இது ஒரு நீண்ட பதிவு. எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியாததால், வள வளவென்று எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும்!
வருடா வருடம் இந்த பெட்னா (FeTNA)விழா எங்கள் நாட்குறிப்பில் இடம் பெருவது வழக்கமாகிவிட்டது. அமெரிக்காவில் தமிழர்கள் அதிகமாக ஒன்று கூடக்கூடிய ஒரே விழா இது என்பதால் ஆர்வமாகப் போய் பங்கு பெறத் தோன்றுகிறது.
சென்ற ஆண்டும் பெட்னா விழாவைப் பற்றி நான் பதிவு எழுதியிருந்தேன். அந்த விழாவில் நிர்வாகிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்ட சில தவறுகளைச் சுட்டிக்காட்டி, "இந்த விழாவில் பல பாடங்களைக் கற்ற பெட்னா நிர்வாகிகள், அடுத்த விழாவில் பிழைகளைத் திருத்தி சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது" என்று எழுதியிருந்தேன். அதற்கு "சூப்பர் ஜோக்" என்று நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி பின்னூட்டம் இட்டிருந்தார். நான் இதை அவருக்காகச் சொல்லவில்லை, ஆனால் என் நம்பிக்கை வீண் போகவில்லை! என்னுடைய பார்வையில், கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த விழாவை விட பல மடங்கு இந்த வருட விழா சிறப்பாக இருந்தது. எந்த விதமான குழப்பமோ, பதட்டமோ, சலனமோ இல்லாமல் அமைதியாக, ஆனால் சுவாரசியமாக மூன்று நாட்களும் சென்றன. ஒரு குறிப்பிடத்தக்க விசயம், கடந்த ஆண்டு பெட்னா விழாக்கள், சிகாகோ, பால்டிமோர், டாலஸ், நியூஜெர்சி, நியூயார்க் போன்ற தமிழர்கள் ஏராளமாக இருக்கக்கூடிய பெரிய, பிரபலமான நகரங்களிலேயே நடைபற்றது. இந்த நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், வட கரோலினாவில் உள்ள ராலே(Raleigh, NC) ஒரு சிறிய நகரமே. அங்கே சுற்று வட்டாரத்தில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கையும் குறைவாகத் தான் இருக்கவேண்டும். அதிலும் தமிழ்ச் சங்கம், பேரவை போன்றவற்றில் ஆர்வமிருப்பவர்கள் குறைவே. ஒரு சிறிய குழுவை வைத்து ஒரு பிரம்மாண்டமான விழாவை எடுப்பது என்றால் அது சாதாரண காரியம் அல்ல! ஆனால், தமிழால் இனைந்து தமிழராய் வென்றிருக்கிறார்கள் நமது வட கரோலினா நண்பர்கள்!!! "தமிழால் இணைவோம், தமிழராய் வெல்வோம்" என்பதே இவ்வாண்டு விழாவின் மையக் கருத்து. இன்னொரு பாராட்டப்படவேண்டிய விசயம், இந்த விழாவில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கான கால அளவு, நேரம் - சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் மிகவும் கண்டிப்பானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்குப் பயந்தே, எல்லாக் கலைஞர்களும் அறிஞர்களும் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தம் உரையையும், நிகழ்ச்சியையும் முடித்துக்கொண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன் :-)
வெள்ளிக்கிழமை(ஜூலை 6)
மாலை சுமார் 5 மணியளவில் நண்பர்கள் பட்டாளத்துடன் ராலேயில்(Raleigh, NC) downtown பகுதியில் இருக்கும் ஷெரட்டன் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியிலிருந்து 5 நிமிட நடையில் இருந்தது விழா நடக்கும் அரங்கம். சீவி சிங்காரித்துக்கொண்டு 7 மணியளவில் அரங்கத்திற்குச் சென்றோம். வாசலிலேயே ஒரு கூடாரம் அமைத்து, இரவு உணவு பறிமாறப்பட்டது. சாப்பிட்டுக்கொண்டே மற்ற ஊர்களிலிருந்து வந்திருந்த நண்பர்களைச் சந்தித்து சற்று நேரம் அலவலாவி விட்டு, அரங்கத்தினுள் நுழைந்தபோது, நடிகர் சிவக்குமார் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு திறமையான ஓவியக் கலைஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய சில ஓவியங்களும், அவர் நடித்த திரைப்படங்களிலிருந்து சில காட்சிகளும் திரையில் காண்பிக்கப்பட்டது. பிறகு தன் திரைப்பட அனுபவங்களைப் பற்றி சில நிமிடங்கள் சிவக்குமார் பேசினார். பார்வையாளர் ஒருவர் சிவக்குமாரிடம் ஒரு கேள்விக் கேட்டார். "நீங்கள் ஒரு நல்ல ஓவியர், மற்றும் திரைப்பட நடிகர். உங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தருவது ஓவியம் வரைவதா? நடிப்பதா?". இதற்கு சிவக்குமாரின் பதில் எனக்குப் பிடித்திருந்தது. "நான் ஒரு ஓவியம் வரையும் போது அது முழுக்க முழுக்க என்னுடைய உழைப்பு, படைப்பு. என்னைத் தவிர வேறு யாரும் அதில் சம்பந்தப்படவில்லை. நானே அங்கே ராஜா. ஆனால், நான் ஒரு நல்ல நடிகனாக இருக்க, ஒரு பாலச்சந்தர் தேவைப்படுகிறார். ஒரு இளையராஜா தேவைப்படுகிறார். பாலசந்தரும் இளையராஜாவும் இல்லையென்றால் சிந்துபைரவி சிவக்குமார் இல்லை. ஆனால் நான் நடிகனாக இல்லாது ஒரு சாதாரண ஓவியனாக இருந்திருந்தால் இன்று பெட்னா மேடையில் நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அதனால் மன நிறைவைத் தருவது ஓவியம் வரைவது. புற நிறைவைத் தருவது நடிப்பு" என்றார்.
