Tuesday, May 17, 2005

வீணாகப் போன ஒரு மாலைப் பொழுது

ரொம்ப நாட்களுக்கு அப்பறம் எனக்கே எனக்குன்னு ஒரு சனிக்கிழமை மாலை நேரம் கிடைத்தது. போன சனிக்கிழமை மாலை என் கணவர் அவருடைய நண்பர் வீட்டில் நடந்த ஒரு முக்கியமான சந்திப்புக்குச் சென்றுவிட்டார். இரவு உணவும் அங்கேயே முடித்துவிடுவதாக சொல்லியிருந்தார். எனக்கு சமையல் வேலையும் இல்லை. வெளியே ஷாப்பிங் போகலாம் என்றுதான் முதலில்நினைத்தேன். ஆனால் மழை பெய்துகொண்டிருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு சன் டிவியைப் போட்டேன். அப்போதுதான் ஒரு தமிழ் படம் தொடங்கியிருந்தது. மாலை நேரம்...வெளியே மழை...சூடான தேனீர்...பார்க்க ஒரு படம்...இதெல்லாம் எனக்கு மிகப் பிடித்த காம்பினேஷன்! போர்வை, தலையனை எல்லாத்தையும் முன்னறைக்குக் கொண்டுவந்து சோபாவில் ஹாயாக படுத்துக்கொண்டு படம் பார்க்கத் தொடங்கினேன். என்னுடைய சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை!


அந்தப் படம் 'ராஜ்ஜியம்' என்கிற விஜயகாந்த் படம். எனக்கு விஜயகாந்த் படங்கள் அறவே பிடிக்காது. அதுவும் இந்தப் படம் ரொம்பவே டார்ச்சராக இருந்தது. விஜயகாந்துக்கு கொடுக்கப்படும் build-up ரொம்பவே ஜாஸ்தி. கண்ணியாகுமரியில் தொடங்கி சென்னை வரை முக்கிய நகரங்களில் விஜயகாந்த் நடந்து வர, அவருக்குப் பின் மிகப் பெரிய மக்கள் திரள், அவர் வரும் பாதையில் பூக்கள், தோள்களில் ஆளுயர மாலை. இரண்டு பக்கமும் பெண்கள் நடனமாடுகிறார்கள். "தமிழன் தமிழன் இவன் தான் தமிழன்...தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்" என்று பாடல் வேறு. விஜயகாந்தின் பின் வரும் தொண்டர்கள் கூட்டம் குத்தியிருக்கும் சிவப்பு-மஞ்சள்-கருப்பு வண்ணக் கொடி அவருடைய கட்சிக் கொடி! ஆரம்பக் காட்சிகளில் இப்படியென்றால், பின் வரும் காட்சிகளில், போலீஸாரால் பிடிக்கமுடியாத நான்கு தீவிரவாதிகளை அவர் ஒரு ஆளாக பிடிக்கிறார்! தமிழ்ப் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் சாதாரணம் தான் என்றாலும், தாயாரிப்பாளரின் காசில் மக்களின் நாடித் துடிப்பை தெரிந்து கொள்ள விஜயகாந்த் முயன்றிருப்பதாகத் தோன்றியது. சென்னைக்கு வந்திறங்கும் ஒரு இளம்பெண்ணிடம், "உன் கற்புக்கு எந்தவித களங்கமும் வந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு" என்கிறார்! "கற்பு அப்படின்னா என்ன?" என்று கேட்குக் அந்தப் பெண்ணிடம், "கற்பு என்பது கண்ணகி சம்பந்தப்பட்ட விசயம், கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விசயம்" என்கிறார்! இதெல்லாம் மிகவும் பழமைவாய்ந்த பிற்போக்கான வசனங்கள். இப்போது 'கற்பு' என்கிற சொல்லே வழக்கத்தில் அவ்வளவாக இல்லை! மக்கள் செல்வாக்கு வேண்டும், கட்சி ஆரம்பித்து அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் விஜயகாந்த் சுனாமி வந்தபோது எங்கே போனார்? நன்கொடை கொடுத்தால் மட்டும் போதுமா? களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இருந்து உதவி செய்திருக்கவேண்டாமா? அப்படி உதவி செய்த விவேக் ஓபராயைப் பற்றி "ஒரு கிராமத்தை தத்தெடுத்துக்கொள்வதில் என்ன பிரயோசனம்?" என்று விஜயகாந்த் விமர்சித்ததாகக் கேள்விப்பட்டேன். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் - இவர்களுக்கு மக்களிடையே இருந்த reach விஜயகாந்துக்கு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதற்குமேல் என்னால் படத்தை பார்க்க முடியவில்லை. டிவியை அனைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சில மணி நேரங்கள் தொலைபேசி, வீட்டு வேலை என்று நேரத்தைத் தள்ளிவிட்டு, இரவு 10 மணிக்கு மீண்டும் சன் டிவி போட்டேன். 'கலைஞரின் கண்ணம்மா' தொடங்கியது. அட! இந்தப் படமாவது வித்தியாசமா இருக்கும் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் போர்வை, தலையனை செட்டப்புடன் படம் பார்க்க அமர்ந்த எனக்கு, மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது!


