Wednesday, May 04, 2005

சினிமா அம்மாக்கள்மே 8 அன்று அன்னையர் தினம். அன்று அன்னையரைப் பற்றி ஒரு நல்ல பதிவு எழுதவேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு மாறுதலுக்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்களை எழுதலாமென்று தோன்றியது. எனவே இந்தப் பதிவு. மே 8 வரை காத்திருக்க முடியவில்லை :-)

அம்மாக்கள் கடந்த 70 வருடங்களாக தமிழ்ச் சினிமாவில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்து வருகிறார்கள். தாய்ச் சொல்லையும் அவளுடைய சபதங்களையும் நிறைவேற்றுவதே மகனான ஹீரோவின் ஒரே வேலையாக இருந்து வந்தது. மகன் தன் தாயைக் கொலை செய்தவர்களையோ, அவள் வாழ்க்கையை நாசம் செய்தவர்களையோ தேடிக் கண்டுபிடித்து பழிவாங்குவதே பெரும்பாலான தமிழ்ச் சினிமாவின் கதையோட்டமாக இருந்து வந்தது. சற்று வேறுபட்டு அந்த மகன் தன் அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்குவதாக இருந்தால் கூட அது அவனுடைய விதவைத் தாயின் வேண்டுகொளாகத் தான் இருக்கும். பெருமபாலான எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் அம்மாவை மையமாக கொண்டவை. படத்தின் பெயரிலேயே அம்மா செண்டிமெண்ட் தெரியும்(தாய் சொல்லை தட்டாதே, தாய்க்குப்பின் தாரம்). எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெரும்பாலான ரஜினி படங்களும் அப்படியே இருந்தன(தாய் வீடு, அன்னை ஓர் ஆலையம்). இந்த மாதிரி அம்மா பார்முலாக்கள் திரளாக தாய்க்குலங்களை கைக்குட்டையுடன் தியேட்டருக்கு கவர்ந்திழுத்தன.

அம்மாக்களை தியாகத்தின் சிகரங்களாக பிரதிபலித்த படங்களனைத்தும் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கின்றன. கண்ணாம்பா, பண்டரிபாய், கே.ஆர். விஜயா, மனோரமா இவர்களெல்லாம் அம்மா கதாபாத்திரங்காளுக்காகவே பிறந்தவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவர்களுக்குப் பிறகு சுஜாதா, ஸ்ரீ வித்யா, சுமித்ரா போன்றவர்கள் சற்று இளமையான அம்மா வேடங்களில் நடித்தார்கள். இப்பொழுது அம்பிகா,ராதிகா...இவர்கள் வரிசையில் 'மஜ்னு' என்ற படத்தில் ரத்தி அக்னிஹோத்ரியை அம்மா வேடத்தில் பார்த்தேன். ஜீரணித்துக்கொள்ளவேமுடியவில்லை. அதே போல் பாரதி ராஜாவின் 'ஈர நிலம்' படத்தில் சுஹாசினி அம்மாவாக! கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை.

அம்மாக்களில் ஒரு வித்தியாசமான அம்மாவை எந்த திரைப்படத்திலும் பார்க்கவே முடியாது. எப்பொழுதும் அவர்கள் தியாகத்தின், பாசத்தின்சின்னமாக, நேர்மையாக, கன்னியமாக இருப்பார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதெல்லாம் ஹீரோவின் அம்மாவுக்குத்தான் பொருந்தும். ஒரு படத்தில் பல அம்மாக்கள் இருந்தாலும், ஹீரோவின் அம்மாவுக்குத்தான் மேலே சொன்ன அனைத்து நற்குணங்களும் இருக்கும் பாக்கியம் கிடைக்கும்! இன்னொரு கொடுமை என்னவென்றால், ஹீரோக்களுக்கு ஜோடியாக ஹீரோயின்களாக நடித்த நடிகைகளெல்லாம் சில வருடங்களில் அதே ஹீரோவுக்கு அம்மாவாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடிக்கிறார்கள்! அப்படியொரு மகிமை அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு!

