Monday, December 20, 2004

ஞாநியின் சமூக இயல் பார்வை VS பெண் என்ற பார்வை - எம்.எஸ்

திண்ணையில் எம்.எஸ்: அஞ்சலி என்ற ஞாநியின் கட்டுரையைப் படித்தேன். படிக்காதவர்கள் இங்கே http://www.thinnai.com/ar12160412.html click செய்யுங்கள். முதல் முறை அந்தக் கட்டுரையைப் படித்தபோது அவர் எம்.எஸ்சை குற்றம் சாட்டியிருப்பது போல் தோன்றியது. ஆனால் இரண்டு, மூன்று முறை படித்துப் பார்த்த போது, அவர் எம்.எஸ் எப்படி 'சமஸ்கிருதமயமாகல்' என்ற கருத்தியலுக்கு உதாரணமாக விளங்கினார் என்று ஒரு சமூக இயல் பார்வையில் மட்டுமே விளக்கியிருக்கிறார். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு பெண்ணாக, அதுவும் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தில் வாழ்ந்தஎம்.எஸ்சின் வாழ்க்கையைப் பார்க்கும் போது, சில கருத்து வெறுபாடுகள் எனக்குத் தோன்றியது. அதன் விளைவே இந்தப் பதிவு. ஞாநி ஒரு சிறந்த எழுத்தாளர். நானோ எதோ அவ்வப்போது கிறுக்கும் ஒரு கத்துகுட்டி. பிறகு இந்தக் கடிதத்தை எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் பிரமணப் பெண் அல்ல. பிரமணீயத்தை ஏற்றுக் கொண்டவளும் அல்ல. சங்கீத ஞானமும் அவ்வளவாக கிடையாது. சமஸ்கிருதம் தெரியாது. எம்.எஸ்சின் பரம விசிறியும் அல்ல. ஆனால் பெண் என்ற தகுதி மட்டும் எனக்கு இருக்கிறது.
  • "இசைப் புலமை, இசை சார்ந்த கற்றல் என்பவை தவிர மீதி அணைத்திலும் தனக்கென்று சொந்தக் கருத்தோ பார்வையோ தேவையில்லை என்ற அடிப்படையில் வாழ்ந்தவர் எம்.எஸ். வாழ்க்கையின் மீதி அனைத்து விஷயங்களையும் சதாசிவத்திடம் ஒப்படைத்துவிட்ட அவரை வழி நடத்தியிருப்பது வைணவத்தின் சரணாகதிக் கோட்பாடுதான்."
1940 ஆம் ஆண்டு எம்.எஸ் சதாசிவத்தை திருமணம் செய்துகொண்டார். அந்த கால கட்டத்தில் எம்.எஸ் மட்டும் அல்ல, எந்தப் பெண் திருமணம் செய்து கொண்டாலும், கணவரிடம் சரணாகதி அடைந்துவிடுவது தானே நமது கலாசாரமாக இருந்து வந்தது? அதற்கு எம்.எஸ் எப்படிவிதிவிலக்காக முடியும்? வைணவத்தின் சரணாகதிக் கோட்பாட்டை பெரும்பாலான பெண்கள் மேல் சாதியாக இருக்கட்டும், கீழ் சாதியாக இருக்கட்டும், தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ அதை ஏற்றுக் கொண்டார்கள். இன்று கூட அப்படிப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணை, அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்கிறேன். அவள் வெலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கிறாள். ஆனால் தன் சம்பளக் காசோலையை பிரித்துக் கூட பார்ப்பதில்லை. அப்படியே தன் கணவனிடம் கொடுத்து விடுகிறாள். அவன் எல்லவற்றையும் பார்த்துக் கொள்கிறான். அவள் குழந்தைகளை மட்டும் பார்த்துக் கொள்கிறாள். அவளுக்கு வைணவத்தின் சரணாகதி கோட்பாடு என்னவென்று தெரியாது, ஆனால் அதை கடைபிடிக்கிறாள். இன்றே இப்படிப் பட்ட பெண்கள் இருக்கும் போது, அன்று திருமணம் செய்து கொண்ட பல பெண்களுக்கு சரணாகதி அடைவதைத் தவிர வேறு option இருந்ததாகத் தெரியவில்லை. கணவனிடம் சரணாகதி அடைவது என்பது ஒரு இயல்பான வாழ்க்கை முறையாக இருந்தது.
  • "அப்படித் தன்னை சதாசிவத்திடம் சரணாகதி செய்ததில்தான் இசை வேளாளரான சுப்புலட்சுமி முழுமையான பிராமணப் பெண்ணாக மாற்றம் கண்டார்."
