Thursday, December 16, 2004

காற்றினிலே கலந்துவிட்ட கீதம் - எம்.எஸ் சுப்புலட்சுமி


Image Hosted by ImageShack.us

எம்.எஸ் சுப்புலட்சுமி இறந்து போன செய்தியைப் படித்ததும் ரொம்ப வருத்தமாக இருந்தது. என்னோட அப்பா எம்.எஸ்ஸின் பரம விசிறி. சின்ன வயதிலிருந்தே எம்.எஸ்ஸின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவள் நான். அவர் பாடிய பிற மொழிப் பாடல்களின் அர்த்தம் புரியாவிட்டாலும், அவரது இனிமையான குரலையும், இசையையும் ரசிப்பதுண்டு. அவர் பாடிய தமிழ்ப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது - "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா" என்ற பாடல். இந்தப் பாடலை சன் டிவியில், சக்தி மசாலா விளம்பரத்திற்கு அழகாக பயன்படுத்தி இருக்கிறார்கள்(உடல் ஊனமுற்றோர், சக்தி மசாலா தொழிற்சாலையில் வேலை செய்வதை படமாக்கியிருக்கிறார்கள்). பார்க்க சந்தோஷமாக இருந்தது. இரண்டாவதாகப் பிடித்த பாடல் - "காற்றினிலே வரும் கீதம்". இந்த பாடலில்
"நீல நிறத்து பாலகன் ஒருவன்

குழல் ஊதி நின்றானே...
காலமெல்லாம்...காலமெல்லாம் அவன்
காதலை எண்ணி உருகுமோ
என் நெஞ்சம்..."
என்ற வரிகளைப் பாடும் போது இசையோடு சேர்ந்து எம்.எஸ்ஸின் குரலும் இழையுமே...அது இனிமை!
எம்.எஸின் பாரதியார் பாடல்கள் தொகுப்பு - எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. என் அப்பா அடிக்கடி சொல்வார் மஹாத்மா காந்திக்கு எம்.எஸ் பாடிய "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடல் மிகவும் பிடிக்குமாம். "எம்.எஸ் பேசினாலே போதும், அது பாடுவது போல் தான் இருக்கிறது" என்று காந்திஜி சொல்வதுண்டாம்! 'காந்தி' திரைப்படத்தின் முடிவில், காந்தியின் அஸ்தி கடலில் கரைக்கப்படும் காட்சியில், "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடல் பின்னணியில் மெல்லியதாக கேட்கும். ஆனால் அது எம்.எஸ் பாடியதா என்று எனக்குத் தெரியாது.
எம்.எஸ் நிறைய சமூக சேவைகள், தான தர்மங்கள் செய்திருக்கிறார் என்றும், ஒரு கால கட்டத்தில்பணத்திற்காக பாடுவதை நிறுத்தி விட்டு, நன்கொடை திரட்டுவதற்காக மட்டுமே கச்சேரிகள் செய்ததாகவும் படித்திருக்கிறேன்.
அந்த உயர்ந்த இசை மேதைக்கு எனது அஞ்சலிகள்.



1 comment:

Aruna Srinivasan said...

வலைப் பதிவு உலகிற்கு வரவேற்கிறேன். உங்கள் எம் எஸ் பற்றிய பதிவு உங்கள் புதிய பதிவிற்கு என்னை அழைத்து வந்தது. மேலும் நிறைய தமிழில் எழுத வாழ்த்துக்கள்.

அருணா.