Thursday, July 20, 2006

அத்திலக வாசனைப்போல்?

பெண்களின் கூந்தலில் இயற்கையிலேயே மணம் உண்டா, இல்லையா என்று வரலாற்றில் கேள்வி எழுந்தது போல் எனக்கு இப்ப ஒரு கேள்வி எழுந்திருக்கிறது! பெண்கள் நெற்றியில் வைக்கும் திலகத்திற்கு மணம், வாசனை எதுவும் உண்டா? தமிழ்த் தாய் வாழ்த்தின் பொருளைப் படித்தபோது இந்தக் கேள்வி என் மனதில் எழுந்தது.

தமிழ்த் தாய் வாழ்த்து:

நீராடும் கடலுடுத்த நிலமடந்தை
கெழில் ஒழுகும்சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும்
அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

கடைசி மூன்று வரிகளுக்குப் பொருள்:

"அந்த நெற்றியில் இட்ட பொட்டு போன்றது திராவிட நாடு;அந்தப் பொட்டின் வாசனைபோல் எல்லாத் திசைகளிலும் உன் புகழ் பரவி உலகில் உள்ள எல்லோரும் இன்பமடைய வீற்றிருக்கும் தமிழ்த் தெய்வமே!"

நெற்றிப் பொட்டில் வாசனை வருமா? நான் கேள்விப்பட்டதில்லை. அப்படியே வாசனை வந்தாலும், எல்லாத் திசைகளிலும் பரவும் அளவுக்கு சக்திவாய்ந்த வாசனையாக இருக்குமா?

நான் தமிழ்த் தாய் வாழ்த்தை கிண்டல் செய்யவில்லை. முழு மரியாதையுடன், அதன் பொருளை சரியான முறையில் புரிந்துகொள்வதற்காக கேட்கிறேன். தெரிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்!

10 comments:

VSK said...

வாசனைக் குங்குமம்னு கேள்விப்பட்டதில்லை??
:)

தாரா said...

sk, செங்கமலம்,

தகவலுக்கு நன்றி.

தாரா.

இலவசக்கொத்தனார் said...

படிச்ச உடனே இந்த பாட்டுதான் ஞாபகத்திற்கு வருது.

சாந்து பொட்டு பளபளக்க
சந்தணப் பொட்டு கமகமக்க....

அதோட எங்க தாத்தா நினைவும் (அவரு குளிச்சிட்டு வந்தாருன்னா வீடே சந்தண வாசம் அடிக்கும்), எங்க தெரு பெருமாள் கோவிலில் சந்தணம் அரைக்கும் இடத்தில் வரும் கதம்ப வாசனையும்......

தாரா said...

நன்றி இலவசகொத்தனார், பார்வை. வாசனை குங்குமம், ஜவ்வாது பொட்டு, வாசனை திரவியம் கலந்த பொட்டு - எல்லாம் சரி தான். ஆனால் தமிழ் அன்னையின் புகழை நாலா புறமும் பரப்புவதற்கு உவமையாக சொல்லப்படும் அளவு சிறப்பு மிக்க வாசனையா என்று தான் எனக்குப் புரியலை.

தாரா.

VSK said...

இன்னொரு கருத்து!

கும்பகோணம் குங்குமம் மிகவும் பிரசித்தி பெற்றது!
நல்ல பசு மஞ்சளை வைத்து அரைப்பார்கள்.
கெமிக்கல் கலப்பில்லாமல் செய்யப்படும்,
எவ்வளவு காலம் நெற்றியில் இட்டுக்கொண்டாலும் கறையாக்காத சுத்தமான குங்குமம்.

அந்தப் பசுமஞ்சள் வாசம் இன்னும் எனக்கு நினைவில் மணக்கும்!

மேலும், எதிலோ படித்த இன்னொரு நிகழ்வு....
நெற்றிப்பொட்டிலிருந்து வரும் குங்குமத்தின் வாசனையும், காலில் அணியும் மெட்டியின் ஒலியும் கற்புடைப் பெண்டிர்[மணமான பெண்கள்] வருதலைக் காட்டிவிடுமாம்.

இப்போது ஒரு வாதம் [லைட்டாத்தான்!!]

இவள் இடும் சிறு நெற்றிப்பொட்டின் வாசனையே அக்கம்பக்கமெல்லாம் மணந்து பரவும் போது,
திராவிட நாடு சைஸுக்கு ஒரு பொட்டு, நம் பாரதப் பிறைநுதல்ல இருந்துச்சுன்னா, ஏன் அகிலம் முழுக்க மணக்காது!??
:))

Suka said...

தாரா..

தமிழ் 'நில'மடந்தை யின் நெற்றிப் பொட்டிற்கு வாசமில்லாமல் போகுமா.. மண் வாசனை உண்டல்லவா

தமிழர்கள் திரைகடலோடி அனைத்து உலகமும் இன்பமுற தமிழைப் பரப்ப வேண்டும் என்பதைத் தான் சொல்லியிருப்பாரோ !

வாழ்த்துக்கள்
சுகா

-/சுடலை மாடன்/- said...

இப்படிக் கேள்வியெல்லாம் கேட்டால் கம்பராமாயணம் எல்லாம் படிக்கவே முடியாதே!

"வாசனைப் போல்", "மறுப்பக்கம்" - அப்பப்ப்ப்பா என்ன இந்த வாரம் தப்ப்ப்புத்தப்ப்ப்பா தேவையில்லாமல் 'ப்' போடுகிறீர்கள் இரண்டு பேரும் :-)


சங்கர்

தாரா said...
This comment has been removed by a blog administrator.
தாரா said...

சங்கர்,

தமிழ்த்தாய் வாழ்த்து, அதை அடிக்கடி பாடுகிறோம், என்பதால் தான் படித்து அக்கறையாக கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்ள நினைக்கிறேன். கம்பராமாயணம் என்றால் கேள்வி கேட்டிருக்கவே மாட்டேன்!

//என்ன இந்த வாரம் தப்ப்ப்புத்தப்ப்ப்பா தேவையில்லாமல் 'ப்' போடுகிறீர்கள் இரண்டு பேரும் :-)//

என்ன செய்வது? எங்கள் ஊர் தமிழ் ஆசிரியர் ரொம்ப பிஸி! எங்களுக்காக நேரம் ஒதுக்குவதே கிடையாது! :-)

தாரா.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கவிதைக்கு பொய் அழகு இல்லையா? அது போலக் கூட இருக்கலாம். ஒரு வேளை பொட்டு வைத்திருக்கும் பெண்ணைப் பார்க்கும் பொழுதெல்லாம் மனதில் தமிழ் வாசம் ஊற்றெடுத்து கவிதையா பொழியறாங்களே தமிழ் மண்ணின் மைந்தர் அதனால் கூட இருக்கலாம்.

சும்மா தோணுணதைப் போட்டேன். எதோ சீரியஸான டிஸ்கசன்ல குறுக்கே வந்திருந்தா மன்னிக்கவும்.