Friday, June 08, 2007

நியூயார்க் தோசை வண்டி

நான் ஓய்வு நேரங்களில் Food Network தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பதுண்டு. இதில், வெறும் சமையல் மட்டுமன்றி, உணவு சம்பந்தப்பட்ட போட்டிகள், நிகழ்வுகள், ஆராய்ச்சிகள் என்று பல வைகயான, வித்தியாசமான நிகழ்ச்சிகள் உண்டு. எல்லாவற்றையும் விட, எனக்குப் மிகவும் பிடித்தது 'Unwrapped' என்கிற நிகழ்ச்சி. உணவுக்குப் பின் ஒரு அறிவியலும் சரித்திரமும் இருக்கிறது என்று எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது. ஏதாவது ஒரு பிரபலமான உணவு வகை, உதாரணத்திற்கு Hot Dogs, பெரிய தொழிற்சாலைகளில் எப்படி செய்யப்படுகிறது என்று காட்டுகிறார்கள். ராட்சத இயந்திரங்களினால் மாமிசம் வெட்டப்பட்டு, சீராகக் கலக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கன்வேயர் பெல்ட்டுகளில் வரிசையாக, ஒரே அளவில் காகிதங்களால் சுற்றப்பட்டு பின் பெட்டிகளில் அடைத்து கடைகளுக்கு அனுப்பப் படும் வரை ஒரு திரைப்படம் போல பார்க்க முடிகிறது. Hot Dogs என்கிற பெயர் எப்படி வந்தது, அதை யார் தொடங்கினார்கள் போன்ற வரலாற்று செய்திகளும் நமக்குத் தெரியவருகிறது.

சில நாட்களுக்கு முன் Unwrapped நிகழ்ச்சியில், நியூயார்க்கில் சாலையோர வண்டி உணவகங்களுக்கான(street vendors) விருது நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன். முதலில் இவர்களுக்குக் கூட விருதா? என்று ஆச்சரியமாக இருந்தது. பிறகு அந்த விருதின் பின் உள்ள நல்லெண்ணம் மனதை நெகிழ வைத்தது. நியூயார்க் நகரின் பன்னாட்டு உணவு கலாசாரத்தில் இந்த சாலையோர வண்டி உணவகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படிப்பட்ட சாலையோர உணவகங்கள் நடத்தும் தொழிலாளிகளை ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், தொழில் தொடங்க பண உதவி அளிப்பதற்கும் ஒரு அமைப்பு இருக்கின்றது. அந்த அமைப்பு வருடா வருடம் "Vendy Awards" என்கிற விருது நிகழ்ச்சியை நடத்துகிறது.

முதலில் நியூயார்க்கில் உள்ள அனைத்து சாலையோர வண்டி உணவகங்களில் இருந்து நான்கு சிறந்த உணவகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பிறகு, அந்த நான்கில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை நடத்துபவருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த கடைசி நான்கில் வருவதே பெரிய விசயம் தான். கடந்த 2006 ஆண்டு நடந்த தேர்வில், அந்த நான்கில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் "The Dosa Man" என்று அழைக்கப்படும் குமார் என்ற இலங்கைத் தமிழர்!!!
Image Hosting

மன்ஹாட்டனில் உள்ள வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவில் இவர் நடத்தும் இந்த சாலையோர வண்டி உணவகத்தில் இவர் தயாரிக்கும் சுவையான, சூடான, மொறு மொறுப்பான மசாலா தோசைகளுக்கும், சாம்பார், சட்னி வகைகளுக்கும் 45 நிமிடங்கள் கூட வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுகிறார்கள் நியூயார்க் மக்கள்! இதில் பெரும்பாலானோர் அருகில் இருக்கும் நியூயார்க் பல்கலைக் கழக மாணவர்களாம்!
Image Hosting

12 வருடங்களுக்கு முன் யாழ்பாணத்திலிருந்து நியூயார்க் நகருக்கு வந்த குமார், முதலில் ஒரு தென்னிந்திய உணவகத்தில் சமையல்காரராகப் பணியாற்றினார். பின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பி, சாலையோரத்தில் தானே ஒரு சிறு வண்டியில் உணவகம் தொடங்கினார். தோசையின் பூர்வீக சுவையை தக்கவைப்பதற்கு தோசை மாவை கல் உரலிலேயே அரைக்கிறார்! ஒவ்வொருவருக்கும் வேண்டியபடி, கண்களுக்கு எதிரே சுடச் சுட தயாரிக்கப்பட்டு பறிமாறிக்கப்படும் இந்த தோசைகள், நியூயார்க் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. தோசை மட்டுமன்றி, இட்லி, மெது வடை, சமோசா பொன்றவையும் குமாரின் கடையில் கிடைக்கிறது.