எம்.எஸ் சதாசிவத்தை திருமணம் செய்து கொண்டபின் பிரமணப் பெண்ணாக வாழ்ந்தார் என்பது உண்மை தான். மீண்டும் நான் 70 வருடங்களுக்கு பின் செல்ல விரும்புகிறேன். அன்று கலப்புத் திருமணமே மிக அறிது. அப்படி கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெரும்பான்மையான பெண்கள் தன் கணவர் என்ன சாதியோ, அந்தச் சாதியைதானே தங்கள் சாதியாக ஏற்றுகொண்டு வாழ்ந்தார்கள்? கணவனின் சாதி மனைவியின் சாதியாகிறது, அவனுடைய குல தெய்வம் அவளுடைய குல தெய்வமாகிறது, அவனது குடும்பப் பழக்க வழக்கங்கள் அவளது பழக்க வழக்கங்களாகிறது. பல பெண்கள் கணவனின் சாதிக்கு மாற்றம் கண்டது போலதான் எம்.எஸ் சதாசிவத்தின் சாதிக்கு மாற்றம் கண்டார். அது அன்றிருந்த வாழ்க்கை முறையின் அடிப்படையில் இயல்பாக நடந்த ஒன்று. Sanskritisation என்றால் என்ன? It is a process by which the upward mobility was sought by the so called backward castes in the caste hierarchy. சமஸ்கிருதமயமாகல் என்பது பிரமணீயத்தை ஏற்றுக் கொள்வது மட்டும் அல்ல. ஒரு தாழ்ந்த சாதியில் இருந்து வேறு உயர்ந்த சாதியின்(பிரமணார் அல்லாத சாதி) பழக்க வழக்கங்களை கடை பிடிப்பதும் சமஸ்கிருதமயமாகல் தான். எம்.எஸ் பிரபலமானவர் என்பதால் அவர் விமர்சிக்கப்படுகிறார். மற்றபடி, அவர் ஒன்றும் வித்தியாசமாக, அவர் கால கட்டத்தில் வாழ்ந்த பெண்கள் செய்யாத ஒன்றை செய்து விடவில்லை.
  • "இசையுலக வாய்ப்புகள் சாதனைகள் எல்லாமே அவருக்கு இந்த சரணாகதியின் விளைவாகக் கிடைத்த லாபங்கள்"
எல்லாமே அவருக்கு இந்த சரணாகதியின் விளைவாக கிடைத்த லாபங்கள் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. திருமணத்திற்கு முன்பே எம்.எஸ் புகழ் ஏணியில் பாதி உயரம் ஏறிவிட்டார். 10 வயதில் அவர் செய்த கச்சேரியிலேயே மதுரை மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார். 1932 ஆம் ஆண்டு சென்னைக்கு அவர் வந்த போது, சங்கீத உலகம் ஆண் ஆதிக்கம் மிக்கதாக இருந்தது. தேவ தாசிகள் மட்டுமே இசை, நடனக் கச்சேரிகளை செய்து கொண்டிருந்தார்கள். ஆண் பக்கவாத்திய கலைஞ்சர்கள் பெண்களுக்கு வாசிப்பதை கெளரவக் குறைவாக நினைத்தார்கள். இந்த நிலையில், சென்னையில் தன் முதல் கச்சேரியிலேயே அனைவரையும் நிமிர்ந்து உட்காரவைத்தார் எம்.எஸ். தனது 17 ஆவது வயதில் மியூசிக் அகாடமியில் பாடினார். அப்பொழுதே அவரை பத்திரிக்கைகள் 'இசைக் குயில்' என்று குறிப்பிட்டன. ஏற்கனவே பேரும் புகழும் அடைந்திருந்த ஒருவரைத் தான் சதாசிவம் திருமணம் செய்துகொண்டார். தன் இசைப் பயணத்தில் கடினமான பாதையை ஏற்கனவே தாண்டிவிட்ட எம்.எஸ்சை சதாசிவம் கைப் பற்றி புகழ் ஏணியின் உச்சிக்கு கொண்டுவந்தது அவருக்கு எளிதான காரியமாக இருந்திருக்கும். எம்.எஸ் சதாசிவத்தை திருமணம் செய்திருக்கவிட்டால் கூட இன்று அவர் இருக்கும் உயர்ந்த நிலைக்கு வந்திருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
  • "தன் மேதமையை ஒரு பார்ப்பன கருத்தியல் கலை வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் விரித்திருந்தால் அவர் இன்னும் என்னவெல்லாம்ஆகியிருக்கக் கூடும் என்பது இப்போதைக்கு ஒரு சுவையான கற்பனை மட்டும் தான்."

