Monday, July 10, 2006

ஃபெட்னா 2006 தமிழர் விழா - ஒரு கண்ணோட்டம்

ஃபெட்னா(FeTNA) 2006 விழா முடிந்த கையோடு, சுந்தரவடிவேல் போல சுடச் சுட பதிவு எழுத ஆசைப்பட்டேன். நேரம் கிடைக்கவில்லை. 1999 ஆம் ஆண்டிலிருந்து என் கணவர் தொடர்ந்து அனைத்து ஃபெட்னா விழாக்களுக்கும் சென்று வருகிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் கதை கேட்டுத் தெரிந்துகொள்வேனே தவிர, நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததில்லை. நான் முதன் முதல் சென்ற ஃபெட்னா விழா 2003 ஆம் ஆண்டில் நியூஜெர்சியில் நடந்த விழா. அப்போது தான், ஃபெட்னா என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒன்று கூட்டக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு என்று தெரியவந்தது. அங்கே நான் சந்தித்த பிரபலங்கள், அவர்கள் என்னிடம் ஏற்படுத்திய பாதிப்புகளினாலும், அதனால் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணத்தாலும், எங்கள் பேட்டையில் நடைபெறுவதாலும், 2004 ஆம் ஆண்டு பால்டிமோரில் நடைபெற்ற ஃபெட்னா விழாவில் முழு மூச்சாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அந்த விழாவில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டன, மேலும் ஆர்வம் அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் முடிந்த வரை ஃபெட்னாவுக்குச் சென்று வர வேண்டும் என்று முடிவெடுத்தேன். சென்ற ஆண்டு சில காரணங்களால் டெக்ஸாஸ் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு நியூயார்க்கில் அதுவும் மன்ஹாட்டனில் விழா என்று தெரிந்ததும் குதூகலமாக முன் பதிவு செய்தோம். பிறகு ஃபெட்னா இணையதளத்தில் விழாவுக்கு வரும் பிரபலங்கள் பட்டியலைப் பார்த்ததும் சற்று ஏமாற்றமாக இருந்தது. ராதிகா, சரத்குமார், வைரமுத்து, பா.விஜய், அறிவொளி, வினோதினி, ஸ்வாதி, தேவிப்பிரியா, குட்டி, வாணி ஜெயராம், ஹாரிஸ் ராகவேந்திரா, மாதங்கி, விஜயலக்ஷ்மி நவநீதக்கிருஷ்ணன் குழுவினர் ... இதில் அறிவொளி, விஜயலக்ஷ்மி குழுவினர் தவிர மற்றவர்கள் எல்லாருமே சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு முறையும் சினிமா துறையிலிருந்து கலைஞர்களை வரவழைப்பது வழக்கம் தான் என்றாலும், இந்த முறை இத்தனை பேர் தேவையா என்று தோன்றியது. விழாவுக்கு ஒரு மாதத்திற்கும் முன், விஜயலக்ஷ்மி குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டதால் அவருடைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. என்னுடைய ஆர்வம் காற்றிறங்கிய பலூன் போலானது. போவதா வேண்டாமா என்று யோசனையில் இருந்தபோது, நண்பர்களெல்லாம் சும்மா ஜாலியா போய் வரலாம் வாருங்கள் என்று ஊக்கப்படுத்தியதால், சரியென்று கிளம்பினோம்.

சனிக்கிழமை(ஜூலை 1) காலை சுமார் 10 மணிக்கு விழா நடக்கும் மன்ஹாட்டன் சென்ட்டருக்கு அருகில் இருந்த ஹோட்டல் நியூயார்க்கரில் பதிவுச் சீட்டுக்களையும், விழா மலர், மற்றும் சில இத்யாதிகள் அடங்கிய பையையும் பெற்றுக்கொண்டோம். விழா மலரை எடுத்துப் பார்த்தேன். அட்டை படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மன்ஹாட்டன் வீதிகளில் தமிழன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு போவது போல் தீட்டப்பட்டப் படம் (தமிழனுக்கு அடையாளம் மாட்டு வண்டி தானா? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், அது ஒரு பாரம்பரியச் சின்னம் என்பதற்காக அப்படி போட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது). அதைப் பார்த்ததும், அன்று காலை நானும் கணவரும் மன்ஹாட்டனில் வந்திறங்கிய காட்சி கண் முன் தெரிந்தது. அரங்கித்தில் இருந்து இரண்டு ப்ளாக்குகள் தள்ளி காரை நிறுத்தியிருந்தோம். நான் பட்டுப்புடவையை இழுத்துச் செருகிக்கொண்டு, என் கணவர் பட்டு வேஷ்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு, பெட்டி, பைகளுடன் சாலைகளைக் கடக்கையில், மன்ஹாட்டன் மக்கள் எங்களை வினோதமாகப் பார்த்தார்கள். மாட்டு வண்டி ஒன்று எங்களுக்குக் கிடைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் :-)