பல இயக்குனர்கள் அம்மா கதாபாத்திரங்களுக்கான நெஞ்சை உருக்கும் காட்சிகளை அமைக்க போட்டிபோடுவார்கள். உதாரணமாக, இயக்குனர் P.வாசு, ஹீரோவின் அம்மாவை வில்லன்களின் கையில் கொடுத்து அவளை பெரும் துன்பத்துக்கு ஆளாக்குவார். 'சின்னத் தம்பி' படத்தில்மனோரமாவை ஒரு தூணில் கட்டிவைத்து ஒரு பைத்தியக்காரனிடம் தாலியைக் கொடுத்து மனோரமாவுக்கு கட்டச்சொல்லுவார்கள். 'செந்தமிழ்ப்'பாட்டு படத்தில், சுஜாதாவின் கூந்தலை வில்லன் வெட்டிவிடுவார். கொஞ்சம் ஹைடெக் இயக்குனரான சங்கர் கூட இந்த அம்மா செண்டிமெண்ட்டை விட்டுவைக்கவில்லை. 'ஜென்டில்மேன்' படத்தில் மனோரமா தன் மகனுக்கு கல்லூரிப் படிப்பிற்காக பணம் கிடைப்பதற்காக, தன்னைத் தானே கெரோசின் ஊற்றி கொளுத்திக்கொள்வார்! இந்த அபத்தமான காட்சிகளெல்லாம் ஹீரோவுக்கு கோபம் வந்து பொங்கி எழுவதற்காக அமைக்கப்பட்டவை! இப்படி பலி ஆடுகள் போலத்தான் பல இயக்குனர்களால் அம்மாக்கள் கையாளப்பட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் பாலச்சந்தர் பெண்ணியம் என்கிற பெயரில் சில அபத்தங்களை அவருடைய படங்களில் செய்தாலும், சில பாராட்டக்கூடிய வித்தியாசமான கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். அவருடைய படங்களில் வந்த அம்மாக்களில், எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், 'அவர்கள்' படத்தில் ரஜினியின் அம்மா பாத்திரம். தன் மகன் கெட்டவன், ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டான் என்று தெரிந்ததும், அந்த பெண்ணின்(சுஜாதா) வீட்டிற்கே போய் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஆயாவாக வேலைக்குச் சேர்ந்து பாவத்தை கழுவிக்கொள்வது மட்டுமின்றி, சுஜாதாவை மறுமணம் செய்துகொள்ளவும் ஊக்குவிப்பார். எவ்வளவு அற்புதமான பாத்திரப் படைப்பு! அவரது மற்றொரு படமான 'அவள் ஒரு தொடர் கதை' யில் சுஜாதாவின் அலுவலகத் தோழி ஒருத்தியின் தாயாக ஒரு விதவை இருப்பார். அவர் தன் மகள் காதலிக்கும் ஒரு நபருடனேயே உறவு வைத்துக்கொள்வார். பின்பு மகளுக்கு விசயம் தெரிந்தவுடன் தற்கொலை செய்துகொள்வார். இதெல்லாம் கசப்பான உண்மைகளாகவே தாய்குலங்களால் கருதப்படுகிறதென்று நினைக்கிறேன்.

பாரதிராஜாவின் படங்களில் ரவிக்கை போடாமல் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு, கரையேறிய பற்களுடனும், ஓட்டை பெரிதாகி தொங்கும் காதுகளுடனும் பாக்கு இடித்துக்கொண்டு பேச்சுக்கு பேச்சு பழமொழிகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் கிராமத்து 'ஆத்தா' கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறார்கள். (வேதம் புதிது சரிதா, மண்வாசனை காந்திமதி)

மணிரத்ணம் படங்களில் வரும் அம்மாக்கள் ஓரளவு 'casual type' ஆக இருப்பார்கள். 'தளபதி' படத்தில் ரஜினியின் அம்மா ஸ்ரீ வித்யா சிறு வயதில் ஒருவனால் ஏமாற்றப்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தவர். பிறகு ஜெயசங்கரைத் திருமணம் செய்துகொண்டு இன்னொரு மகனுடன் வாழ்கிறார், ஆனால் தனது மூத்த மகனின் நினைவு அவருடைய மனதில் அழியாத வடுவாக இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு ஜெய்சங்கரும் அவருக்கு ஆறுதலாக இருப்பார். 'ரோஜா' படத்தில் மகனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஒரு நகரத்து அம்மா(அவருடைய பெயர் தெரியவில்லை). இந்த கதாபாத்திரங்கள் சற்று நம்புவதற்கு சுலபமாக இருக்கின்றன.