சிவக்குமாரின் மகன் "பருத்தி வீரன்" கார்த்தி அப்பாவைப் போலவே எளிமை, அமைதி. அவர் பேசும் போது, "நான்கு வருடங்கள் அமெரிக்காவில் படித்துவிட்டு பின் ஊருக்கு நடிப்பதற்காகச் சென்றேன். அமெரிக்காவில் மரியாதையாக, தன்னடக்கமாகப் பேசிப் பழகிய நான், முதல் படத்திலேயே(பருத்தி வீரன்) காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஏய், டேய் என்று பேசியது வேடிக்கையாக இருந்தது" என்றார். அடுத்து வந்த இரண்டு நாட்களிலும், கார்த்தி இரண்டொரு நிமிடங்கள் மேடையில் சுருக்கமாகப் பேசினார். மற்றபடி எதுவும் சிறப்பு நிகழ்ச்சியோ, கலந்துரையாடலோ அவரை வைத்துச் செய்யவில்லை. அவரை விழாவுக்கு அழைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து. தனிப்பட்ட முறையில் நான் கார்த்தியின் ரசிகையாக இருப்பது வேறு விசயம். ஆனால், சும்மா ஒரு நடிகரின் சில நிமிட மேடைத் தோற்றத்தில் மயங்கிவிடுகிற கூட்டம் அல்ல பெட்னாவுக்கு வரும் கூட்டம்.
விழாவுக்கு தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பிரமுகர்கள் - மருத்துவர் N.சேதுராமன், நீதியரசர் சன்முகம், தமிழறிஞர் இளங்குமரனார், பட்டிமன்றம் புகழ் முல்லை நடவரசு, கலைமாமனி நித்யஸ்ரீ மஹாதேவன் இவர்களெல்லாம் 5 நிமிடங்கள் தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்கள்.
N.சேதுராமன், சன்முகம் ஆகியோரின் உரைகளை நான் சரிவரக் கேட்கவில்லை.
இளங்குமரனார் - எழுபத்தியெட்டு வயதிலும் தமிழை தன் உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இவரது தமிழ்ப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. இவருக்கு விழாவின் கடைசி நாளன்று, பெட்னா வாழ் நாள் சாதனையாளர் விருதளிக்கப்பட்டது.
முல்லை நடவரசு - திண்டுக்கல் லியோனி விழாவுக்கு வராத குறையை இவர் நிறைவு செய்தார். கணீரென்ற குரல், எழுச்சிமிக்க தமிழ்ப் பாடல்களைப் பாடி கூட்டத்தை நன்றாக மகிழ்வித்தார்.
நித்யஸ்ரீ மஹாதேவன் - இவர் பேசுவதே பாடுவது போல் அவ்வளவு இனிமையான குரல். என்ன ஒரு தன்னடக்கம்!
வெள்ளி இரவு நிகழ்ச்சிகள் முடிகையில் அரங்கத்தை நோட்டமிட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஓரளவு நல்ல கூட்டம், அதுவும் வெள்ளி இரவுக்கு! பொதுவாக சனி காலை தான் வெளியூரிலிருப்பவர்கள் வருவார்கள்.
சனிக்கிழமை(ஜூலை 7)
காலை 10 மணியளவில் அரங்கத்தை நோக்கி நடக்கையில், ஏதோ ஒன்று missing போல் தெரிகிறதே, என்ன என்று யோசித்துக்கொண்டே நடந்தேன். ஆம்! வழக்கமாக நம்மை வரவேற்கும் மங்களகரமான நாதஸ்வர இசை missing! நாதஸ்வரக் கலைஞர்களை அழைத்து வர முடியாவிட்டாலும், ஒலிநாடாவிலாவது நாதஸ்வர இசையைப் போட்டிருக்கலாம்.
சனிக்கிழமை பகல் முழுவதும் நிறைய பயனுள்ள உரைகள் - "சமூக நீதியும் தனி மனித சுதந்திரமும்", "பாரதியும் பாரதிதாசனும்", "தமிழகப் பள்ளியில் அமெரிக்க மாணவரின் பங்கு", "கணினியில் தமிழ்" போன்ற தலைப்புகளில். நடு நடுவே நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள். நியூயார்க் விழாவில் அதிகப்படியாக திகட்டும்படி தினிக்கப்பட்டிருந்த பரதநாட்டியங்கள் குறைக்கப்பட்டு, அனைத்து வித நடனங்களும் அளவாகப் புகுத்தப்பட்டிருந்தன. இளங்குமரனார் தலைமையில் நடந்த கவியரங்கத்திற்கு அருமையான தலைப்பு "நிலமென்னும் நல்லாள்". பேசவந்தவர்களெல்லாம், தமிழ் இலக்கியத்தில் பிய்த்து உதறுபவர்கள். ஆனால் நான் கவியரங்கம் நடக்கும் போது "எஸ்கேப்". ஏனென்றால், ஒரு கவியரங்கத்தை பார்த்து பாராட்டும் அளவு எனக்கு தமிழ் கவிதையிலோ, இலக்கியத்திலோ ஞானம் கிடையாது.
