Sunday, May 01, 2005

எழுதும் நேரம்


ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய சவால் - எழுதுவதற்கு ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது. முழு நேர எழுத்தாளர்களுக்கு இந்தக் கவலை இல்லை. இருக்கும் நேரம் அனைத்தும் அவர்கள் எழுதுவதற்கே. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்கிற்காக எழுதுபவர்கள். நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு பிறகு குழந்தைகள், கார் பூல், வீட்டு வேலைகள், நண்பர்களுடன் சந்திப்பு இப்படி பறக்கும் வாழ்க்கையில் எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்குவது என்பது கடினமான விசயம் தான்.

ஒவ்வொரு எழுத்தாளரும் வித்தியாசமானவர். ஒருவருக்கு பொருந்தும் நேரம் மற்றவருக்குப் பொருந்தாது.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான செயல் நிரலை(schedule) பின்பற்றுவார்கள். இதில் எழுதும்(டைப் அடிக்கும்!) நேரத்தை எப்படி பொறுத்திக் கொள்வது?

பெண்களுக்கு, முக்கியமாக தாய்மார்களுக்கு குழந்தைகள் உறங்கும் நேரம் தான் எழுதுவதற்கு மிக உகந்த நேரமாக இருக்குமென்று நினைக்கிறேன். இது குழந்தைகளின் வயதைப் பொறுத்தது. சற்று வளர்ந்த பிள்ளைகள் அம்மா ஏதோ எழுதுகிறார்கள், தொந்தரவு செய்யக்கூடாது என்று புரிந்துகொள்ள மாட்டார்களா என்ன?

அமைதியான சூழலில் நன்றாக சிந்தித்து, மனதை ஒருநிலைப்படுத்தி பொறுமையாக எழுத நினைப்பவர்களுக்கு பின்னிரவு நேரங்கள் உகந்ததாக இருக்கும். ஆனால் தூக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? நல்ல ஏலக்காய் டீ குடித்துவிட்டு எழுத வேண்டியதுதான். ஏலக்காய் தூக்கத்தை விரட்டிவிடும் என்று சொல்வார்கள்.

சில நாட்களில் அதிகாலை அலாரம் அடிப்பதற்கு முன்பே விழிப்பு வந்துவிடும். அப்போது படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்காமல் அந்த சில கூடுதல் நிமிடங்களை எழுதுவதற்கு பயன்படுத்தலாம்.

சிறு இடைவெளிகளில் எழுதமுடியுமென்றால் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் பழக்கம் உடையவர்கள் விளம்பர இடைவெளிகளில் கிடைக்கும் சில நிமிடங்களில் எழுதலாம். எந்தக் குறுக்கீடும் இல்லாமல் எழுதுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்பவர்களுக்கு இது சரிப்பட்டுவராது.

எழுதுவதற்கு என்று ஒரு தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்வது நல்லது என்றாலும், அந்த நேரத்தில் மட்டும் தான் எழுத வேண்டும் என்று கட்டுப்பாடாக இருப்பது பல நேரங்களில் சாத்தியமாக இருக்காது.

நான் எழுதுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்வேன், அதனால் பெரும்பாலும் பின்னிரவு(11 மணியளவில்) நேரங்களிலேயே எழுதுகிறேன். சில(பல???) சமயம் அலுவலகத்தில் வேலைபளு குறைவாக இருக்கும் நாட்களில் பகலில் கொஞ்சம் எழுதமுடிகிறது.

நீங்கள் எப்பொழுது எழுதுகிறீர்கள்?

10 comments:

Chandravathanaa said...

வணக்கம் தாரா
சில நேரங்களில் நேரமிருக்கும் எழுதுவதற்கான உந்துதல் இருக்காது.
இன்னும் சில நேரங்களில் எழுத வேண்டுமென நினைக்கும் போது நேரமிருக்காது.
பஸ்களிலும் காரிலும் பயணிக்கும் போதும் வேலையில் இருக்கும் போது
மனது எத்தனையோ விடயங்களை தனக்குள்ளே எழுதி விடும். அவைகளில் ஒரு சிலவற்றைத்தான் பதிவாக்குகிறோம் அதற்கான நேரங்களும் வாய்த்து மனமும் ஒன்றும் போது!

துளசி கோபால் said...

