விளம்பரங்களில் பெண்கள் எப்படியெல்லாம் சுய நலமாகவும், தரம் தாழ்ந்தும் உயயோகிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி முன்பே ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். நேற்றிரவு சன் தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு விளம்பரம் மீண்டும் என்னை உசுப்பிவிட்டது!
ஒரு வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. திடீரென்று கோபமாக எழுந்து நிற்கிறார் பிள்ளையின் அப்பா. "இந்த வீட்டில் பெண் எடுக்க வேண்டாம். வாங்க போகலாம்" என்று கத்துகிறார். பெண்ணின் அம்மா பயந்து போய் "என் பெண்ணிடம் ஏதாவது குறை இருக்கா?" என்று கேட்கிறார். அதற்கு பிள்ளையின் அப்பா, "பெண்ணிடம் எந்த குறையும் இல்லை, ஆனால் பெண்ணோட அப்பாவிடம் தான் குறை. இந்த வீட்டில் Khaithan விசிறி இல்லை. Khaithan இல்லாத வீட்டில் நாங்கள் பெண் எடுக்க மாட்டொம்" என்கிறார்.
இது வெறும் விளம்பரம் தான் என்றோ மற்றுமொரு அசட்டுத்தனமான marketing strategy என்றோ சொல்லி என்னால் இதை ஒதுக்கிவிட முடியவில்லை. ஏனோ இந்த விளம்பரம் என் மனதை பாதித்தது. 'பெண் பார்த்தல்' என்பது எந்த பெண்ணுக்கும் வேடிக்கையான அனுபவம் அல்ல.திருமணம் என்கிற சடங்கு தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும் ஒரு நீண்ட களைப்பு மிக்க பயணம் அது. அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால் சில பெண்களுக்கு முதல் ஒன்றிரண்டு பெண் பார்த்தல்களிலேயே திருமணம் அமைந்துவிடும். ஆனால் பல பெண்களுக்கு அது ஒரு நீண்ட, தவிப்பான, தேடலாகவே இருக்கிறது. பெண் பார்க்க வருபவனைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்வது, மானசீகமாக அவனைத் திருமணம் செய்து குடும்பம் நடுத்துவது வரை போய்விடுவது, பெண் பார்த்துவிட்டு போனவர்களிடம் இருந்து கடிதம் வரும் என்று தினம் ஏங்கித் தவிப்பது, நிராகரிப்புக் கடிதம் வந்தபின் அவனை நினைவுகளிலிருந்து அழித்து, அடுத்து வருபவனை நினைப்பது - அழிப்பது - நினைப்பது - அழிப்பது - நினைப்பது என்கிற process இன்றும் பல பெண்களின் வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நான் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என் அக்காவை முதன் முதலாக பெண் பார்க்க வந்தார்கள். வீடே அல்லோகலப்பட்டது. பட்டுப் புடவையொடும் நகையோடும்போட்டி போட்டுக்கொண்டு சந்தோஷமும், வெட்கமும் என் அக்காவை அலங்கரித்திருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது. பெண் பார்க்கும் படலம் முடிந்து ஊருக்கு போய் கடிதம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு பிள்ளை வீட்டார் கிளம்பினார்கள். ஒரு வாரம் சென்று அவர்களிடமிருந்து வந்த கடிதத்தில், நாசூக்காக ஜாதகத்தில் ஏதோ பொருந்தவில்லை அதனால் இந்த வரன் வேண்டாம் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் உண்மையான காரணம், அக்காவின் முகத்தில் அப்போது அதிகப்படியாக இருந்த பருக்கள் தான் என்று அந்த பெண் பார்த்தலை ஏற்பாடு செய்த தூரத்து உறவுக்காரர் சொன்னார். இதைக் கேட்டு என் அக்கா மனம் உடைந்து போனாள். அவளுடைய தன்னம்பிக்கை உருக்குலைந்து போனது. அதற்குப் பிறகு எவனும் தன்னை பெண் பார்க்க வரக்கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு 3 வருடங்கள் கழித்து ஒருவர் மறுபடியும் அக்காவைப் பெண் பார்க்க வந்தார். இன்று என்னுடைய மாமா அவர்.