மதியம் சற்று இளைபாறிவிட்டு வரலாம் என்று விடுதிக்குச் சென்று வந்த இடைவெளியில், NTYO(National Tamil Youth Organization) அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அளித்த சிறப்புரையையும் நடன நிகழ்ச்சியையும் தவறவிட்டேன். அற்புதமாக இருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள். மாலை நிகழ்ச்சிகள் அனைத்துமே கூட்டத்தை இருக்கையில் கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டன.
முல்லை நடவரசுவின் "இசை இன்பத் தேனையும் வெல்லும்" என்கிற உரை, பல மறக்கப்பட்ட நல்ல தமிழ்ப் பாடல்களை நம் நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியது. இவருக்கு ஒதுக்கப்பட்ட அரை மணி நேரம் முடிந்தபோது, கூட்டம் "இன்னும் பேசுங்கள்" என்று ஆர்ப்பரித்தது.
கரோலினா தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறப்புக் கலை நிகழ்ச்சிதான் இந்த வருட பேரவை விழாவிற்கே மகுடம் சூட்டி, அனைவரையும் வியப்பிலும், குதூகலத்திலும் ஆழ்த்திய நிகழ்ச்சி என்று சொல்லலாம்! காவடியாட்டம், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், குறத்தி நடனம், புலியாட்டம் என்று ஒன்றன் பின் ஒன்று ஆடி கலக்கு கலக்கென்று கலக்கி, அரங்கத்தை கரகோஷத்தில் அதிர வைத்தனர் கரோலினா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த "சென்னை சங்கமம்" நிகழ்ச்சியைப் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனால் இன்று இங்கே பேரவை விழா மேடையில் ஒரு தமிழ்த் திருவிழாவையே நடத்தி சென்னை சங்கமத்தின் அமெரிக்க வார்ப்பினை படைத்துவிட்டார்கள்! இதில் பங்குபெற்றவர்களில் பலர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்! விழா வேலையையும் செய்துகொண்டு, நடனத்திற்கும் பயிற்சி எடுத்துக்கொண்டு...அப்பப்பா இவர்களது கடின உழைப்பைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை!
அடுத்து நடிகர் சிவக்குமார் "தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்" என்கிற தலைப்பில் உரையாற்றினார். அவருடைய குரல், தமிழ் உச்சரிப்பு, தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஞானம் என்னை அசரவைத்தது. தமிழ்த் திரைப்படங்களில் வந்த புகழ்பெற்ற வசனங்கள், பாடல்கள் - உதாரணத்திற்கு, திருவிளையாடலில் சிவனுக்கும் நக்கீரணுக்கும் இடையே நடக்கும் உரையாடல், ஆறுபடை வீடு கண்ட திருமுருகா என்கிற பாடல், போன்றவற்றைப் பற்றிப் சொன்னார். ஆனால் அதிகம் முருகன் - சிவன் பற்றிய பாடல்/வசனங்களையே பேசியதால் சற்று அலுப்பாக இருந்தது. பல சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களிலெள்ளாம் சமூகக் கருத்துள்ள பிரமாதமான வசனங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றிலும் சிலவற்றைச் சொல்லியிருக்கலாம்.
பிரபலமாகிவரும் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றியும், இன்று ஆயிரக்கணக்கில் இணையத்தில் எழுதப்படும் தமிழ்ப் பதிவுகளைத் திரட்டிவரும் தமிழ்மணத்தைப் பற்றியும், அதனை நடத்திவரும் TMI நிறுவனத்தினர் ஒரு அருமையான பவர் பாயிண்ட் ப்ரசன்டேஷனை வழங்கினார்கள். மேலும், அடுத்த நாள் ஷெரட்டன் விடுதியில் உள்ள கான்பரன்ஸ் அறையில் வலைப்பதிவர்கள் பயிற்சி முகாம் ஒன்றையும் நடத்தினார்கள். கிட்டத்தட்ட 20 பேர் வந்திருந்தார்கள். அவர்களுக்கு ஒரு வலைப்பதிவை எப்படி தொடங்கவேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் ஆர்வத்தோடு கேள்வி கேட்டதையும், குறிப்பு எடுத்துக்கொண்டதையும் பார்க்கும் போது, கூடிய சீக்கிரம் தமிழ்மணத்தில் சேரும் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரிக்கப் போகிறது!