ஆமாம் தரா, சந்திரவதனா சொன்னது போலவேதான்!

கை பாட்டுக்கு வேலைகளைச் செஞ்சாலும், மனசு என்னவோ இடைவிடாம எதையாவது
சிந்திச்சுக்கிட்டேதானே இருக்கு. அதையெல்லாம் மனசுலெயே சேமிச்சு வச்சுக்கிட்டு,
நேரம் 'கிடைக்கற போது' கொஞ்சம் கொஞ்சமா எழுதவேண்டியதுதான்!

என்றும் அன்புடன்,
துளசி.

ஜீவா (Jeeva Venkataraman) said...

சிலசமயம் எழுதுவதற்கு உந்துதல் காலை வேளைகளில் கிடைக்கும். அதிகாலை சுவாரஸ்யாமான கனவில் விழித்துக்கொண்டால், அடடா இதை ஒரு கதை போல எழுதினால் என்ன என்று தோன்றும்!
சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் - 'கனவில் எழுதுவது எப்படி' என்று!. அதாவது கனவை பயன்படுத்திக்கொண்டு!
இரண்டு நாட்களுக்கு முன் படுக்கையில் இருந்து எழுந்துகொள்ள சோம்பேறித்தனமாய் இருக்கும்போது இரண்டு ஹைகூ கவிதைகள் தோன்றின. உடனே இதை எழுதிவிட வேண்டும் என்று எழுந்தேன். ஆனால் பல் தேய்த்துவிட்டு வருவதற்குள் ஒன்று மறந்து விட்டது )-;

Anonymous said...

ம்ம்ம்.

நான் பல நேரங்களில் - குறிப்பாக பிறருக்கான மறுமொழியாக எழுத தொடங்கி எழுதி முடித்து பின்பு அதனை அப்படியே அழித்து விடுவதுண்டு. இப்படி submit செய்யாமல் அழித்து விடுவதற்காக ஏன் எழுதவேண்டும் என்று சில சமயங்களில் யோசித்து பார்த்திருக்கிறேன்.

ஆனாலும் குறைந்த பட்சம் எனது நிலைப்பாடை எனது மறுப்பை, எனது தரப்பை எழுதியதில் மனம் தெளிவு அடைந்து விட்டதாக நினைப்பு.

மற்றபடி என்னளவில் ஏதோ *எழுதுவதாக* என்றுமே நினைப்பு இருந்ததில்லை. சில விடயங்களை பதிந்து வைப்பதற்கு மட்டுமான ஒரு கருவியாக எனது வலைப்பதிவினை கருதுவதால் time management பற்றியெல்லாம் யோசித்து பார்த்ததில்லை.

--
நவன் பகவதி

Anonymous said...

ஓ... திருப்பி படிக்கும் போது தான் கவனித்தேன்.

//ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய சவால் .../

ஸாரி... ராங்க் நம்பர். :)

--
நவன் பகவதி

Muthu said...

///இரண்டு நாட்களுக்கு முன் படுக்கையில் இருந்து எழுந்துகொள்ள சோம்பேறித்தனமாய் இருக்கும்போது இரண்டு ஹைகூ கவிதைகள் தோன்றின. உடனே இதை எழுதிவிட வேண்டும் என்று எழுந்தேன். ஆனால் பல் தேய்த்துவிட்டு வருவதற்குள் ஒன்று மறந்து விட்டது )-;//
ஜீவா,
படுக்கையிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் துண்டுக்காகிதமும் பென்சிலும் வைத்திருக்கிறேன், நீங்கள் மேலே சொன்னதுபோல் ஏதாவது தோன்றினால் அதைச் சிலவார்த்தைகளில் குறிப்பாய்க் கிறுக்கிவைத்துக்கொள்வது வழக்கம், அப்புறம் சமயம் கிடைக்கும்போது வலைப்பூவில் பெரிதாய்க் கிறுக்கிவிடுகிறேன் :-).

SATHYARAJKUMAR said...