அடித்துக்கொள்ள முடியாதது சுவையா விலையா என்று பிரமிக்கும் அளவு, தோசைகளின் விலையும் இருக்கிறது! ஒரு சாதா தோசை $3, ரவா தோசை $4, பாண்டிச்சேரி தோசை $5! இதில் மிகவும் பிரபலம், உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி போட்டு செய்த காரமான மசாலைவை உள்ளே வைத்துப் பறிமாறப்படும் பாண்டிச்சேரி தோசையாம்! இதோ அந்தத் தோசையின் புகைப்படம்...

Image Hosting

அடுத்த முறை நியூயார்க் செல்லும் போது, நெராக இந்தத் தோசை வண்டியைத் தேடித்தான் போவதென்று முடிவு செய்திருக்கிறேன்!

12 comments:

Anonymous said...

Ungal dosai patriya pathivu super,
mukiyamaaga antha "pondicherry dosai" fotovai paarthalay "kick" varugirathu ;-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல செய்தி !
பாராட்டப்பட வேண்டிய மனிதர்.

Anonymous said...

இவர் ஈழத்தில் சண்டிலிப்பாய் என்ற ஊரைச்சேர்ந்தவர். இவரைப்பற்றி நியூயோர்க்கில் உள்ள எறக்குறைய அனைத்து செய்தித்தாள்களிலும் செய்திகள் வந்துள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்காவின் புகழ்பெற்ற 'ஓப்ரா வின்ஃபிரி' யிலும் வந்தது. காலையில் கடை திறந்தால் மாலை 5.00 மணிக்கு மூடுவார். பின்னர் தனது இடம் சென்று அடுத்த நாளுக்கு தேவையான தாயாரிப்புகள் முடிந்து நித்திரைக்குச் செல்ல இரவு 12.00 ஆகும். தோசை மாவு வழக்கத்துக்கு மாறாக தீர்ந்து போகும் நாட்களும் அதிகம். பனிக்காலத்தில் கூட நடுங்கும் குளிரில் 20-30 பேர்வரை வரிசையில் நிற்பது சாதாரண காட்சி. நியூ யோர்க்கில் உள்ள விநாயகர் கோவில் அருகில் உள்ள 'தோசா ஹட்' எனப்படும் சைவ உணவகத்தில் பணியாற்றியவர். பின்னர் தனியாக தோசை வண்டியை ஆரம்பித்தவர். இதை ஆரம்பிக்க வங்கியில் சிறுதொழில் அடிப்படையில் கடனுக்கு விண்ணப்பித்து கடன் பெற்ற முதலாவது தோசை வண்டிக்கடை இவரது தான்!
அத்துடன் இவர் முன்னர் பணியாற்றிய 'தோசா ஹட்' உணவகம் கூட மிக பிரபல்யம் பெற்றது தான். அது கூட கல்வியங்காடு மற்றும் பருத்தித்துறையை சேர்ந்த இலங்கையரினாலேயே நடாத்தப்படுவது.

செல்வநாயகி said...

அந்த நண்பரின் உழைப்பும், வெற்றியும் பாராட்டுக்களுக்குரியவை. பகிர்ந்தமைக்கு நன்றி தாரா.

தாரா said...

ஹனிப், யோகன், செல்வநாயகி - வருகைக்கு நன்றி!

அனானி - தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

தாரா.

ulagam sutrum valibi said...

தாரா,
செய்திக்கு நன்றி.உன் பதிவைப் பற்றி பதிவாளர் சந்தோஷ் சொல்லித் தெரிந்தது. ஏழு வருடங்களாக இங்குதான் சுற்றிக் கொண்டு இருக்கிறேன், தோசை கடையைப் பற்றி அறியவில்லை.

சேதுக்கரசி said...

தகவலுக்கு நன்றி. அப்படியே நியூ யார்க்கில் எந்த இடம்னு சொல்லிட்டீங்கன்னா...

Anonymous said...

சேதுக்கரசி,

Washington Sq Park
West 4 St, Soloman Ave corner south side
(in front of NYU law school)

சேதுக்கரசி said...

நச்சுன்னு முகவரியோட சொல்லிட்டீங்களே.. நன்றி!

jeevagv said...

ஆமாங்க, நாங்களும், நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே, இப்படி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்டு இருக்கிறோம்!

வெற்றி said...

தாரா,
பதிவுக்கு நன்றி.
அடுத்த மாதம் நியூயோர்க் வரும் போது கட்டாயம் சாப்பிட்டுப் பார்க்க வேணும்.

/* நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே, இப்படி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்டு இருக்கிறோம்! */

ஜீவா, பல முறை நயகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தும் இக் கடை என் கண்ணில் படவில்லையே!
இக் கடை எவடத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அடுத்த முறை போகும் போது சும்மா ஒருக்கால் எட்டிப் பார்க்கலாம்.

Anonymous said...

இந்த வருடம் முதலாவது பரிசு !!!
http://www.nytimes.com/2007/09/30/nyregion/30vendys.html?_r=1&ref=nyregion&oref=slogin