முதல் நாள் காலை நிகழ்ச்சிகள் சுறு சுறுப்பாக இருக்கவேண்டாமா? அதற்கு மாறாக, தூக்கத்தை வரவழைத்தன. சுமார் 45 நிமிடங்கள் மேடையை ஒரு நடன ஆசிரியையிடம் கொடுத்துவிட்டார்கள். அவர் ஒவ்வொரு மாணவியாக அறிமுகப்படுத்தி, நடனத்தைப் பற்றிய விளக்கத்தை விலாவரியாகப் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்கத் தேசிய கீதத்துக்குப் பிறகு இந்திய தேசியக் கீதம் பாட வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் சொன்னார். பாடினால் என்ன? என்று நான் கேட்டபோது, ஃபெட்னா வட அமெரிக்கவில் நிறுவப்பட்ட ஒரு தமிழ் அமைப்பு. இதில் இந்தியத் தமிழர்கள் மட்டுமன்றி, பிற நாட்டுத் தமிழர்களும் கலந்துகொள்கிறார்கள். அப்படியிருக்கும் போது இந்திய தேசியக் கீதத்தை மட்டும் பாடுவது முறையில்லை என்று சொன்னார். சரியென்று பட்டது எனக்கு. வரிசையாக நடனங்களைப் பார்க்க ஆர்வமில்லாமல் மதிய உணவுக்காக உணவுக்கூடத்திற்குச் சென்றோம். சுந்தரவடிவேல் சொன்னது போல் சாப்பாட்டுக் கடை கூத்தை தனிப் பதிவாகத் தான் போடவேண்டும். இருந்தாலும், பல வருடங்களாக இங்கே நடக்கும் தமிழ்ச் சங்க விழாக்களில் உணவுக்காக நீண்ட வரிசையில் நின்று காத்திருத்தல், உணவுக் கிடைக்காமல் பின்னிரவில் வீடு செல்லும் போது மெக்டொனால்ட்ஸ், டாக்கொ பெல் போன்ற உணவகங்களில் சாப்பிடுதல் போன்றவையெல்லாம் பழகிவிட்டன. அதனால் உணவு விஷயம் பெரிதாகத் தெரியவில்லை. மதிய உணவுக்குப் பின் அன்றைய நிகழ்ச்சி நிரலை எடுத்துப் பார்த்தேன். அதில் நான் பார்க்க விரும்பிய நிகழ்ச்சிகள் இரண்டே இரண்டு தான். 4 மணிக்கு புலவர் அறிவொளி தலைமையில் பட்டிமன்றம். 7 மணிக்கு வைரமுத்து, அன்புமணி, சரத் குமார், ராதிகா ஆகியோரின் உரைகள். விடுதி அறையில் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு 4 மணிக்கு பட்டிமன்றத்திற்கு வந்து அமர்ந்தோம். பட்டிமன்றம் நன்றாகப் போனது, ஆனால் நான் எதிர்பார்த்தது போல் கலகலப்பாகவோ, விறுவிறுப்பாகவோ இல்லை. 7 மணி நிகழ்ச்சியில் வைரமுத்து மற்றும் அன்புமனியின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. வைரமுத்து பேசும் போது "இந்தியத் தமிழர்கள் தமிழுக்கு முகம் கொடுத்தார்கள். இலங்கைத் தமிழர்கள் தமிழுக்கு முகவரி கொடுத்தார்கள்" என்றார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது!. மேலும், "இங்கே முன் வரிசையில் இந்தியத் தமிழர்கள் வெளிச்சத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன். இங்கேயுமா இலங்கைத் தமிழர்கள் பின்னால் இருட்டில் அமர்ந்திருக்க வேண்டும்?" என்றார். கூட்டம் எழுந்து நின்று ஆர்ப்பரித்தது! அன்புமணி பேசும்போது, "வெளிநாடுகளில் நான் ஒரு தமிழன் என்று சொன்னாலே, உடனே Are you from Srilanka? என்று தான் கேட்கிறார்கள்" என்றார். அதற்கும் கரகோஷம். இலங்கைத் தமிழர்களுக்கு ஃபெட்னாவில் எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன். ஆனால் வந்திருந்த அனைவருமே இப்படி அடுத்தடுத்துப் பேசியது என்னவோ ஃபெட்னாவின் நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்றார் போல் பேசியது போல் செயற்கையாக இருந்தது. சரத் குமார், தமிழ் நாட்டில் இருக்கும் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்குதலின் அவசியத்தைப் பற்றிப் பேசுகையில், "தமிழ் படிக்கமாட்டேன் என்று சொல்பவர்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை" என்றார். வைரமுத்து, அன்புமனி, சரத் எல்லாருமே தமிழை மையக்கருத்தாக வைத்துப் பேசினார்கள். ராதிகா தொடக்கத்தில் தமிழ் மொழி, கலாசாரம் என்று லேசாகத் தொட்டுவிட்டு, பின் தன்னைப் பற்றியப் பெருமையையே பேசினார். தான் சினிமாவில் முன்னுக்கு வந்தது, தனது கடின உழைப்பு, தான் சாதித்தது என்று ஒரே சுய புராணமாக இருந்தது. ராதிகா, சரத் இருவருமே ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல், கருணாநிதியை 'தமிழினத் தலைவர்' என்று குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசியது வியப்பாக இருந்தது. அடுத்து 'முத்தமிழ் முழக்கம்' என்கிற நடன நிகழ்ச்சிக்கு முன் கிடைத்த சிறு இடைவேளையில் நண்பர்களுடன் அரங்கத்தைவிட்டு வெளியேறினேன். இரவு 10 மணியிருக்கும். வெளியே அருமையாகத் தென்றல் காற்று! காலார நடந்து எதிரே இருந்த ஸ்டார் பக்ஸ் காப்பிக் கடைக்குப் போனால் அது மூடியிருந்தது! மன்ஹாட்டனில், அதுவும் இரவு 10 மணிக்கு, அதுவும் ஸ்டார் பக்ஸ் மூடியிருக்கிறதா?! வியப்பாக இருந்தது. வேறொரு கடையில் தேனீர் குடித்துவிட்டு மீண்டும் அரங்கத்திற்கு வந்தபோது 'முத்தமிழ் முழக்கம்' தொடங்கியிருந்தது. இயல், இசை, நாடகம் என்று 3 பகுதிகள் கொண்ட நடனம். அருமையாக இருந்தது. ஆனால் மிக நீண்டதாக இருந்தது. இயல், இசை பகுதியைப் பார்ப்பதற்குள் கண்கள் சொருகியதால், அன்றைய கூத்துக்கு முத்தாய்ப்பு வைத்துவிட்டு விடுதி அறைக்குச் சென்றுவிட்டோம்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமைக்(ஜூலை 2) காலை. நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன். இரவு 7 மணி வரை அரங்கத்தினுள் நுழையவேண்டாம் என்று முடிவு செய்தேன். நண்பர்களுடன் சைனா டெளன், லிட்டில் இடாலி போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மாலை 8 மணிக்கு அரங்கத்திற்குத் திரும்பினேன். 'குட்டி' யின் நடனம் முடிவடைந்திருந்தது. பிரமாதமாக இருந்தது என்று எல்லாரும் சொன்னார்கள். அடுத்து நடிகை ஸ்வாதி குழுவினர் நடனம். ஸ்வாதியின் உடையைப் பார்த்ததும் 'பக்' கென்றிருந்தது. உடன் ஆடிய அமெரிக்கா வாழ் நடனக் கலைஞர்களின் உடையும் அப்படியே. வழக்கமாக மலேசியா, சிங்கப்பூரில் நடிக நடிகையர் நடத்தும் கலை நிகழ்ச்சி போல் ஃபெட்னாவையும் நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. யாரையும் குறை சொல்ல முடியாது. இது ஒரு கம்யூனிகேஷன் இடைவெளி தான். கலைஞர்களை ஏற்பாடு செய்யும் ஃபெட்னா நிர்வாகிகள், அவர்கள் என்ன மாதிரி நடனம் ஆடுகிறார்கள், என்ன உடை அனிகிறார்கள் என்பது போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஸ்வாதி, வினோதினி, தேவிப்பிரியா போன்றவர்களுக்கு ஃபெட்னாவைப் பற்றி யாரும் விளக்கிச் சொல்லியிருக்கவும் மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இது மற்றுமொரு கலை நிகழ்ச்சி. அவ்வளவுதான்! பலர் இந்த நடன நிகழ்ச்சியை ரசித்தாலும், பலர் வருத்தப்படவும் செய்தார்கள். உடையை கலாசாரக் கட்டுப்பாட்டுகளுடன் சம்பந்தப் படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் உடை என்பது உடம்பு, வயது, சூழ்நிலை ஆகிய மூன்றிற்கும் கட்டாயம் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஃபெட்னா விழா எற்பாட்டின் போது நிர்வாகிகள் திரைப் படக் கலைஞர்களின் உடை, எந்தவிதமான நடனம் ஆடுகிறார்கள் போன்ற விவரங்களையும் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி தொடங்கியது. வாணி ஜெயராம் எழுபது, எண்பதுகளில் வந்த இனிமையான திரைப்படப் பாடல்களைப் பாடினார். ஹாரிஸ் ராகவேந்திரா, மற்றும் மாதங்கியும் இனிமையான பாடல்களைப் பாடினார்களில்.

திங்கள் கிழமை(ஜூலை 3) முழுவதும் வீணாகப் போனது! திங்கள் இரவு 6 மணிக்கு மன்ஹாட்டன் க்ரூஸ்(Cruise)! அதுவரை என்ன செய்வது? 5 மணி வரை எப்படியோ கதை பன்னிவிட்டு, கப்பல் நிற்கும் இடத்திற்குச் சென்றோம். கப்பலில், மன்னிக்கவும்! படகில் ஏறிய உடனேயே எனக்கு முகம் சுருங்கியது! கடலில் பயணிக்கும் 'ராயல் கரீபியன்', 'கார்னிவெல்' போன்ற சொகுசுக் கப்பல்கள் போல் இதுவும் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஓரளவாவது பெரிதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் சென்றது ஒரு ஃபெர்ரி படகு(ferry boat)! மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மேலே டெக்கில்(deck) நல்ல வேளையாக காற்றோட்டமாக உட்கார இடம் கிடைத்தது. சுற்றிலும் நியூயார்க்கின் ரம்மியமானக் காட்சிகள். உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடங்கள் இல்லாத ந்யூயார்க்கைப் பார்க்கும் போது மனம் கரைந்தது!

ராதிகாவும் சரத் குமாரும் டெக்கில் வந்து சற்று நேரம் நின்றிருந்தார்கள். அங்கே இருந்த உறவினர் ஒருவர் அவர்களைப் பார்த்ததும் ஆர்வத்துடன் எழுந்து நிற்க, அவருடைய மனைவி "ஒரு நடிகைக்காக எழுந்து நிற்கனுமா?" என்று கோபப்பட்டார். யாருக்காக எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், ஒரு பெண் நடிகையாக இருந்தால் அவள் மரியாதைக்குரியவள் அல்ல என்ற அவருடைய கருத்து என்னை வருத்தப்பட வைத்தது. சில நிமிடங்களில் நடிகை ஸ்வாதி அங்கே வந்தார். அன்று அவர் அனிந்திருந்த உடையும் பார்க்கச் சகிக்கவில்லை. படகின் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு வெளிப்புறத்திலிருந்து ஒருவர் ஏற முயன்று ஒரு கம்பத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார். யாராக இருக்கும் என்று பார்த்தால், அவர் நடிகர் - நடனக் கலைஞர் குட்டி! அவருக்கு ஒரு கால் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். குடித்திருந்தார். அவருக்கு இது தேவைதானா? என்னவாயிற்று இந்த நடிகர்களுக்கு? பெயரும், புகழும், பணமும் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நல்லபடியாக இருக்கலாமே?

க்ரூஸ் முடிந்து, மீண்டும் விடுதிக்கு வந்து பெட்டிப் படுக்கைகளை எடுத்துக்கொண்டு காரில் ஏற்றி, ந்யூயார்க்கை விட்டு வெளியேறியபோது, அப்பாடா என்றிருந்தது. ஆனால் மனம் வருத்தப்பட்டது, இரண்டு நாட்களாக ஆர்வத்திற்கும் அறிவிற்கும் தீனி கிடைக்கவில்லையே என்று. முந்தைய விழாக்களில் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ், பிரபஞ்சன், சிவகாமி(I.A.S), நர்த்தகி நடராஜன், கவிஞர் சேரன் போன்றோரின் சந்திப்பும் அவர்கள் பரிமாறிய கருத்துக்களும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அதைப்போல் எடுத்துச் செல்வதற்கு இந்த விழாவில் எந்தக் நினைவும் கருத்தும் இல்லை! ஆனால் மீண்டும் அடுத்த ஆண்டும் ஃபெட்னா விழாவுக்குப் போவேன். இந்த விழாவில் பல பாடங்கள் கற்ற ஃபெட்னா நிர்வாகிகள் அடுத்த விழாவில் பிழைகளைத் திருத்தி சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

நான் பார்க்காத சில நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நடன நிகழ்ச்சிகளின் மேல் எனக்கு வெறுப்பில்லை. ஆனால் போதும் போதுமென்கிற அளவு பல விழாக்களில் பார்த்தாகிவிட்டது. நான் பார்த்த நிகழ்ச்சிகள் மிகவும் குறைவு. நான் அரங்கத்தினுள் இருந்த நேரத்தை விட விடுதி அறையிலும் மன்ஹாட்டன் தெருக்களிலும் இருந்த நேரம் தான் அதிகம். எனவே விழாவைப் பற்றிய என்னுடைய இந்தக் கண்ணோட்டம் என்னுடையது மட்டுமே.

7 comments:

SnackDragon said...

தாரா நீண்ட பதிவுக்கு நன்றி.

// மாட்டு வண்டி ஒன்று எங்களுக்குக் கிடைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் :-)//


அந்த பழைய மாஸ்டாவை ஏன் வித்தீங்க? :)

Srikanth Meenakshi said...

தாரா, நீண்ட வர்ணனை சுவாரசியமாக இருந்தது, நன்றி.

//திங்கள் கிழமை(ஜூலை 3) முழுவதும் வீணாகப் போனது! திங்கள் இரவு 6 மணிக்கு மன்ஹாட்டன் க்ரூஸ்(Cruise)! அதுவரை என்ன செய்வது?//

நீங்கள் இருந்தது நியூயார்க் நகர மத்தியில், ஒரு ரம்மியமான கோடை நாளில்...செய்வதற்குக் விஷயமா பஞ்சம்? குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாலே பொழுது போய் விடுமே!

// மாட்டு வண்டி ஒன்று எங்களுக்குக் கிடைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும//

நல்ல ஜோக்...

//இந்த விழாவில் பல பாடங்கள் கற்ற ஃபெட்னா நிர்வாகிகள் அடுத்த விழாவில் பிழைகளைத் திருத்தி சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.//

சூப்பர் ஜோக்...

:-)

ஸ்ரீகாந்த்

தாரா said...
This comment has been removed by a blog administrator.
தாரா said...

கார்த்திக்: மாட்டு வண்டி கூட, மாட்டை விரட்டினால் நகரும். ஆனல் அந்த பழைய மாஸ்டா நின்ற இடத்தை விட்டு நகர மறுத்தது. அப்பறம் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

ஸ்ரீகாந்த்: திங்கள் அன்று ந்யூயார்க்கில் சுட்டெரிக்கும் வெயிலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து தான் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

நன்றி,
தாரா.

-/சுடலை மாடன்/- said...

//குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாலே பொழுது போய் விடுமே! //

சாப்பிட ஒரு மைல் நடக்க வைத்ததற்கே அழுது கொண்டிருந்த ஆளைப்போய்....:-)

மானாடு பற்றிய என்னுடைய கருத்துக்கள் சுந்தரவடிவேலின் பதிவில் இங்கே.

நன்றி - சொ. சங்கரபாண்டி

தாரா said...

சங்கர்,

அப்பறம், ஒருத்தர் பல் வலி மாத்திரை போட்டுக்கொண்டு விழா முழுவதும் தூங்கி வழிந்துகொண்டு உட்கார்ந்திருந்தாரே? அவரைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கும் :-)

தாரா.

சுந்தரவடிவேல் said...

//முந்தைய விழாக்களில் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ், பிரபஞ்சன், சிவகாமி(I.A.S), நர்த்தகி நடராஜன், கவிஞர் சேரன் போன்றோரின் சந்திப்பும் அவர்கள் பரிமாறிய கருத்துக்களும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அதைப்போல் எடுத்துச் செல்வதற்கு இந்த விழாவில் எந்தக் நினைவும் கருத்தும் இல்லை!//
சரி!
நியூயார்க் விழாவை ஒரு விதிவிலக்கு என்றுதான் கொள்ள வேண்டுமெனக் கேள்விப்பட்டேன். அடுத்து வரும் ஆண்டுகளில் உருப்படியான நிகழ்வுகளை எதிர் பார்ப்போம்.

இன்னொரு கூத்து என்னவென்றால், ஃபெட்னாவைப் பற்றிச் செய்தி எழுதுபவர்கள் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் வந்ததாக எழுதுவது! http://www.stararticle.com/article_111833_Indian-Tamils-rejoice-in-the-US.html