Thursday, May 12, 2005

ஒரு பெண், ஒரு கண்காட்சி!

நேற்று முன் தினம் காலை அலுவலகத்தில் வெலையில் ஆழ்ந்திருந்த போது, என்னுடைய மேலாளரிடம் இருந்து "ஒரு சுவையான செய்தியை சொல்லப்போகிறேன். என் அறைக்கு வாருங்கள்" என்று என் அணியினர் அனைவருக்கும் மின் அஞ்சல் வந்தது. அலுப்புடனும், எரிச்சலுடனும் நாங்கள் மேலாளரைப் பார்க்கச் சென்றோம். ஏன் இந்த அலுப்பும் எரிச்சலும் என்கிறீர்களா? என்னுடைய இந்த முந்தையப் பதிவைப் படித்தால் ஏனென்று புரியும். முகமெல்லாம் சிரிப்புடன் எங்களை வரவேற்ற மேலாளர், "சொன்னால் நம்ப மாட்டீர்கள், Corcoran ம்யூசியம் அருகில் ஒரு பெண் அரை நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறாள்" என்றார். வாசிங்டன் டிசி நகரம் முழுக்க நிறைய ம்யூசியம்கள் உள்ளன. Corcoran ம்யூசியம் என்பது அமெரிக்க கலை மற்றும் வரலாறு சம்பந்தப்பட்டது. எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் இருக்கிறது. அங்கு ஒரு பெண் அரை நிர்வாணமாக நிற்கிறாள் என்று கேட்டவுடன் எங்களுக்கு வியப்பும், குழப்பமும் ஏற்பட்டது. மேலாளர் மேலும் கிண்டலுடன், "மதிய உணவு இடைவேளையில் போய் பார்த்துவிட்டு வாருங்கள்" என்று சொன்னார். 'கிழவனுக்கு இந்த லொள்ளு தேவையா' என்று நினைத்துக்கொண்டு என் இடத்திற்கு வந்த எனக்கு சற்று மண்டை குடைச்சலாக இருந்தது. நேற்று முன் தினம் வாசிங்டன் டிசியில் 80 டிகிரி வெப்ப நிலை. இந்த உச்சி வெயிலில் ஒரு பெண் எதற்காக அரை நிர்வாணமாக ஒரு பொது இடத்தில் நிற்கவேண்டும்? அமெரிக்கர்கள் மன அழுத்தம் அதிகமானால் சில சமையம் கிறுக்குத்தனமாக ஏதாவது செய்வார்கள். ஒரு வேளை இது அப்படிப்பட்ட செயலாக இருக்ககுமோ? என்றெல்லாம் நினைத்துக்கொண்டு மீண்டும் வேலையில் மூழ்கினேன்.

மதிய உணவு இடைவேளையில், என் அலுவலக நண்பிகள், "அந்தப் பெண் இன்னும் அங்கே தான் நிற்கிறாளாம், என்ன தான் நடக்கிறதென்று பார்த்துவிட்டு வரலாம் வா" என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள். ஒரு நிமிட நடைக்குப் பிறகு Corcoran ம்யூசியம் பார்வையில் தென்பட்டது. ம்யூசியத்தின் பக்கவாட்டில் உள்ள ஒரு மேடைக்கு முன் சிறு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. சற்று தூரத்தில் இருந்துபார்க்கும் போது மேடையின் மேல் ஒரு சிற்பம் இருப்பது தெரிந்தது. சற்று நெருங்குகையில், அந்த சிற்பம் அசைந்தது! அது சிற்பம் அல்ல! ஒரு பெண்! மேலாளர் சொன்ன அந்த அரை நிர்வாணப் பெண்!.



மெல்லிய தேகம், நல்ல உயரம், வெயிலில் தகதகத்த தங்க நிற சுருட்டைக் கூந்தல், மார்பைச் சுற்றி கட்டிய வெள்ளை நிற கச்சை, மெல்லிய வெள்ளை நிற காலுறை (Pant). ஒரு மாடல் போல் இருந்தாள். அவளுக்கருகில் சில ஜுஸ் பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் இருந்தன. அவள் அவ்வப்போது ஒரு தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு வாய் குடித்துவிட்டு, மீதி உள்ள தண்ணீரைத் தன் முகத்தின் மீது ஊற்றிக்கொண்டிருந்தாள். எதற்காக இவள் இப்படி உட்கார்ந்திருக்கிறாள் என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தபோது, அவள் அமர்ந்திருந்த மேடையின் கீழ் பகுதியில் ஒரு புத்தகம் தெரிந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக அந்தப் புத்தகத்தை போய் படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் என்னுடைய முறைக்காக காத்திருந்து அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சென்றேன். அது ஒரு புகைப்பட ஆல்பம் மற்றும் டையரி. அந்தப் பெண்ணினுடையது. அதைப் படிக்கப் படிக்க என் குழப்பங்களுக்கு விடைகள் கிடைத்தது.