இரவு 9 மணிக்கு அனைவரும் விரும்பி எதிர்பார்த்துக்கொண்டிருந்த நித்யஸ்ரீ மஹாதேவனின் கச்சேரி ஆரம்பமானது. மிருந்தங்கம் வாசித்தவர் நித்யஸ்ரீயின் தந்தை திரு சிவக்குமார். ஒரு வயலின் வித்வான். மூவர் மட்டுமே கொண்ட எளிமையான கச்சேரி அணி. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கினார். அவரது இனிமையானக் குரலில் மயங்கிக் கட்டுண்டது அரங்கம். நான்கு பாடல்கள் கேட்டு ரசித்த பிறகு களைப்பு மிகுதியால் விடுதிக்குச் செல்லவேண்டியதாகிவிட்டது. ஆனால் அதற்குப் பின்னர் தான் கச்சேரி களைகட்டி, குறவஞ்சி, சிலப்பதிகாரம் பாடல்கள் பாடினார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். கர்நாடக இசைக் கச்சேரி என்றால் அறவே பிடிக்காத ஒரு நண்பர் கூட கச்சேரி முடியும் வரை இருந்து எல்லாப் பாடல்களையும் கேட்டுவிட்டு வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8)
ஞாயிறு காலை கண்விழித்தபோது சற்று படபடப்பாக இருந்தது எனக்கு. காரணம் நான் பங்குபெறும் ஒரு இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி அன்று மதியம் ஒரு மணிக்கு இருந்தது. நிகழ்ச்சியை நடத்துபவரிடம், கடந்த பல நாட்களாக "என்னை விட்டுவிடுங்கள், மேடை என்றாலே எனக்கு கால்கள் பின்னிக்கொள்ளும், பேசவும் குரல் வராது, இலக்கியத்திலும் நான் பூஜ்ஜியம்" என்றெல்லாம் மன்றாடிப் பார்த்தேன். அவர் செவி சாய்க்கவில்லை. சரி எப்படியும் மேடையில் மானம் போகப் போகிறது, முடிந்தவரை படிப்போம் என்று, ஞாயிறு காலை விடுதி அறையில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு Tamil Virtual University போன்ற சில வலைதளங்களில் சென்று இலக்கியக் கேள்வி பதில்கள் சிலவற்றைத் தேடிப் படித்தேன். அரங்கத்திற்கு போனபின்பு என் அணியில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் மண்டையை உடைத்துக்கொண்டு, சரி இதற்கப்பறம் ஆனது ஆகட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, நிகழ்ச்சிகளை பார்க்க அரங்கத்தினுள் நுழைந்தேன்.
மீண்டும் மேடையில் நடிகர் சிவக்குமார்! "பெண்களுக்கு மார்புப் பகுதி, தலை எந்த அளவு உடலிலிருந்து நீண்டு இருக்கிறதோ, அந்த நீளத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும். சில பெண்களுக்கு பிருஷ்டம் குறைவாக இருக்கும். மேல் உதட்டை விட கீழ் உதடு பெரிதாக இருக்கும்" என்று அவரிடம் இருந்து வந்த வார்த்தைளைக் கேட்டு புரியாமல் குழம்பினேன்! அப்புறம் தான் புரிந்தது, அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "அழகு". ஒரு ஓவியன் ஒரு பெண்ணையோ ஆணையோ வரையும் போது, உறுப்புக்களின் அமைப்பு, அளவு போன்ற நுணுக்கங்கள் மிகவும் முக்கியம். அந்தக் கண்ணோட்டத்தில் தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பெண்களிலேயே எல்லா உறுப்புக்களின் அளவும் அமைப்பும் கணக் கச்சிதமாக அமையப் பெற்றப் பெண் நடிகை வைஜெயந்திமாலா என்றார்!
மதிய உணவுக்குப் பின் எங்கள் வினாடி வினா நிகழ்ச்சி! உணவு சரியாக இறங்கவில்லை. சரியாக ஒரு மணிக்கு மேடையில் போட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தோம். எங்கள் அணியின் பெயர் "தொல்காப்பியர்". எதிர் அணியின் பெயர் "ஒளவையார்". அரங்கத்தில் கூட்டமே இல்லை. மானம் போவதைப் பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று சற்று ஆறுதலாக இருந்தாலும், உற்சாகப்படுத்துவதற்கும் யாரும் இல்லை என்று வருத்தமாக இருந்தது. தூரத்தில் உட்கார்ந்து "நான் இருக்கிறேன்" என்று கையாட்டிய என் கணவரைப் பார்த்ததும் சற்று நிம்மதியாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது! எங்கள் அணி வெற்றி பெற்றது!!! நம்பவே முடியலை!!! இப்பொழுது எனக்கு இலக்கியங்களைப் பற்றி நிறைய படிக்கனும் என்கிற ஆர்வம் எழுந்திருக்கிறது.
இன்றும் பல நல்ல பயனுள்ள உரைகள் - "வள்ளுவம் காட்டும் வாழ்க்கை", "தமிழ்நாட்டில் கல்வி வழி மேம்பாடு", "தாய்த் தமிழ் பள்ளி" போன்ற தலைப்புகளில்.
மாலை முல்லை நடவரசு தலைமையில் பட்டிமன்றம். தலைப்பு "புலம் பெயர்ந்த தமிழர்கள் கான்பது இன்னலா? இன்பமா?". பாட்டுக்கும், கிண்டலுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமேயில்லை! சாப்பாடு, சுத்தம், வசதிகள் போன்ற விசயங்களைப் பற்றியே இரு அணிகளும் விவாதித்துக்கொண்டிருக்க, "இன்பம்" அணியில் பேச வந்த இளம் ஈழத்துப் பெண், "இலங்கையில் அடிப்படை தேவகளான உணவு, உடை, தங்கும் இடம் கூட இல்லாமல், சுதந்திரமும் பறிக்கப்பட்டு, பல வித கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு, துரத்தப்பட்டு புலம் பெயரும் தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்த நாடுகளில் உணவு, உடை, பாதுகாப்பு என்று எந்த பிரச்சினையும் இல்லாமல் சுதந்திர வாழ்க்கை வாழமுடிவது இன்பமே" என்று சொன்னார். அந்தப் பெண் அப்படிச் சொன்ன பிறகு, அதை மறுத்து எப்படிப் பேசுவது? என்னத்தைப் பேசுவது? அந்த ஒரு உண்மைக்கு முன் எல்லா விவாதங்களும் தோற்றுவிடுமே? என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில், எதிர் அணியிலிருந்து பேச வந்தவர் "ஈழத்தில் இன்று நடப்பது துன்பம் என்று நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்" என்றார். பல புருவங்கள் உயர்ந்தன... கூட்டத்தில் சல சலப்பு...அவர் தொடர்ந்து "அது ஒரு தவம்! அதைத் துன்பம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்" என்றார். "தவம்" என்கிற இந்த அழகான விவரிப்பைக் கூட்டம் கரகோஷம் செய்து ஆமோதித்தது. புலம் பெயர்ந்தவர்கள் அனுபவிப்பது இன்னலே என்கிற அணியின் தலைவர் தம் அணியின் கருத்துக்களைத் தொகுத்தளிக்கும் போதும், "என்னதான் ஈழத் தமிழர்கள் இங்கே சுதந்திரமாக, இன்பமாக இருந்தாலும், தாயகத்தில் அவர்களுடைய உறவினர்கள் துன்பப்படுதும், அவர்களை விட்டு தாம் பிரிந்திருக்க நேர்கிறதே என்கிற நினைப்பும் அவர்களுக்கு இன்னல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அந்த ஈழத்துப் பெண்ணின் சோகத்தில் துவைத்தெடுத்த தீர்க்கமான கருத்துக்கள்அவளுடைய அணியை வெற்றியடையச் செய்தது.
