Monday, December 13, 2004

உணர்வுகளின் Power Point Presentation

ஒரு வாரமாக வலைப்பதிவில் எழுத விசயம் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை(டிசம்பர் 11) நியூ ஜெர்சியில் நடந்த 'உலகத் தமிழ் அமைப்பு' (WTO - World Tamil Organization) கூட்டத்திற்கு கணவருடனும் நண்பர்களுடனும் சென்று வந்தேன். உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழர்களுக்கு உதவும் ஒரு அமைப்பு இது. இந்தக் கூட்டத்தில் தமிழ் நாட்டில் பெண்களின் இன்றைய நிலையைப் பற்றி என் தோழி கீதா power point presentation செய்தார். அந்த power point presentation தயார் செய்வதற்கு அவருக்கு நான் உதவினேன். ஒரு மாதமாக இணையதளத்தில் இருந்து புள்ளி விவரங்கள், படங்கள் திரட்டுவது, புத்தகங்களைப் படித்து அதில் இருந்து செய்திகளை சேகரிப்பது - இப்படிமிகவும் சுவாரஸ்யமாக நேரம் கழிந்தது. WTO கூட்டத்திலும், எங்கள் presentation க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்தக் கூட்டத்தில் நான் கவனிக்க நேரிட்ட என் தோழி கீதா சம்பந்தப்பட்ட சில காட்சிப் பதிவுகளை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
* கூட்டம் ஆரம்பித்த போது ஒரு பெண்மணி சொதப்பலாக M.C (நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்) செய்தார். 'இப்பொழுது மெளன அஞ்சலி' என்று சொல்லி நிறுத்திவிட்டார். அனைவரும் யாருக்கு மெளன அஞ்சலி செய்கிறோம் என்று தெரியாமலேயே ஒரு நிமிடம் மெளனமாக இருந்தோம். இப்படி பல பிழைகள் செய்தார். இடைவேளையின் போது அவரை அருகில் பார்க்க நேரிட்ட கீதா, 'நீங்க நல்லா பேசறீங்கம்மா' என்றார். எனக்கு மனதிற்குள் ஆச்சர்யக் கேள்விக் குறி எழுந்தது. தான் சரியாக M.C பண்ணவில்லை என்பதை உணர்ந்து சற்று கவலையாகக் காணப்பட்ட அந்தப் பெண்மணியின் முகம், கீதாவின் வார்த்தைகளைக் கேட்டு பிரகாசமடைந்தது.
* ஒரு இளம் பெண் - 14 அல்லது 15 வயதிருக்கும். பரதநாட்டியம் ஆடினார். நடுவில் அவருக்கு அடுத்த அடி மறந்து போய் பல முறை தடுமாறி பின் சுதாரித்துக் கொண்டு ஒரு வகையாக ஆடி முடித்தார். சரியான பயிற்சி இல்லாமல் ஆட வர வேண்டிய அவசியம் என்ன? என்று நான் மனதிற்குள் அலுத்துக் கொண்டிருந்த போது, கீதா எழுந்து நின்று அந்தப் பெண்ணுக்குக் கைத் தட்டினார்! மீண்டும் ஆச்சர்யத்துடன் நான் கீதாவைப் பார்த்த போது, "பாவம். பாதியில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து ஆடி முடித்தாளே, அதைப் பாராட்ட வேண்டும்" என்றார்.
* இரவு உணவு இடைவேளையின் போது, காலையிலிருந்து கூட்டம் நடந்த அரங்கின் வெளியே குழந்தையை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் "காலையில் இருந்து இப்படி குழந்தையை வைத்துக் கொண்டு சிரமப் படறீங்களே, உங்க வீட்டுக்காரர் கொஞ்ச நேரம் குழந்தையை பார்த்துக்கலாம் இல்லையா?" என்று கவலையுடன் கேட்டார் கீதா. "இல்லைங்க, அவர் சொல்லி தான் கூட்டிக்கிட்டு வந்தார். அவர் நிகழ்ச்சிகளை நிம்மதியா பார்க்க வேண்டுமே" என்று பதில் சொன்னார் அந்தப் பெண். "இருந்தாலும் கொஞ்ச நேரமாவது உங்களுக்கும் ஓய்வு வேனுமே, உங்களைப் பார்த்தால் எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது" என்று கீதா ஆதங்கப்பட்டார்.
* அவ்வப்போது கீதா பேசிய சகப் பெண்களிடமெல்லாம் "நீங்க இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க", "உங்க புடவை நல்லா இருக்கு", என்று பாராட்டு வார்த்தைகளை அள்ளி வீசி, அவர்களின் முகத்தில் பல்ப் போட்ட மாதிரி சிரிப்பையும் பிரகாசத்தையும் வரவழைத்தார். அவருக்கு அறிமுகம் ஆனப் பலரையும் மனத்தாரப் பாராட்டிப் பேசிக் கொண்டு இருந்தார்.


எங்களுடைய power point presentation முடிவில், பெண்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம், சட்டம் சம்பந்தப்பட்ட சில தீர்வுகளை சொல்லியிருந்தோம். அதில் சொல்லாத தீர்வு ஒன்றை இங்கே சொல்கிறேன். பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக பல சூழ்நிலைகளில் இருக்கும் இந்த காலக் கட்டத்தில், பெண்களுக்குள்ளேயே பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல், பாராட்டிக்கொள்ளுதல், ஆறுதல் சொல்லுதல், ஊக்கப்படுத்துதல் போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகள் இருத்தல் மிகவும் அவசியம். பெண்கள் முன்னேற்றம், உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிப் பலர் பேசலாம், ஆனால் பேசுவதைப் போல் நடந்து கொள்பவர்கள் ஒரு சிலரே. நான் கீதாவுக்காக செய்து கொடுத்த power point presentation புள்ளி விவரங்களும், வண்ண வண்ணப் படங்களும் கொண்டு அனைவரது மனதையும் கவர்ந்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே அன்று அவர் செய்த நல்ல presentation அவருடைய நடவடிக்கைகள் தான்.

4 comments:

செல்வராஜ் (R.Selvaraj) said...

தாரா, நீங்கள் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொன்னது பெண்களுக்கு மட்டும் இன்றிப் பொதுவாகவும் ஏற்றுக் கொள்ளலாமே...

Thara said...

செல்வரஜ்,

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு. நான் குறிப்பிட்டிருந்த ஆரோக்கியமான நடவடிக்கைகள் ஆண் பெண் இருவருக்குமே இருக்கவெண்டும் தான். இருந்தாலும், பெண்கள் இப்போது தடைகளைத் தாண்டி முன்னேறி வரும் கால கட்டத்தில் இருப்பதால் ஆறுதல் அளித்தல், ஊக்கம் அளித்தல், புரிந்துகொள்ளுதல், பாராட்டுதல் போன்றவை சற்று அதிகம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று நான் சொல்ல வந்தேன்.

தாரா.

Balaji-Paari said...

Intha pathivu miga nandraaga ullathu. selva-vin kelvi ennakkulum ezhunthathu. thaangal thakka pathil kuuriulleerkal. nandrigal.

லதா said...

geetha avargaL ungaLidam ungaLaip patRi enna sonnargaL endRu thaangaL ezhudhavillaiyE ? :-((