
நண்பர்கள் சிலர் ஏன் ஒரு வாரமாக உங்கள் வலைப் பூ பூக்கவில்லை என்றும், ஏன் உங்கள் சிறகுகள் நீளவில்லை என்றும் கேட்டார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு.
ஒரு வாரமாக எதிலும் மனம் லயிக்கவில்லை. சன் டிவியில் காட்டும் சுனாமி காட்சிகளும், அந்த மெல்லிய விசும்பல் கலந்த சோகமான இசையும் மனதைப் பிழிகின்றன. புது வருடம் பிறந்தபோது கூட யாரையும் கூப்பிட்டு வாழ்த்த தோன்றவில்லை. ஆர்வத்துடன் தொலைபேசியில் அழைத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கு உதட்டளவில் மட்டுமே பதில் வாழ்த்துக்கள் கூற முடிந்தது. சுனாமி நிவாரண நிதிக்காக பணம் அனுப்புவதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லையே என்று ஒரு கையாலாகாத்தனம் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்தால் மட்டும் என்னால் என்ன செய்ய முடியும்?. யார் எது செய்தாலும் ஈடுகட்ட முடியாத இழப்புகள்...
கடற் கரையின் மீதும், கடல் அலைகளின் மீதும் எனக்கு எப்போதுமே மிகுந்த அபிமானம் உண்டு.
என்னால் நம்பவே முடியவில்லை...
எனது சொந்த ஊரான சிதம்பரத்தின் அருகில் உள்ளது பூம்புகார். சிறு வயதில் குடும்பத்தாருடன் பூம்புகாருக்கு பிக்னிக் சென்று கடற்கரையில் விளையாடும்போதும், சாப்பிடும் போதும், அரட்டை அடிக்கும்போதும் கூடவே வந்து ஆர்ப்பரித்த அந்தக் கடல் அலைகளா தெற்கு ஆசியாவின் வரைபடத்தையே மாற்றி அமைத்திருப்பது?
கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் என் அண்னனின் வீடு இருந்தது. என் மனம் பாரமாக இருக்கும் நேரங்களில், அண்ணன் வீட்டுப் போர்டிகோவில் நின்று கடலைப் பார்க்கும்போது, என் மனதை வருடிக் கொடுக்குமே அந்த கடல் அலைகளா இலங்கையை இன்னும் பல வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றது?
நானும் என் கணவரும் காதலித்த நாட்களில் மெரீனா கடற்கரையில் உட்கார்ந்து எங்கள் திருமணத்தைப் பற்றியும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் பேசியபோதெல்லாம் எங்களுக்கு துணையாக இருந்தது தைரியம் கொடுத்த அந்தக் கடல் அலைகளா பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் எதிர்காலத்தையும், கனவுகளையும் அடித்துச் சென்றது?
என்னால் நம்பவே முடியவில்லை...
உயிரற்ற, சிந்தனையற்ற, நோக்கமற்ற அந்தக் கடல் அலைகளுக்கும் அதன் கோர வடிவமான சுனாமிக்கும் நன்றி சொல்வது எவ்வளவு அர்த்தமற்றதோ, அதே போல் அவைகளை கோபிப்பதும் அர்த்தமற்றது. ஆனால் மனித இயல்பு...ஆற்றாமையில் பலவிதமாக நினைக்கத்தோன்றும்.
மனித நேய உதவிகளும், நிவரணப் பணிகளும் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஏதாவது ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் உதவ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
தாரா.
1 comment:
காலம் கடந்து படித்திருக்கிறேன்.. பதிவு எண்ணங்களை பிழியச்செய்கிறது...
Post a Comment