இரவு 9 மணிக்கு பரத்வாஜின் இன்னிசை நிகழ்ச்சி! முதல் பாடல் "ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே". கூட்டம் ரசித்துக் கேட்டது. தொடர்ந்து அவர் இசையமைத்த பிரபலமான பாடல்களான "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" மற்றும் "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்". பின்னர் பாடகர் ஸ்ரீநிவாஸ் "மின்சாரக் கண்ணா", "ஆப்பிள் பெண்ணே", "வெள்ளி வெள்ளி நிலவே" போன்ற பாடல்களைப் பாடினார். பாப் இசைப் பாடகி ஷாலினி "ஊ லா லா லா", "ரண்டக்க ரண்டக்க" பாடல்கள் பாடியபோது, குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை நிறைய பேர் எழுந்து நடனமாடினார்கள். சிவாஜி படத்திலிருந்து பாடல் வேண்டும் என்று ரசிகர்கள் கேடுக்கொண்டதற்கிணங்கி, "தீ தீ" பாடல் பாடப்பட்டது. கடைசி பாடலான "வாள மீனுக்கும் விளங்கு மீனுக்கும்" பாட்டுக்கு பாதி கூட்டம் இருக்கையிலேயே இல்லை! அப்படி ஒரு குதூகலத்துடன் அனுபவித்து நடனமாடினார்கள்.
நேற்று தான் ராலே வந்தது போல் இருந்தது...அதற்குள் விழா முடிந்து விட்டது. திங்கள் காலை இலக்கியக் கூட்டம் இருந்தது. ஆனால் சில வேலைகள் காரணமாக திங்கள் அதிகாலையில் நானும் கணவரும் வாசிங்டன் டிசி திரும்பவேண்டியதாகிவிட்டது. இலக்கியக் கூட்டத்திற்கும் நல்ல வரவேற்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.
அலட்டலில்லை...ஆர்பாட்டமில்லை...பெரிதாக எந்த ஏமாற்றமும் இல்லை...யார் மீதும் வருத்தம் ஏற்படவில்லை...மொத்தத்தில் இது ஒரு அமைதியான, அருமையான தமிழர் விழா!
அடுத்த ஆண்டு விழா ஆர்லாண்டோவில்!!! இப்பொழுதே திட்டமிடத் தொடங்கிவிட்டொம்!!!
22 comments:
//இப்பொழுது எனக்கு இலக்கியங்களைப் பற்றி நிறைய படிக்கனும் என்கிற ஆர்வம் எழுந்திருக்கிறது.//
இதைப் போன்ற உணர்வுகளே தமிழ் விழாக்களின் வெற்றி எனப்படுகிறது. பல இடங்களில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிவுக்கு நன்றி தாரா, அடுத்த ஆண்டும் சந்திப்போம்!
தாரா,
நான் வழமையாக நீண்ட பதிவுகளை ஒரே முறையில் வாசித்து முடிப்பதில்லை.
ஆனால் இப்பதிவை முழுமையாக வாசித்து முடித்தேன். உங்களின் பதிவை வாசித்ததும் நிகழ்ச்சியை நேரில் சென்று பார்த்த உணர்வு.
/*வள்ளுவம் காட்டும் வாழ்க்கை", */
இந்த உரையை ஒலிவடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ போட்டால் பலரும் பார்க்க/கேட்க/படிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்நிகழ்சிகள் பற்றிய என் ஆதங்கம் என்னவெனின், வட அமெரிக்காவில் வாழும் சிறார்களை பார்வையாளர்களாக மட்டும் வைத்திருக்காமல், அவர்களையும் இந் நிகழ்ச்சிகளில் பங்காளர்களாக்க வேணும் என்பதுதான். மூன்று நாள் நிகழ்வுகளில் ஒரு நாளில் சில மணித்தியாலங்களாவது வட அமெரிக்காவில் வாழும் தமிழ்ச் சிறார்களின் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். அதன் மூலம் இங்கு வாழும் சிறுவர்களை ஊக்குவிக்க வேணும்.
பி.கு:- ஆட்சேபனை இல்லையெனின் ஒரு சின்ன feedback. உங்கள் பதிவில் ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகளும் பொருட் பிழைகளும் இருப்பதாக நினைக்கிறேன்.