இதெல்லாம் ஒரு 10 வருடங்களுக்கு முன் வந்த படங்கள். சமீகாலத்தில் வரும் படங்களில் அம்மா செண்டிமெண்டுகள் வெகுவாக குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இழுத்திப் போர்த்திய புடவையும், பெரிய குங்குமப் பொட்டுமாக வீட்டில் பூஜை செய்துகொண்டிருக்கும் அம்மாக்களை இப்பொழுது வரும் படங்களில் பார்க்கமுடிவதில்லை. இப்பொழுது ஹீரோக்களின் கவனம் சமூக சீர்திருத்தங்களில் திரும்பியிருப்பதாகத் தோன்றுகிறது - அதாவது, சென்னையிலுள்ள அத்தனை ரெளடிகளையும் தூக்குவது, அரசியல் ஊழல்களைத் தட்டிக்கேட்பது, ஹீரோக்களே தாதாக்களாக இருந்து பொது மக்களுக்கு உதவுவது - இப்படி! எப்படியோ அம்மாக்கள் தப்பித்தார்கள். இது நல்ல முன்னெற்றம் தான்! இனிவரும் திரைப்படங்களில் இயல்பு வாழ்க்கை அம்மாக்கள் - அதாவது வேலைக்குப் போகும் அம்மா, correspondence course ல் படிக்கும் அம்மா - இப்படி வித்தியாசமான கதாபாத்திரங்களைக் காட்டினால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த அன்னையார் தினத்தன்று நாம் நினைத்து சந்தோசப்பட வேண்டிய விசயம், தமிழ் சினிமாக்களில் அம்மா கதாபாத்திரங்கள் நல்ல மாற்றம் அடைந்திருப்பது!

3 comments:

வசந்தன்(Vasanthan) said...

நல்ல அலசல் தாரா.
நன்றி.
ஆனால் தற்போதைய சினிமாவில் மாறிவிட்டதாகவும் அம்மாக்கள் தப்பிவிட்டதாகவும் சொல்வது சரியாகப்படவில்லை. அதே அம்மாக்கள்தான். சிலவேளை சின்னத்திரை நாடகங்களைப் பார்ப்பதால் ஒப்பீட்டளவில் பெரியதிரையில் குறைவு என்பதால் உங்களுக்கு இப்பிடித் தோன்றினதோ தெரியவில்லை.

துளசி கோபால் said...

தாரா,

நல்ல பதிவு!!!! இன்னும் கொஞ்சம் சொல்லலாமுன்னா, ஒரு சில அம்மா நடிகைகள்
எப்போதுமே 'பணக்கார அம்மா'க்களாகவே வருவார்கள். அப்புறம் கதாநாயகியின் அம்மா
( கொடுமைக்கார மாமியார்!) வீட்டிலே இருந்தாலும், ஏராளமான நகைகள், பட்டுப்புடவை
மட்டுமே அணிந்து கர்வமாக இருப்பார்கள். சதா சர்வகாலமும் அலங்கார பூஷிதைகளாக
அம்மாக்கள் இருப்பது ( அட்லீஸ்ட் படத்திலாவது) நல்லாத்தானே இருக்கு:-))))))

வலை நண்பர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் !!!!

என்றும் அன்புடன்,
துளசி.

பத்மா அர்விந்த் said...

நல்ல பதிவு. இன்னும் ஹிந்தி பட அம்மாக்களையும் சேர்த்துக்கொள்ள்லாம். சமீபத்தில் ஹம் தும் பார்த்தேன். அதில் ரத்திதான் அம்மா. பொருத்தமாகவே இல்லை. நிருப ராய் தான் ஆஸ்தான அம்மா