அக்காவின் திருமணத்திற்கு பிறகு திருமண மார்கெட்டுக்கு வந்தார் என் அண்ணன். அவருக்கும் அக்காவின் முதல் பெண் பார்த்தல் மனதை பாதித்திருக்கவேண்டும். "எனக்கு வரிசையாக பெண்களைப் பார்த்துவிட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லி அவர்களை நோகடிப்பதெல்லாம் பிடிக்கலை. ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்ப்பேன். அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் பன்னிப்பேன்." என்று அண்ணன் என் பெற்றோரிடம் சொன்னார். அதே போலவே அவர் முதன் முதலாகப் பார்த்த பெண் தான் என்னுடைய அண்ணி.
நான் கல்லூரி படித்த நாட்களில் என்னையும் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். அப்படி ஒரு முறை என்னைப் பார்க்க வந்த பையனோட அப்பாவும் அக்காவும் கேட்ட சில கேள்விகள் இப்போது நினைவுக்கு வருகிறது..."படித்து முடித்து விட்டு என்ன செய்யப்பொகிறாய்?", "உன்னுடைய ambition என்ன?", "உன்னுடைய hobbies என்ன?". என்னுடைய அப்பா கூட இந்தக் கேள்விகளை என்னிடம் கேட்டதில்லை, இவங்க யார் கேட்கறது என்று எரிச்சலாக இருந்தது. இதெல்லாம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் தான், ஆனால் ஒரு 10 பேர் கும்பலாக உட்கார்ந்துகொண்டு, எதிரே ஒரு பெண்ணை உட்காரவைத்துக் கேள்வி கேட்பது சரியா? அந்த மாதிரி சூழ் நிலையில் அந்தப் பெண் பயந்து, தயங்கி, தடுமாறி சொல்லும் பதில்களில் அவளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தார்களென்றால் அது அவர்களுடைய முட்டாள்தனம். பெண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்பதில் ஒரு Pshycology இருப்பதாக சமீபத்தில் எங்கோ படித்தேன். அதாவது, நன்றாகப் பாடத்தெரிந்த பெண் நல்ல மனப்பக்குவம் உள்ளவளாக இருப்பாளாம்! அது சரி, மாப்பிள்ளைக்கு மனப்பக்குவம் இருக்கிறதா என்று பெண் வீட்டார் எப்படி தெரிந்துகொள்வது?
பெண் பார்த்தலைத் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது பெண்ணின் வாழ்க்கையோட்டத்தைக் குலைத்து, அவள் மனதை பாதிக்கும் ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் எளிமையாக "Just like that" என்பது போல் casual ஆக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் பெண் பார்த்தல் அதி நவீனமாகி விட்டது என்று தெரிகிறது. வீட்டிற்கு வந்து சொஜ்ஜி பஜ்ஜி எல்லாம் சாப்பிடாமல் வெளியே restaurant களில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் சந்தித்துக்கொள்கிறார்கள். சிலர் கோவில்களில் சந்திக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், மாப்பிள்ளை மதிய உணவு இடைவேளையில் பெண் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குச் சென்று அவளைப் பார்க்கிறான். வீட்டில் வந்து பெண் பார்ப்பதும் எளிமையாக ஒருநண்பர் வீட்டுக்குப் போவதுபோல் இருக்கவேண்டும். இப்படி யாதார்த்தமான சந்திப்புகள் பெண் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன். பெண்களின் மீதும் தவறு இருக்கிறது. வாழ்நாள் முழுவது கூடவே இருக்கப்போகிற ஒருவனைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்குமா என்ன? ஒரு நீண்ட தேடலுக்கும், அதில் சில நிராகரிப்புகளுக்கும் தங்களைப் பெண்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சொஜ்ஜி-பஜ்ஜி முறை பெண் பார்த்தலை பெண்கள் தான் எதிர்க்க வேண்டும்.
