
'நான் அவனில்லை' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கி, ஜெமினி கனேசன் நடித்த பழைய 'நான் அவனில்லை' திரைப்படத்தையும் கிட்டத் தட்ட 15 வருடங்களுக்கு முன் பார்த்தேன். இன்னமும் அதில் ஜெமினியின் நடிப்பும், பல காட்சிகளும், சில பாடல்களும் நினைவில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அந்தப் படத்தின் தரம்! இந்த நவீன 'நான் அவனில்லை' க்கும் பாலசந்தரின் 'நான் அவனில்லை' க்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.
புதிய படத்தின் கதாநாயகன் ஜீவன், "நான் ஜெமினி இல்லை" என்றும், இயக்குனர் செல்வா, "நான் பாலசந்தர் இல்லை" என்றும் படம் பூரா சொல்லியிருக்கிறார்கள்! ஒரிஜினல் திரைப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் புதுப் படம் கட்டாயம் பிடித்திருக்கும். படம் சலிப்புத் தட்டாமல் வேகமாகக் கதை நகர்கிறது. அதுமட்டிலும் பாராட்டலாம். பாடல்களில், 'ஏனெனக்கு மயக்கம்' மற்றும் 'ராதா காதல் வராதா' (பழைய பாடலின் re-mix) இரண்டும் மிகவும் இனிமை.
இந்த காலத்திற்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். நவீன தொழிற் நுட்பங்கள், காட்சி அமைப்புகள், ஒலி - ஒளிப் பதிவு எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லாவற்றிலும் புதுமையை கையாண்டவர்கள், பெண்களின் அறிவை மட்டும் 50 வருடங்கள் பின்னால் rewind செய்திருக்கிறார்கள். ரொம்பவும் கேவலமாகவும், சுலபமாகவும் பெண்களை கதாநாயகன் ஏமாற்றுகிறார். ஒரிஜினல் படத்திலும், ஐந்து பெண்கள் கதாநாயகன் ஜெமினியிடம் ஏமாந்து போகிறார்கள். ஆனால் அந்த ஏமாற்றங்கள் முட்டாள்தனமாக இல்லாமல், ஒவ்வொன்றிலும் ஒரு வலுவான காரணத்தை அமைத்திருப்பார் பாலசந்தர். ஒவ்வொரு பெண்ணையும் பேச்சிலும் செய்கையிலும் மடக்கி, மயக்கி ஏமாற்றும் ஜெமினியின் நடிப்பு அபாரமாக இருக்கும். பெண்களை ஏமாற்றும் நயவஞ்சகத்தைவிட, அவர் அதை செய்யும் புத்திசாலித்தனம் ரசிக்கும்படி இருக்கும். புதிய படத்தில் ஜீவன் அந்தப் பெண்களை ஏமாற்ற எடுக்கும் முயற்சிகள் அபத்தமாக இருக்கின்றது. ஒரே காட்சியில் அந்தப் பெண்கள் ஜீவனை திருமணம் செய்துகொள்ள சம்மதித்து விடுகிறார்கள். அதுவும், ஆசிரமத் தலைவியின் மகளை மடக்குவதற்கு கிருஷ்ண பகவான் பேசுவது போல், கிருஷ்ணர் சிலைக்குப் பின் ஒலிபெருக்கி வைப்பது நம்பும்படியாக இல்லை. மேலும், சினேகாவின் கதாபாத்திரத்தில் பழைய படத்தில் லட்சுமி நடித்திருப்பார் - ஜெமினியின் உருது கவிதைத் திறனால் ஈர்க்கப்பட்டு பின் ஏமாந்த பெண்ணாக. இருந்தாலும், ஜெமினியின் புத்திசாலித்தனத்தினால் ஈர்க்கப்பட்டு, நீதி மன்ற நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவாள். தீர்ப்பை பற்றி லஷ்மியும், நீதிபதியான அவருடைய தந்தையும் விவாதித்துக் கொள்வதெல்லாம் சற்று அறிவுபூர்வமாக இருக்கும். புதிய படத்தில் சினேகா ஏன் வருகிறார் என்றே தெரியவிலலை!
புதிய 'நான் இவனில்லை' நன்றாக இல்லை என்று சொல்லமுடியாது. இரண்டரை மணி நேரம் பொழுது போனது தெரியவில்லை, இருந்தாலும் கே.பி யின் 'நான் அவனில்லை' போல் இது இல்லை.
'ராதா காதல் வராதா' பாடலை உண்மையிலேயே நன்றாக re-mix செய்திருக்கிறார்கள். அனால், கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் தான் இசையின் இனிமையை உணரமுடியும்!...நவனீத காதல் போதை தராதா...ராஜ லீலை தொடராதா...ராதா ராதா காதல் வராதா என்று கடைசியா குரலை ஒரு தூக்கு தூக்குவாரே, சூப்பர்! பழைய பாடலை பாலமுரளிக் கிருஷ்ணா பாடினார் என்று சிலர் சொல்கிறார்கள், சிலர் எஸ்.பி.பி என்கிறார்கள். எது உண்மை? புதிய பாடலை பாடியவர் யார்?. தெரிந்தால் சொல்லுங்கள்.
2 comments:
Radha kaadhal varadha - SPB the Don!
ப்ளாகெஸ்வரி :-)
தகவலுக்கு நன்றி.
தாரா.
Post a Comment