Monday, December 20, 2004

சுரிதார் போராட்டம்

உங்களுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத சந்தோஷமான காலம் எது என்று கேட்டால், பெரும்பான்மையானோர் கல்லூரி நாட்களைத்தான் சொல்வார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் படித்த அந்த 4 வருடங்கள் எனக்கும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். +2 படித்து முடிக்கும் வரை நான் புடவைக் கட்டியதே இல்லை. கல்லூரி தொடங்கிய முதல் நாள் என்னுடைய அண்ணிதான் எனக்கு புடவைக் கட்டிவிட்டார்கள்! பிறகு நான் பழகிக் கொண்டேன். அண்ணமலைப் பல்கலைக் கழகத்தில் பெண்களுக்கான dress code புடவைதான். சுரிதார் கூட அணியக் கூடாது. +2 வரை பள்ளிச் சீருடை மட்டுமே அனிந்து சலித்துப் போயிருந்த எங்களுக்கு கல்லூரிக்கு வண்ண வண்ண டிசைன்களில் புடவைகள் கட்டிக் கொண்டு போவது ஒரு புதுமையான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்து ஒரு 'பெரிய மனுஷி' ஸ்தானத்தை அடைந்துவிட்டது போல் பெருமையாகவும் இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சிஅதிக நாட்கள் நீடிக்கவில்லை.
முதல் ஆண்டில் எங்களுக்கு கடுமையான பட்டறைகள்(Workshops) இருந்தன. 'Carpentry Workshop' ல் மரப் பலகைகளை சீவி, செதுக்கி பல உருவங்களைச் செய்யவெண்டும். 'Smithy Workshop' ல் இரும்பை நெருப்பில் உருக்கி அதை பெரிய சுத்தியலால் அடித்து உருவங்கள் செய்யவெண்டும். 'Steam Engine lab' ல் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கும் உயரமான boiler களின் மேல் ஏறி, வெப்ப நிலையை பதிவு செய்யவெண்டும். இதையெல்லாம் ஆண்கள் பாண்ட், சட்டைப் போட்டுக் கொண்டு மிகச் சுலபமாக செய்துவிடுவார்கள். புடவையைக் கட்டிக் கொண்டு, முந்தானையை இழுத்துச் சொருவிக் கொண்டு, நாங்கள் பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சம் இல்லை. முக்கியமாக பாய்லரின் மேல் ஏறுவது மிகவும் கடினமான வேலை. ஒரு கையில் நோட்டு புத்தகத்தையும் பேனாவையும் பிடிக்கவேண்டும். மற்றொரு கையில் புடவையை தடுக்காமல் இருக்க சற்று தூக்கிப் பிடித்துக் கொள்ளவேண்டும். பாய்லரின் மேல் ஏறுவதற்கு ஒரு ஏணி இருக்கும். அந்த ஏணியைப் பிடித்து ஏற மூன்றாவதாக ஒரு கை தேவைப் பட்டது! Smithy பட்டறையில் தரையெல்லாம் கரியாக இருக்கும். அதனால் புடவையின் கீழ்ப் பகுதி கரியாகிவிடும். வீட்டுக்கு வந்தால் அம்மா வேறு புடவையை பாழாக்கியதற்காக திட்டுவார்கள். இந்தப் பட்டறைகளில் 'Safety Precautions' என்று ஒரு பலகை இருந்தது. அதில் "Do not wear clothes with hanging ends" என்று எழுதியிருந்தது. புடவை என்னும் உடை "hanging ends" கொண்டது தானே? இதை ஒரு சாக்காக வைத்து பட்டறைகளுக்கு சுரிதார் அனிய அனுமதி கேட்க முடிவு செய்தோம்.
மாணவிகள் எல்லாம் ஒன்று கூடி ஒரு நாள் எங்கள் துறையின் தலைமைப் பேராசிரியரைச் சந்தித்து புடவைக் கட்டிக் கொண்டு பட்டறைகளில் வேலை செய்வது சிரமமாக இருக்கிறது என்றும், பட்டறைகள் இருக்கும் தினத்தன்று மட்டும் சுரிதார் அனிய அனுமதி வேண்டும் என்றும் கேட்டோம். "சுரிதாருக்கு துப்பட்டா போடுவீர்களே, அதுக்கும் "hanging ends" இருக்கிறதே" என்றார். உடனே ஒரு மாணவி "துப்பட்டா இல்லாமலும் decent ஆன சுரிதார்கள் இருக்கிறது சார்" என்றாள். அவர் மிகவும் யோசித்தார். இரண்டு நாட்கள் கழித்து சொல்கிறேன் என்று சொன்னார். எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிறார் என்று புரியவில்லை. இரண்டு நாட்கள் சென்றபின் பேராசிரியரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.பிறகு அவர் மணவர்களுடன் நடத்திய ஒரு கூட்டத்தில் "உங்கள் வகுப்பு மாணவிகள் துப்பட்டா இல்லாமல் சுரிதார் அனிந்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். அதில் உங்களுக்கு சந்தோஷம் தானே" என்று நக்கலாக பேசியதாகவும், மாணவர்கள் அதற்கு ஆர்ப்பரித்துக் கைத்தட்டியதாகவும் அறிந்தோம். என்கள் மனம் உடைந்து போனது. எவ்வளவு கேவலமாக பார்வை இவர்களுக்கு?