இது ஒரு வித்தியாசமான கண்காட்சி! அந்தப் பெண்ணின் பெயர் மெல்லிசா. அவள் Corcoran கலைக் கல்லூரி மாணவி. இவளுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. தன்னிடம் இருப்பவற்றைப் பாராட்டுவதற்கு, எதையெல்லாம் இழக்க வேண்டும் ? என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள். அதாவது "How much would you have to loose, to appreciate what you have?" என்பதே இவளது இந்த முயற்சியின் கரு. இந்த முயற்சியை 'Performance Exhibition' என்கிறார்கள். இந்தக் கண்காட்சி ஜனவரி 1, 2005 இல் இருந்தே தொடங்கிவிட்டது. ஜனவரி மாதத்தில் இருந்து மெல்லிசா தான் உபயோகிக்கும் பொருட்கள், பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தன்னை மீட்டுக்கொள்ளத் தொடங்கினாள். ஜனவரியில் மருந்துகள், காபி, தொலைக்காட்சி, சோடா இவற்றை விட்டொழித்தாள். பின் வந்த மாதங்களில் ஒப்பனைப் பொருட்கள்,சாக்லேட்டுகள், சினிமா, பத்திரிக்கைகள், இசை, செல் போன், மின் அஞ்சல், கார் ஓட்டுவது, உடல் உறவு, பேச்சு, புத்தகங்கள், குடுமபத்தினர்,நண்பர்கள், தயாரித்த உணவுகள் போன்றவற்றை துறந்தாள். தான் தங்கியிருந்த வீட்டைக் கூட விட்டுவிட்டு வெளியில் வந்து ஒரு டெண்ட்டில்(tent) தங்கியிருந்தாள்.

'Stripped' என்ற அர்த்தமுள்ள ஒரு தலைப்பைக்கொண்ட இந்தக் கண்காட்சியின் இறுதிக் கட்டமாக, மெல்லிசா Corcoran ம்யூசியத்தின் முன் 36 மணி நேரம் வெட்ட வெளியில் தண்ணீரும், பழரசமும் மட்டும் உண்டு காட்சிப் பொருளாக வீற்றிருந்தாள். இதைப் படித்தவுடன் மெல்லிசாவின் மன வலிமையையும், தன்னுடைய ஐந்து மாத வாழ்க்கையையே கண்காட்சியாக மக்களுக்குப் படைத்த அவளது வித்தியாசமான சிந்தனையும் என்னை வியக்க வைத்தது. இது ஒரு சாதனை என்று தோன்றினாலும், இதனால் என்ன பயன்? இந்த ஐந்து மாதங்களும் எல்லாவற்றையும் துறந்து மெல்லிசா வாழ்ந்தது போல் இன்று யாராவது வாழ்வது
நடைமுறைக்கு ஒத்துவருமா? நம் நாட்டில் புராண காலத்து துறவிகள் தான் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். புராண காலத்து துறவிகள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன், ஏனென்றால் இன்றைய துறவிகள் எதையும் விட்டுவைக்காமல் அனுபவித்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்திலேயே வாழ்கிறார்கள். இந்தக் கண்காட்சியின் முக்கிய செய்தி என்னவோ உண்மைதான். நம்மிடம் இருப்பவற்றைப் பாராட்ட அவற்றையெல்லாம் இழந்து பார்த்தால் தான் முடியும்!!!

விசயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் 'அரை நிர்வாணம்' என்று சொல்லி கொச்சைப் படுத்திய என் மேலாளரை நினைத்து வருத்தப்பட்டேன்.
மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பி நடக்கும் போதே நினைத்துக்கொண்டேன் இதை வலைப்பதிவில் போடவேண்டும் என்று. நான் பார்த்ததிலேயே ஒரு வித்தியாசமான கண்காட்சி இது!

6 comments:

கறுப்பி said...

தாரா நல்ல செய்தி. படமும் அழகாக இருக்கின்றது. ஆனால் தங்கள் முதலாளி கூறியது போல் இது அரைநிர்வாணம் இல்லை. சாதாரண கோடை உடை.

-/பெயரிலி. said...

பிரிட்டனிலே பிக் பென்னிலே ஒருவர் இப்படித்தான் 45 நாட்கள்; தாய்லாந்திலே பாம்புகளுடன்; பிரேஸிலில் ஒருவர் வாழ்ந்தே காட்டினார். ஆக, கண்காட்சியென்று கொண்டால், இப்போது இவர் செய்திருப்பதொன்றும் பெரிய வித்தியாசமானதில்லை, வோஷிங்டன் டிஸியிலே அரசவைப்பழமைவாதிகள் இவர் சிண்டைப் பிடித்துக்கொண்டாலொழிய ;-) ஆனால், அதற்கான தலைப்பும் நோக்கும் நன்றாக இருக்கின்றன. இதெல்லாம் Reality Show களின் விளைவோ? ;-)
கடைசியாக ஒன்று; இதுவெல்லாம், அரைநிர்வாணமென்று எழுதாதீர்கள். இஃது அரை நிர்வாணமில்லை. இந்த வசந்தகாலத்திலே புளோரிடா, நியூ ஓர்லியன்ஸ் சென்று வந்தீர்களென்றால், அரைநிர்வாணமென்பது வேறு என்றே தெரியும். இவர் இருந்ததற்கும் பெரிய பதாகையிலே உள்ளாடை விளம்பரப்பெண் உருப்பெருத்துத் தெரிவதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

தாரா said...

கறுப்பி, பெயரிலி,

அரை நிர்வாணம் என்று சொன்ன என் மேலாளரின் மேல் நான் மிகுந்த கோபத்துடன் இருக்கிறேன்.

நன்றி,
தாரா.

-/பெயரிலி. said...

/அரை நிர்வாணம் என்று சொன்ன என் மேலாளரின் மேல் நான் மிகுந்த கோபத்துடன் இருக்கிறேன்./
கொன்னுடாதீங்க ;-)
வோஷிங்டன் டிஸியில் அவனவள் சின்ன ஆகாயவிமானத்துக்குப் பயந்து அங்குமிங்கும் ஓடியிருக்கின்றார்கள்; நீங்கள் என்னடாவென்றால், அரைநிர்வாணக்கண்காட்சிக்குப் போய்வந்திருக்கின்றீர்கள். ;-)

Anonymous said...

நல்ல பதிவு...
இது ஒரு எண்ண அலையை உருவாக்கி விட்டது

Anonymous said...

Thara,

Nice posting...keep up your easy writing. Tell Siva to enable anonymous posting on his blogs as well...

Anbudan,
Kumaran.