ஏற்கனவே புகழின் உச்சியில் அவர் இருந்தார். வாங்கவெண்டிய பட்டங்கள், விருதுகள் அத்தனையும் வாங்கி குவித்து விட்டார். இதற்கு மேல் என்ன ஆக வேண்டும்?

எம்.எஸ் பிரமணீயத்தையோ சமஸ்கிருதமயமாகலையோ ஏற்றுகொண்டிருக்கலாம். ஆனால் தான் உண்டு தன் இசை உண்டு என்று அமைதியான வாக்கையை வாழ்ந்தார். எனக்கு எம்.எஸ்சை நினைக்கும் போது அவருடைய இனிமையான குரல் என் காதில் கேட்கிறது, ஆயிரக்கணக்கான அனாதைகள் வயிறா¡ரச் சாப்பிடுவது என் கண்களில் தெரிகிறது. அவர் இசை வெளாளரா, பிராமணாரா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

5 comments:

Vijayakumar said...

சரியாக சொன்னீர்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளர்களாக இருந்தாலும் அவர்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதென்பதைச் சிந்திக்கும் மூளையுள்ளவர்கள் செய்ய மாட்டார்கள். மூலாம் பூசி பார்ப்பதே நிறையப் பேர்களுடைய முழுநேர வேலையாகி விட்டது. சமூகவியல் கோட்பாடென்று பேசி எம்.எஸ் சினிமாவில் மட்டுமே பாடியிருக்க வேண்டுமென ஞானி சொல்லிவிடுவார் போல. எம்.எஸ் ஐ புகழின் ஏணியின் ஏற்றியது என்பது அவர் சார்ந்திருந்த ஜாதி என்று சொல்லும் ஞானி எம்.எஸ் -ஐ பற்றி முழுவதும் தெரியாதவர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ROSAVASANTH said...

இவர் பெயர் ஞாநி, ஞானி வேறு ஒருவர்.

Anonymous said...

see
http://wichitatamil.blogspot.com/

Anonymous said...

புகழின் உச்சியில் இருக்கும் அத்தனை பெண்களும் தேடுவது கைப்பிடிக்க நம்பிக்கையான துணை. அது தேவயானி, குஷ்பூ என்றாலும் சரி,.
வட இந்திய இஸ்லாமியரான குஷ்பூ, இன்று சுத்த தமிழச்சி ஆகவில்லையா?
நல்லா எழுதுகிறீங்க, சுடிதாரும் நல்லா இருந்துச்சு.
உஷா

Anonymous said...

thanks tara for your comments.
wichita