நாங்கள் விடுவதாக இல்லை. மீண்டும் துறைத் தலைவரை சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம். மீண்டும் மழுப்பினார். இப்படி பலமாதங்கள் கழிந்தன. பட்டறைகளில் எங்கள் சிரமங்கள் தொடர்ந்தன. முதல் ஆண்டும் முடிந்து விட்டது. ஒவ்வொரு மாதமும் 'Open House' நடக்கும். மாணவர்களின் பிரச்சினைகளை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளும் நேரம் அது. ஒவ்வொரு முறையும் நாங்கள் சளைக்காமல் எங்கள் சுரிதார் கோரிக்கையை முன் வைத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் கேலியும் கிண்டலும் தான் எங்களுக்குப் பதிலாக கிடைத்தது. ஒரு முறை ஒரு ஆசிரியர் "நாங்க லுங்கி, பனியன் போட்டுகிட்டு காலேஜுக்கு வந்தால் நீங்க ஒத்துப்பீங்களா?" என்று கேட்டார். இந்தக் கேள்வி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுரிதாரும் லுங்கி பனியனும் ஒன்றா??? என்ன ஒரு பிற்போக்கான எண்ணம்?
இரண்டாம் ஆண்டும் முடியும் தருவாயில் எங்களுடைய போரட்டத்திற்கு தீர்வு கிடைத்தது ஒரு நாள். கேரளாவில் இருந்து வந்த ஒரு பெராசிரியர், Electrical and Electronics துறையின் தலைவர் பொறுப்பில் சேர்ந்தார். 'Open House' ல் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்தக் கூத்தை ஒரே ஒரு முறைப் பார்த்தார் அவர். மறு நாள் யாருமே எதிர் பாராத விதமாக அவர் பொறியியல் கல்லூரியில் உள்ள அத்தனை வகுப்புகளுக்கும் "மாணவிகள் நாளையிலிருந்து கல்லூரிக்கு சுரிதார் அனிந்து வரலாம்" என்று circular அனுப்பிவிட்டார். எங்களுக்கெல்லாம் இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரை சந்தித்து எங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தபோது "உங்களுடைய கோரிக்கையில் எந்த தவறும் இல்லை. நீங்கள் யாருக்காகவும் பயப்படவேண்டியதில்லை" என்றார். எனக்கு என்ன வருத்தம் என்றால், கிட்டத் தட்ட அந்தக் கல்லூரியில் 50 ஆசிரியர்கள் இருந்தார்கள். அத்தனைப் பேரில் ஒரே ஒருவர் தான் எங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தார். எந்தப் பெண் ஆசிரியரும் எங்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை. முதல் நாள் சுரிதார் அனிந்து நாங்கள் கல்லூரிக்குச் சென்றபோது ஏதொ காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் பார்வைகளால் அலசப்பட்டோம். வகுப்புக்குள் நுழைந்தபோது கரும்பலைகையில் "Fashion Show" என்று எழுதப்பட்டிருந்தது. சில நாட்கள் தொடர்ந்த கேலிகளும் கிண்டல்களும் போகப் போக குறைந்து பிறகு நின்று போய் விட்டன.
இதெல்லாம் நடந்தது 1990 களில்! இன்று அண்ணாமலைக் பல்கலைக் கழக வளாகத்தில் போய்ப் பார்த்தால், புடவையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பான்மையாக சுரிதார் தான் அனிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த சிறு சரித்திரத்தில், எனக்கும் ஒரு சிறு பங்கு இருந்ததில் எனக்கு என்றுமே பெருமை. சிலர் கேட்டார்கள், இப்படி எல்லாரும் பஞ்சாபி உடையான சுரிதாரையே விரும்பி அனிந்து கொண்டால், நம் தமிழ் நாட்டு கலாசாரமான புடவை கட்டும் வழக்கம் அழிந்தே போய்விடுமே என்று. கலாசாரத்தை பாதுகாப்பது முக்கியமா அல்லது உயிரை பாதுகாப்பது முக்கியமா? அந்தக் காலத்தில் பெண்கள் வயல்களில், பிற இடங்களில் வேலை செய்யும் போது புடவை தானே கட்டியிருந்தார்கள் என்றும் சிலர் கேட்டார்கள். உண்மைதான். அந்த மாதிரி வேலை செய்யும் கிரமத்துப் பெண்கள், புடவையை எப்போதும் சற்று தூக்கித் தான் கட்டியிருப்பார்கள். கல்லூரிக்கு அப்படி போனால் நன்றாக இருக்காது :-)