கலைஞர் வசனம் எழுதிய படம் என்று சொல்லும் அளவுக்கு 'கண்ணம்மா' ஒரு சராசரி தமிழ்ப் படத்தைவிட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை. மாறாக, இயக்குனர் இப்பொழுதுதான் படம் எடுக்க கற்றுக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு அமெச்சூர் தனமான காட்சிகள். மீணா வாயிலிருந்து கலைஞரின் வசனங்கள்! பொறுத்தமாகவே இல்லை. படம் எடுக்கப்பட்ட கால கட்டத்தைப் பற்றி இயக்குனர் குழம்பியிருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு காட்சியில் கலைஞர் வாஜ்பாயிடம் பணம் கொடுக்கிறார். மற்றொரு காட்சியில் மன்மோகன் சிங்கின் புகைப்படம் சுவற்றில் தெரிகிறது! கார்கில் போருக்காக கலஞர் உதவித்தொகை கொடுக்கும் காட்சி மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது அலுப்பாக இருந்தது. கவர்ச்சி நடனம், டூயட் பாடல்கள் என்ற சராசரி மசாலா அயிட்டங்களுக்கு இந்தப் படத்திலும் பஞ்சம் இல்லை. கலைஞர் 1950 களில் பராசக்தி போன்ற படங்களுக்கு எழுதிய சூடு பறக்கும் வசனங்கள் எந்த காலத்திலும் அழியாதவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த காலத்து மக்களின் நாடித் துடிப்பிற்கு சற்றும் பொருத்தம் இல்லாத வசனங்களை எழுதி அவரது நேரத்தை வீணாக செலவழித்திருக்கிறார். இந்தப் படத்தையும் சிறிது நேரத்திற்கு மேல் பார்க்கமுடியாமல் நிறுத்திவிட்டேன்.

இப்படியாகத்தானே என்னுடைய சனிக்கிழமை மாலை சொதப்பலாகக் கழிந்தது!!! இரவு 12 மணி அளவில் வீட்டுக்கு வந்தார் என் கணவர். தன் நண்பர் வீட்டுச் சந்திப்பு எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் கழிந்தது என்று சொன்னவர், "சரி, உனக்கு எப்படி பொழுது போனது?" என்று கேட்டார். "அந்தச் சோகத்தை கேட்காதீங்க. ரெண்டு நாள் கழித்து வலைப்பதிவில் போடறேன் படிச்சிக்கோங்க" என்று சொல்லிவிட்டேன்!

7 comments:

SnackDragon said...

dont worry you will get more free time :-)

Anonymous said...

யாருகிட்டம்மா கதை வுடுற சன் டிவில இரவு 11 மணிக்கில்ல கண்ணம்மா(EST)

தாரா said...

அட! சரியான நேரம் ஞாபகம் இல்லாம எழுதிட்டேங்க. மன்னிச்சிக்கோங்க.

தாரா.

Anonymous said...

அந்த உருப்படாத படத்தை 10 மணிக்கு போட்டா என்ன 11 மணிக்கு பொட்டா என்ன?

சன்னாசி said...

//"தமிழன் தமிழன் இவன் தான் தமிழன்...தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்" என்று பாடல் வேறு.//
ஹிஹி: ஆந்திராவில் இருக்கையில் ஒரு விஜயகாந்த் படத்தை (வேறு வழியின்றி, நேரத்தைக் கொல்ல) தெலுங்கு டப்பிங்கில் பார்த்தேன். இதே போன்ற ரீதியில் ஒரு துதிப்பாடல், "நேனு தெலுகு சிம்ஹம் ரா" என்ற ரீதியில் ஓடிக்கொண்டிருந்தது! பிரகாஷ்ராஜ் வில்லன் - தமிழன்!! "டேய், நான் கண் அசைச்சா தமிழ்நாட்டுலருந்து பறந்து வருவாங்க தெரியிமுல" என்ற ரீதியில் பிரகாஷ்ராஜின் மிரட்டல் டயலாக்குகள் வேறு. தமிழில் அப்படியே உல்ட்டாவாக்கிக்கொள்ளவேண்டியதுதான். Take it easy!! இதெல்லாம் சகஜமப்பா!!

Anonymous said...

Anonymous-2, உன்னை மாதிரி உருப்படாதது அதையும் பார்க்குதே இந்த கருமத்தை எங்க போயி சொல்றது.

யாத்ரீகன் said...

:-))))))

ungaluku veenaa pona pozhudhu.. adhai padicha engaluku suvarasiyama pochu... :-))))