மீரா ஜாஸ்மின், ஜெயமாலா இருவரில், ஜெயமாலாவை சற்றுப் பாராட்டத் தோன்றுகிறது. "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னுடைய ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட மீண்டும் ஐயப்பன் கோவிலுக்குப் போவேன்" என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறார். மேலும் "முதலில் கோவிலில் பந்தோபஸ்த்தை அதிகப்படுத்துங்கள். பிரபலங்களையும் சாதாரண மக்களையும் சமமாக நடத்துங்கள். சட்டங்களை பலகைகளில் துல்லியமாக எழுதிப்போடுங்கள்" என்று கோவில் செயற்குழுவிற்கே அறிவுரைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்.
மாதவிடாய் வரும் பெண்கள் கோவிலுக்கு வந்தால் கோவிலின் புனிதம் கெட்டுப் போய்விடும் என்று சொல்வது உலக மகா முட்டாள்தனம். எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதோ சிந்திப்பதோ கிடையாது. ஆனால் சில அற்புதமான நிகழ்வுகள் நேரும் போது, கடவுள் இருக்கிறாரோ? என்று மனம் தடுமாறும். அப்படி ஒரு அற்புதமான நிகழ்வு தான் ஒரு பெண் கருவுற்று குழந்தை பெறுதல். இந்த நிகழ்வில் ஒரு முக்கிய கட்டம் தான் 'மாதவிடாய்'. அது நடக்காமல் உலகத்தில் எந்த மனிதனும் பிறந்திருக்க முடியாது. மாதவிடாய் என்பதை தீட்டு என்றும் புனிதம் கெட்டுவிடும் என்றும் சொல்லும் சாஸ்த்திரிகளும் தந்திரிகளும், ஏன்? அந்த சபரிமலை ஐயப்பனே கூட அந்த நிகழ்வு இல்லாமல் ஜனித்திருக்க முடியாது. ஒரு உயிரை உருவாக்கி, தன் உடம்பில் தாங்கி, உலகத்திற்குக் கொண்டுவரும் பெண் குலம் கோவிலுக்குப் போவது அந்தக் கோவிலுக்குப் புனிதம் என்று நான் நினைக்கிறேன். இந்த விசயம் சட்டம் படித்தவர்களுக்குக் கூட ஏன் புரியவில்லை? 10 வயதிலிருந்து 55 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சில வருடங்களுக்கு முன் ஆணை பிறப்பித்திருந்ததாமே?!
மீரா ஜாஸ்மினுடையது ஒரு வித்தியாசமாக பிரச்சினை. எனக்கு ஒரு கேள்வி. மீரா ஜாஸ்மின் இந்துக் கோவிலுக்குள் நுழைந்தது குற்றம், தீட்டு!. அந்தத் தீட்டைக் கழிக்க தீட்டு ஏற்படுத்தியவரிடமே பணம் வாங்குவார்களா??? அந்தப் பணம் மட்டும் தீட்டு இல்லையா? மேலும் சில கேள்விகள்: "இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கோவிலில் நுழையக்கூடாது" என்கிற சட்டம் எந்த வடிவத்தில் இருக்கும்? கோவில் சட்ட திட்டங்கள் ஆவணங்களாக இருக்குமா? அல்லது கோவில் வாசலில் "இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை" என்று பலகை வைப்பதோடு சரியா? பிற மதத்தைச் சார்ந்தவர்கள் இந்து கோவிலுக்கு வருவது இந்து மதத்திற்கு நல்லது தானே? இந்து மதத்தை விரிவு படுத்த இது ஒரு நல்ல வழி தானே?
2 comments:
பெண்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்பதை ஆதரிப்பவன் அல்ல நான். பொதுவாகவே அபராதம் விதிப்பது என்பது மற்றவர்கள் இந்த தவறை செய்ய கூடாது என்பதற்காக செய்யபடுவது. எந்த தண்டனையும் இல்லாவிட்டால் நிறைய பேர் தவறு செய்வார்களே. கோவில் விதிக்கும் அபராதங்களை அவ்வாறே பார்க்க வேண்டும். திரும்பவும் நான் அழுத்தமாக சொல்கிறேன். பெண்கள் அல்லது மற்ற மதத்தினர் கோவிலுக்கு வர கூடாது என்கின்ற நடைமுறையை மிக கடுமையாகவே எதிர்ப்பவன் நான். ஆனால் கோவில் அபராதத்தின் நோக்கத்தை கூறவே இந்த பின்னூட்டம். மற்றபடி உங்கள் பதிவி தர்க்க ரீதியாகவே எழுத பட்டுள்ளது. பாராட்டுக்கள்.
நன்றி பாலசந்தர். எதற்கெல்லாம் அபராதம் விதிக்கவேண்டும் என்பது தான் இங்கே பிரச்சினை.
தாரா.
Post a Comment