இப்படி பல உணர்ச்சிகளும் செண்டிமெண்டுகளும் இந்தப் 'பெண் பார்த்தல்' என்பதில் இருக்கும்போது, அந்த Khaithan மின் விசிறி விளம்பரத்தில் "Khaithan இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டோம்" என்று அந்தத் தந்தை சொன்னபோது எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!!!
25 comments:
நாடோடி,
என்னுடையது காதல் திருமணம். என் கணவர் என்னைப் பார்க்க, நான் அவரைப் பார்க்க...இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது சரி, என்னை அக்கான்னு எப்படி முடிவு செய்தீங்க???
அன்புடன்,
தாரா.
பார்வையாளனை 'கவர' விளம்பரத்துல ஏதாவது செய்வாங்க... அதயெல்லாம் அர்த்தத்தோட பாக்க கூடாதுங்கறது என் தாழ்மையான கருத்து.. அதுலயும் அமெரிக்கால வர விளம்பரங்கள எல்லாம் பாத்த, அங்க இருக்கற கருத்து சுதந்திரத்த அனுபவிக்கற நீங்க இந்த விசயத்துக்கு வருத்தப்படலாமா?
//////////////////////////////
அக்காவின் திருமணத்திற்கு பிறகு திருமண மார்கெட்டுக்கு வந்தார் என் அண்ணன். அவருக்கும் அக்காவின் முதல் பெண் பார்த்தல் மனதை பாதித்திருக்கவேண்டும். "எனக்கு வரிசையாக பெண்களைப் பார்த்துவிட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லி அவர்களை நோகடிப்பதெல்லாம் பிடிக்கலை. ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்ப்பேன். அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் பன்னிப்பேன்." என்று அண்ணன் என் பெற்றோரிடம் சொன்னார். அதே போலவே அவர் முதன் முதலாகப் பார்த்த பெண் தான் என்னுடைய அண்ணி.
/////////////////////////////
வாழ்க உங்கள் அண்ணன்..
என்னக்கா தாராக்கா.. இந்த தம்பியும் உங்கள் அண்ணன் மாதிரி தான்..
எங்கள் திருமணமும் காதல் திருமணம் தான்.. என்னா, பெற்றோர்கள் பார்த்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டேன்..
'உருவங்கள் மறையாலாம்.. நினைவுகள் மறையாது..
Images Fade, Memories dont..'
கணேசன்,
என்ன நீங்க "சாதாரண வழக்கம்" அப்படின்னு மிகச்சுலபமா சொல்லிடிங்க. நான் என் கணவரை காதலிக்கத் தொடங்கியபோது, அது திருமணத்தில் முடியுமா என்று கூட எனக்குத் தெரியாது. பல வருடங்கள் காத்திருந்துதான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அது ஒரு பெரிய கதை. தனியாக ஒரு பதிவு போடுகிறேன் பிறகு. தானே வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதில் பல விதங்கள் இருக்கிறதே? ஒரு பெண்ணே தன் திருமணத்திற்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்வதும் "தானே வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வது" தானே? இதற்கும், நான் என் கணவரைக் காதலித்து, காத்திருந்து திருமணம் செய்ததற்கும் வித்தியாசம் இருக்கிற்தல்லவா? இது போல் திருமணம் செய்துகொள்வதை வேறு எப்படி சொல்லுவது? உண்மையில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்கிறேன்.
நாடோடி,
கலக்கிட்டிங்க! என்னுடைய பதிவே என்னைக் காட்டிகொடுத்துவிட்டது! நீங்க என்னை அக்கான்னு சொன்னது மிகச் சரி. வழக்கிலிருந்து தப்பிக்க ஆதாரம் என் பதிவிலேயே இருக்கே :-(
அன்புடன்,
தாரா.
வாங்க சங்கர்!
இந்த நாடோடி செஞ்ச வேலை, எனக்கு பல தம்பிகள் கிடைக்கிறார்கள்! நல்ல விசயம் தான்!
அன்புடன்,
தாரா.
திருமணங்கள் நடக்கும் முன் 18 பொருத்தமும் கூடி வரவேண்டும்!! பெண் பார்க்கும் வழக்கத்தைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் தொட்டு விடீர்கள்.