6 comments:

Kannan said...

தாரா,
அருமைஇயாக எழுதுகிறீர்கள்.
ஃபயர் ஃபாக்ஸ் உலாவியில் உங்களது வலைப்பதிவு சரிவரத் தெரிவதில்லை, உங்கள் வலைப்பதிவு டெம்ப்பிளேட்டில் இருக்கும் align="justify" என்ர வரிகளை நீக்கிவிடுகிறீர்களா?

துளசி கோபால் said...

அன்புள்ள தாரா,

'தூள்' கிளப்பிட்டீங்க! இப்ப சுரிதார், புடவையையெல்லாம் தூக்கி அடிக்கறதுக்கு ஜீன்ஸ் வந்துருச்சு இல்லே?

என்றும் அன்புடன்,
துளசி.

செல்வராஜ் (R.Selvaraj) said...

தாரா, உங்கள் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன. உங்கள் கல்லூரிக் கால வாழ்க்கையை,அது தொடர்பான பிரச்சினையை நன்றாக விவரித்திருக்கிறீர்கள். பட்டறை வகுப்பில் கூட இப்படி இருந்தது என்பதைப் படிக்க ஆச்சரியமாய் இருக்கிறது. எங்கள் கல்லூரியில் அது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும் ஒரு காக்கி மேலுரை கூட இருந்ததாக நினைவு. நியாயமான எதிர்ப்பில் ஈடுபட்டதற்காக நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

Thara said...

செல்வராஜ்/துளசி/கண்ணன்,

உங்களுடைய பாராட்டுகள் என்னை மிகவும் ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி.

செல்வராஜ் - எங்கள் பொறியியல் கல்லூரியிலும் காக்கி மேலுரை உண்டு. புடவை கட்டி அதற்கு மேல் காக்கி மேலுரை அனிந்திருப்போம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணம் ஏராளமாக புரள்வது போல் பிற்போக்கு சிந்தனைகளும் ஏராளம்.

தாரா.

Chandravathanaa said...

தாரா,
பண்புடன் கூகிள் குறூப்பினூடு உங்களது இந்தப் பதிவுக்கு வந்தேன்.
பிரச்சனைகள் பல ரூபத்தில் எம்மை நெருங்குவது வழமையே.
அதை நீங்கள் எதிர்கொண்டு... எதிர்ப்பைத் தெரிவித்து வெற்றி கொண்டதில்
பெருமையே.

நினைவுப்பதிவையும் விடயத்தோடும் அழகோடும் தந்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள். தொடர்ந்தும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

parameswary namebley said...

பட்டறையில் புடவை உடுத்துக் கொண்டு வேலைகளை செய்வதை என்னால் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை..