Wednesday, July 19, 2006

என் வீட்டுத் தோட்டத்தில்

Image Hosted by ImageShack.us Image Hosted by ImageShack.us

எனக்கு தோட்டம், செடி விசயங்களில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இருந்தாலும், எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் சிறிய தோட்டத்தை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை எட்டிப்பார்ப்பதுண்டு. காரணம், அங்கிருக்கும் புல் தரையில் புற்கள் ஒரளவுக்கு மேல் வளர்ந்துவிட்டால், 'டாண்' என்று வீட்டுக்கு எச்சரிக்கை கடிதம் வந்துவிடும். அப்படி சில நாட்களுக்கு முன் எட்டிப்பார்த்தபோது, குடை மிளகாய் செடியிலும், தக்காளிச் செடியிலும் பிஞ்சு காய்கள்! புதினா, மற்றும் கருவேப்பிலை செடிகளில் புதிய இலைகள்! மல்லிகைச் செடியில் பூக்களும் மொட்டுக்களும்! பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜூன் மாதம் முழுவது அப்பாவும் அம்மாவும் என் வீட்டில் தங்கியிருந்தார்கள். அம்மாவிற்கு பொழுது போவதில் பிரச்சினையே இருக்கவில்லை. தினம் ஒரு குழம்பு, தினம் ஒரு டிபன் என்று 'அவள் விகடன்', பாணியில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். சமையலைத் தவிர வேறு ஏதாவது உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்களேன், எம்ராய்டரி போடறிங்களா? நிட்டிங்(knitting) போடறிங்களா? என்று பல முறை கேட்டுப் பார்த்துவிட்டேன். ம்ஹ¥ம்! திரும்பத் திரும்ப சமையலறையில் தான் போய் நின்றார்கள். சரியென்று விட்டுவிட்டேன்.


அப்பா தோட்டம் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரை ஹோம் டிப்போ(Home Depot) அழைத்துச் சென்று பூந்தொட்டிகள், செடிகள், விதைகள், மற்றும் தோட்ட வேலைக்குத் தேவையான ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தேன். அடுத்த சில நாட்கள் அப்பாவுக்கு நன்றாகப் பொழுது போனது. அவர் அன்று நட்ட செடிகள் தான் இன்று காய்களையும் பூக்களையும் தாங்கி நிற்கின்றன!

20 வருடங்களுக்கு முன்...

சிதம்பரத்தில் இருந்த எங்க வீட்டைச் சுற்றி மிக அழகான தோட்டம் இருந்தது. அத்தனையும் அப்பாவின் கை வண்ணம்! பாரதியார் கூட பத்து பன்னிரண்டு தென்னை மரம் தான் வேண்டுமென்றார். எங்க வீட்டில் 13 தென்னை மரங்கள் இருந்தன. கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி மரங்களும் இருந்தன. அந்த நெல்லி மரத்தை ஒரு உலுக்கு உலுக்கினால் போதும். சட சடவென்று நெல்லிக்காய்கள் கீழே விழும். அவற்றை எடுத்து, கழுவி, உப்புத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட்டால்....அப்பப்பா...இப்போது நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது! ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, மல்லிகை என்று ஏகப்பட்ட பூச்செடிகளும் உண்டு! இதெல்லாம் பத்தாதென்று நிலத்திலேயே அமைக்கப்பட்ட ஒரு சின்ன குளம். அதில் வகை வகையான மீண்கள்! மிகுந்த கலா ரசனையுடன் உருவாக்கப்பட்ட ஒரு அழகான நந்தவனமாக இருந்தது அப்பாவின் தோட்டம். எங்க வீடு இருந்த அந்தக் காலனியில், அப்பாவைப் போலவே தோட்ட வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, "Horticulture Society" ஒன்றைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வருடமும் அந்தக் காலனியிலே சிறந்த தோட்டத்திற்கான போட்டி நடக்கும். அதில் எப்பொழுதுமே 'முருகைய்யன்' என்கிற அப்பாவின் நண்பர் தான் முதல் பரிசு பெறுவார். அப்பாவுக்கு இரண்டாம் பரிசு தான் கிடைக்கும். காரணம், முருகைய்யனின் விட்டில் மரங்களும், செடிகளும் எண்ணிக்கையில் மிக மிக அதிகம். ஆனால் தோட்ட அமைப்பு, தோற்றம் - இவற்றில் எங்க வீடு தான் மிக அழகாக இருக்கும். எங்க வீட்டுத் தோட்டத்தில் எடுத்தப் புகைப்படங்களைப் பார்த்து "எந்த பொட்டானிக்கல் கார்டெனில் எடுத்தீங்க?" என்று பலர் கேட்டதுண்டு. அதனால் இன்று வரை அந்த பரிசு விசயத்தில் எனக்கு வருத்தம் தான்.

10 வருடங்களுக்கு முன் சிதம்பரம் வீட்டை அப்பா நல்ல விலைக்குத் தான் விற்றார். ஆனால் அந்த விலை அந்த நிலத்திற்கும், கட்டிடத்திற்கும் தான். அவர் அந்த வீட்டுத் தோட்டத்தில் பொட்ட நெரத்திற்கும், உழைப்பிற்கும் விலை மதிப்பே கிடையாது! இன்று என் வீட்டுத் தோட்டத்தில் நான்கு செடிகளை வைத்துக்கொண்டு என் அவசர வேலைகளுக்கிடையே அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுவதை கூட பெரிய விசயமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அப்பா அந்தப் பெரிய தோட்டத்தை உருவாக்கி, வளர்த்து, பின் அதை மொத்தமாக இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு வரும் போது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்?

8 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

thaaraa,

migavum sirappaanathoru pathivu!

தாரா said...

மிக்க நன்றி செல்வராஜ்.

தாரா.

பத்மா அர்விந்த் said...

Very well written. It made me think for a while and took me down the memory lane. Thanks

யாத்ரீகன் said...

romba naazh kalichu indha pakkam varukinraen..

>> ஒரு உலுக்கு உலுக்கினால் போதும். சட சடவென்று நெல்லிக்காய்கள் கீழே விழும் <<

>>> நிலத்திலேயே அமைக்கப்பட்ட ஒரு சின்ன குளம். அதில் வகை வகையான மீண்கள்<<<

padikura ennakey ivlo rasanayaana edamaan-nu aarvama aasaya iruku.... paavam unga appa..

இளங்கோ-டிசே said...

பதிவு நன்றாக இருக்கிறது தாரா.
......
என்னைப்போலவே தோட்டக்கலையை இரசிக்க விரும்பும் -ஆனால் வளர்ப்பதில் பிரியப்படாத சோம்பல்தனம் நிறைந்த- ஒருவர் போலும் நீங்களும் :-).

தாரா said...

சரியாகச் சொன்னீர்கள் டி சே! பக்கத்து வீட்டுக்காரரின் பூத்துக் குலுங்கும் தோட்டம் பார்த்து தினம் ரசிப்பேன். ஆனால் என் விட்டுத் தோட்டத்தில் வேலை செய்ய சோம்பேறித்தனம் எனக்கு!

தாரா.

-/சுடலை மாடன்/- said...

தாரா, நன்றாயிருந்தது!

நன்றி அப்பாவுக்கே :-)

சங்கர்

prof.karthikeyan said...

அருமையான வார்த்தைகள் ஆழந்த ரசனைகள் .......ஆனால் ஆனந்த தாண்டவர் நடராஜரை பற்றி .....நானும் சிதம்பரம் தான்