விபரிப்புக்கு நன்றி.
/பெண்களுக்கு மார்புப் பகுதி, தலை எந்த அளவு உடலிலிருந்து நீண்டு இருக்கிறதோ, அந்த நீலத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும். /
வேண்டாம்; வார்த்தையிலே ஓரெழுத்து ஈரெழுத்து தவறுவது குற்றமில்லை.. ஆனால், தவறும் சந்தர்ப்பங்கள் சிலவிடங்களிலே வசனத்தின் அர்த்தத்தையே விசனமாக்கிவிடும் :-)
சுந்தர்,
கருத்துக்கு நன்றி. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி!
நன்றி,
தாரா.
பெயரிலி,
மன்னிக்கவும், திருத்திவிட்டேன்! திருந்தத்தான் முடியவில்லை :-)
நன்றி,
தாரா.
வெற்றி,
கருத்துக்களுக்கும், எழுத்து, பொருள் பிழைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி! மீண்டும் பதிவைப் படித்து பிழைகளைத் திருத்திவிடுகிறேன்.
குழந்தைகளின் பங்கேற்பைப் பற்றி நான் இந்தப் பதிவில் விவரமாக எழுதவில்லை. ஆனால் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளிலும் குழந்தைகள் பங்கேற்றனர். நான் "சென்னை சங்கமம்" என்று குறிப்பிட்ட சிறப்பு நடன நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் பங்கேற்றனர். மேலும் சிறுவர்களுக்கான தமிழ் bee நடத்தப்பட்டது. "என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்", "என் தாயகப் பயணம்" போன்ற தலைப்புகளில் சிறுவர்கள் தமிழில் அருமையாகப் பேசினார்கள். இந்த விழாவில் மட்டும் அல்ல, எல்லா பேரவை விழாவிலும், கலை நிகழ்ச்சிகளில் பல்வேறு தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்குபெறுவது வழக்கமான ஒன்றுதான்.
நன்றி,
தாரா.
Thara:
Thank you very much for your write up about the 20th FeTNA annual Thamizh vizha. As always, your natural talent to write Thamizh with an excellent flow and absorbing style is evident here. I agree with all your comments. I can add here that actor Karthik spoke for about 20 minutes and participated in the question and answer session for another 30 minutes. This event drew maximum attendance of youth as well as some parents. He inspired the National Tamil Youth organization (NTYO) youngsters about respecting parents, hard work and taking pride in Tamil identity.
Thiru Porchezhian, from Thamizh Sangam of Missouri conducted Tamil bee, oratorical contest, Thirukkural bee and Jeopardy for children aged 6 and above.
If you search in Google video you can find the nearly 40 minutes of the much appreciated North Carolina Tamil Sangam's grand entertainment event.
Anonymous அவர்களே,
நீங்கள் அனேகமாக எனக்குத் தெரிந்தவராக இருக்கவேண்டும்....முக்கால்வாசி யூகித்துவிட்டேன் :-)
பின்னூட்டத்திற்கு நன்றி. நடிகர் கார்த்தி இளைஞர்களுடன் பேசியதை நான் அறியவில்லை. வரும் கலைஞர்களை பெட்னா இதுபோல் நன்றாக உபயோகித்துக்கொண்டால் மகிழ்ச்சியே.
தாரா.
விழா குறித்த பகிர்தலுக்கு நன்றி, தாரா.
நன்றாக கட்டுரை எழுதியிரிக்கிரீர்கள்.இந்த பெட்னா பற்றி என்னோட கருத்துக்கள்,,
முதலில் இந்த ஆண்டு நல்ல படியாக நடந்தது பற்றி மகிழ்ச்சி..
நான் டாலஸ், நியூஜெர்சி போன்ற நகரங்களில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன்..வெறுப்புதான் மிஞ்சியது..
டாலஸ்:
முதலில் அறிவித்த்து என்னவென்றால் இளையராஜா அவரது திருவாசகத்தை இங்குதான் அரங்கேற்ற போகிறார் என்று அறிவிப்பு..இதற்ககாகவே டிக்கெட் விற்பனை அமோகமாக இருந்தது..விலையும் அதிகம்..காரணம் இளையராஜா வருகிறார் என்பதால்..ஆனால் நடந்தது என்ன? அவர் வரவே இல்லை..அது நிர்வாகிகளுக்கு தெரிந்த பின்னரும் திரும்ப திரும்ப அறிவித்துக் கொண்டிருந்தார்கள்..உச்சகட்ட காமெடி என்னவென்றால் அவர் அதே தேதியில் சென்னை மியூசிக் அகெடாமியில் திருவாசகம் அரேங்கேறிக் கொண்டிருந்தது..அப்பவும் கூட இந்தெ கோஷ்டிகள் அது முடிந்தவுடன் "கடைசி" பிளைட் பிடித்து வருகிறார் என்று ரீல் வேற..
சரி..வந்த கும்பல்(குப்பை) யார் தெரியுமா?? சிம்பு, S J சூர்யா..அய்யா தமிழ் ஆர்வலர்களே..இவர்களுக்கும் தமிழ்க்கும் என்ன சம்பந்தம்?? அதோடு விட்டார்களா? இந்த கழிசடைகளோடு ஒரு மினி கப்பல் பயணமாம்?? அதுக்கு வேற தனி கலெக்ஷன்..அதுவும் அந்த கப்பலை கிளப்பக் கூட இல்லை..சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..