எழுதுவது என்பது ஒரு கமிட்மென்ட். முதலில் அந்த கமிட்மென்ட் இருந்தால்தான் நமக்கு நேரமே கிடைக்கும். நான் கொஞ்ச நாள் கமிட்டடாக கதை எழுதிய அனுபவத்தில் சொல்கிறேன். எழுத தேவைப்படும் நேரம் உண்மையில் மிகவும் குறைவே. என்ன எழுதலாம் என்று தீர்மானிக்க தேவைப்படும் நேரமே மிகவும் அதிகம். ஆகவே தினமும் குறிப்பிட்ட நேரத்தை அல்லது வாரத்தில் குறிப்பிட்ட நேரத்தை எழுதுவதற்கென்றே ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்து எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. எழுதுவது பற்றி சிந்தித்தாலும் சரிதான். சிந்தனை முழுமையடைந்த பின் நீங்கள் மடமடவென்று எழுதித் தள்ளி விடுவீர்கள். எந்நேரம் பார்த்தாலும் எழுதுவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது எழுத ஆரம்பிப்பவர்களின் ஆரம்ப காலத் தவறு. அது மற்ற வேலைகளைக் கண்டிப்பாய் பாதிக்கும். எழுதுவதற்காக மெனக்கெடாதீர்கள். இயல்பாக மற்ற விஷயங்களைச் செய்கிற மாதிரி எழுதுவதையும் ஒரு இயல்பான செயல் ஆக்குங்கள். அப்போதுதான் நீண்ட நாட்கள் எழுதிக் கொண்டிருக்க முடியும். இல்லையேல் ஒரு கட்டத்தில் நிறுத்தி விடுவீர்கள்.

நவன், எழுதுவது என்பது பதிவுதான். நீங்கள் தொடர்ந்து பதிகிறீர்கள் என்றால் எழுதுபவர் லிஸ்ட்டில் நீங்களும் வருகிறீர்கள்.

- சத்யராஜ்குமார்

Thara said...

சந்திரவதனா, துளசி - உண்மை தான், பல சமயம் மனதில் தோன்றும் விசயங்களை எழுதுவதற்கு நேரம் அமையாமல் போய்விடுகிறது.

ஜீவா - பல் துலக்க என்ன அவசரம்? கவிதைகளை எழுதுவிட்டு அப்பறம் பல் துலக்க போயிருக்கலாம் இல்லையா? என்னா போங்க!

நவன் - வலைப்பதிவில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா???

முத்து - துண்டு காகிதமும், பென்சிலும் நல்ல யோசனை. பின்பற்றுகிறேன்.

சத்யராஜ் குமார் - நீங்கள் சொன்னது போல், நானும் எழுத ஆரம்பித்தபோது சதா எழுதுவதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன். போகப் போகத் தான் மனம் பன்பட்டது.

பின்னூட்டம் கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றிகள்

தாரா.

Go.Ganesh said...

சத்யராஜ் குமார் சொன்னது போல
"எழுத தேவைப்படும் நேரம் உண்மையில் மிகவும் குறைவே. என்ன எழுதலாம் என்று தீர்மானிக்க தேவைப்படும் நேரமே மிகவும் அதிகம்"

ஆனால் சிந்தனை என்பதை ஒரு கால அளவுக்குள் கட்டுபடுத்த முடியாது அதற்கு ஒரு கால அட்டவணையும் தயாரிக்க முடியாது. எப்பொழுது எதேனும் கரு கிடைக்கிறதோ அப்பொழுது அதனை சிறு குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ளலாம் பின்னர் நேரம் கிடைக்கையில் அதனை ஒரு நல்ல பதிவாக மாற்றலாம். நான் பின்பற்றும் முறையும் இது தான்.

இதன் மூலம் ஜீவா சொன்னது போல "பல் தேய்த்துவிட்டு வருவதற்குள் ஒன்று மறந்து விட்டது )-;" மறதியையும் தடுக்கலாம். ஹைக்கூ போன்ற படைப்புகள் நுட்பமானவை எளிமையானவை. இவற்றை தோன்றியவுடன் பதிவு செய்வதே சிறந்தது. மேலும் ஹைக்கூ போன்ற சில வரி படைப்புகளுக்கு குறிப்பு எடுக்க செலவிடும் நேரத்தை விட படைப்பை எழுதுவதற்கு செலவாகும் நேரம் குறைவு.

Anonymous said...

//நவன் - வலைப்பதிவில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா???//

ஐயோ! தாரா, அது நான் என்னைப் பற்றி சொன்னது. பிற வலைப்பதிவர்களை பற்றி ஒன்னுமே சொல்லலைங்க :).

--
நவன் பகவதி