Wednesday, July 22, 2009

ஐஸ்வர்யா ராயும் அனில் அம்பானியும்

தமிழகப் பயணத்தைப் பற்றி எழுதி முடிக்குமுன் இந்தப் பதிவு ஒரு சிறிய இடைச் செருகல்.

எனக்கு ஐஸ்வர்யா ராய் மீது பெரிதாக ஒன்றும் அபிப்ராயம் இல்லையென்றாலும், அவர் மேல் ஒரு மதிப்பு உள்ளது. எத்தனையோ உலக அழகிகள் வந்தார்கள். ஆனால் சில மாதங்களிலேயே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா கடந்த 15 வருடங்களாக இந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார். ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்திய திரைப்படைத் துறையில், ஆண் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். அவருடைய அழகினால் மட்டும் இதனை சாதிக்கவில்லை. அவரிடம் பிற திறமைகளும் இருந்தன. பல கவர்ச்சிப் படங்களில் அவர் நடித்திருந்தாலும், பல குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். உதாரணத்திற்கு, "தேவதாஸ்", "Provoked" "The Rain Coat" போன்ற படங்களைச் சொல்லலாம். சென்ற ஆண்டு கூட கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யாதான் முக்கிய புள்ளி!

அவருடைய சொந்த வாழ்க்கையில் சில சறுக்கல்களும் இருந்ததாகப் படித்திருக்கிறேன். இப்போது அபிஷேக் பச்சனை திருமனம் செய்துகொண்டு அமைதியாக அவருடைய வாழ்க்கை செல்லுவதில் எனக்கு மகிழ்ச்சியே. பிறகு ஏன் இந்தப் பதிவு???

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் வீட்டு விருந்தின் போது ஐஸ்வர்யாவைப் பற்றி பேச்சு வந்தது. ஐஸ்வர்யாவின் திருமணம் முடிந்தபின் அவர், அமிதாப், அபிஷேக், அனில் அம்பானி, அமர் சிங் எல்லோரும் பலத்த பாதுகாப்புடன் திருப்பதிக்கு சென்றிருந்ததைக் குறிப்பிட்ட நண்பர், "அவ்வளவு அழகான பெண்ணை தான் திருமணம் செய்திருக்க வேண்டும் என்று ஏன் அனில் அம்பானிக்கு தோன்றவில்லை" என்று கேட்டார். "தோன்றியிருக்கலாம், அதில் ஒன்றும் தவறில்லை" என்றேன் நான்.

நண்பர்: "அனில் அம்பானிக்கு மட்டும் வயது சற்று குறைவாக இருந்திருந்தால் கட்டாயம் அவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருப்பார்" என்றார்.
நான்: அதற்கு ஐஸ்வர்யா ஒத்துக்கொள்ள வேண்டுமே?
நண்பர்: கோடீஸ்வரரான அனில் அம்பானி கேட்டிருந்தால் ஐஸ்வர்யா கட்டாயம் ஒத்துக்கொண்டிருப்பார்.
நான்: ஐஸ்வர்யாவிடம் இல்லாத பணமா? அல்லது புகழா? அவர் நடித்த படங்களிலும், சர்வதேச விளம்பரங்களிலும் அவர் பார்க்காத பணமா?
நண்பர்: பணத்தை விட அனில் அம்பானியிடம் 'பவர்' இருக்கிறது. பெண்கள் அதில் மயங்கிவிடுவார்கள்
நான்: பணம், பதவி இவற்றையெல்லாம் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. ஐஸ்வர்யா உண்மையிலேயே அபிஷேக் பச்சனை விரும்பி திருமணம் செய்திருக்கலாம் இல்லையா?
மற்றொரு நண்பர்: ஐஸ்வர்யா அபிஷேக்கைத் திருமணம் செய்துகொண்டதற்கு காரணம் அவருக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. சல்மான்கானை விட்டு அவர் பிரிந்தபோது, சல்மான் தான் இல்லாமல் ஐஸ்வர்யா எப்படி வாழ்கிறார் என்று பார்த்துவிடுவதாகச் சவால் விட்டாராம். சல்மானிடம் ஒரு பெரிய தாதா கும்பலே இருக்கிறதாம். அதற்குப் பயந்துதான் பச்சன் குடும்பத்தில் தஞ்சம் புகுந்தார் ஐஸ்வர்யா.

இதற்கு மேல் நான் பேசியதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பேச்சு திசை மாறிவிட்டது. ஆனால் எனக்கு வருத்தமாக இருந்தது. பணம், பதவி என்றால் எல்லா நடிகைகளும் பின்னால் சென்றுவிடுவார்கள் என்கிற இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. சிலர் அப்படி இருக்கலாம். ஆனால் பலர் அப்படி இல்லை. ஒரு நடிகையின் பிரச்சினை அவருக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் அவர்களைப் பற்றி விமர்சனங்கள் இப்படி எழத்தான் செய்யும். ஆனால், அவர்கள் பொதுவாக அப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வருவது தவறில்லையா?

4 comments:

Anonymous said...

நீங்க சொல்லறது சரிதான்...

ரவியா said...

//இதற்கு மேல் நான் பேசியதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை//

Bravo for the manner/fact you did n't insist. whatever he said is true or not !

தேவன் மாயம் said...

அவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் அவர்களைப் பற்றி விமர்சனங்கள் இப்படி எழத்தான் செய்யும். ஆனால், அவர்கள் பொதுவாக அப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வருவது தவறில்லையா?
///

ஆம்!! அவர்களும் மனிதர்கள்தானே!

Gokul said...

நான் உங்கள் Blog-கிற்கு இப்போதுதான் வருகிறேன்.

//ஐஸ்வர்யா உண்மையிலேயே அபிஷேக் பச்சனை விரும்பி திருமணம் செய்திருக்கலாம் இல்லையா?//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா, ஐஸ்வர்யா ராய் மணந்தது அபிஷேக் பச்சனை அல்ல , அமிதாப் பச்சனின் மகனை. ஒரு வெற்றி பெற்ற பெண்ணான ஐஸ்வர்யா ஏறக்குறைய தோல்வி படங்கள் மட்டுமே குடுக்கும் அபிஷேக்கை மணப்பாரா?
ஆனால் ஐஸ்வர்யா எடுத்த முடிவில் தவறொன்றும் இல்லை, அவர் அவருக்கான அழகை திறமையை அந்தஸ்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டார். அபிஷேக்கும் , அமிதாப்பின் மகன் என்ற அந்தஸ்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டார்.

மேலும் பெண்கள் பணம் அல்லது பவருக்கு அடிமையாவதில் தவறொன்றும் இல்லை , இது பெண்களின் இயல்பு , எப்படி அழகுக்கு அடிமையாவது ஆண்களின் இயல்போ அது போலத்தான் இது, இதில் வருத்தப்படவோ , குற்ற உணர்ச்சி கொள்ளவோ ஏதுமில்லை.