நியூஜெர்சி
ஆரம்பத்திலேயே பிள்ளையாரை வைப்பதில் பிரச்சினை ஆரம்பித்தது..அப்புறம் பாருங்க ஒரு கவியரங்கம்..ஆகா..பார்ப்பானை திட்டி தீர்த்துட்டானுங்க..எனக்கு சந்தேகம்..இது தமிழ் விழாவா அல்லது தி.க மீட்ட்ங்கான்னு..அப்போ வரப்போரதா சொன்ன சீப் கெஸ்ட் திரிஷ்ஷா..
இதுக்கு அப்புறமும் நமக்கு நம்ம நேரத்தை எப்படிங்க இந்த எழவுக்கு எல்லாம் செலவழிக்க முடியும்??
Anonymous(2:52PM),
உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் சினிமா நடிகர்களை நம் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவிட முடியாது, தமிழ் ஆர்வலர்கள் சினிமா ரசிகர்களாக இருப்பதையும் தடுத்துவிட முடியாது. இன்னும் சற்று விரிவாகப் பதில் சொல்ல விரும்புகிறேன். அதனால், தனிப் பதிவாகவே இரண்டொரு நாட்களில் போட்டுவிடுகிறேன்.
இந்த வருடம் பெட்னா கதையை இந்தப் பதிவோடு ஏறக்கட்டிவிட்டு "எட்டு" விளையாட்டு விளையாடப் போகலாம் என்று நினத்தேன். இப்படி கேள்வி கேட்டு இன்னொரு பதிவைப் போட வைத்துவிட்டீர்கள்.
நன்றி,
தாரா.
வணக்கம்.
ஃபெட்னா விழா பற்றி எழுதியதற்கு நன்றி.
அவப்போது இளைப்பாறாமல் இருந்திருந்தால் நீங்கள் கூடுதலான சுவராசியத்துடன் எழுதியிருந்திருக்கலாம் ;))
'எழுதியிரிக்கிரீர்கள்' என்று எழுதியிருக்கும் பெயரில்லாதவர் சொல்லியுள்ள சில காரணங்களுக்காகவும்
இதுவரை விழாக்களுக்கு போனதில்லை. ஒரு தடவை என் நிறுவனத்தின் பெயரில் கொடை வள்ளலாக
ஏதோ கொடை கொடுத்ததாக ஞாபகம். கடந்த வருடங்களில் கண்மூடித்தனமான மொழிப் பற்று/வெறி,
பார்ப்பனர் எதிர்ப்பு & புலிகள் ஆதரவு agenda வில் இருப்பதாக தோன்றியதால் போய் பார்க்க துளியும்
விருப்பம் இல்லாமலிருந்தது. ஃபெட்னா மடற்குழுவில் சில வருடங்களுக்கு முன் நான் கேட்ட முக்கிய ஐயங்கள்/
வினாக்களுக்கு யாரும் விடையளிக்கவில்லை. (நியு ஜெர்சியில் நடந்த விழாவிற்கு முன்) .அதலிருந்து ஃபெட்னா
இயக்குநர்கள் மேலிருந்த நல்லுணர்வு எனக்கு இல்லாமற் போனது. TNF இயக்கத்துடன் சேர்ந்து
சில வருடங்கள் விழா நடத்துகின்றனர், பிறகு பிரிகின்றனர் - இதுவும் உற்சாகத்தை குறைக்குமொரு விடயம்.
ஆயினும் நீங்கள் சொல்லியுள்ளதிலிருந்து கொஞ்சமாய் ஆர்வம் வந்துள்ளது. நிறைய தமிழர்களை ஒன்று சேர்ந்து
பார்த்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன ! வட்டார வழக்குகளை கேட்டு ரசிக்கலாம். தமிழோடு ஆங்கிலம் கலந்து
கொலை பண்ணுகிறவர்களை கண்டு வியக்கலாம். இவன் நம்ம ஆளு என மோப்பம் பிடித்து அங்கங்கே சிறு
வட்டங்களில் ஒதுங்கும் தமிழர்களை கண்டு மெய் சிலிர்க்கலாம்.
அடுத்த விழா ஓர்லேண்டோ என்பதால் போக பார்ப்பேன். தாங்க முடியவில்லையென்றால் ஓர்லேண்டாவில் தப்பிக்க
இருக்கவே இருக்கு பல இடங்கள் !
திரும்பவும் நன்றி !