ஏம்மா தாராத் தங்கச்சி,
எங்க வீட்டிலேயும் எங்க பெரிய அக்காவுக்கு ஒரு பெண் பார்க்கும் படலம் நடந்தது.
அப்பத்தான் பேச்சு வாக்குலே தெரிஞ்சதாம், அவுங்க எங்க அப்பா பக்கத்து உறவுன்னு.
கொஞ்சம் கொடுமைக்கார மாமியாரா எங்க அப்பா பாட்டி இருந்ததாலெ, இந்த சம்பந்தம்
வேணாமுன்னு அம்மா நினைச்சாங்களாம்.
ஆனா, அந்த வரன், ஒரு வருஷமா விடாம கடிதம் எழுதியும், நேரில் வந்து பார்த்தும்
பேசிப் பேசி எங்க அம்மா மனசைக் கரைச்சு, அக்காளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்!!!!
அவரோட கடிதத்தில் இருந்த ஒரு வரி எங்க வீட்டில் எல்லோரும் இன்னும் நினைவு வச்சிருக்கோம்.
' கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதிச்சாலும் கூட உங்க பொண்ணைத்தவிர வேற யாரையும்
கல்யாணம் கட்ட மாட்டேன்'
இது எப்படி இருக்கு?
என்றும் அன்புடன்,
அக்கா
தாரா, பெண்பார்க்கும் படலம் பற்றி நீங்கள் எழுதியிருப்பதை ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கேதான் விசிறி விளம்பரத்தை ஒரு நகையுணர்வோடு எடுத்துக் கொள்ளலாம் என்பது எ.தா.அ.
தாரா மேடம் (நானாவது கொஞ்சம் வித்தியாசப்பட வேண்டாமா)
நானெல்லாம் பெண் பார்க்கப் போகப் போவதே இல்லை. என்னைப் பார்த்து பெண் OK சொன்னாலே எனக்கும் OK தான். இதில பார்க்க கேட்க சாப்பிட என்ன இருக்கிறது. திருமணத்திற்க்குப் பிறகு வரும் புரிதலே எனக்கு பிரதானமாக படுகிறது. ஆதலால் தான் இப்படியொரு முடிவு. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மேடம்.
துளசி அக்கா - உங்க அக்கா ரொம்ப அதிர்ஷ்டசாலிதான்!
செல்வராஜ் - முக்கால்வாசி நகையுணர்வோடுதான் விளம்பரங்களை எடுத்துக்கொள்கிறேன், அனால் சில சமையம் இப்படி அபத்தமான விளம்பரங்களைப் பார்த்தால் கோபமாக வருகிறது.
அல்வாசிட்டி.சம்மி - நல்ல ஆண்கள் வரிசையில் உங்களை சேர்த்துக்கொள்ளலாம் போலிருக்கே!
கணேஷ் - நீங்க பெண் பார்க்கப்போகலைன்னா பெண் எப்படி உங்களைப் பார்ப்பாள்?
கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி! தயவு செய்து அக்கா, மேடம் என்றெல்லாம் சொல்லி என் வயதை ஞாபகப் படுத்தாதீர்கள். 'தாரா' என்றே சொல்லுங்கள்.
நன்றி,
தாரா.
Mrs. தாரா அவர்களே
kaithan இல்லாத வீடு மட்டுமல்ல, agsarcem பூசாத வீடு , fair and lovely போடாதவர்கள் இருக்கும் வீடு.. இதிலெல்லாம் கூட ..
நல்ல வேலை, மாப்பிள்ளை வீட்டார் கழிப்பறை சென்று முகர்ந்து பார்த்து ஒரு குறிப்பிட்ட toilet கிளினிங் பவுடர் உபயோகிக்காத வீட்டில் பெண் எடுக்க மாட்டோம் என சொல்லாத வரை சந்தோஷம்.. "
இதை படிச்ச உடன் வேறொரு விளம்பரம் எனக்கு ஞாபகம் வருது .. இதற்கு எதிர்மறையக..
"அம்மா ..நான் இந்த வீட்ல தான் கல்யாணம் பன்னிக்க போறேன் .... பேசி முடிங்களேன்..... அஷோக் ............ நான் காத்துட்டிருப்பேன் "
-வீ .எம்
தாரா மேடம்
// கணேஷ் - நீங்க பெண் பார்க்கப்போகலைன்னா பெண் எப்படி உங்களைப் பார்ப்பாள்? //
நீங்கள் இப்படி கேட்பீர்கள் என நினைத்தேன். புகைப்படம் பார்த்தால் போதாதா........ என்ன சொல்றீங்க......ஓரு உண்மையை சொல்லவா..... நம்ம மூஞ்சிய பாத்து பிடிச்சிருக்குன்னு சொன்னா அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய மனசிருக்கனும்....... அப்புறமென்ன OK சொல்லிற வேண்டியது தானே
பின்குறிப்பு (மன்னிக்கவும்.. பின்னூட்டக் குறிப்பு) இந்த பதிவுக்கு மட்டும் "தாரா மேட" த்தை தொடர்ந்து விடுகிறேன். அடுத்த பதிவில் தங்கள் வயதை ஞாபக படுத்த மாட்டேன்...... அதுவரை பொறுத்துக்கொள்ளவும்)
கணேஷ்,
எனக்குப் புரியலை. ஒரு பெண் உங்க முகத்தைப் பார்த்து புடிச்சிருக்குன்னு சொன்னா போதுமா? வெளித்தோற்றத்தைப் பார்த்து ஒரு பெண் புடிச்சிருக்குன்னு சொன்னா உங்களால எப்படி திருப்தியடைய முடிகிறது? இந்த விஷப் பரீட்ச்சை எல்லாம் வேண்டாம். ஒழுங்கா பெண்ணை நேரில் பார்த்து பேசியபின் திருமண முடிவை எடுங்கள். சரியா?
தாரா.
//எனக்கு வரிசையாக பெண்களைப் பார்த்துவிட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லி அவர்களை நோகடிப்பதெல்லாம் பிடிக்கலை. ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்ப்பேன். அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் பன்னிப்பேன்." //
நானும் கூட இப்படித்தான் நினைத்திருந்தேன் ஆனால் என்னளவில் அது பொய்யாகிவிட்டது, நினைப்பதும் நடப்பதும் வெவேறாக் உள்ளதே...
//நானெல்லாம் பெண் பார்க்கப் போகப் போவதே இல்லை. என்னைப் பார்த்து பெண் OK சொன்னாலே எனக்கும் OK தான். //
கோ.கணேஷ் உங்களுக்கு நேரம் வரும்போது சொல்லுங்கள் என்ன நடந்தது என்று, நடைமுறைக்கும் நினைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள், நீங்கள் நினைப்பதே நடக்க வாழ்த்துக்கள்.
khaithan fan=கேதான் மின்விசிறி இல்லீங்க
khaithan fan==கைதான் மின்விசிறி
அதாவது அத வாங்கினவுங்க எல்லாரும் காத்து வரனும்னா கைய வீசிக்கவேண்டியது தான்
:-P
கணேசன் - அமெரிக்காவில் நடக்கும் திருமணங்களை நம்ம ஊர் திருமணங்களுடன் ஒப்பிடக் கூடாது. நாம் திருமணம் செய்து கொள்ளும் முறையும் அமெரிக்கர்கள் திருமணம் செய்துகொள்ளும் முறையும் கலாசார ரீதியாகவே மிகவும் வித்தியாசமானவை. 'லொவெ மர்ரிஅகெ' என்கிற சொல் அமெரிக்காவில் வழக்கத்தில் இல்லை. ஆனால் 'காதல் திருமணம்' நம்ம ஊரில் வழக்கத்தில் உள்ள சொல் தானே அது? நீங்க இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லலை. வெறு எப்படி 'காதல் திருமணத்தை' குறிப்பிடுவது?
தாரா.
மன்னிக்கனும், மேலே 'love marriage' என்று சொல்ல வந்தேன். எழுத்துப்பிழையாகிவிட்டது.
தாரா.
//நம்ம மூஞ்சிய பாத்து பிடிச்சிருக்குன்னு சொன்னா அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய மனசிருக்கனும்....... //
இப்படித்தாங்க நானும் நினைச்சு ..அவங்களும் நினைச்சு .....ம்.... ஆனா அவங்க தப்பு கணக்கு போட்டுட்டாங்க ..
என்னை பாதித்த விளம்பரம் குறித்து ஒரு பதிவு "ஆணும் Old Navy சட்டையும் !! " எழுதியிருக்கேங்க... முடிஞ்சா ஒரு தபா எட்டி பாருங்க
கணேசன்,
You have a point. என்னுடைய அடுத்த பதிவுக்கு matter கிடைத்துவிட்டது! தனியாக இதற்கு ஒரு பதிவு போடலாமென்று இருக்கிறேன். நல்ல விவாத்தத்தை தொடங்கி வைத்ததற்கு நன்றி!
தாரா.
ungaludaya pathivu super.
pen paarkum padalam is a mental torture for any girl.
/*
....பாடத்தெரியுமா என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்பதில் ஒரு Pshycology இருப்பதாக சமீபத்தில் எங்கோ படித்தேன். அதாவது, நன்றாகப் பாடத்தெரிந்த பெண் நல்ல மனப்பக்குவம் உள்ளவளாக இருப்பாளாம்! அது சரி, மாப்பிள்ளைக்கு மனப்பக்குவம் இருக்கிறதா என்று பெண் வீட்டார் எப்படி தெரிந்துகொள்வது?....
*/
அட்ரா சக்கை...அட்ரா சக்கை...
//ஒழுங்கா பெண்ணை நேரில் பார்த்து பேசியபின் திருமண முடிவை எடுங்கள். சரியா?//
இல்லை மேடம் எனக்கு இதில் உடன்பாடில்லை. என் முடிவில் கொஞ்சம் தீர்க்கமாகவே இருக்கிறேன். பார்ப்போம் குழலி அவர்கள் சொல்வது போல் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை.
// எனக்குப் புரியலை. ஒரு பெண் உங்க முகத்தைப் பார்த்து புடிச்சிருக்குன்னு சொன்னா போதுமா? வெளித்தோற்றத்தைப் பார்த்து ஒரு பெண் புடிச்சிருக்குன்னு சொன்னா உங்களால எப்படி திருப்தியடைய முடிகிறது? //
என்ன மேடம் இதில என்ன தவறிருக்கிறது. பெரியவங்க பேசப் போறாங்க. அவங்க அலசப் போறாங்க. இதில நம்ம பங்கு என்ன இருக்க போவுது. திருமணத்திற்கு பிறகு கண் கலங்காம சந்தோஷமா வச்சிருக்க முடியும்னு 100% நம்பிக்கை இருக்கு. அப்புறம் ஏன் இந்த selection process. தாய் தந்தையர் போல தாரமும் தன்னால் அமைவது என்று நம்புகிறேன். அதனால் அதில் சில selection criteria வச்சிட்டு அந்த நம்பிக்கையை என்னால் உடைக்க முடியவில்லை. மேலும் எதிர்பார்ப்புகள் இருந்தால் தான் ஏமாற்றங்களும் வரும். திருமணத்திற்கு முன்னாடி அப்படி வேணும் இப்படி வேணும்னு நினைச்சிட்டு அப்புறம் கிடைக்கலைன்னா வருத்தப்படக்கூடாது பாருங்க. என்னைத் திருமணம் செய்து கொள்கிறவருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும் அதை மட்டும் பூர்த்தி செய்ய முயல்வேன் மத்தபடி பேசறது புரிஞ்சிக்கறது எல்லாம் திருமணத்திற்கு பிறகு தான். இவ்வளவு நாள் இப்படித்தான் நினைச்சிட்டு இருக்கேன். இன்னும் ஒரு ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ உண்மை தெரிஞ்சிடும். நீங்க என்ன சொல்றீங்க
இப்ப எனக்கு எல்லாமே 'நல்லா' புரியுது! :-)
Post a Comment