போதும் போதுமென்கிற அளவு சிவாஜி திரைப்படத்தைப் பற்றி மக்கள் எழுதிவிட்டார்கள். நானும் என் பங்கை ஓரமாகத் தினித்துவிடுகிறேன்.
1. சனிக்கிழமை 7 மணி காட்சிக்கு காத்திருந்தபோது, 4 மணி காட்சி முடிந்து வெளியே வந்த நண்பர்கள் 10 பேரில் 7 பேர் "லாஜிக், கதை இதெல்லாம் மறந்துட்டு பார்த்தா படம் நன்றாக இருக்கிறது" என்றார்கள். 3 பேர் "ரொம்ப சுமாரா தான் இருக்கு" என்றார்கள்.
2. எதிர்பார்ப்பை மிகக் குறைத்துக்கொண்டே திரையரங்கில் சென்று அமர்ந்தேன்.
3. நான் தீவிர ரஜினி ரசிகை இல்லையென்றாலும், 'ரஜினி ஸ்டைல்' என்னைக் கவரத்தான் செய்தது.
4. ரஜினி அமெரிக்காவிலிருந்து வந்து சென்னை விமான நிலையத்தில் இறங்கும் காட்சியில் பழைய இளமையான ரஜினியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஒப்பனைக் கலைஞரின் திறமை தெரிகிறது.
5. படத்தின் முதல் பாகத்தில் விவேக்கின் நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்.
6. படம் முழுக்க வண்டி வண்டியாக நம் காதில் பூ சுத்தியிருக்கிறார்கள்.
7. கதாநாயகி ஷ்ரேயா மற்றுமொரு நடிக்கத் தெரியாத அழகு பொம்மை. நடனத்தில் ஒளிர்கிறார்.
8. ரஜினி நடனமா ஆடுகிறார்? என்ன செய்கிறார் என்றே புரியவில்லை.
9. பாடல்களில் ஏ.ஆர்.ஆர் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்.
10. எல்லாரும் ரஜினி துதி பாடுவது ரொம்ப டூமச்சாக இருக்கு. சாலமன் பாப்பையா கூட "இவர் ஸ்டைலைப் பாருங்கய்யா...இவர் பேச்சை பாருங்கய்யா...இவரைப் பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் யாராவது இருக்க முடியுமா?" என்று ஒழுகுவதும், "எங்க வீட்டுக்கு வாங்க...எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க" என்று அடிக்கடி சொல்லுவதும், ரஜினியுடன் சேர்ந்து 'ரண்டக்க ரண்டக்க' பாட்டுக்கு ஆடுவதும் பார்க்க வேதனையாக இருந்தது. ஒரு தமிழ் அறிஞருக்கு இது தேவையா?
11. கடைசியில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் 'மொட்டை ரஜினி' கலக்கல்!. அங்கிலத் திரைப்பட நடிகர் Samuel.L.Jackson ஐ காப்பியடித்திருக்கிறார் என்று நினைகிறேன்.
12. க்ளைமாக்ஸ் காட்சிகளில் உட்காரவே முடியவில்லை. செமை அறுவை.
13. ரஜினி ஒரு திறமையான நடிகர். அவரை வைத்து பாலசந்தர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் நல்லத் தரமான திரைப்படங்களை எடுத்திருக்கிறார்கள். சங்கருக்கு அந்த ஆசை இல்லையோ?
14. திரையரங்கில் இடம் கிடைக்காததால் நானும் என் கணவரும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தோம். இடைவெளையின் போது என்னிடம் வந்து "படம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டார். "பரவாயில்லை. இதுவரை நல்லா போச்சு" என்றேன். "என்னது? நல்லா போச்சா?!" என்று அதிர்ச்சியடைந்தவர், "உன்னை புரிஞ்சிக்கவே முடியவில்லை" என்று முனகிக்கொண்டே தன் இருக்கைக்குச் சென்றார்.
15. திரையரங்கில் இருந்து வெளியே வந்ததும் கூட வந்த நண்பர், "படம் எப்படி?" என்று கேட்டார். நான் ஒரு நிமிடம் யோசித்தேன். 3 மணி நேரத்தில், 2 மணி நேரம் எனக்கு நன்றாகவே பொழுது போயிற்று. இதைச் சொன்னபோது நண்பர் என்னை நம்பமுடியாமல் பார்த்தார் "நீங்களா இப்படிச் சொல்றீங்க" என்கிற மாதிரி. அவருக்கு சுத்தமாக படம் புடிக்கலையாம்.
நான் குழம்பிப் போய் என் மேலேயே எனக்கு சந்தேகம் வந்தது...சரி! ஏதோ தெரியாத்தனமா இந்தப் படத்தைக் "கொஞ்சம்" ரசிச்சுத் தொலைத்துவிட்டேன்! விடுங்களேன்!
3 comments:
aaluyara malaia kathula suththittanga..!
//ஒப்பனைக் கலைஞரின் திறமை தெரிகிறது.//
இது :-)))))
ஆனா ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகணும் எனக்கு.
தொப்பை இல்லாம இருக்கறது நடிகர்களுக்கு எப்பேர்ப்பட்ட ப்ளஸ் பாயிண்ட் பாருங்க.
நான் ரஜினி ரசிகன் தான். ஆனால், ரஜினிக்கு வயதாகி விட்டது. நடனம் மற்றும் சண்டை காட்சிகளுக்கு தேவையான வேக, ஆவேச உடல் அசைவுகளுக்கும் அவருடைய வயது ஒத்துழைக்கவில்லை. அதனால் இந்த வெற்றியோடு அவர் தன் கலை சேவையை நிறுத்திக்கொண்டால் என் பர்ஸுக்கு நல்லது.
Post a Comment