ஏனுங்க இந்த வருஷமும் திலகவதி வாராக, லியோனி வாராக, இறை அன்பு வாராக, சேரன் வாராக, சோழன் வாராக , பாண்டியன் வாராக ன்னு உடான்சு விட்டு எப்படியோ டிக்கட்டு வித்திட்டீங்க. அப்படி அவர்கள் எல்லாம் வரவில்லை என்ற விஷயத்தை அமுக்கிட்டீங்க. ஒரு யோக்கியமான அமைப்புன்னா அவர்கள் எல்லோரும் வரவில்லை என்ற உண்மையைச் சொல்ல வேண்டும் அல்ல்வா? இதென்ன ஃபிராடு வேலை? அப்புறம் ழ னா ல னா, ள னா கூட ஒழுங்கா உச்சரிக்கத் துப்பில்லாத சேரனுக்கும் தமிழ் அமைப்புல என்ன வேலை? உங்க ஃபெட்னாவோட டைரடக்கரு ஒருத்த்ர அமெரிக்க எஃப் பி ஐ பிடிச்சி உள்ள வச்சிருக்கே அதுக்கு என்ன சொல்லுறீங்க? பெட்னாவுக்கு இட ஒதுக்கீட்டும் என்ன சம்பந்தம். தமிழுக்கும் இந்திய அரசியலுக்கும் என்ன சம்பந்தம் அப்ப இட ஒதுக்கிட்டை எதுக்குறவுக உங்க விழாவுக்கு வரக்கூடாதுன்னுதானே அர்த்தம். பிறந்த வீட்டுக்கும் குடி புகுந்த வீட்டுக்கும் ரெண்டகம் நினைக்க்கும் இந்தக் விழா பொறுக்கிகளால் பொறுக்கிகளுக்காக நடத்தப் பட்ட ஒரு பொறுக்கித்தனமான விழா இதுக்கு பதிவு வெற த்தூ வெட்க்கமாயில்ல
Anonymous(July 12, 2007 2:06 AM):
நான் எதுக்குங்க பெட்னா விழா பற்றிய பதிவு எழுத வெட்கப்படனும்? நான் ஒரு பார்வையாளர். ஒரு விழாவைப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அதைப் பாராட்டி எழுதுகிறேன். சென்ற வருட விழா எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நிறைய குறை சொல்லி எழுதியிருந்தேன். "உங்க பெட்னா" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது என் பெட்னா அல்ல. அது ஒரு பொதுவான தமிழ் அமைப்பு. விமர்சனங்களுக்கு விதிவிலக்கானதும் அல்ல. எனக்கு என்ன புரியலைன்னா, பெட்னாவைப் பற்றி குறை சொல்லுபவர்களெல்லாம் ஏன் "Anonymous" என்கிற பெயரில் ஒளிந்துகொள்கிறீர்கள்? சும்மா என் பதிவில் பின்னூட்டம் இடுவதால் என்ன பயன்? உங்கள் கேள்விகளை பெட்னா நிர்வாகிகளிடம் கேட்டீர்களா? கேட்கவில்லை என்றால், இனிமேலாவது கேளுங்கள். பெட்னா இணையதளத்தில் அவர்களின் மின்அஞ்சல் முகவரி இருக்கிறது. குறைகளை அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். நான் அடுத்த விழாவுக்கும் போவேன். அதைப் பற்றியும் பதிவு எழுதுவேன்.
நன்றி,
தாரா
பதிவுக்கு நன்றி தாரா.
நன்றி தாரா,
இவர்கள் எல்லாம் நேரே கேட்க துப்பில்லாதவர்கள். இப்படித்தான் வந்து தமது வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்வார்கள்.
பெட்னாவின் இயக்குனர் எஃப் .பி.ஐ இல் இருக்கிறார் என்றால் அது அவருக்கும் அரசுக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை. அதற்கு ஏன் பெட்னாவோ அங்கு போவோரோ வெட்கப்பட வேண்டும். எனக்குத்தெரிந்து எத்தனையோ இந்திய 'தொழிலதிபர்' களை எஃப்.பி.ஐ வருமான வரி ஏய்ப்பில் கைது செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல்ல பலர் இன்னும் தண்டனை அனுபவிக்கின்றனர். இன்னும் பலர் வழக்கு நிலுவையில் உள்ளதால் 'வெளியில்' இருக்கிறார்கள். இவர்களில் பலர் நாம் செல்லும் விழாக்கள், சங்கங்களில் பதவி வகிப்பவர்கள்தான். அதற்காக எல்லா இந்தியர்களும் வெட்கித்தலை குனியவேண்டுமா?
அமெரிக்காவில் குற்றம் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்படும் வரை ஒருவர் நிரபராதி!
அமெரிக்கா வந்து டொலரும், காரும் வாங்குவதல்ல முக்கியம் அமெரிக்க அரசியலமைப்பு அதிலுள்ள நல்ல கருத்துகளை அறிந்து உங்களை நல்வழிப்படுத்த முயலுங்கள். அதை விடுத்து வெறும் இந்திய அரசியல்வாதி மனப்பான்மையை நிலைப்படுத்த முயலாதீர்கள்!!!!
விளக்கமான பதிவுக்கு நன்றி, தாரா!
சேரன் வரலையா?
சிவக்குமார் ஒரு வித்தியாசமான மனிதர். 10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் கல்லூரி(தூய வளனார் கல்லூரி, திருச்சி) வந்த பொழுது அவருடைய பேச்சும், Presentationம் மிக அருமையாக இருந்தது.
FETNA வீடியோ சுட்டி கிடைத்தால் கொடுக்கவும்.
அருமையான விமரிசனம். ஓய்வு எடுப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் ஓய்வு எடுத்திருக்கலாமோ? அப்புறம் ஒரு சின்னத் தவறு செய்துள்ளீர்கள். நித்யஸ்ரீயின் தந்தையின் பெயர் திரு சிவகுமார். ஆகும். பாலக்காடு மணி ஐயரின் மகள்தான் நித்யஸ்ரீயின் தாய். நீங்கள் தந்தை பெயர் மணி ஐயர் என எழுதி உள்ளீர்கள். முடிந்தால் அதை மாற்றலாம். தந்தைவழிப் பாடகியான டி.கே.பட்டம்மாளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
நன்றி கீதா, பெயரை மாற்றி விட்டேன்.
தாரா.
Thara:
Thanks for your good coverage.
Please ignore the annoymous comments. FeTNA is a Tamil organizations. It serves for Tamil cause and interest. It is a voluntary organization. Social issues are part of a community.
Keep up the good work.
Nanjil E. Peter
Post a Comment