தம் மகள்கள் மூன்று பேரையும் பாதுகாப்பு கருதி, 18 வயதிருக்கும் போது இந்தியாவிற்கு படிக்க அனுப்பிவிட்டார்கள். என் அண்ணி அந்த வயதிலிருந்தே ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். என் அண்ணன் அவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். என்னதான் திருமணமாகி எங்கள் குடும்பத்துடன் அவர் பாதுகாப்பாக ஐக்கியமாகிவிட்டாலும், பெற்றோர்களைப் பார்க்கமுடியாமல், சொந்த ஊருக்குப் போகமுடியாமல் அவர் பல முறை தவித்ததை நான் உணர்ந்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தினர் பொங்கல், புத்தாண்டு பண்டிகைகளின் போது குதூகலமாக இருக்கையில், அண்ணியின் முகத்தில் ஒரு சோகம் தெரியும். தன் அப்பா சாகவச்சேரியில் இறந்தபோதும், தன் செல்லத் தம்பி சாகவச்சேரியில் திடீரென்று காணாமல் போனபோதும் (இன்று வரை அவருக்கு என்ன ஆனது என்றுத் தெரியாது) அண்ணி கதறி அழுததும் எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் போர் கலகங்கள் சற்று அடங்கியிருந்த இடைவெளிகளில் இலங்கை போய் தன் அம்மாவைப் பார்த்து வந்தார். மூன்று வருடங்களுக்கு முன் அண்ணிக்கு 'brain hemorrhage' ஏற்பட்டு அமெரிக்காவில் உயிர் துறந்தார். அவர் வாழும் போதும் சரி, சாவும் போதும் சரி, சொந்த மண்ணில் இருக்கும் பாக்கியம் கிட்டவில்லை!

இவை என் குடும்பத்தில் நடந்த இரு சம்பவங்கள் தான். இது போல் உலகம் பூராவும் சிதறிக்கிடக்கும் அகதிகளின் சோகங்களை என்னவென்றுச் சொல்வது? ஐ.நா சபை சொல்லும் செய்திப்படி உலக அகதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது உண்மையானால் மகிழ்ச்சியே. இந்த வருட உலக அகதிகள் தினத்திற்கு ஐ.நா வின் கருத்து "A New Home, A New Life". உலகத்தில் வாழும் அத்தனை அகதிகளுக்கும் ஒரு புதிய வாழ்வு கிடைக்கவேண்டுமென்பது என் பிரார்த்தனை.

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

Thara,

Sorry for irrelevant commenting..

Can you please set your Site Feed as Full? I am unable to read it in Feeders :)
Settings -> Site Feed -> Allow Blog Feed = Full

தாரா said...

Pons - I have set the Site Feed to Full.

Thanks,
Thara.

யாத்ரீகன் said...

there is one friend of mine, whose mother, brothers and sisters had come to India from Columbo when his father had got stuckup there.... it had been really a very tough time for their mother to bring up 5 kids just out of her megere earnings.. but the kids had realized what it takes to , and they are now coming out into good positions...

மணியன் said...

இந்த 'எட்டு' தொடர்வினையாட்டத்திற்கு உங்களையும் அழைத்திருக்கிறேன். கலந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.