என்னுடைய அமெரிக்க மேலாளரால் ஒரு போதும் இந்த வலைப் பதிவைப் படிக்க முடியாது என்ற தைரியத்தில் இதை எழுதுகிறேன். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை எங்கள் மேலாளருடன்(பெயர் குறிப்பிட விரும்பவில்லை, 55 வயதிருக்கும்) ஒரு மணி நேரக் கூட்டம் நடக்கும். யார் யார் என்னென்ன வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன போன்ற தகவல்களை மேலாளருடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கூட்டதின் நோக்கம். உரையாடல்கள் இயல்பாகவே இருக்கும். மேலாளார் தன்னுடைய சொந்தக் கதைகளை நிறைய பேசுவார். ஆரம்பத்தில் 5, 6 நிமிடங்கள் மட்டுமே சொந்தக் கதையை பேசியவர், போகப் போக நிறைய நேரம் அதற்கு எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். இப்போது கிட்டத் தட்ட கூட்டத்தின் முதல் பாதி முழுவதும் தன்னுடைய ஜப்பானிய மனைவி, டீன் ஏஜ் பிள்ளைகள், தன் சொந்த ஊரான போர்ட் லாண்டில் தன்னுடைய மீன் பிடிப்பு அனுபவம், தன்னுடைய லாப்ஸ்டர் வியாபாரம்...இதைப் பற்றியெல்லாம் பேசி போட்டுத் தள்ளுகிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர்களின் முகங்களை நான் கவனிப்பதுண்டு. சிலர் நொந்து நூடுல்ஸ் ஆகி உட்கார்ந்திருப்பார்கள்.. சிலர் போலியான ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டு "Oh! How interesting!" என்று அவருக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பார்கள். கூட்டம் முடிந்தவுடன் விட்டால் போதும் என்று எல்லாரும் அடித்துப் பறந்து கொண்டு ஓடி விடுவோம். வாரம் ஒரு முறை தான் இந்த டார்ச்சர் என்றும் சொல்ல முடியாது. ஒரு முறை மும்முரமாக வேலையில் ஆழ்ந்திருந்த போது, மேலாளர் அவசரமாக எல்லாரையும் தன் அறைக்கு அழைக்கிறார் என்று செய்தி வந்தது. என்னவோ ஏதொ என்று போனால், அவருடைய பள்ளிப் பருவ தோழர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாராம். அந்த சோகமான செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள அழைத்தாராம்! மற்றொரு முறை திடீரென்று எங்களை அழைத்து, அவருடைய மனைவியின் தோழிக்கு மார்பகத்தில் புற்று நோய் என்றும் மருத்துவர்கள் ஒரு மார்பகத்தை அகற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டதாகவும், அனால் அந்தப் பெண்மணியோ "நான் இந்த உலகத்துக்கு இரண்டு மார்பகங்களுடன் வந்தேன். இந்த உலகத்தை விட்டுப் போகும் போதும் இரண்டு மார்பகங்களுடன் தான் போக விரும்புகிறேன்" என்று சொல்லி அறுவை சிகிச்சைக்கு மறுத்து விட்டதாகவும் சொன்னார். மற்றொரு முறையும் இதே போல் ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டியவர், மருத்துவரான அவருடைய அண்ணன், வயாகரா போலவே, அதைவிடவும் 5 மடங்கு சக்தியுள்ள ஒரு மருந்தை கண்டுபடித்து அதை சோதனையும் செய்து பார்த்த அனுபவத்தைப் பற்றிப் பேசினார். நர நரவென்று பற்களைக் கடித்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன். இதையெல்லாம் அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அமெரிக்கர்கள் எந்த விசயத்தையும் வெளிப்படையாக எந்தவித சங்கோஜமும் இல்லாமல் பேசும் குணம் உடையவர்கள். ஆனால் அதற்கென்று ஒரு நேரங்காலம் வேண்டாமா? இப்படி வேலை நேரத்தில் கூப்பிட்டு கூப்பிட்டு மற்றவர்களைத் தொந்தரவு செய்வது மிகவும் தவறு என்பது என் கருத்து. அவரிடம் நேரில் யாரும் தங்களுடைய ஆட்சேபணையைத் தெரிவிக்கவில்லையே தவிர, பலர் மறைமுகமாகப் புலம்புவதை நான் கேட்டிருக்கிறேன். இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை. சில சமையம் workplace harrassment என்று சொல்லி அவர் மேல் புகார் செய்யலாம் என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் ஏன் வீண் வம்பு? இந்த மாதத்தில் இருந்து மேலாளருக்கு அவருடைய மேலிடத்திலிருந்து அதிகப்படியான பொறுப்புகளைக் கொடுத்து விட்டதால், அந்த வாராந்திரக் கூட்டம் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் என்று அறிவிப்பு வந்தது. அந்த மேலிடத்து புண்ணியவானின் கால்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன் தொட்டு வணங்குவதற்காக. டார்ச்சர் இப்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான் என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சி!.
3 comments:
இதற்கு ஒரே வழி மொட்டைக் கடிதம்தான். ஒன்று அந்த மேலாளருக்கு அவர் இன்னமும் இவ்வாறு பேசி அறுப்பாராயின் அவருக்கு சங்குதான் என்றுக் குறிப்பிட்டு அதன் ஒரு நகலை மேலாளரின் மேலாளருக்கு அனுப்ப வேண்டியதுதான். போலீசுக்கு அனுப்பித்தாலும் உத்தமம்.
அவர்கள் புலன் விசாரணைக்கு வரும்போது உங்கள் எல்லோரையும் விசாரிப்பார்கள். எல்லோரும் சேர்ந்து பக்குவமாகப் பேசி அவர் தாங்க முடியாத அறுவை என்றாலும் சங்கூத வேண்டியவர் இல்லை என்றுத் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் அதே நேரத்தில், அறுவையாக இருந்து இது என்ன வேண்டாதச் வேலை அவருக்கு என்று நாசூக்காகக் குறிப்பிடலாம். கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று நாரதர் கூறியதை நினைவில் கொள்ளவும். ஆனால் ஒரு போதும் கெக்கெக்கே என்று சிரிக்கக் கூடாது. மொட்டைக் கடிதத்தை அலுவலகதுக்கருகிலேயே இருக்கும் ஏதாவது தபால் பெட்டியில் போடவும். யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
உங்கள் மேலாளர் பீட்டர் விதிக்கு (Peter's Principle) ஆளாகி விட்டார் என நினைக்கிறேன். அல்லது மெதுவான மூளைச்சிதைவு ஆரம்பித்துள்ளது என நினைக்கிறேன்(cerebral sclerosis). அம்மாதிரியானவர்கள்தான் இவ்வாறு நடந்துக் கொள்வார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புள்ளி கொடுக்கமுடியவில்லை.தமிழ் மணத்தில் இன்னமும் இணையவில்லை என்று தகவல் சொல்கிறது.கவனிக்கவும்.
ராகவனது திட்டம் நன்றாக இருக்கிறது அப்படியே செய்யுங்கள். எல்லாம் கணணியில் தட்டியதாய் இருக்கட்டும் முதல் மேலாளருக்கு அனுப்புங்கள். கொஞ்ச நாள் பாருங்கள் சரிவராவிட்டால். தலைமை அதிகாரிகளிற்கு அனுப்பிவிடுங்கள். :)
Post a Comment